புளியடிக்கும் காலம்
சல்லிசு விலையில்
வருசத்துக்கே வாங்கிவிடுவார் அப்பா
அறுவடைக்காலத்தில் மலிவாய்
அவரை துவரை நெல் பிடிப்பார்
ஏழெட்டு மூட்டை
சேலம் பாசஞ்சர் பயணமென்றால்
கூடைக்காரியிடம்
நாலுதட்டம் காய் வாங்காமல்
வீடு திரும்பமாட்டார்
மார்க்கெட்டில்
ஒருநாளுக்காகும் காசில்
ஒருவாரத்துக்கே கிடைப்பதாய் ஒப்பீடு தவறாது
ஒருமைல் நடந்தால்
ஒருரூபாய் மலிவென்றால்
அப்படியொரு பரிவர்த்தனைக்கே
பழகியிருந்த எங்கள் அப்பா
காந்திபுரம்
அண்ணாநகர்
காமராசர் காலனியைப் போலவே
ஊரிலிருந்து ஒன்பது காதத் தொலைவில்
உருவாகும் புதுநகரில்
ஒரு சென்ட் ஒரு லட்சமென வாங்கினார்
பஸ்ஸ்டாண்டுக்கு கூப்பிடு தூரத்தில்
அம்பேத்கர் காலனியில்
அடிமாட்டு விலைக்கு மலிந்திருக்கும் மனை வாங்க
நாதியில்லை யாருக்கும்
சாதியிருக்கிறது
மண்ணுக்கும்...
- ஆதவன் தீட்சண்யா (