பேரன்பர் பிரபு சங்கரின் 90'ஸ் கிட்ஸ் படித்தேன்.
உள்ளே இருக்கும் ஒவ்வொரு கவிதையிலும் இதயம் மினுங்கும் காலம் இருக்கிறது. அதில் எங்களைப் போன்றோரின் நினைவுகள் இருக்கின்றன. அதன் படிகள் படபடவென நடந்து பறந்து விடும் வல்லமை கொண்டவை. ஒவ்வொரு கவிதையுமே ஒவ்வொரு கட்டுரைக்கானது. கட்டுரைகளை இணைத்தால் அது நாவலாகக் கூடும். ஞாபகங்களின் வலிமை எப்போதும் இளமை இனிமை.
அமர் எழுதிய அணிந்துரை இந்த நூலுக்கு கிரீடம் என்பேன். ஒவ்வொரு வரியிலும் நிஜம் மிளிரும் வாழ்வு பளிச்சிட்டது.
படித்துவிட்டு பல நண்பர்கள் தங்களின் வாழ்வோடும் நினைவோடும் பொருத்திக் கொள்வதை அவர்களின் எழுத்தும் பகிர்வும் மிக அழகாய் தெரியச் செய்து கொண்டிருக்கிறது. தொடரட்டும் தோள்களின் இணைப்பு.
அமரை அவர் நண்பர் டபுள்ஸ் அடித்து கீழே தள்ளியது போல நான் என் நண்பன் ஒருவனை டபுள்ஸ் அடித்து சுடுகாட்டு முக்குலேயே குப்புற தள்ளியது நினைவில் சிராய்ந்தது. விழுந்தது விஷயமே இல்லை. விழுந்த இடம் தான்... ஒரு வாரம் அவனை காய்ச்சலில் தள்ளியது. 50 பைசாவுக்கு ஒரு மணி நேரம் என வாடகை சைக்கிள் ஓட்டிய காலங்களை கால்கள் தான் மறக்குமா.. அந்தக் காலங்கள் தான் மறக்குமா.
அமருக்கு பெரியாத்தா என்றால் எனக்கு பாட்டி. எங்களின் வாழ்வை தான் பேரன்பருக்கும் வழங்கி இருக்கிறது இப்பிரபஞ்சம். எழுத்தென்னும் இதயத்தின் வழியே இணைந்து விட அதுவே ஆசீர்வதித்திருக்கிறது. இந்த "90'ஸ் கிட்ஸ்" நூல் எங்களின் நூல். யாரெல்லாம் உணர்வோடும் உண்மையோடும் உள்ளத்தின் வழியே உலகை நோக்குகிறார்களோ அவர்களின் நூல்.
80 களில் பிறந்தவர்களின் உலகம் மிக அழகானது. 80 களில் அவர்களின் பால்யமும்... 90 களில் அவர்களின் பதின்பருவமும் கலந்து கட்டி விளையாடிய காலத்தின் ஓவியம்... கடவுளுக்கருகே கடை விரித்திருக்கும். அந்தப் பக்கம் இளையராஜா இந்தப் பக்கம் ரஹ்மான் என இசை கூடி இயல்பெடுத்த வாழ்க்கையை... நினைத்தாலே இனிக்கும். இந்த நூல் இனிக்க இனிக்க நினைக்க செய்கிறது எல்லாவற்றையும்.
சின்ன சின்ன சந்தோஷங்கள் வழியே வாழ்வைப் புரிந்து கொள்வது போல அற்புதம் வேறொன்று இருக்க முடியாது. கடவுளைக் கூட்டு சேர்த்துக் கொண்டு காற்றில் வண்டியோட்டி திரிந்த நாட்களை நினைவு கொள்கிறேன். கோலி குண்டு விளையாட்டில் விரல் வழியே நிகழும் வித்தை... பச்சக் குதிரை விளையாட்டில் புலி பாய்ச்சல் கொள்ளும் கால்கள்... விளாசித் தள்ளும் சனி முழுக்க பேயாடும் கில்லி... ஒளிந்து விளையாட்டு... ஓட்டப் பந்தயம்... சறுக்கு விளையாட்டு.. மரம் ஏறி தாவுதல்... என எத்தனை எத்தனை நினைவுகளை இந்த நூல் புரட்டிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு விதை காண்கிறேன். இந்த நவீனம் மறந்து விட்ட விதைகளை இப்படி இந்த நூலின் வழியே விருட்சம் ஆக்கும் வேலையை இதயம் ததும்பி செய்திருக்கிறார்... பேரன்பர்.
