கீற்றில் தேட...

எனது பெயர் அறிவு. என்னைப் பார்த்து என் பெயரில் நீங்கள் சந்தேகம் கொள்ளலாம். மனித கற்பனைக்கு ஏற்ப வாழ்க்கை நகரும் என்பது அல்ல. அதைக் காலமும் கற்பனைக்கு எட்டாத விபத்துக்கான சம்பவங்களும் உருவாக்கும். என் கற்பனை; இன்பமான எதிர்கால வாழ்வு பற்றி இருந்தது. இடையில் எனது ஆசை அதற்கு வினையாகக் குறுக்கே வந்தது. அதைத் தவிர்த்து இருக்க வேண்டும். எனக்குள் ஒரு சுகபோகி இருந்திருக்கிறான். அவனுக்கு எதிர்காலத்தைவிட நிகழ்கால சுகபோகம் முக்கியமாகி விட்டது.

வகுப்பில் படித்த நண்பர்களான யோனும், பிரேட்டும்; கிழக்கு காட்டிற்குள் சென்று, இரவு படுத்து விட்டு, காலை திரும்புவோம் என்றார்கள். அவர்கள் புதுமையில் நாட்டம் கொண்டவர்கள். அனுபவிப்பதில் அதீத அக்கறைப் படுபவர்கள். மிகவும் மகிழ்ச்சி, இன்பமான பொழுது, தவற விடும் எண்ணம் என்னிடமும் இல்லை. அம்மாவும், அப்பாவும் தடைகளே என்னை நல்வழிப் படுத்தும் என்று நினைப்பவர்கள். வேறு வழி இல்லாததால் உருகி உருகிப் புத்திமதி சொல்வார்கள். அம்மாவிற்குப் போகும் வழியில் குறுஞ்செய்தி அனுப்பினேன். சோபியாவை கேட்டிருக்கலாம். இது அவசர ஏற்பாடு. மற்றவர்களும் யாரையும் கூட்டி வரவில்லை. அவளுக்கும் ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டேன். வரும் குறுஞ்செய்தியைப் பார்த்துச் சங்கடப்பட வேண்டாம் என்று திறன்பேசியை அணைத்து வைத்தேன். அம்மா ஏதோ 'பொறுப்பற்றவன்' என்று சொல்வாரே அது உண்மை தானோ?

மொத்தமாக ஐந்து பொடியன்கள். காவிச்செல்லும் படுக்கை, கூடாரம், உணவு, என்பதாகத் தேவையான அனைத்தும். அத்தோடு நின்றிருக்கலாம். வாயு உருளைகளும்... ஊதுபைகளும்... பொறி தட்டியது, கேள்விப்பட்டிருந்தேன். இதுவரை காலமும் பாவித்தது கிடையாது. இதைச் சாப்பாடு செய்வதற்காகவும் இங்கே பயன்படுத்துவார்கள். கட்டிப் பாலை பஞ்சுபோல அடித்து எடுக்கப் பயன்படும். சுவை ஊட்டப்பட்ட சுத்தமான வாயு. கட்டுப்பாடு இல்லாது கடையில் பெற்றுக் கொள்ளலாம். மருத்துவமனையில் வேறு விதமாகப் பாவிப்பார்கள். அங்கே கட்டுப்பாடான வலிநிவாரணி, பிரசவ வலியில் துடிக்கும் மாதருக்கான மருந்து. பிராணவாயுவும் கலந்து அளவாகக் கொடுப்பார்கள். இவர்கள் கையில்? கலப்பில்லாது, அழுத்தத்தோடு, குளிராக இருக்கும் வாயு. உருளையிலிருந்து நேரடியாக இழுத்தால் குளிர் நாசி, வாய் என்று எரித்துவிடும். இடத்திற்குப் போனதும், படுக்கையை ஏற்ற இடத்தில் வைத்து விட்டு , அதிலிருந்து அவர்கள் அதை ஒவ்வொரு ஊதுபைகளாக நிரப்பிப் பத்திரப்படுத்தினார்கள்.

*

நான் மருத்துவ மனைக்குச் சென்றேன். போன முறை சென்றபோது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உண்மை சொல்லவில்லை. அதைக் கூறுவது அவமானமாக இருந்தது. அதைவிடச் சக்கர நாற்காலியில் இருப்பது என் ஆத்மாவையே கொன்றது. இருப்பதைவிட இறப்பது மேல் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இன்று அதன் முழு அர்த்தமும் புரிந்தது. இருந்தும் வினையற்று, சாக்கு மூட்டையாகச் சோர்ந்து கிடந்தேன்.

