
விலங்குகளினும் கீழாய்
வயது வேறுபாடின்றி
வேட்டையாடப்படும் ஈழத்தமிழனிடம் - அவன்
இறப்பதற்கான காரணம்
என்னவென்று!
கடைசி
ஆசையைக் கேட்டால்
எனது முதலாவது ஆசையே
சுதந்திரம்தான் என்று
முரண்டு பிடிப்பான் எனவே
அவன் இறப்பதற்கான காரணத்தை
மட்டுமாவது சொல்லிவிடுங்கள்!
சிங்களனின் காமத்திற்கும்
காட்சிப்பொருளுக்குமாய்
ஆடையின்றி அம்மணமாய்
புத்தி பேதலித்து படுத்திருக்கும்
அவளை எழுப்பி சொல்லி விடுங்கள் !
இலங்கை இறையாண்மையுள்ள நாடு -அதன்
உள் விவகாரங்களில் உலகம்
தலையிட முடியாது என்று!
பசியின் கொடுமையால்
விஷச்செடிக்கும் மற்றதுக்கும்
வித்தியாசம் தெரியாமல்
தின்று மயங்கி கிடப்பவனிடம்
இறப்பதற்கு முன் எப்படியாவது
சொல்லிவிடுங்கள் !
சந்தைப்பிடிக்கும் முதலாளித்துவ
வல்லாதிக்க சக்திகளின்
சதிவலையை அறுக்க
தெரிந்திருந்தால்
இப்படி நடந்திருக்காதென்று!
குத்தாட்ட நடிகையிடமும்
கொள்கைப் பேசி
குடும்பம் வளர்க்கும் தலைவனிடமும்
அரசியலை நாங்கள்
அடகு வைக்காமல் இருந்திருந்தால்
மொத்தத்தையும் இழந்துவிட்டு
நிர்கதியாய் நிற்கும் உனக்கு
எப்படியும் தமிழகம்
ஏதாவது செய்திருக்குமென்று!
கணவன் குழந்தையென
இறப்போர் இறக்க - இருப்போரும்
எப்போது மரிப்போமென
சித்தம்கலங்கி திரியும் உனக்கு
கணவனின் கொலைக்காய்
எங்கள் இனத்தையே
கருவறுக்க உறுதிப்பூண்டு
எங்களின் அத்தனைப்
போராட்டங்களையும் அலட்சிமாய்
புறந்தள்ளும் அன்னையின்
அதிகாரத்தை கேள்விகேட்கும்
வழி தெரிந்திருந்தால் - எப்படியும்
நியாயம் கிடைத்திருக்குமென்று!
அடிப்படை கல்வியே மறுக்கப்பட்டு
ஆயுதம் தூக்கிய உன்னால்
தீவிரவாதத்திற்கும்
தேசிய விடுதலைப்போருக்குமான
வேறுபாட்டை -உலகுக்கு
புரியும் மொழியில்
சொல்லத்தெரிந்த்திருந்தால்
அதன் கொள்கைகளை மாற்றும்
சக்தி இருந்தால்
எப்படியும் தடுத்து விடலாம் என்று!
இருந்தால் அடிமை ஆவாய்
இறந்தால் புலி ஆவாய் - என
ஓடிக்கொண்டிருக்கும் உனது வாழ்கையை
தீக்குளிப்பு போராட்டங்கள் கூட
சடங்காகிப் போன தேசத்தில்
அண்டை மாநிலங்களுக்கும் அரசுக்கும்
புரிகின்ற மொழியில் -எங்களுக்குப்
போராடத் தெரிந்திருந்தால்
எப்படியும் மாற்றிவிடலாம் என்று!
உலகத்தின் அத்தனை
அதிகார மையங்களின்
மொத்தத்தவறுகளும் மூர்க்கமாய் தாக்க
செத்தாலும் சாவேன்
அடிபணிய மாட்டேன்- என
ஒற்றையாய் எதிர்த்து நிற்கிறாயே
உனது சுதந்திரத்திற்காய் !
அதனால்தான் -இந்த உலகம
உன்னை தீராப்பகையுடன்
வன்னி காடுகளில்
வேட்டைநாயாய் தேடி
அலைகிறதென்று !
எப்படியாவது சொல்லிவிடுங்கள்!
- வெ தனஞ்செயன் (