வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு நல்ல குணங்களில் நிதானம் என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. பலரிடம் இந்த குணம் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. நிதானம் என்பது அவ்வளவு கடினமான ஒரு விஷயமா? ஏன் பல நேரங்களில் நம்மை மீறி நிதானம் தவறி தவறான செயல்களில் ஈடுபட்டு விடுகிறோம் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், சில எதிரிடையான சம்பவங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பூமியின் ஒரு பகுதி பனிமயமாகக் காணப்பட்டால், மற்றொரு பகுதியில் பாலைவனங்கள் நிறைந்துதானே காணப்படுகின்றன.
இப்படிப்பட்ட ஒரு மனிதரா என்று ஆச்சரியப்பட வைத்த அந்த மனிதரின் பெயர் திரு. மோகன்.
"சார் பேனா கொடுங்க சார்! கையெழுத்து போட்டுவிட்டு தருகிறேன்" என்று கேட்டால் அவர் அதை எடுத்துத் தருவதற்குள் கடைக்கு சென்று ஒரு டீ சாப்பிட்டு விட்டு வந்துவிடலாம். சில சமயங்களில் அவர் காதுகளில் வேறு அந்த வார்த்தைகள் விழாது. மீண்டும் அதே கேள்வியைக் கேட்டு அவரிடம் பேனா வாங்குவதற்குள் உயிர் 2 முறை மேலோகம் சென்றுவிட்டு வந்துவிடும்.
"பேனா இல்லாம என்ன மயிருக்குடா ஆபிஸ் வர்றீங்க" என்று திட்டுபவரைக் கூட என்னால் சகித்துக் கொள்ள முடியும்.
"பேனாவும் மனைவியும் எனக்கு ஒன்றுபோல, ஒருவர் கைப்படத்தான் இருக்க வேண்டும்" என்று சொல்பவரைக் கூட பார்த்திருக்கிறேன். ஒன்றுமே பேசாமல் ஒருவர் பயமுறுத்துகிறார் என்றால் அது அண்ணன் மோகனாகத்தான் இருக்கும். வெறும் ஒரு வெற்றுப் பார்வை. அதில் அப்படி என்னதான் இருக்கிறதோ, தெறித்து ஓட வைக்கிறது.
நான் எதற்கு அவரிடம் சென்று பேனா வாங்க வேண்டும். நானாவது பரவாயில்லை. ஒருவரிடம் சென்று பேனா வாங்குவதற்கு அனுமதி கேட்கிறேன். ஆனால், என் சட்டைப் பையில் உள்ள பேனாவை அனுமதி கேட்காமலேயே எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்களே.
"ஹலோ என் பேனாவை என்னைக் கேட்காமலேயே எடுத்துக்கிட்டு போனா என்ன அர்த்தம்" என்று கேட்பதற்குள்ளேயே, கேட்க முடியாத தூரத்திற்கு சென்று விடுகிறார்கள். அவர்களை இனி செய்வதாய் இருந்தால் கொலைதான் செய்ய வேண்டும். என்னால் என் பேனாவை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அந்தத் தோல்வியை எப்பொழுதோ ஏற்றுக் கொண்டேன். இதற்காகவே விலைகுறைந்த 2 ரூபாய் லெட் பேனாக்களை வாங்கி உபயோகித்துப் பார்த்தேன். ஒருநாளைக்கு 2 ரூபாய் போனால்தான் என்ன என்பது என் எண்ணம். ஆனால், என்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் என் அனுமதிபெற நினைக்காமல் எடுத்துச் செல்லும் அந்த தான்தோன்றித்தனமான போக்கை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அத்தகையோரை பழிக்கு பழி வாங்குவதற்காக ரீபில் இல்லாத பேனாக்கள் மற்றும் வெற்று ரீபில்கள் அடங்கிய பேனாக்கள் போன்றவற்றைக் கொண்டும் போராடிப் பார்த்துவிட்டேன். அதையும் திருப்பிக் கொடுக்காத தன்மையை என்னால் ஆராய்ந்து பார்க்கவே முடியவில்லை.
