கீற்றில் தேட...

அது ஏப்ரல் மாதம் ஆகையால் வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. அந்த உச்சியைப் பிளக்கும் வெயிலுக்கு பூத்துக் குலுங்கும் அந்த வேப்பமர நிழல் மிக இதமாக இருந்தது. நிலஅளவருடன் புல உதவியாளரும் கிராம உதவியாளரும் தகிக்கும் வெயிலில் நிலத்தை அளந்து கொண்டிருந்தார்கள். அவர்களை வெயிலில் அளக்க வைத்துவிட்டு நான் மட்டும் குளிர்ச்சியான நிழலில் அமர்ந்திருப்பது சற்று உறுத்தலாகத்தான் இருந்தது. இருந்தும் வெயிலில் நிற்க என் மனம் துணியவில்லை. என் உதவி இல்லாமலேயே அவர்கள் அளவைப் பணியை முடித்து விடுவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

பிரதான சாலையிலிருந்து அந்தக் கிராமத்திற்கு ஒரு கிளைச்சாலை பிரிந்து செல்கிறது. அப்படிப் பிரிகின்ற இடத்தில் ஒரு இருபது ஏர்ஸ் அதாவது நாற்பத்தி ஒன்பது செண்ட் நிலம் இருக்கிறது. அது அரசு புறம்போக்கு நிலமாகும். அந்த நிலம் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசுக்குத் தேவைப்பட்டபடியால் அந்நிலத்திற்கு அத்துமால் அளந்து அது இன்ன இடம்தான் என்று அடையாளம் காண வேண்டும். அதன் பின்னரே அந்நிலத்தை சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைக்க முடியும். அதற்காகத்தான் அந்த நிலஅளவை நடந்து கொண்டிருந்தது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட நிலஅளவைக் கற்களில் பெரும்பாலான கற்கள் காணாமற் போய்விட்டன. அருகிலோ அல்லது கொஞ்சம் தூரத்திலோ இருக்கும் ஒன்றிண்டு கற்களைக் கொண்டு புலப்படச் சுவடியின் உதவியுடன் எந்தவொரு குறிப்பிட்ட இடத்தையும் அளந்து கண்டறிய வேண்டும். அப்படி அளந்து வந்து மூன்று பக்கங்களைத் தோராயமாகக் கண்டுபிடித்தாயிற்று. தென்மேற்கு மூலையை மட்டும் உறுதி செய்துவிட்டால் போதும். நான்கு மால்களையும் நிர்ணயம் செய்துவிடலாம். அந்தத் திசையில்தான் நான் வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருந்தேன். நான் இருக்கின்ற பகுதியில்தான் ஏதோவொரு புள்ளியில் தென்மேற்கு மூலை இருக்கிறது. ஒவ்வொரு அடியாக நகர்த்தி நகர்த்தி சரியான புள்ளியைக் கண்டுபிடிக்க அவர்கள் மூவரும் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் பக்கத்துத் தோட்டத்துக்காரர் அங்கு வந்து சேர்ந்தார். சற்று தள்ளி ஓர் அரிவாளும் ஒரு சூலாயுதமும் ஊன்றப்பட்டிருந்தன. அதற்கருகில் குவியலாக மாலைகள் கிடந்தன. பக்கத்துத் தோட்டத்துக்காரர் வந்ததும்,

“சார், செருப்போட இங்க வரைக்கும் வரக்கூடாது சார். இது சாமி இருக்கிற எடம்” என்றார். எனக்கு மனதில் சுறுக்கென்று பட்டது. நான் எப்படி அதை உணரத் தவறினேன் என்று தெரியவில்லை. உடனடியாகக் காலணிகளைக் கழற்றி தூரத்தில் வைத்து விட்டு வந்து அமர்ந்து கொண்டேன்.

“என்னா சாமி இது” என்று சாதாரணமாகக் கேட்டேன். அதற்கு அருள் வந்தவரைப் போல் கண்களை அகல விரித்து என்னை நோக்கினார்.

“முனீஸ்வரன், துடியான சாமி” என்றவர் தொடர்ந்து பேசலானார்.

கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு இரவில் இவ்வழியே ஒற்றையில் வந்த பால்ச்சாமி என்ற மாட்டுத் தரகர் நடுரோட்டில் ரத்தம் கக்கிச் செத்துக் கிடந்தார் என்றும், அதற்குச் சில மாதங்கள் கழித்து திருவிழாவிற்குப் போய்விட்டு வந்த சிலரை வானத்திற்கும் பூமிக்கும் வெள்ளை நிறத்தில் பெரிய தூண்போல நின்று ஒரு முனி வழிமறித்தது என்றும் தெரிவித்தார்.

முனி நடமாட்டம் இரவு பனிரெண்டு மணிக்குமேல் இருக்கும் என்பதால் நடு இரவிற்குப் பிறகு தோட்டம் துரவிற்குச் செல்பவர்கள் கூட அவ்வழியே செல்வதில்லையாம்.

