சொல்லிவிட்டு வந்தேன்
என் கவலைகளை
அவனிடம்

அவன் என்ன நினைக்கிறான்
என்பதே என்னுடைய
இப்போதைய கவலையாக
இருக்கிறது.
நிதானமாகத் தலையசைத்து
என் கவலைகளைக் கேட்டு
உள்ளூர அவன்
மகிழ்ந்தான் என்பதற்கும்
அப்படியில்லை என்பதற்கும்
ஆதாரமற்றுத் தவிக்கிறேன்
நான்.
என் கவலைகள் குறித்து
கவலைப்படாத ஒருவனிடம்
சொல்லியிருக்கக் கூடாதுதான்
என் கவலைகளை.
தனது கவலைகளைப் பிறரிடம்
சொல்லிக் கொள்ளாமலிருப்பதைத் தவிர
வேறென்ன தகுதியிருக்கிறது
அவனுக்கு என் கவலைகளைக் கேட்க?
அநியாயமாக ஒருவனை
நீதிபதியாக்கிவிட்ட
அவமானம் குடைகிறது
என்னை.
தீர்வு காணத் தெரியாதவர்கள்
தீர்ப்பு கோரிப் புலம்புவார்களோ
ஒரு வேளை?
- ஜெயபாஸ்கரன் (jayabaskaran_