கவிதைகளின் வழியே வாழ்ந்து பழகி விட்டால் கழுத்து வரைக்கும் இதயம் வளர்ந்து விடும். முதுகு துளைத்தும் முகத்தை நீட்டும். வாழ்க்கை முழுக்க அன்பு பெருகி விடும். அதுவும் இப்படி நினைவுகளின் அடுக்கில் இருந்து பால்யத்தையும் பருவத்தையும் எடுத்தெடுத்து செதுக்கத் தெரிந்து விட்டால் நிம்மதிக்கு பொருளாவோம். நித்தம் நித்தம் அருள் கூடும்.
நூறு கவிதைகளும் ஒரே திசையில். அது தான் இந்நூலின் சிறப்பும் சிறகும்.
கவிதை என்ன செய்யும். இப்படி அவரவர் வாழ்வை அதன் பொக்கிஷக் குடுவைகளை ஆராயச் செய்யும். தன்னைத் தானே சிந்திக்கச் செய்யும். தனக்குத் தானே தோள் கொடுக்கச் செய்யும். வாழ்வின் அடிப்படைத் தேவை நிம்மதி. அதை அணு அணுவாய் நம் மீது கொட்டி அற்புதம் செய்யும். கவிதைக்காரன் ஏன் எப்போதும் சிறுபிள்ளை போல இருக்கிறான் தெரியுமா. அவனிடம் ஆகாயம் இருக்கிறது. இதயம் நிறைய வண்ணங்கள் கொண்டிருக்கிறான். ஆகவே அவன் நினைத்த மாத்திரத்தில் நிலவுக்கு சென்று விடுகிறான். நீல வானத்தில் ஊஞ்சல் ஆடுகிறான்.
தொடுவானத்தில் நடைப்பயிற்சி செய்ய கவிதைகள் தானே சொல்லித் தருகின்றன.
நூலில் உள்ள ஒவ்வொரு கவிதைக்கும் ஒருவர் ஒருவர் சொந்தம் கொண்டாட வருவார்கள். வரட்டும். அத்தனை இணக்கத்தைக் கொண்டிருக்கிறது அதன் சாராம்சம்.
பிரபும்மா கவிதை படிக்கும் போது எனக்கு தோன்றிய வரி... விஜிஅம்மா பிரியாம்மா ஆனதில் இருந்து தானே விஜிக்கும் அம்மாவுக்கும் இடையே இடைவெளி. இப்படி படிக்க படிக்க ஒரு கவிதை இன்னொரு விதையைத் தூவி விடுதல் இயல்பாகவே நிகழ்ந்து விடுகிறது. அந்த இயல்பின் தத்ரூபங்களைத்தான் பேரன்பர் நூறு முறை செதுக்கி இருக்கிறார். நாம் நூறு முறை சிறுவனாகிறோம்.
இந்த நூலை டைம் மெஷின் என்று சொல்லி அதில் ஏறி பத்து வயதில் இறங்கி கொண்டதாக அணிந்துரையில் அமர் சொல்லி இருந்தார். கூடவே நானும் தொற்றிக் கொண்டிருந்தது அவருக்கும் தெரியும். பேரன்பருக்கும் தெரியும். இது ஒரு கூட்டு சதி. உங்களை உங்களுக்கே தெரியாமல் உங்கள் பத்து வயதில் கொண்டு சென்று மேயவிடும் இதய வனாந்திரம் நாங்கள். நீங்களும் நாங்களும் ஒன்றாகி விடும் தருணத்தில் இறைவனும் கூட்டுசேர காத்திருப்பான். அது நிகழ நிகழ அடுத்தடுத்த பக்கத்தில் மேய்ச்சல் தொடர்ந்து கொண்டிருக்கும். எந்த மேய்ப்பனுக்கும் இந்நூல் கவசம் ஆகும்.
