
புதுமனைப் புகுவிழா ஏதுமின்றி
குடித்தனம் நடத்துகிறதொரு
பூனைக் குடும்பம்
மனைவியுடன் சம்பாஷிக்க வரும்
ரகஸ்ய நண்பனைப் போல
இரவின் அமைதியில் ஊடுருவி
பாத்திரமுருட்டும் பூனையொன்று
பூச்செடிக்கு அருகே
முகர்ந்து பார்க்கிறது பூனை
வாசமில்லா அழகியப் பூவை
கற்றுக் கொடுத்தது யாராயிருக்கும்
படியேறி வருகின்றன பூனைக் குட்டிகள்
பார்த்தவுடன் மிரண்டோடிப்
பதுங்குகின்றன
குரலில் வெளிப்படுவது
மிரட்சியா... மிரட்டலா..
குட்டிகளோடு சேர்த்து
ஏழோ எட்டோ இருக்கின்றன
பூனைகள்
ஆனாலும் இருக்கிறது
எலித்தொல்லை
மிக அருகருகே வாழ்கிறோம்
பூனைகளும் நானும்
உறவுகளைப் போலவே
மன நெருக்கமின்றி.
- அன்பாதவன், மும்பை