கீற்றில் தேட...

ஒரு சாம்பல் பறவையைப்போல்
அம்மரத்தின் கீழ்
அதன் நிழல் அமர்ந்திருந்தது

வீதியின் நீண்ட மெளனத்தையே
வாரிச் சுருட்டிக்கொள்வதைப்போல்
பெருக்கிக்கொண்டே வந்தாள்
துப்புரவுப்பெண்

இங்குதான்
அவன் என்னைக் காத்திருக்கச் சொன்னான்
என் காதலையும்

அந்தப் பெண்
மெளனத்தைச் சுமந்துகொண்டு
என்னைத் திரும்பிப் பார்த்தவாறே
எப்பொழுதோ சென்றுவிட்டாள்

கண்ணீராய் வழியத் தொடங்கிவிட்டது
இருள். பூப்பெய்தத் தயாரான
உடலின் பரவசத்துடனும் மிரட்சியுடனும்
காத்திருக்கிறேன்

இதோ... தூரத்தில்
மழையை இறக்கப்போகும் கனமேகம்போல்
வந்துகொண்டிருக்கிறான்
இன்பம் தாளாமல்
என் உடலில்
செந்நட்சத்திரங்கள் துளிர்க்கத் தொடங்கிவிட்டன

மரமோ
ஒரு சாம்பல்பறவையைப்போல் அமர்ந்திருக்கிறது
எச்சலனமுன்றி

குட்டி ரேவதி