இத்தகைய துன்பங்களுக்கும், பரிதாபகரமான அவல நிலைகளுக்கும் உட்பட்டு மிதிபட்டு, அச்சத்திலும், கோபத்திலும் உழன்று அதிலிருந்து வெளிவந்திருக்கும் நான் இன்று எல்லோரையும் போல பேனா கடன் வாங்குபவனாக மாறிப்போனேன், அதற்கு முதல் தகுதி கேட்பதற்கு வெட்கப்படவே கூடாது. இதைவிட சிறப்புத்தகுதி ஒன்று உண்டு. கேட்காமலேயே உரிமையுடன் பாக்கெட்டுக்குள் கையை விட்டு பேனாவை எடுத்துச் சென்று விடுவது. இதிலும் சில நுணுக்கங்கள் உண்டு. பேனாவுக்கு சொந்தக்காரர் ஏதேனும் (ஒருவேளை) கோபப்பட்டு நம்மை திட்ட முயற்சி செய்வாரேயானால் அந்த இடத்தில் ஒரு நொடியும் தாமதிக்காமல் நழுவிச் சென்றுவிடுவது.
இவையெல்லாம் முடிந்தபின் பேனாவை திருப்பிக் கொடுப்பதைப்பற்றி எந்தவித பரிசீலனைக்குள்ளும் செல்ல வேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு செயலைச் செய்து அசிங்கத்தைத் தேடிக் கொள்ளக் கூடிய முட்டாள் தனத்தை நாம் செய்துவிடக் கூடாது. இதில் ஒரு துரதிர்ஷ்மான நீதியும் உண்டு.
"நாம சுட்ட பேனா நமக்கு சொந்தமில்லை" என்பது தான் அந்த நீதி. அந்த பேனாவை வேறொருவர் நம்மைக் கேட்காமல் எடுத்துச் சென்றுவிடுவார். அதனால் ஒரு துறவியைப் போல் பொருள்களின் மேல் பற்றில்லாமல் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் மிஸ்டர் மோகன் அதற்கான வழியைக் கண்டுபிடித்துவிட்டார். என் வாழ்க்கையில் என்னால் பார்க்கவே முடியாத அந்த விஷயம், அதாவது ஒரு பேனா என்னால் முழுதாக எழுதி தீர்ந்து போவதை பார்க்க முடியாத அந்த சாதனையை மிஸ்டர் மோகன் செய்திருக்கிறார் என்றால் என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
அவரிடம் சென்று பேனா கேட்டால் 10 வினாடிகள் கழித்து நிமிர்ந்து பார்த்து "என்ன கேட்டீங்க" என்று கேட்பார்.
"பென்......பென்.......ப்ளீஸ்" என்று கேட்டால் அவர் பாக்கெட்டை குனிந்து பார்ப்பதற்கு 10 வினாடி, அந்தப் பேனாவை எடுப்பதற்கு 10 வினாடி, அந்த பேனா எழுதாது என்று சொல்வதற்கு 10 வினாடி என பொறுமையை சோதித்து கொன்று விடுவார். அதனால் அவரிடம் ஒரு பேனா முழுதாக எழுதித் தீர்க்கப்படும் அதிசயம் நடைபெறுவது வழக்கம்.
ஐயோ நிலநடுக்கம் என்று அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் அனைவரும் எழுந்து ஓடியபோது கூட மிஸ்டர் மோகன் அசரவே இல்லையே, நிலைமை சகஜமாகி அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்குள் வந்த பின்னர், உட்கார்ந்த இடத்தில் இருந்து திரும்பிப் பார்த்து
"என்னது நில நடுக்கமா, ஏன் எல்லோரும் இங்கே உக்காந்திருக்கீங்க, வெளியே எந்திரிச்சு போகாம" என்று நிதானமாக கேட்கிறார் என்றால், நான் ஏன் நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழக்கக் கூடாது.....
அவர் ஒரு நிதானப் போராளியாக மாறிப் போனதால் அந்த செகுவேராவிடம் மாட்டிக்கொண்டவர்கள் அலுவலக ஊழியர்கள் மட்டுமல்ல, சமுதாயத்தில் உள்ள இன்னும் சில நண்பர்களும் உண்டு.
அந்த பேருந்து நடத்துனரை பற்றி .......... நினைக்கவே பதற்றமாக இருக்கிறது.