*

அந்த இரவு, ஊதுபையை முகர, முகர புதியதோர் உலகம் என் கண்முன் இழுத்து வரப்பட்டது. நான் தொடர்ந்து சிரித்தேன். கனவுலகில் மிதந்தேன். எழுந்து நிற்க முடியாது பூமி உலாஞ்சியது. காடு தலைகீழாகச் சுற்றியது. புள்ளினங்கள் காதிற்குள் புகுந்து மூளைக்குள் பாடின. மரங்கள் பேய்களாகி மார்பைத் துளைக்க வருவதாய் பயமுறுத்தின. சில மரங்கள் என்னைப் பார்த்து கோரமாகச் சிரித்தன. நகர்ந்து என்னை நோக்கி வருவதாகப் பயங்காட்டின. என்னைச் சுற்றி குழப்பமாய் இருந்தது. சோபியாவையும் கூட்டி வந்திருக்கலாம் என்று மீண்டும் இப்போது தோன்றியது.

இரண்டு நிமிடத்தில் அடித்ததின் வீரியம் வடியத் துவங்கியது. குறுகிய காலம். பாரிய விளைவுகள். மனது தொடர்ந்து அது வேண்டும் என்றது. ஊதுபை முகரல் நிறுத்த முடியாது தொடர்ந்தது. நண்பர்களின் அந்த அறிமுகத்திற்குப் பின் வெள்ளி வருவதே கொண்டாட்டமாகியது. அன்றும் அவர்களோடு காட்டிற்குச் சென்றேன். எட்டு கிலோ உருளைக் கலன்களில் அதைக் கொண்டு வந்தார்கள், சிரிப்பு வாயுவை எண்ண, எண்ண எனக்குச் சிரிப்பு வந்தது. உடல் சிலிர்த்தது. ஊதுபைகள் தாராளமாய் கிடைத்தன.

*

'ஒவ்வொரு நாளும் தவறாது பயிற்சி செய்ய வேண்டும். B12 கிடைக்காது நரம்புகளைச் சுற்றி இருந்த கொழுப்பு கரைந்து போய்விட்டது... தவறாது அதையும் எடுக்க வேண்டும்' என்று காலையில் பார்க்க வந்த மருத்துவர்கள் சொல்வது அரைகுறையாகக் காதில் விழுந்தது. பின்பு அம்மா ஈனமாக அழுவதும், அவரை மருத்துவர் சமாதானப்படுத்துவதும், அதையடுத்து தலைமை மருத்துவரோடு கதைப்பதற்கு நேரம் வரும் என்று கூறுவதும், எங்கோ ஆழ்ந்த கிணற்றிலிருந்து ஒலிப்பது போலக் கேட்கிறது.

*

மருத்துவமனையில் இருக்கும்போது ஒரு நாள் மாலை சோபியா மலர்ச்செண்டுடன் வந்தாள். பிணமாய் கிடந்த என்னைப் பார்த்து அவள் நீலக் கண்கள் பளபளக்க நின்றாள். அது எனக்கு இறுதி அஞ்சலி போலத் தோன்றியது. அதன் பின்பு நான் அவளைக் காணவில்லை. அம்மாவிடம் கேட்க, மனமில்லாது திறன் பேசியில் முயன்று விட்டு, 'போகுதில்லையடா' என்றார்.

*

அம்மாக்கள் அதிசயப் பிறவிகள். 'என்னடா தூங்கிக்கொண்டு திரிகிறாய்' என்று பிடித்துக் கொண்டார். அந்த சந்தேகத்தை எப்படி விரட்டுவது என்கின்ற தடுமாற்றம் முதலில். அம்மாவின், அக்கறையை, பலவீனத்தை, அதற்குப் பாவிக்க வேண்டும் என்று நினைத்தேன். 'உடம்பை முறிக்குது, ஏதோ வருத்தம் அம்மா' என்று அவர் மெல்லுணர்வால், சந்தேகக் கண்களை மூடிவிட்டேன். துடித்துப்போன அம்மா சந்தேகம் பற்றி மறந்து, பின்பு வருத்தம் பற்றிக் கேட்டார்.

