தைரியமாய்
எடுத்து வைக்கும்
பாதப் பதிவுகள் போன்றவை
என்
காதல் விண்ணப்பங்கள்.
பாம்புகள்
பதுங்கியிருக்கலாம்.
படுகுழுகள்
பசித்திருக்கலாம்
விலங்குகள்
விழித்திருக்கலாம்
அல்லது
பாதையே இல்லாமல் இருக்கலாம்.
எனினும்
கனவுகளின் வெளிச்சத்தை
மனம்
தூக்கிச் சுமக்கும்
காதல் லாந்தரில்.
நள்ளிரவில்
வைத்தியரைத் தேடி ஓடும்
பிள்ளைத் தாச்சியின் கணவன் போல
தைரியமாய்
ஓடிக்கொண்டிருக்கின்றன
காதலின் விண்ணப்பங்கள்.
பின்னணியில்
ஓர்
தாய்மைத் தாயின் தவிப்பொலியைச்
சுமந்து.
- சேவியர்