ஆய்த எழுத்து, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனி நிலை, அஃகேனம் என பல பெயர்கள் கொண்ட தொன்முது எழுத்து வடிவங்களுள் ஒன்றானா ஃ எழுத்தை மறைந்த எழுத்தாளர் பரந்தாமன் 1972-ல் அஃக் என்னும் சிற்றிதழை தொடங்கினார். 1980 வரை அவ்விதழ் வெளிவந்தது. அதன் பிறகு இன்றைய இலக்கிய உலகம் தீண்டத்தகாத ஓர் எழுத்தாக ஒதுக்கி விட்டது. காலங்காலமாக தமிழின் வரிவடிவங்கள் மாற்றம் பெற்று வந்திருக்கின்றன. ஆனால் முப்பால் புள்ளி ஆதி காலத்தில் எவர் சிந்தனையில் தோன்றியதோ அதே வடிவத்தில் நீளாமல், குறுகாமல், ஆடாமல், அசையாமல் கால வெள்ளத்தின் ஏற்ற இறக்க அலைகளில் நீந்தி வந்திருக்கிறது.
சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அதன் தவத்தை யாராலும் கலைக்க முடிய வில்லை. மனித இனம் புள்ளி வைக்க கற்ற காலத்து வடிவம். எழுத்துலகின் ஓங்கலென நிற்கும் ஃ கை தன் கவிதை நூலுக்கு தலைப்பாக நிறுத்திய புதியமாதவிக்கு முதல் பாராட்டு.
ஃ கவிதைகள் தொகுப்பில் ஒவ்வொரு சொல்லும் பெருவெடிப்பின் எரி கோள்களென சீறிப் பாய்கின்றன. கவிதைகளைப் படிக்கும் போது உணர்வுகளும் மூளையும் தீப்பற்றி எரிகின்றது போன்ற கொந்தளிப்பைத் தரும் சொற்கள் படிப்போரை உவகையில் துவள வைக்கின்றன. சலிப்படைந்த கவிதைகளைப் படித்து தூங்கிக் கிடப்போரின் இலக்கிய தூக்கத்தை தட்டி எழுப்பும் அக்கம்மாவின் சினம் மூழும் வரிகள் நிறையவே இருக்கின்றன.
நவராத்திரி கவிதைகள் ஒன்பதும் பாவைச் சிறையிருப்பில் இருந்து காளியவள் கொந்தளித்தெழுந்து ஒரு கோளில் காலூன்றி மறு கோளுக்கு கால் மாற்றி ஆடும் சீற்ற நடனமாக ஆணாளுமைக் காலத்தை எரிக்கும் கவிதைகள் அவை. ஒன்பது இரவு கவிதைகள் பல்லூழிக் காலப் பெண்களின் தவிப்பும் ஏக்கமும் தவங்குலைந்த சினமாய் சொற்களில் பெருவெடிப்பாகச் சிதறுகின்றன.
புதியமாதவியை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவர் பெண்கள் பற்றி எழுதும் போதும் பேசும் போதும் மட்டும் எரிமலைக் குழம்பாக சீறிப்பாய்கிறார். ஒவ்வொரு சொல்லும் கதிரவனின் நடுவிலிருந்து அள்ளிவந்த நெருப்பாக சுடுகிறது.
புனிதம் என்னும் நீர்க்குமிழ்ப் பறவை எத்தனைக் காலம் உடையாமல் ஊர் சுற்ற முடியும். இவர்களின் புனிதக் குடுவைகள் போலி இல்லறத்திலிருந்து வீசப்பட்டு வீதிகளில் விழுந்து நொறுங்குகின்றன. விழுந்த வீதியெங்கும் கற்பும் ஒழுக்கமும் அள்ளிக் குவித்த சாக்கடைப் போல நாற்றமெடுக்கின்றன.
வெள்ளை உடையில் இருக்கிறேன்
யாரும் என்னைத் தொட்டு விடாதீர்கள்.
எந்தக் கறையுமின்றி இந்த இரவைக்
காமட்டிபுரம்
கடந்து விட வேண்டும்.
இந்த வரிகளில் ஒரு காப்புணர்வை நாடும் பெண்ணின் அச்சம் கலந்த உணர்வும் தன்னாளுமை கொண்ட பெண்மையையும் காணலாம். அடுத்து வரும் இரண்டு வரிகளில்
காமட்டிபுரம் என்பது ஒவ்வொரு ஆணின் மனதுக்குள்ளும் விரிந்து கிடக்கும் நெடும்வீதி, காமக் கானகம். அந்த வீதியையும் கானகத்தையும் கடக்க ஒவ்வொரு பெண்ணும் பெரும் அச்சம் கொள்கிறாள்.
பால்வீதியை வெளியில் நிறுத்தியிருக்கிறேன்
நட்சத்திரங்களின் கண்களை
கரிய மேகத்துண்டுகளால்
கட்டி விடுங்கள்
இந்த ஓரிரவிலேனும்
வெள்ளைத்தாமரையில்
என்னுடல் பூத்திருக்கட்டும்.
