காதலனே
காமம் மட்டும் நிறைந்த
உன் உப்புக்கடல் மனதில்
இனிப்பான
காதலிருக்க
வாய்ப்பேது!
*********************
நீயென்னை காதலிக்கிறாயென்று
சொன்னதெல்லாம்
பொய்யென்று சொல்கிறது
துப்பட்டாவும் சேலையும்
துப்பட்டாவின் வீழ்ச்சியும்
சேலையின் விலகலும்
கண்டு மகிழ்ந்ததாமே
உந்தன் கண்காட்சி!
*******************
உந்தன் ஒற்றைப் பார்வையில்
எந்தன் நா
மாங்காய் தேடுகிறது.
நீ
குருடனாகவே
பிறந்திருக்கலாம்!
********************
திருமணத்திற்கு நீ துடித்தது
நமது
புதுக்குடும்பத்தைக் காண அல்ல
முதலிரவிலேயே
இது தான் கற்பழிப்பென்ற
அனுபவமெனக்கு தரத்தான்!
******************
என் மேல் விழுந்த பாறையே
உனை நான் கட்டியணைக்கவில்லை
என்ற
குற்றச்சாற்று நியாயமா?
*****************
இத்தனை நாற்றமா மது என்றேன்
நிர்பந்தமாய் பருகவைத்தாய்
மயக்கத்தில் நான்
இயக்கத்தில் நீ
ம்ம்ம்ம்
உனது ஒற்றைப் பயணம்
உறங்கிய என் படகின் மீதேறி!
******************
எந்தன் அத்தனை
சொந்த பந்தங்களின் பாசத்தையும்
உன்னில் எதிர்பார்த்தேன்
எதிர்பார்ப்பதே தவறென்று
கற்பித்தது
உன்னில் ஒளிந்திருந்த
உன் கோபத்தின் வெறி!
********************
உந்தன் காமத்திற்கு
நானென்னை முழுமையாய்
வழங்கவில்லை தான்
அன்பில்லா உன் காமம்
எந்தன் உணர்வுகளுக்கு புரியவில்லை
அதற்கு நான் என்ன செய்ய?
******************
உன்னை பயந்து விரிந்தன
எந்தன் கால்கள்
பரவாயில்லை
மலடி நானென்று
வெளியேற்றப் படமாட்டேன்
என்று கொஞ்சம் சமாதானம்!
****************
முத்தம் தர ஒடி வருகிறாயென்று
மகிழ்ந்தேன்
என் சேலையை விலக்கி
குழந்தையின் உணவை
கொள்ளையடித்தாய்
என் இரத்தத்தை குடித்தும்
உனக்கு என் மேல் - இன்னமும்
காமம் மட்டும் தானா?
*****************
நீ "அப்பா" என்ற பட்டம் பெற
நான் பிரசவ வலி அனுபவித்தும்
நம் குழந்தையின்
அழுகை மற்றும் கசிவு இவையெல்லாம்
உனக்கு ஏனோ அலர்ஜி !
******************
குடும்பக் கட்டுப்பாடு மட்டும்
நான்
செய்யவில்லையென்றால்
என் கருவறை என்றோ
கல்லறையாய் மாறியிருக்கும்!
****************
தாகமான பூமிக்கு
வானத்தின் முட்டாள்
பார்வை மட்டும்
உருகித் தவித்து உறங்கையிலே
வானமுந்தன் திடீர் மழைச்சாரல்
தாகத்தாலென்றும்
தவிக்கிறதே - இந்த
பூமி நான்!
******************
இவர்களெல்லாம்
உன் காதலிகளென்று
மார் தட்டிக்கொண்டாய்
அவன் ஒருவன்
என்னை காதலித்தானென்றேன்
அன்று முதல் இன்று வரை
முற்களில்லாமல்
உந்தன் வாயிலிருந்து
ஒரு வார்த்தையும் வந்ததில்லையே!
*****************
இனிமுதல்
நான் புதுமைப்பெண் - என்று
புறப்பட்டாலென்
முகத்திரை கிழிக்க வேண்டும்
ஆம்
உண்மை சொல்ல வேண்டும்
பெரியோர்களின் அழுகையை
எப்படி காண்பேன் நான்
சரி...
கிழவியாகும் வரை
அழுதே அழிகிறேன்
உனக்கே
வேசியாக வாழ்கிறேன்!
*************
ம்ம்ம்ம்
கொஞ்சம் பொறு
அப்படியென்ன அவசரம்?