------------------
ஒரு பேருந்து நடத்துனர் உயிரிழப்பதற்கான ஏராளமான காரணங்கள் இருக்கலாம். பேருந்து விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு நேரலாம். பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழக்கலாம். திடீரென இதயம் செயலிழந்து உயிரிழக்கலாம். ஆனால் திரு. மோகன் தனது ஒற்றைப்பார்வையால், தனது இருப்பை உணர்த்துவதன் மூலமே ஒரு பேருந்து நடத்துனரை உயிரிழக்கச் செய்துவிடக் கூடிய வல்லமைப் படைத்தவர் என்றால் அது மிகையில்லை,
பேருந்து நின்றபின் அதில் ஏறி தனக்குரிய இடத்தில் சென்று நிற்பதற்குள் நடத்துனர் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விடலாம். சரி... அந்த நிதானமான மனிதர் பேருந்துக்குள் ஏறியபின் என்னை எழுப்பி விடுங்கள் என்று விளையாட்டுக்கு இல்லாமல் சீரியசாகவே தனது அருகில் இருப்பவரிடம் அந்த நடத்துனர் கூறியுள்ளார். மிஸ்டர் மோகன் (தினசரி சோதனை) பயணம் செய்வதற்கு தனியாக தனக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று 4 முறை அரைத்தூக்கத்தில் புலம்பியிருக்கிறார் அந்த நடத்துனர். மோகனுக்கு டிக்கெட் வழங்குகிற கொடுமையான தண்டனையிலிருந்து தனக்கு என்று விடுதலை கிடைக்கும் என்று தினசரி அவர் விருப்ப தெய்வமான மாகாளி அம்மனிடம் அழுது புலம்பியிருக்கிறார். மிஸ்டர் மோகன் பேருந்தில் பயணம் செய்வதற்கு ஏன் டிக்கெட் வாங்க வேண்டும். அவருக்கு பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்கு உரிமை இல்லையா என்ன? எத்தனையோ பேர் டிக்கெட் வாங்காமல் பயணிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கிறது. திரு. மோகனுக்கு அத்தகைய உரிமையை அரசாங்கம் வழங்க வேண்டும், இல்லாவிட்டால் நான் உண்ணாவிரதம் இருப்பேன் என்று அரசாங்கத்திடம் வெறிப்பிடித்தவரைப் போல் வாதாடத் தயாராக இருக்கிறார். ஆனால் திரு. மோகன் பஸ்பாஸ் வாங்கத் தயாராக இல்லை. தினசரி சரியான சில்லறைகளை எண்ணி, அதை நடத்துனரிடம் கொடுத்து டிக்கெட் வாங்கித் தான் செல்வார். அவர் டிக்கெட் வாங்காமல் பயணிக்கத் தயாராக இல்லை என்பது அவருடைய கொள்கைகளுள் ஒன்று.
தினசரி திரு. மோகன் பேருந்து நிறுத்தத்தில், அந்த பேருந்து வந்து நிற்கும்போது, பேருந்துக்குள் இருப்பவர்கள் தங்களுக்குள் எப்படி பேசிக் கொள்வார்கள் தெரியுமா?.
எப்படி இந்த ஆளுக்கு 24 மணி நேரம் போதுமானதாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுவான் ஒரு எல்.கே.ஜி. படிக்கும் மாணவன்.
"சேய் தினசரி இந்த இடத்திற்கு வரும்போது இந்தப் பேருந்து பழுதாகி நின்று விடுகிறது. எவ்வளவோ செலவு பண்றானுக. இந்த பஸ்ஸ சரிபண்ண மாட்டேங்கிறானுக" என்று அழுத்துக் கொள்வார். தினசரி கூலி வேலைக்கு சென்று வரும் தொழிலாளி ஒருவர்.
சிக்னலே இல்லாத அந்த பேருந்து நிறுத்தத்தில் "இந்த சிக்னலில் மட்டும் 15 நிமிடம் நிற்க வைத்து விடுகிறார்கள், அவ்வளவு முக்கியமான சிக்னல் இது" என தனது தோழியிடம் கல்லூரி மாணவி ஒருவர் சொல்லிக் கொண்டிருப்பார்.