இந்நிலையில் முனியாண்டி என்ற பெயர்கொண்ட ஒருவர்மீது முனி இறங்கி தன்னை முனீஸ்வரன் என்று அறிவித்தது என்றும், அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் வைத்துத் தன்னை வழிபட வேண்டும் என்று உத்தரவிட்டது என்றும் அந்த மனிதர் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் அந்த முனியாண்டியே அங்கு வந்து விட்டார். அறிமுகத்திற்குப் பின் அவர் “முனீஸ்வரன் ரெம்ப சக்தி வாய்ந்த தெய்வம். அந்த ஈஸ்வரனின் அம்சம். இந்த ஊர இவர்தான் காக்கிறார்” என்று சொன்னவர் “டேய்!” என்று சத்தமாக அலறினார். முடிந்து வைத்திருந்த அவரது சடைவிழுந்த கேசம் அவிழ்ந்து அலங்கோலமாகத் தொங்கியது. கண்களில் நீர் பெருக உடலை முறுக்கிக் கொண்டும் நாக்கைத் துருத்திக் கொண்டும் என்னையே முறைத்துக் கொண்டிருந்தார். எனக்குள் நடுக்கம் ஏற்பட்டது. என்னையும் அறியாமல் அவர் காலில் விழுந்தேன். சிறிதுநேரம் சந்நதம் வந்து ஆடியவர் என்னைத் தொட்டு எழுப்பினார். எனக்கு உயிர் திரும்பி வந்தாற்போன்றிருந்தது.

சற்று நேரத்தில் அவர்மீது இறங்கியிருந்த அருள் அவரைவிட்டு இறங்கியது. அவிழ்ந்து கிடந்த கேசத்தை அள்ளி முடிந்து கொண்டு இயல்பாகப் பேசினார்.

“நேத்து அமாவாச இல்லையா! நெறயப் பேரு சாமி கும்புட வந்திருந்தாக. வந்தவக போட்ட மால சாமிய மறச்சுக் கெடுக்கு” என்று சொல்லிவிட்டு அந்த மாலைகளை அள்ளி அப்புறப் படுத்தினார். மாலைகளுக்குள் மறைந்து கிடந்த முனீஸ்வரன் வெளியில் தெரியலானார். அது ஒரு சிறிய கற்றூண். விளக்குத்தூண் போல் இருந்ததே தவிர எண்ணெய் ஊற்றுவதற்கான குழியெதுவும் தூணின் மேற்பகுதியில் இல்லை. சாமியை வணங்கி என் நெற்றியில் திருநீறு பூசிவிட்டார். அவர் கையில் ஏந்தியிருந்த விபூதித் தட்டில் ஒரு நூறு ரூபாயைக் காணிக்கையாகப் போட்டேன்.

அந்த நேரத்தில் அளவைக்குப் போன மூன்று பேரும் தவித்துப் போய் வேப்ப மரத்தடிக்கு வந்து சேர்ந்தனர். இன்றைக்குள் இந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும். தவறினால் தாசில்தாரிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும். அதை நினைக்கும்பொழுது மனம் வேதனைப்பட்டது.

“சர்வேயர் சார், என்ன செய்யலாம்?” என்று கேட்டேன்.

“மூணு பக்கமும் கவர் பண்ணி வந்துட்டோம் வி.ஏ.ஓ சார். இந்த வேப்ப மரத்தடியிலதான் நாலாவது பாய்ண்ட் இருக்கு. இப்பக் கண்டுபிடுச்சுடுவம் சார்” என்று சர்வேயர் சொன்னார்.

“எதுக்கும் இந்த சாமியக் கும்பிட்டு வந்திருங்க! நிச்சயம் ஒருவழி பிறக்கும்” என்றேன்.

என் சொல்லுக்கிணங்க மூவரும் கற்றூண் அருகே சென்று சாமியை வணங்கி முனியாண்டியிடம் விபூதி வாங்கிப் பூசிக் கொண்டனர். சர்வேயர் ரகசியம் பேசும் தோரணையில் என்னைத் தனியாக அழைத்துச் சென்றார்.

“என்ன, சார்?” என்று மெதுவாகக் கேட்டேன்.

“கண்டுபிடுச்சுட்டேன் சார்” என்றார்.

“அதுக்கு ஏன் இவ்வளவு ரகசியம்” என்றேன்.

“அந்த சாமி கல் தூணு தான், சார், சர்வே கல்லு. அதுல சர்வே மார்க் இருக்கு சார். ஒரு அம்புக்குறி அதுல இருக்கு. அது சூலாயுதத்த கவுத்து வச்சது மாதிரி இருக்கும். ஊர் சனங்க அத சாமி அடையாளம்ணு நெனச்சுக்கிட்டாக போல” என்று சொல்லிவிட்டு இருகைகளாலும் வாயைப் மூடிக் கொண்டு சிரித்தார்.

- மனோந்திரா