அம்மாவிடம் காதலை தெரிவிக்க வேண்டியிருந்தேன்.
தனது அம்மாவின் சம்மதத்தை தந்தியில் தெரிவிப்பாளா?,
என திகிலோடு காத்திருந்த போதுதான்,
அந்த தந்தி வந்தது.
"அப்பா இறந்துவிட்டார், உடனே புறப்படு."
ஒரு மரணத்தை எதிர் கொண்ட அனுபவம்
எனக்கிருந்திருக்கவில்லை.
அன்று காலையில், மிக பலமாக,
தலையில் மோதிக் கொண்டிருந்தேன்.
ஏனோ, மொட்டையடிப்பது பற்றி காலையில் யோசித்திருந்தேன்.
சென்ற முறை கேட்க மறந்த சில விஷயங்களை, அப்பாவிடம்,
கேட்க வேண்டுமென, காலையில் நினைத்திருந்தேன்.
பல விஷயங்கள், கேள்விகள், பயம்
யாவும் மின்னலாய் வந்து போயின.
பல மாணவர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர்.
பலர் மவ்னமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தொண்டை வறண்டு போயிருந்தது.
அம்மா, தங்கைகள், அண்ணன்கள் நினைவு வந்தது.
வீட்டுச் சூழல் பற்றி நினைக்கும் போது
பகீரென தொண்டையை கவ்வி பற்றியது.
இது நடந்திருக்காது, என பெரிதும் விரும்பினேன்
அதற்காக ஜெபம் செய்து கொண்டேயிருந்தேன்.
மேலும், நான் புறப்பட்டு கொண்டுமிருந்தேன்.
கைலியும், பணமும் எடுத்துக் கொண்டேன்.
கூட வந்த வகுப்பு மாணவனிடம், விடுமுறைக்கு
சொல்லச் சொன்னேன்.
தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது.
குடிக்கவில்லை.
பேருந்தில் ஏறினேன்.
மிக கொடிய, நீண்ட பிரயாணம் காத்திருந்தது.
அதன் முடிவு மரணமாயிருந்தது.
- ம.ஜோசப்