நான் விலைமகளல்ல
குலமகள்!
உன்னில் என்று தான் வருமோ
மனிதம்?
************
அந்த
மூன்று நாட்களாவது
ஓய்வுண்டா எனக்கு ?
இல்லை!
பாவமெந்தன் யோனி
அவ்வப்போது
இரத்தக் கண்ணீரில் !
********
மாதாமாதம் புதிதாய் வரும்
வேலைக்காரிகளுக்கும் எனக்கும்
என்ன பெரிய வித்தியாசம்?
என் கழுத்தில் மட்டும்
உன் தாலி - இந்த
வேலியால் எனக்கு மட்டுமில்லை
கூலி!
********
என் தந்தையின்
உயிர் நான்
என்னையே அவர் உனக்கு
தந்த பின்னர்
தந்தையவரை தினமும் திட்டி
இன்னுமா கேட்கிறாய் சீர்?
***********
நீ அனுமதித்தால்
நான் வேசியாகிறேன்
உனக்கு சீர் தர
ஐய்யய்யோ
அந்த சிந்தனையே வேண்டாம்
நல்லவன் நீ
கண்டிப்பாய் சம்மதித்து விடுவாய்!
******
உன்னை பயந்தே
என் தங்கையிடம்
நானிட்டேன்
வீண் சண்டை!
******
சுமங்கலி பூஜைக்கு
நான் செல்வதில்லை
ஒற்றை
வாடிக்கையாளனின்
நிழலில் வாழும்
வேசியெனக்கு
அங்கென்ன வேலை?
********
நீ யாரென்று அறிந்த நாள் முதல்
மாதாமாதம் என் ரத்தம்
பரிசோதனைக்கு செல்கிறது
என்னில் எய்ட்ஸென்று
அறியும் வரை
ஏழையென் தந்தைக்கு
இந்த செலவு வேறு!
*********
நான் பெற்றெடுத்த - நம்
குழந்தையை
கட்ட்டியணைத்து
ஓரிரவாவது உறங்க
எத்தனை நாளாக ஆசை
பேரப் பிள்ளைகளோடாவது
உறங்க
மிஞ்சுமோ எந்தனுயிர்?
************
ஆக்ஸிஜன் நிறைத்த
கல்லறை
எங்காவது கிடைக்குமா?
************
இதெல்லாம் கவிதையா என்று - நீ
கடித்துக் குதற
போடா நாயே - என்று
சொல்லத் துடிக்குமென் நா
உடனடி
நினைவில் ஓடி வருமென்
தாய் தந்த உபதேசமது
என்னை மீண்டும்
வாய்ப்பூட்டிடும்!
*************
எத்தனை கஷடங்களிருந்தாலும்
நீ கட்டின தாலிக்கு
மஞ்சள் குங்குமம் வைத்து
அதை
கண்ணில் ஒத்திக்கொள்ளவில்லை
என்றால்
ஏனோ வலிக்கிறதே எந்தன் நெஞ்சம்!
பெரியார் ஐயா வாழ்ந்த
மண்ணில் பிறந்தும்
ஏனென்னில் இந்த
முட்டாள்தனம்?
உண்மையில் நான்
வெங்காயம் தான!
**********
விதவைக்கோலம் பயந்து - என்
துரோகி உனக்கு
நீண்ட ஆயுள் கிடைக்க
பிரார்த்த்னை செய்தேன்
அது தப்பாப் போச்சு
என்கிறதெந்தன் அறிவு
எந்தன்
மறுவாழ்விலாவது
ஒரு மனிதன்
எனக்கு கணவனாக
வரக்கூடும் தானே?
***********
முதியோரில்லம் சென்று வந்ததிலிருந்து
பிள்ளைகள் ஏனோ மனதின் தூரத்தில்
இத்தனை வருட வாழ்க்கையால்
பயப்படுகிறதென் வருங்காலம் - அன்பு
கணவணைக் கண்டு
என்னை நான் முழுவதுமாய் வெறுக்க
என்ன இனி செய்ய வேண்டும் நான்?
********
என் பாசக்கதவின்
அன்பு சாவி உன்னிடத்தில்
சாவியை தொலைத்த நீ
கதவென்னை விவாகரத்து செய்தல்
முறையோ சொல்?
*********
நடிப்பிற்கே இலக்கணம் நீ தானோ
வீட்டில் சொந்த பந்தங்களுக்கு முன்
உன்னில் தான் என்ன ஒரு பரிணாமம்!