பின்பொரு முறை காட்டிற்குப் போய் வந்து படுத்த எனக்கு அடுத்த நாள் காலும் கையும் அசையவில்லை. அம்மாவே முதலில் உதவிக்கு வந்தார். கோபப்படும் அப்பா அந்தக் காட்சி கண்டு இடிந்து போனார். அம்மாவிற்கு என்மேல் சந்தேகம் என்றாலும் இருவரும் பக்கவாதம் என்றே நினைத்தார்கள். அவசரமாக அம்புலன்சிற்கு அடித்தார்கள்.

*

முதல் நாள் அடித்தது கற்பனைச் சொர்க்கத்தை மண்டைக்குள் இழுத்து வந்ததான பிரமை தந்தது. மனம் அதை விடாதே என்று நித்தம் தரச் சொன்னது. வெள்ளி அவர்களோடு கழியும். இருந்தும் அது எனக்குப் போதவில்லை. மாலை நேரங்களில் அறைக்குள் இரகசியமாக வாசிக்கத் துவங்கினேன். எந்த தடையமும் இல்லாது உடலைவிட்டு நீங்கும் அந்த வாயு என் மூளையிலும் முள்ளந்தண்டிலும் ஆழமான தடத்தை விட்டுச் சென்றது. அதன் மீது ஏற்பட்ட தீரா மோகம் நீங்காது ஒட்டிக்கொண்டது. பிசாசைத் தேவதையாகக் காதலிக்கும் பித்து. விளைவு எனது முடக்கப்பட்ட வாழ்வாகியது.

அம்மா கண்டு பிடிக்காது, பாவித்த உருளைகளை இரகசியமாக எடுத்துச்சென்று வீசி விடுவதில் நான் கெட்டிக்காரன். இன்று சந்திக்கப் போகும் மருத்துவர் இப்படியான நரம்புப் பிரச்சினைகளைக் கண்டுபிடிப்பதில் வல்லுநர் என்று கூறி இருந்தார்கள். அம்மா அப்பாவிற்கு நான் என்ன செய்ததால் இந்த விளைவு வந்தது என்று தெரியாது. சந்தேகம் இருந்தாலும் முடிவுக்கு வந்திருக்கமாட்டார்கள். முதற்கட்டமாய் பரிசோதனை செய்த மருத்துவர்கள் காரணம் தங்களுக்குத் தெரியும் என்றாலும் நீ சொல்வதையும் நம்புகிறோம் என்பது போல் நான் கூறிய பொய்களைக் கேட்டுச் சிரித்துவிட்டுச் சென்றார்கள். இவர் என்ன சொல்லப் போகிறார் என்று நினைக்கப் பசியில் நடுக்கம் ஏற்படுவது போல கைகள் நடுங்கின. உள்ளங்கை குளிராய் வியர்த்தது. திரும்பிப் போய் விடலாமா என்று ஒருகணம் யோசித்தேன். அது இந்த நிலையிலிருந்து மீள்வதை நிரந்தரமாகத் தடுக்கும் என்பது விளங்கியது. எனது முறைக்காக நெருப்பில் நிற்கும் அவஸ்தையோடு காத்திருந்தேன்.

நான் நிரந்தரமாகச் சக்கர நாற்காலியை நம்பி இருக்கும் நிலைமை. மாற்றம் என்னைக் கேட்காது நடந்துவிட்டது. தனித்து என்னையே நான் பார்த்துக் கொள்ள முடியாமல் போனதோடு துணையில்லாது வெளியுலகே எனக்கு இல்லையென்றானது.

ஒரே மகனை சக்கர நாற்காலியில் பார்த்த அம்மா, அப்பா பேச்சிழந்து போனார்கள். ஏதோ இருக்கிறோம் என்கின்ற அவர்கள் இருப்பு எனக்குச் சக்கர நாற்காலியில் இருப்பதைவிட வேதனை தந்தது.

எனது முறை வந்தது. மருத்துவர் என்னை உள்ளே அழைத்தார். உதவி செய்ய வந்த பெண் நான் உள்ளே செல்வதற்கு உதவினாள். பின்பு வெளியே சென்று எனக்காகக் காத்திருந்தாள். சோபியா என்னிடம் இப்போது வருவதே இல்லை என்பது திடீரென என் ஞாபகத்திற்கு வந்தது.

