ஒருபோதும்
எதிராக இல்லாத
ஒரு சுயம் மரித்துவிட்டது.
சுதந்தரம் செத்துவிட்டது
வன்முறை வென்றுவிட்டது
சுதந்தரத்தைச் சுவாசித்து
சுதந்தரத்தைக் கற்று
சுதந்தரமாக வாழ
ஒரு சுதந்தரமில்லை
எட்டாண்டுகளாகக் காப்பாற்றப்பட்ட
சுயசிந்தனை
களவாடப்பட்டுவிட்டது
சிந்தனையே இல்லாமல்
தலையும் மூளையும்
இருந்தால் போதுமா?
நாம் என்ன
பலியாடுகளா!
இருட்டின் ரசிகர்கள்
வெளிச்சத்தை விரும்பவில்லை
பெளர்ணமியை அணைத்துவிட்டு
அமாவாசையை அணிந்துகொண்டார்கள்
முடியாட்சியிலிருந்து
விடுபட்டோம்
இனி
முடிவில்லாத ஆட்சியாக
எதிர்காலம்
தோன்றிமுடிந்துவிடும் அபாயம் தெரிகிறது
மீட்போர் இல்லாத
மீளமுடியாத
ஓர்
எதிர்காலத்தை எண்ணி
தீர்மானம் என்பது:
"உடுத்திக்கொள்வோம் சுதந்தரத்தை
வரித்துக்கொள்வோம் மரணத்தை"
- பிச்சினிக்காடு இளங்கோ (