
எனது இருளுக்குள்ளேயே நான்
தொலைந்து போகிறேன்
ஒளி வரும் பாதைகளை எதிர்பார்த்தபடிக்கு
ஓர் ஒளியிடையேனும்
விகாரமில்லாத எதுவும் தென்படாத படிக்கு
மூலையில் கிடக்கிறது இருள்.
எல்லா நியாயங்களுக்குமான
கூக்குரலை உயர்த்தி கத்தியபடிக்கு
ஒரே ஒரு வெளியில் அலைந்தபடிக்கு உள்ளேன்.
எனது சுமைகள் எதனையும்
பொருட்படுத்த முடியாமல்
பாரப்பட்ட வெளியை விட்டும் தூரமாகிவிட்டேன்.
உயிரை ஒரு ஜீவித காலத்துக்கு
மட்டுமாகிலும் நகர்த்தினால் உத்தமம்.
மரணம் பற்றிய ஒவ்வொரு
நினைவினூடாகவும் கழிந்து போகின்றன
நொடிகள்.
இருள் சூழும் பொழுதை விரட்டியபடிக்கு
ஒரு இயலாக் கருவியாய்
எறியப்பட்டுப் போனேன் மூலையில்
ஒரு புரட்சி நாள் வரவேண்டும்
அதில் நானும் எல்லா இருள் விலக்கிய
பகல் பொழுதொன்றில்
என் வீட்டில் மட்டுமிருந்து பகல் போசனம்
அருந்த வேண்டும்.
ஒளி மட்டுமே வேறொன்றையும் காணாதபடிக்கு
நானும்.
- இளைய அப்துல்லாஹ், லண்டன் (