அந்த அழுக்கு அரைக்கால் டிரவுசரின்
வாசனையை உணர முடிகிறது...
என் பழைய பள்ளிக் கட்டடத்தை
கடந்து போக நேர்கையில்
பலமுறை என் தத்தா செத்துப்போனதாய்
அறிவித்த விடுமுறை விண்ணப்பங்களையும்
ஆரஞ்சு மிட்டைக்கான ஆர்வக் கோளாறில்
தேசியக் கொடியைத் தலைகீழாக
குண்டூசியில் ஏற்றிய
ஆகஸ்டு பதினைந்துகளையும்
எல்லப்பனின் தகர டப்பாவை
மறைத்து வைத்ததனால் ஏற்பபட்ட மனஸ்தாபத்தில்
இன்று வரை பேசாமலிருப்பதும்
கூட்டாஞ்சோத்துக்காக சுள்ளிகள் பொறுக்கிய
சொப்பு விளையாட்டுகளையும்
அசைபோடத் தோன்றுகிறது...
"மௌஸ் ஹேங்க் ஆயிடிச்சி டாடி"
என்கிற என் மகனின் குரலால்...
- முத்தாசென் கண்ணா