நெடுந்தொலைவுக்கு
துரத்தியடிக்கிறது..
உனது மௌனத்தை
உடைத்து
நீயுரைத்த சொற்கள்..
உனது பொய்மைகளின்
பின்னே இருக்கும்
உண்மைகளின்
பிம்பத்தை அறிந்திருக்கிறேன்..
ஏதோ ஒன்றிற்காக
ஏதோ ஒன்றைச் சொல்லி
நழுவுகிறாய்..
யாதொரு வழியும்
புலப்படாமல்
உனது நிழலைச் சுற்றியே
பின்னிக் கிடக்கிறேன்..
=================
நீ
வெட்டியெறிந்த நேசத்தை
கையிலேந்தியபடி
நெடுஞ்சாலையோரத்தில்
மயங்கிக் கிடக்கிறேன்..
கண்டுகொள்ளப்படாத
எனது நேசமும்
தேற்றுவாரின்றி
தலைவிரிகோலமாய்
புரண்டழுகிறது..
குற்றுயிராய்
கிடக்கும் அதற்கு
இறுதிச் சடங்குகள்
செய்யவேனும்
வந்துவிடு..
உனது பேராண்மைமிக்க
பிடிவாதத்தை விட்டுவிட்டு..
===================
வெம்மை நிறைந்தயென்
பகல் போதில்
வேதனையுடன்
வந்தமர்கிறது
உனது நிராகரிப்பில்
கருக்கொண்ட பெருவலி..
========
அத்துணை ஆக்கத்திற்கும்
காரணமாயிருந்த நீயே
அதன் அழிவிற்கும்
ஆரத்தியெடுப்பாயென
கனவிலும் நினைத்திலேன்..
===========
எதைக் கொடுத்து
இடமாற்றுவாய்?
இத்துணை தூரம்
கடந்து வந்த
அன்பினையும்..
அக்கறையையும்..
=============
மைதானத்திலிருந்து
ஆட்டமிழந்து வெளியேறும்
வீரனுக்கும்..
நேசத்திலிருந்து வலியுடன்
திரும்பும் மனதுக்கும்
பெரிய வித்தியாசம்
ஒன்றுமில்லை..
மைதானமும், நேசமும்
மாறப்போவதில்லை..
வீரனும், மனமும்
விளையாடுவதை
நிறுத்தப் போவதில்லை..
மைதானம்
நேசம்
வாழ்க்கை
அனைத்தும் வட்டமானது..
விட்ட இடத்திலிருந்து
ஆட்டம் துவங்கும்..
=============
வசீகரிக்கவும்
நெருங்கி அன்பு செய்யவுமான
எனக்கான சாத்தியங்களை
ஒளித்து வைக்கப் போவதில்லை..
எப்போதும் போலான
அல்லது
அதைவிட இன்னும்
மேலானவற்றை
உருவாக்க முயல்கிறேன்..
‘நம்பிக்கை’ எனும் வார்த்தைக்கு
உயிர் கொடுக்கும் சிலரில்
நானும் இருந்துவிட்டு போகிறேன்..
=============
இந்த வலி
பரிச்சயமானதல்ல..
முன்பின் கண்டறியாத
அதன் செய்கைகள்
ஒரு செயலையும் செய்யவிடாமல்
பசியுறக்கம் மறக்கச் செய்து
கட்டுண்டு கிடக்கச் செய்கிறது
கட்டற்றும் அலைய வைக்கிறது..
பிறர் சொல்லியும் புரியாத
இந்த வலியை
அனுபவிப்பதில்
அனுகூலமுமுண்டு..
வலியின் அறிமுகம் ஒருவேளை
உண்மையை பறைசாற்றலாம்..
==================
நீயும் நானும்
எங்கே நின்று கொண்டிருக்கிறோம்
என்பதை
புரிந்து கொள்ளக் கூடியது..
இந்த இரவில் நாம் பேசும்
வார்த்தைகள் என்கிறாய்..
நீ எனக்குள்ளும்
நான் உனக்குள்ளும்
இருப்பதை மறைத்துக்
கொண்டு பேசுவதை
கேலி செய்கின்றன
நமது நிழல்கள்..
===========
உனக்கொரு வட்டத்தை
வரைந்து அதற்குள்
சுழல்கிறாய்..
உன் வட்டத்தையே எனக்கான
மையப்புள்ளியாக்கி சுழல்கிறேன்..
===============
-இவள் பாரதி (