தினசரி டாஸ்மாக்கில் தனது வேலையை முடித்துக் கொண்டு வரும் தமிழ்க் குடிமகன் ஒருவர் "பஸ்சு நின்னுருச்சு, எல்லாரும் இறங்கி தள்ளுங்கப்பா" என போதையின் உச்சத்தில் கண்ணைத் திறக்காமல் கூறுவார். எல்லோரும் பேருந்தை இறங்கித் தள்ளுவதாகவும் கற்பனையும் செய்து கொள்வார்.
பேருந்து பயணிகள் ஒவ்வொருவரும் தினசரி நடைமுறைக் கொடூரம் தெரியாமல் அவரவர் கற்பனைக்குள் இருக்கும் பொழுது, எப்பொழுதும் விழிப்புடன் நடத்துனர் மட்டும் திரு. மோகன் என்கிற அந்த அணு ஆயுதத்தை எதிர்கொண்டிருப்பார்.
அன்று ஒருநாள் தனது சக நடத்துனரிடம் பயம் ததும்ப கேட்டார். "திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டால் 108க்கு போன் பண்ண வேண்டுமா? அல்லது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு போன் பண்ண வேண்டுமா? அப்படி போன் செய்தால் உடனடியாக வந்து நம்மைக் காப்பாற்றி விடுவார்களா? இல்லை டிராபிக்கில் அழைத்துச் செல்லப்படும்போது செத்துவிடுவோமா?"
நடத்துனரின் இத்தகைய எல்லா புலம்பல்களுக்கும் திகில்மன்னன் திரு. மோகன்தான் காரணம்.
-----------------------
"ஹைவே சாலையில் அனைவரும் 70, 80, 90 என சென்று கொண்டிருக்கும் போது ஒருவர் மட்டும் நடு சாலையில் 20-ல் சென்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும். அப்படிச் செல்பவன் சாலைவிதிகளுக்கு புறம்பாக செயல்படுகிறான் என்று சொன்னால் அது தப்பா?" என கைகள் நடுங்க வார்த்தைகள் தடுமாற கூறியவர் பெயர் மிஸ்டர் நடராஜன். மிஸ்டர் மோகன் வேலை பார்க்கும் செய்தி நிறுவனத்தின் எடிட்டர்.
7.30க்கு செய்தி போயாக வேண்டும். 7.25க்கு ஹெட்லைன் கார்டை திறந்து வைத்துக்கொண்டு என்னவோ செய்து கொண்டிருந்தார் மிஸ்டர் மோகன்.
"மோகன் என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க, நடிகைகளைப் பற்றி பிறகு நினைத்துக் கொள்ளலாம். முதலில் ஹெட்லைன் கார்டை போடுங்கள்"
மோகன் மெதுவாக திரும்பி பார்த்து "என்ன???" என்பது போல் ஒருபார்வை பார்த்தார். ஐயோ......... என கத்தியபடி அவர் கேப் ஜெமினி கட்டடத்தின் 13வது மாடியிலிருந்து விழுந்தது போன்றதொரு உணர்வுக்கு ஆட்பட்டார். அவர் வேலையை விட்டுவிட்டு செல்லாமல் தடுக்க 15 பேர் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீரை அனைவரும் பரிதாபமாக பார்த்துச் சென்றார்கள்.
"டாக்டர் யார் மீதாவது கோபம் வந்தால் என்ன செய்வது"
"குருஜி மனதை மென்மையாக வைத்துக் கொள்வது எப்படி"
"யோகா செய்தால் கோபத்திலிருந்து மனதை கட்டுப்படுத்தி விட முடியுமா?...... நிச்சயமாகத்தான் சொல்கிறீர்களா"
"டாக்டர் தற்கொலை எண்ணங்களை எப்படி கடந்து செல்வது"
" டாக்டர் கைநடுக்கத்தை குறைக்க எதாவது வழி இருக்கிறதா?"
"மாஸ்டர் கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள்"
"123456789........." மிஸ்டர் மோகன் எதிர்த்தாற்போன்று நின்று கொண்டிருந்தார்.
"ஓம் சாந்தி......... சாந்தி........... சாந்தி.........." மிஸ்டர் மோகன் எதிர்த்தாற்போன்று நின்று கொண்டிருந்தார்.
