பள்ளிக்கூடத்தில்
தேய்ந்த பெஞ்சும்
மூக்கொழுகும் பசங்களும்
இங்கிலீசு தெரியாத
வாத்தியார்களுமாய்
இருப்பதால்
நாலுமைல் தூரத்திலுள்ள
நர்சரியில் சேர்த்தாள்
தன் மகனை.
அழுக்கு சட்டையும்
அரைக்கால் சட்டையில்
தபால் பெட்டியுமாய்
திரியும் பசங்களுடன்
ஒட்டவிட மாட்டாள்
அவள் தன் மகனை.
பள்ளிவிட்டுத் திரும்பி
ஆட்டோவில் இறங்கும்
மகன் அணிந்திருக்கும்
சீருடையும்
கழுத்தில் சுருக்கிட்ட
டையும்
சாக்ஸீம் ஷீவும்
சந்தோஷத்தை அள்ளி
ஊற்றும்
அவளுக்குள்.
எல்லாவற்றையும்
கழற்றி எறியும்போதுதான்
பையனுக்கு
சந்தோஷமென்பதை
அவள்
அறிந்திருக்கவில்லை
இதுநாள்வரை.
- கோவி. லெனின்