இயன்முறை மருத்துவரா இவர்.. இதய மருத்துவர் என்று அமர் சொன்னதை ஆமோதிக்கிறேன். இதய சுத்திகரிப்பை ஒவ்வொரு பக்கத்திலும் செய்திருக்கிறார்.
டயர் வண்டி ஓட்டிக்கொண்டே... குரங்கு பெடல் அடித்துக் கொண்டே... பம்பரம் விட்டுக்கொண்டே... புது சுடிதார்காரியை ரசித்துக் கொண்டே.... கில்லி அடிக்கும் ஒவ்வொரு சொல்லிலும் துள்ளும் இளமையை... தோள் தொங்கும் பால்யத்தை கண்டெடுக்கும் கால சக்கரம் என்றால் சக்கரை உதிர்க்கும் அதன் சித்திர உருளல்.
"வாய் பேச வாய்ப்பில்லையே" கவிதை ஒன்று போதாதா... நாகேஷ் ஒரு படத்தில் சொல்வார்... அதெப்பிடிடா குத்தல... கொல்லல ஆனா உயிர மட்டும் உருவி எடுத்துட்டனு... அது வருத்தத்துல சொன்னது. அதே வார்த்தைகளை நான் வாய் விட்டு சொல்கிறேன். இதில் தேன் சொட்டும் தித்திப்பு.
இந்த... பாட்டு புத்தகம் பத்தி சொல்லியே ஆகணும். இரண்டாவது கவிதை. எனக்கு மனதுக்குள் துண்டான நினைவு. எந்த புது படம் வந்தாலும்.. பாட்டு ஹிட் என்றால்... பாட்டு புக் வாங்கி விடுவேன். அதை பத்து பத்தாய் தைத்து பைண்ட் பண்ணி வைத்திருப்பேன். ஞாயிறு மாலை என்றால்.. பாட்டுக் கச்சேரி தான். நான் தான் மனோ. குபேரன் தலைமையில்.... பிரபாகரன் இசை கூட்ட... கச்சேரி வீதி கூட்டும். அந்தக் கடையை 25 வருடங்களுக்கு பிறகு ஊருக்கு போன போது பார்த்தேன். அந்த கடைப்பெண் அப்படியே இருந்தாள். பருவத்தை கருப்பு வெள்ளையில் கண்டது போல நரை கூடி இருந்தாலும்.. கலை குறையவில்லை. பாட்டோடு இருப்போருக்கு பருவம் தப்பாது.
ஆடியோ கேசட்.. விடுமுறை நாள்.. டீச்சர்கள்... உண்டியல் இப்பிடி போய்க்கொண்டே இருக்கும் அடுத்தடுத்த கவிதைகளில் செய்தி வாசிக்கும் கவிதையை அமர் சொன்னது போல தலையை சுற்றி கிறுக்கு பொங்கி படிக்கிறேன். பால்ய செருக்கு சிரிக்கிறது. ஷோபனா ரவி... அல்லது பாத்திமா பாபு என்று பேரன்பர் சொல்லி இருந்தார். நமக்கு பேவரிட் நிஜந்தன் தான். என்னவோ அந்தப் பெயரில் ஓர் ஈர்ப்பு. அப்படியெல்லாம் பெயர் இருக்குமா என்று தான் செய்தி பார்க்கும் போதெல்லாம் யோசிப்பேன்.
90 களின் வாழ்க்கை ஹெச்எம்டி கடிகாரத்தின் முட்கள் இல்லாமல் சுழலாது. அதையும் நினைவுபடுத்தும் கவிதைக்குள் 12 மணி நெருக்கத்தை உணர்கிறேன். விடுபட முடியாத விசும்பலை என்ன செய்வது. நினைவுகளை சுழற்றும் நூல் அதில் இருந்த நிம்மதியை சொல்லிக்கொண்டே வந்து இப்போது இருக்கும் இதய பற்றாக்குறையையும் சொல்லி விடுகிறது. கடைசி வரி பெரும்பாலும்... ஏக்கத்தில் முடிகிறது. நவீனத்தின் கைக்குள் உலகம் வந்து விட்டாலும்... கால்களில் ஊஞ்சல் ஆடும் பூமியை விட்டு விட்டோமோ என்ற பதற்றம் உணர்கிறோம்.