**********
உனக்கு ஜலதோஷமென்றால்
வீடே மருத்துவமனையாகும்
எனக்கு நெஞ்சு வலி வந்தால்
என் சொந்தபந்தங்களால்
மருத்துவமனையே வீடாகும்
எது ஏதானால் உனக்கென்ன
நீ நீயாகவே என்றும்!
*********
அடிமையின் விடியலைப் பற்றின
பயத்தில்
என்னை அடிமையாக்கின பின்னும்
பாவம் உனக்கு உறக்கமேயில்லை!
*********
வீட்டை விட்டு வெளியேற
நான் தயார்
என் தாயாரிடம்
நான் கொண்டு வந்த
என் கர்ப்பை திரும்பக் கொடு!
***********
என்
புன்னகையில்
பொய்
என்று - என்
ஒவ்வொரு பல்லும் சொல்லும்
நிஜ சிரிப்பை உணரத்துடிக்கிறதே
பாவமெந்தன் பற்களும்!
*********
நான் நல்லவள் தான்
அதனால் தான்
இறைவன்
என்னை உனக்கு
தாரமாக்கினார்
*********
படுக்கை
சேவை
இவை
இரண்டுக்குமா
வருடமொரு சேலை?
*********
திரைப்படங்களில்
நல்லவனைக் கண்டு வியப்பேன்
ஓ...
அதுவும் நடிப்பு தானே
என்ற நிஜத்தில்
மீண்டும் கவலைக்கு செல்லும்
எந்தன் நிஜம்!
*********
சரி..
இப்படியே வாழ்ந்திடுவோம்
இதற்கெல்லாம் தீர்மானமெடுத்தால்
உலகில் அதிக பெண்கள்
"வாழாவெட்டி முகாமில்"
நிம்மதியாக வாழவேண்டியது தான்!
நிம்மதியாக வாழவா
இந்த பெண் ஜன்மம்?
நம் முன்னோர்கள் போலவே
நிம்மதியாக வாழ்வது போல் நடித்தே
வாழ்ந்து முடிக்கலாம்!
***********
என்றாவது ஒரு நாள்
என்னை நினைத்து
நிஜமாய் நீ அழுவாய்
என்று நினைத்து தான்
பூவோடும் பொட்டோடும்
போக வேண்டுமென்ற
ஆசையில் நான்!
**********
திடீர் பாசம்
அது
இன்னொரு பெண்ணின்
கவலையை
என் முன் காண!
அதை
வேண்டாமென்று தடுத்தேன்
உடனே நீ அமைத்தாய்
சின்ன வீடு!
பாவம் அந்த
ஏழைப்பெண்!
***************
நீ முதலில்
உண்ட உணவகம்
நீ வந்த
வழி
இவைகள்
இன்னொருவளின்
இளமையில்...
இதுவே
நீ
தேடும் காமம்!
**************
எனக்கும்
அடுத்த பெண்களுக்கும்
என்ன தான் பெரிய வித்தியாசம்
நான் உண்மை சொல்கிறேன்
அவர்கள் மறைக்கிறார்கள்!
************
"விதவையானால்"
ஐயோ
அதை நினைத்தாலே பயம்!
கொலைகாரியாகி விடுவோமென்றால்
அது பாவம்!
பிள்ளைகளை நினைத்தால்
பயம்! - அதனால்
உயிர் வாழ வேண்டுமென்ற
நிர்பந்தம்!
மஞ்சள் குங்குமம் தாலி
இவைகளெல்லம் சேர்ந்தென்
முகத்தின் பொய்த்திரை கண்டு
கிண்டலாய் தருகிறது
அவமானம்!
கள்ளக்காதல்
கோழைத்தனம்!
சரி..
கோழைத்தனமாவது
மன அமைதி தருமா- அது
யாருக்கு தெரியும்?
இனம் அதே ஆணினம் தானே!
தற்கொலை
ஆன்மீகப்படி மகா பாவம்!
இத்தனை
கொடுமைகள் அனுபவத்ததின்
புண்ணியத்தை இழக்க முடியாத
இயலாமை!
உன்னோடு வாழ்வது
போராட்டம்
சரி..
போராடியே நானும்
வாழ்ந்து பார்க்கிறேன்
என்றாவது நீ மாறமாட்டாயா
என்ற ஒற்றை
நம்பிக்கையில்!
- சுரேஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )