மறுக்கப்பட்டிருக்கும் அனுமதி
மீறி வருகையில்
கோட்டைக்கு வெகுமுன்பே
தடுத்து நிறுத்தி
இழுத்துச் செல்லப்பட்டிருப்பாய்
விசாரணைக்கு
மழைராத்திரியில்
நொதித்த ரொட்டித்துண்டாய்
மீன் அரித்தக்காயங்களோடு
உப்பிய உனது சடலம்
நீலம் பாரித்து
எங்கேனும் ஒதுங்கியிருக்கும்
ஒற்றைக் காற்சிலம்பை திருடி ஓடியவள்
கடலுக்குள் ஒளிய முயன்று
மூச்சுத் திணறி சாவு என்றிடும்
அரசின் அறிக்கை
அறிந்திருக்கும்
உண்மையை சொல்லமுடியாத
ஆத்திரத்தில்
பொங்கி அலைவீசும் கடற்கரையில்
காலியாகவே இருந்திருக்கும்
ஒரு சிலைக்கான இடமும்
கற்புக்கரசி பட்டமும்
இளங்கோவடிகள் கையில்
வெள்ளைத்தாள்களும்.
- ஆதவன் தீட்சண்யா (