முதன் முதலாக எஸ்டிடி பூத்தில் ஒரு ரூபாய் போட்டு சாந்துவுக்கு நான் போன் செய்த நாள் இதயத்தில் ரீங்கரிக்கிறது. போன் காதில் இருக்க கால்கள் அந்தரத்தில் மிதப்பது போன்ற நடுக்கம். முதுகில் வியர்த்து ஒழுகும் முதல் முறை அனுபவத்தை அந்த நாளுக்கு சென்று உணரச் செய்த கவிதையை திரும்ப திரும்ப அழைத்துக் கொண்டே இருக்கிறேன்.
உலகமயமாக்கல் உடைமயமாக்கல் என்ற சொல் பிரயோகம் இலைதழையில் இருந்து இசைமழைக்கு தாவுவதாகத் தோன்றியது.
பேரன்பருக்கு கண்ணபிரான் தியேட்டர் என்றால் எனக்கு பாலமுருகன். கிட்டத்தட்ட கோயில் தான். எப்போதும் கடவுள் தரிசனம் கிடைக்கும் கூடம் திரையரங்குகள். பார்த்த படங்களும்... பகிர்ந்த கதைகளும் தான் இன்றைய இலக்கியத்துக்கு அடிப்படை நமக்கு.
ராஜாவும் ரஹ்மானும் இல்லாத 80, 90களை நினைத்துக் கூட பார்க்க முடியாது இல்லையா. அதுதான் இந்நூலுக்கு இசைக்கோர்ப்பு செய்திருக்கிறது. அக்கம் பக்கத்து வீடுகளோடு உறவாடி வாழ்ந்த காலத்தை... இயல்பு வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை... அது கொண்ட அன்பு அரவணைப்புகளை போகிற போக்கில் கவிதை உள்ளடக்கி வந்திருப்பது திட்டமிட்ட வார்த்தை கோர்வையாக இல்லை. அது நம்மிலிருந்த வாழ்க்கை முறை. இயல்பாக இருந்த இதயங்களின் ஓசை.
வாடகை வீட்டை பற்றிய கவிதைக்குள் வந்து வந்து போகும் வானவில் இருந்ததை வாடகை வீட்டில் இருந்தோரால் சுலபமாக நினைவு கொள்ள முடியும். அதுவும் அவ்வீடுகள் வரிசை வீடுகளாக இருக்கும் பட்சத்தில் தினமும் ஜன்னல் மொழிதான். கதவெல்லாம் வண்ண திறப்பு தான்.
தரையில் கோடு கிழித்து ரைட்டா ரைட்டா என வானத்தை பார்த்துக் கொண்டே கால்களை கோட்டில் படாமல் வைத்து விளையாடும் விளையாட்டெல்லாம் நினைவுக்கு வருகையில் நெஞ்சில் கண்கள் பொங்குகிறது. ஒளியற்ற நேரத்திலும்.... வழி எது எனத் தெரியாத தருணத்திலும்...நிதானமாய் இயங்க பழக்கிய வாழ்க்கை பாடம் அல்லவா அது. வாழ்வின் பாதி தூரம் கடந்து விட்ட பொழுதில் இப்படி இந்த நூல் நம்மை விசும்பச் செய்வதை நான் பிரார்த்தனை என்றே நம்புகிறேன். அதன் வழியே ஒரு உள்நோக்கு நிகழ்வதை என்னால் உணர முடிகிறது.
கிராமத்து வாழ்வில் இந்த பின் கதவின் மகத்துவம் அலாதியானது. யக்கா கொஞ்சம் காப்பித்தூள் குடேன்.. கொஞ்சம் சீனி... சில சமயம் ரசம் குழம்பு என்று அது அன்பின் பரிமாற்ற வழி. வேலிகள் அற்ற வெள்ளந்தி மனிதர்களின் பின் கதவுகள் எப்போதும் இதயம் பேசும் காற்று வெளி. அது பற்றிய கவிதை -கொல்லைப்புற கதவுகள்- முன்னொரு காலத்து கொண்டிகளற்ற பண்பாடு என்றால் மனம் திறந்து நம்புகிறோம்.
