நிழல்களின் பிடிவாதம் குறித்து
கண்டிப்பாக நான் உங்களுடன்
ஒரு விஷயத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும்
ஆகக்கூடி அவைகளுக்குத்தேவை
ஒரு துளி வெளிச்சம், அவ்வளவுதான்.
பிறகு வளர்ப்புப் பிராணியின் வாஞ்சையுடன்
உங்கள் பாதங்களையே சுற்றிவரும்
கிளைத்துப்படரும் கொடிபோல
உங்களின் பாதங்களில் தஞ்சம் அடையும்போது
அதன் குளுமையை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள்
நான் அவளுடன் இருக்கும் அந்தரங்கமான நேரங்களில்
ஒன்றிற்கு பல முறை தீர்மானித்துக்கொள்வேன்
நிழல்களின் இருப்பு குறித்து
நிழல்களும் நம்மைப்போல
சக நிழல்களுடன் பேசி சினேகம் வளர்க்குமா?
எனக்குத்தெரியாது
ஆனால் நான் தினமும் கடந்துபோகும்
இடுகாட்டுத்திடலில் எனக்கு மட்டும் கேட்கிறது
வீடு திரும்பாத நிழல்களின் மரண ஓலங்கள்
-பிரேம பிரபா (