"டி.பி. டேபலட்டை எடுத்து விழுங்கினார்" மிஸ்டர் மோகன் எதிர்த்தாற்போன்று நின்று கொண்டிருந்தார்.
கோபத்தை அதன் வழியில் விட்டுவிட்டு வெறுமனே அதனை கவனித்துக் கொண்டிருங்கள் - ஓசோ
அலுவலக நோட்டிஸ் போர்டில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
"இன்று காலை செய்தி ஆசிரியருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுவலர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு மேல் சென்று பார்க்கலாம்"
செய்தி ஆசிரியரை மருத்துவமனையில் பார்த்தவர்கள், "காட்சில்லாவை பார்த்த ஜப்பானிய கிழவரைப் போல் பயத்தில் புலம்பியதாக" அலுவலக கேன்டீனில் டீ குடிக்கும் போது பேசிக் கொண்டார்கள்.
--------------------
அமெரிக்கவில் சிறந்த ஹாலிவுட் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்குவதுபோல், மோசமான படங்களுக்கும் விருதுகள் வழங்குவதாக கேள்விப்பட்டதுண்டு. அதுபோல் மிகச்சிறந்த மடையனுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என ஒருவரை தேர்ந்தெடுக்கக் கூறினால் அந்த மடையரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அந்த மடையர் அப்படி என்ன செய்தார் தெரியுமா? மிஸ்டர் மோகன் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, அவருக்கு பின்னால் வண்டியில் வந்து கொண்டிருந்த அவர், மிஸ்டர் மோகன் ஒதுங்கிவிடுவார் என்ற (நப்பாசை, பேராசை, நடக்க முடியாத ஒரு விஷயத்துக்காக ஏங்குதல்) எண்ணத்தில் ஹாரன் அடிக்கிறார். தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டே இருக்கிறார். ஆக்சிலேட்டரை முறுக்குகிறார். கோபத்தில் பற்களை நறநறவென கடிக்கிறார். என்ன பிரயோஜனம்....
"சார் ஒதுங்கிக்கோங்க சார்"
"யோவ்....."
"செகுட்டுப் பயலே"
"மண்டி வெளக்கண்ண ஒதுங்குடா டேய்"
"எங்கிருந்துடா வர்றிங்க நீங்கள்ளாம்"
"நேரக் கொடுமைடா கடவுளே"
அவருக்கு ஏன் சிறந்த மடையருக்குரிய நோபல் பரிசை கொடுக்கக் கூடாது என்பதுதான் எனது கேள்வி? இவர் ஹாரன் அடித்தால் மோகன் ஒதுங்கி விடுவாரா. என்னவொரு நப்பாசை, கடவுளே தாங்க முடியவில்லை. அப்படி ஒருவேளை மேற்கில் சூரியன் உதிப்பது போல், திரு. மோகன் ஒதுங்குவாரேயானால், அது கலி முற்றிவிட்டது என்பதற்குரிய அல்லது மாயன் காலண்டர்படி உலகம் அழியப் போகிறது என்பதற்கான முன் அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாம்.
மோகன் தனது அமைதியான செயல்பாட்டின் மூலம் அனைவரின் உள்ளங்களையும் ஆட்டம் காணச்செய்யும் வல்லமை படைத்தவர். அமைதிக்கு எவ்வளவு சக்தி என்பதை காந்திக்குப் பிறகு உலகுக்கு உணர்த்திக்கொண்டிருப்பவர் திரு. மோகன்தான் என்றால் அது மிகையில்லை.
-----------------------------
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மாமாமாமாமா, ..................