அது கண்களில் ஈரத்தை மெல்லப் பரவ விட்டது.

*

மருத்துவர் என்னை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தார். அவர் நீலக் கண்களின் பார்வை என் மனதின் ஆழம் காண்பதாய் ஊடுருவியது. எல்லாம் எனக்குத் தெரியும் என்பதாய் என்னைச் சிறுமைப்படுத்தியது. எனக்கு உள்ளங்கை மீண்டும் வியர்க்க, வெட்கம் வந்தது. மருத்துவர் நேரடியாக, 'இதுவரை காலமும் நீங்கள் எங்களுக்குச் சரியான தகவலைத் தரவில்லை. இப்போது என்றாலும் நீங்கள் அவற்றைக் கூறினால் நாங்கள் சரியான வைத்தியம் செய்ய முடியும், எவ்வளவு கெதியாக அதைச் செய்கிறோம் என்பதைப் பொறுத்தே உங்கள் உடலியக்கத்தின் ஒரு பகுதியை மீட்டெடுப்பது தங்கி உள்ளது. தயக்கத்தை விடுத்து உண்மையைக் கூறினால் எனது வேலை இலகுவாக மட்டுமல்ல, சரியாகவும் இருக்கும்' என்றார்.

என்னால் அதற்கு மேலும் மனித அறத்தை மீற முடியவில்லை. அப்பா அம்மாவைத் துன்புறுத்தியது போதும் என்று தோன்றியது. நான் கூறத் துவங்கினேன். அவர் அவதானமாகவும், அமைதியாகவும் கேட்டுக்கொண்டு இருந்தார். பின்னர் கனிவோடு பார்த்தவர், 'மனிதர்கள் பிழை விடுவது சகஜம், கடவுள் உங்களுக்கு இன்னுமோர் சந்தர்ப்பத்தைத் தரலாம். B12-ஐ எடுப்பதற்கு மறக்காதீர்கள், அத்தோடு நம்பிக்கையோடு பயிற்சிக்குப் போங்கள். அவர்கள் உங்களுக்குப் பயனுள்ள பயிற்சி தருவார்கள். அதனால் சிலருக்குப் பழைய வாழ்வு திரும்பக் கிடைத்திருக்கிறது. உங்களுக்கும் அப்படிக் கிடைக்கட்டும்' என்றார். அவர் பார்வை வழி தவறிய மகனைப் பார்ப்பது போல் இருந்தது.

*

அம்மாவிற்கும் ஏதோ சந்தேகம் வந்திருக்க வேண்டும். அன்று அனுமதியுடன் அறைக்குள் புகுந்தார். கஞ்சா அடித்தால் மணக்குமாம். இது? நான் உருளைகளை அவதானமாக அப்புறப்படுத்தி விடுவேன். பின்பு எப்படி? அம்மா என் மேலைத் தடவி பாசத்தால் கண் கலங்கியபோது நானும் கண் கலங்கினேன். தொண்டைவரை வந்த உண்மை, ஏனோ அங்கேயே பதங்கமாகியது. அன்று அம்மாவிடம் உண்மையைக் கூறியிருந்தால், இன்று நான் முடமாகி இருக்கத் தேவை இல்லையோ என்று தோன்றுகிறது. அதை எண்ண மீண்டும் கண்கள் கசிந்தன. அம்மாவின் பயணம் அன்று தோல்வியாகியது. தப்பாகச் சொல்கிறேன், எனது வாழ்வு என்பதே மிகச் சரியாக இருக்கும். நீண்ட காலம் எல்லோருக்கும் பாரமாக வாழ்க்கை சக்கர நாற்காலியில் புதைந்து கிடந்தது. நம்பிக்கை இழந்த போது, பயிற்சி தந்த 'றாண்டி'யும், அம்மாவும் அதை எனக்குத் திரும்ப ஊட்டினார்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்து இருக்கிறது. இழந்த கொழுப்பை மீண்டும் பெற்று எனது நரம்புக்கலன்கள் உயிர்த்துக் கொண்டன. அதனால் எனது வாழ்க்கையும். என் கைகளில் அசைவு ஏற்பட்டதைக் கண்டு அம்மா என்னைக் கட்டிப்பிடித்து அழுதார். நானும் அடக்க முடியாமல் அழுதேன்.

- இ.தியாகலிங்கம்