
நீயே நிலமிறங்கினாலும் - எட்ட
நின்றே நினைவுகளில்
நிறுத்திக் கொள்வேன்.
தூரத்து கோயில் கோபுரமும்
தூண்டா மணி விளக்கும்
தூரமாய் இருப்பதாலேயே அழகு.
உள்ளங்கையில் மலர் பொதிந்து..
உருகி உருகி உதவிகள் செய்து
உறவாடும் மாணவியாய் இன்றி..
ஊரெல்லையில் உனதுருவம்
மறையும் வரை நின்று
மௌனமாய் வீடு திரும்பும்
மாணவியாய் இருக்கவே விருப்பம்.
உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதே
உயிர் நிறைப்பதால்
உன்னை காதலிக்கிறேன் என சொல்லியாகும்
கட்டாயம் எனக்கில்லை.
மறுத்து விட்டாயென்றால்
மனோதிடமின்றி
மறக்க முயன்றிடுவேன் - எனவே
மறந்தும் சொல்லமாட்டேன் உன்னை
மணக்க ஆசை என்று.
- பத்மப்ரியா (padmapriya_