5க்கு 5 அடியில் நான்கு பெரியபெரிய ஸ்பீக்கர்களை சுவர் போன்று ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து சுத்துப்பட்டி 18 கிராமங்களுக்கும், ஒரு கடிதம், தொலைபேசி அழைப்பு, தந்தி என எந்த தகவல் தொடர்பு சாதனமும் இன்றி திருவிழா ஆரம்பித்து விட்டது என நேரடியாக தகவல் கொடுக்கும் சாதனமான இந்த அம்மன் பாட்டு யுக்தியை ஏதோ இளையராஜாவின் இனிய கீதத்தைக் கேட்டுக் கொண்டு தூங்குவது போல் மென்மையான புன்னகையுடன் கேட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் திரு. மோகன் ஒரு நிகழ்கால ஆச்சரியம் என்றால் அதைக் கேட்டு வியப்புறக் கூடாது. அவரிடம் வியப்புற ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஏதோ போன திருவிழாவின் போது காது ஜவ்வு கிழிந்து போன சில பெருசுகள்,
"அடியே, கொட்டப்பாக்கு இடிக்குறத நிறுத்தப் போறியா இல்லையாடி" என ஆவேசமாக கத்திக் கொண்டு இருப்பார்கள். ஏதோ மோகன் அவர்களின் தூக்கம் கலைந்து விடும் என்கிற கவலையில். ஆனால் அவர் இதையெல்லாம் பொருட்படுத்தக் கூடியவர் இல்லை. அவர் நேரம் தவறுவதே இல்லை. 9.30 மணிக்கு கண்களை மூடிக் கொண்டு தூங்க ஆரம்பித்து விடுவார். காலை 6.30 மணிக்கு எழுந்து விடுவார். இதனால் அவர் தன் வாழ்நாளில் ஒரு தடவை கூட மிட்நைட் மசாலா பார்த்ததே இல்லை.
அவரை அவர் அதிகமாக வற்புறுத்திக்கொள்வதே இல்லை. எதற்காக வற்புறுத்திக் கொள்ள வேண்டும். கால்வாயில் தண்ணீர் தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது. அதை தள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்று அவரைப்போல (ஓசோ) தத்துவம் பேசுவார். வாழ்க்கை நூல் பிடித்தாற்போன்று நேர்க்கோட்டில் தன்னைத் தானே அமைத்துக் கொண்டிருக்கும் போது, அதை வளைக்க வேண்டிய அவசியம் என்ன. எனக்கு ஆக்சிலேட்டர் மட்டும் போதும், ஹேன்பார் தேவையில்லை என்று கூறக்கூடிய மனிதர். தினமும் 3 வேளை உணவு, 8 மணி நேரம் தூக்கம், உடலை மறைக்க உடை. தனக்குரிய வேகத்தில் நிதானமாக செல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறுவார். ஒருவேளை பூமி அதிர்ந்தால் நானும் சேர்ந்து அதிர்ந்து கொள்கிறேன். மற்றபடி அதிர்ந்து போவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்று மற்றவர் நானும்படி எடுத்துக் கூறுவார்.
அவருடைய நிதானத்திற்கு பூமிவாழ் உயிரினங்கள் செல்ல வேண்டுமே தவிர மற்றவர்களின் வேகத்திற்கு அவர் செல்ல மாட்டார். யாரேனும் அவரிடம் கோபப்பட்டால் கோப்பட்டவர் பரிதாபத்திற்குரிய மடையராவார். யாரேனும் அவரிடம் அவசரப்பட்டால், அவசரப்படுபவர் தான் ஏதோ வேண்டத்தகாத காரியத்தில் ஈடுபட்டிருப்பதாக உணருவார். யாரேனும் அவரிடம் ஒரு நகைச்சுவையைக் கூறினால், அந்த நகைச்சுவை தனக்குரிய பொருளை இழந்து விடும். ஆக மொத்தத்தில் அவர் அசராத நடுநிலையுடன் கூடிய, ஒப்பிட வேண்டுமென்றால் புத்தரின் உள் நடு மையத்துடன், அவரின் ஒன்நெஸ்சுடன் ஒப்பிடக் கூடிய அளவுக்கு மிக சாதுவான நிதானமான மனிதர், வேறு விதமாக கூறுவதென்றால் அவர் ஒரு மண். வெறும் மண் அவ்வளவுதான். அவரை மண் - மோகன் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். அவருக்கு இந்தியத் திருநாட்டின் பிரதமர் ஆவதற்குக் கூட தகுதி உண்டு என்று கூறினால் அது மிகையில்லை. இந்தியாவின் பிரதமராக இருப்பதற்கு இதைவிட மிகச்சிறந்த தகுதி வேறு என்ன வேண்டும்.
கீற்றில் தேட...
மண்-மோகன்
- விவரங்கள்
- சூர்யா
- பிரிவு: சிறுகதைகள்