காதல் தூது பற்றி கவிதை இருக்கிறது. காதலிக்காதவன் கூட காதல் தூதுக்கு செல்லாமல் இருந்திருக்க மாட்டான். நானெல்லாம் காதல் தூதுவில் phd வாங்கியவன் என்பதை 'எதிர்காற்று" படித்தவர்களுக்கு தெரியும். கடிதங்கள் பற்றிய 'நீலப்பறவை' கவிதை கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பிரிபடும் தூரத்து உறவுகளை நினைவு படுத்தியிருக்கும். நினைவு தெரிந்த நாளில் இருந்து கடிதங்கள் எழுதுகிறவன் என்ற முறையில் நீலப்பறவைக்குள் நானும் இருக்கிறேன்.
பேரன்பருக்கு சங்கீதாக்கள்...என்றால் நமக்கு காயத்ரிகள்.
வேதாளம் போல முதுகில் தொற்றிக் கொண்டே இருக்கும் பெயர்களை நாமும் கள்ளத்தனமாக ரசிக்கவே செய்கிறோம். விட்டால் மொத்த கவிதைகளைப் பற்றியும் எழுதி விடுவேன். தீராத ஆசை அத்தனை இருக்கிறது. பெற்ற இன்பம் பெறுக நீங்கள் என விட்டு வைக்கிறேன். விடாது கருப்பு போல இது தீராத விருப்பம். கலரையே நமக்கான கருப்பு வெள்ளையில் காண்பதில் நிலாச்சோறு இரவுத் தட்டில்.
ஒவ்வொரு கவிதை வழியாகவும் அது தொட்ட சம்பவங்களை சாத்தியமாய் உள்ளே தைத்துவிட்ட நுட்பம்தான் இந்த நூலின் அழகு. துருத்திக் கொண்டில்லாமல் பொருந்திக் கொண்டு பார்க்கும் பக்கங்களை கண்களின் ஓரம் வைத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. நிறைய நிறைய நம்மை ஒவ்வொரு கவிதையும் உணர்த்திக் கொண்டே செல்வது... ஒரு கட்டத்தில் கண்களின் பாரம் தாங்காமல் உள்ளம் கசிய செய்து விடுகிறது. துடைக்க மறந்த கண்ணீரோடு கட்டிக்கொண்ட போது... இந்த நூலின் இதய சத்தத்தை துல்லியமாய் உணர்ந்தேன். கலாச்சார ரீதியாக... மொழி ரீதியாக.... பண்பாட்டு ரீதியாக... வாழ்வியல் சார்ந்து மண்ணோடும் மக்களோடும் கொண்டிருந்த உறவுகள் சார்ந்து... வாழ்ந்த ஒரு வாழ்வை இன்றைய நவீனத்தில் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற பதைபதைப்பை இந்த நூல் தந்து விடுகிறது. எத்தனை அற்புதமான ஒரு வாழ்க்கையை... வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தோம் என்று நினைவூட்டும் இந்த நூல் உண்மையில் இதயத்தில் பத்திரப்படுத்த வேண்டிய நூல். நான் பத்திரப்படுத்திக் கொண்டேன். நினைவலைகளின் நித்தியத்தை நீக்கமற நிழலாட செய்திருக்கிறது. ஊர் கூடி உறவுகள் சேர்ந்து... நட்புகள் கூடி நல்லவைகள் சேர்ந்து... வாழ்ந்த வாழ்வின் சாட்சிகளை தான் நூல் முழுக்க நிரப்பியிருக்கிறார்.
படியுங்கள்... றெக்கை இன்றியும் பறக்க ஆசீர்வதிக்கும் ஒவ்வொரு கவிதையும்.
பேரன்பருக்கு வாழ்த்துகள்.
பெரும் வனத்தில் பூத்த ஒற்றை ஊதாவென இந்நூல்... நன்னூல்.
நூல் : 90'ஸ் கிட்ஸ் (கவிதை)
ஆசிரியர் : பிரபு சங்கர்.க
நூல் வாங்க : 98941 23778
- கவிஜி