என்னுடைய நண்பர் ஆனந்த் அவர்களின் பரிந்துரையின் பேரில் கொரிய மொழி நாவலான மரக்கறியை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. டெபோரா ஸ்மித் என்பவரால் கொரிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருப்பவர் சமயவேல்.
பெண்களை உடற்பொருளாக மட்டுமே பார்ப்பதும் பெண் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிப்பதும் உலகெங்கிலும் பொதுவுடைமை போல!
பொருளாதார ரீதியாக தாராளமயமாக்களும் உலகமயமாக்களும் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கியது எனினும் பெண்கள் மீதான அடிமைத்தனம் என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகெங்கிலும் வேர் விட்டு கிளை விட்டு பரவி உலகமயமாகி விட்டிருக்கிறது போல.
பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து மீள வேண்டுமென்ற சுதந்திர வேட்கையை அவரது ஆழ் மன விருப்பத்தை இயாங்-ஹை பாத்திரத்தை ஒரு குறியீடாக பயன்படுத்தி மிக அழுத்தமான நாவலாக படைத்திருக்கிறார் ஹான் காங்.
கொரிய மக்களின் வாழ்க்கை முறை உணவு முறைகள், பயணம், கலையார்வம் ஆகியவற்றை நாவலின் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது.
கொரிய நாட்டு மக்களில் ஏறத்தாழ எல்லாருமே அசைவம் உண்பவர்கள். கோழி, மாடு, பன்றி, மீன் வகைகள் அவர்களின் விருப்ப உணவுகள். இந்த அசைவ உணவு உண்ணும் பாரம்பரியத்திலிருந்து தன்னை விடுவித்து சுதந்திரம் உள்ளவளாக மாற விரும்புகிறாள் இந்த நாவலின் நாயகி இயாங்-ஹை. இவளின் சுதந்திர வேட்கையை இவளின் சகோதரி, தாய், தந்தை, கணவன் மற்றும் மருத்துவர்கள் என யாருமே புரிந்து கொள்வதில்லை. இயாங்-ஹை இறுதியில் ஒரு மன நோயாளியாக சித்தரிக்கப்பட்ட போதிலும் சுய உணர்வோடு தனது வேட்கைக்காக பிடிவாதமாக தொடர்கிறாள்.
“பூமியில் உள்ள எல்லா மரங்களும் சகோதர சகோதரிகள் போல் இருக்கின்றன”
“இறப்பு என்பது மோசமான விஷயமா என்ன?”
போன்ற வரிகள் மிகவும் ஆழமாக என்னை கவர்ந்தது.
அசைவ உணவு மட்டுமே உண்ணும் ஒரு நாட்டில் ஒருவர் சைவ உணவை மட்டுமே உண்ண விரும்பினால் அவரை மன நோயாளியாக அந்த சமூகம் பார்க்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது இந்த நாவல். இதனையே இன்னொரு கோணத்தில் நான் பார்க்கிறேன். சைவ உணவு மட்டுமே உண்பவர்கள் அசைவ உணவு உண்பவர்களை அருவருப்பாக கருதுவதும் ஒரு மன நோய் தானோ? என எண்ணத் தோன்றுகிறது. உணவு முறைத் தேர்வு என்பது இயற்கையின் உணவு சங்கிலி அமைப்பின் ஒரு நிலை தான். இதனில் அருவருக்கத்தக்க எந்த விஷயமும் இல்லை.
நாவலானது மூன்று பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டிருக்கிறது. சில இடங்களில் நாவலை தொடர்ச்சியாக வாசிப்பது கடினமாக தோன்றியது. மொழிபெயர்ப்பதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்றியது. அது கொரிய மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பின் சிக்கலாக கூட இருக்கலாம். எனினும் பல இடங்களில் வாக்கியங்களின் எளிமையற்ற பொருளுணர்தலானது நாவலின் தொடர் வாசிப்பில் அயற்சியை ஏற்படுத்தியது.
ஒரு வித்தியாசமான நாவலை வாசித்ததில் அகமகிழ்வு. எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.
- ந.ஜெகதீசன், சென்னை