தன் விடுதலைக்காக, தன் தனித்த நயப்பிற்காக, நுகர்ச்சிக்காக பால்வீதியையே கட்டளையிட்டு ஒரு ஓரமாக நிறுத்தும் வலிமை பெண்களுக்குத்தானே உண்டு. புதியமாதவி புடவி எல்லையைத் தாண்டி நின்று சிந்திக்கிறார். பால்வீதியை அவர் தன் ஆளுமை எல்லைக்கு வெளியே நிறுத்துகிறார். ஏனெனில் இந்த புடவிக் கூறே பெண்ணின் மூல வடிவுதானே. தன்னை மறு ஆக்கம் செய்ய அவள் தனிமையை நாடத்தானே செய்வாள்.
சாமுண்டி…
இன்னுமிருக்கிறது
கண்ணுக்குத் தெரியாத
யுத்தகளம்.
இரவு பசி தீர்க்க
மிச்சமிருக்கிறது
கருக்கலில் படையல்.
இந்த காத்திருப்பும், விடாயும் காலவழியெங்கும் பச்சையம் அற்றப் பாலையாய் காய்ந்து கிடக்கிறது. தன் விடாய் தணிய அவள் புடவியை உண்டு தீர்த்தாலும் வியப்பில்லை. பெண்களின் ஊழிப் பசி என்று தீரும்?
அணுகுண்டை கண்ணிவெடியாக புதைத்து வைக்கும் வித்தையை எப்படி கற்றார் புதிய மாதவி. கண்ணூன்ற முடியவில்லை. அவர் பெண்ணிய கவிதை வரிகளில். நெஞ்சம் வெடித்துச் சிதறுகிறது.
காளியும் பேச்சியும் நீலியும் இயக்கியும் ஒன்றிணைந்த ஒரு சினவெறி ஆட்டம். குண திசையையும் குட திசையையும் இழுத்து கட்டி உடுக்காக்கி அண்டம் அதிர உடுக்கடித்து கால் பரப்பி ஆடும் சீற்ற நடனம் சொல்லெங்கும் நிரம்பி கொந்தளிக்கிறது. பெண்ணியம் பற்றிய கவிதை எழுதும் போது பால் வீதியை கைக்கொண்டு கிண்கிணியாக கிலுக்குகிறார்.
கவிஞரின் சிந்தனைகள் காலம் பிறக்கு முன் கதிர் முளைக்கு முன் அண்டத்தைத் அளாவி வரும் ‘ஆதி நிலம்’ கவிதைக் கொண்ட சொற்கள் மெய் மறக்க செய்து புதிய ஊழ்கத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
எல்லாக் கவிதைகளை எழுதும் போது சல்லடம் கட்டி சூலாயுமும் வல்லயமும் ஏந்தும் புதியமாதவி ‘பூம்பூம் மாடுகள்’ கவிதைகளில் உடுக்கையும் உருமியையும் கயிலெடுத்து பின்நவினத்துவ மேதாவிகளை சாணிப்போட வைத்திருக்கிறார்.
“இவர்கள்தான் நவீன கவிஞர்கள்
இதுதான் ஆகச்சிறந்த எழுத்து
இதெல்லாம் பின் நவீனத்துவ மாடல்
உலகச் சினிமாவையும் விட்டு வைக்க வில்லை”
இந்த வரிகளில் கவிதையின் ஆழத்தை பட்டை பிடித்து பதனீர் ஊற்றுவதைப் போல தாட்டையாக்கி விடுகிறார்கள். இந்த நான்கு வரிகளை வேறு வடிவத்தில் கொடுத்திருந்தால் கொடி படர்ந்த பட்டத்திற்குள் ஓடிக்கிடக்கும் வள்ளிக் கிழங்கின் சுவையைபோல இன்னும் அந்தக் கவிதை சிறப்புப் பெற்றிருக்கும். இருந்தாலும் அந்த பூம்பூம் மாடுகள் ‘சாணிப்போட்டதாகக் கூடத் தெரியவில்லை’ என்று எழுதியிருக்கிறார்கள். அவர்கள் சாணி தின்போர் பக்கம் நிற்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்களோ?
கவிதை அகதி
‘ஜனக்கடலில் தனித்திருக்கிறேன்…
விடியல் கருக்கலை விரட்ட முடியாமல்’
தன் நெருக்கடியை நினைத்து தொடங்கும் வரிகள் முடியும் போது
‘எல்லாம் இருந்தும் அனாதையாகி விட்ட
என் தேசத்திப் போல,
என்று இந்த தேசத்தின் மீது கவலை கொள்கிறார். இங்கே மக்கள் இந்த தேசத்தில் எத்தனைக் கோடி மக்கள் இருக்கிறார்களோ அத்தனைக் கோடியாக பிரிந்திருக்கிறார்கள். இந்த தேசம் மட்டும் ஏன் இப்படி என்று சிந்தித்தால் அங்கே தன் கோரப் பல்லைக் காட்டிக்கொண்டு இந்து மதம் நிற்கிறது. மதம் மதமாக மக்களைப் பிரிக்கிறது, சாதி சாதியாக மக்களைப் பிரிக்கிறது, அப்புறம் அந்தச் சாதிக்குள் உட்சாதி கிளையாக பிரிக்கிறது, பின் பெண்ணை அடிமையாக்கி ஆணையும் பெண்ணையும் பிரிக்கிறது, அதையும் தாண்டி பில்லி, சூன்யம் என்று அண்ணன் தம்பியைப் பிரிக்கிறது, அனைத்தையும் கடந்து அவன் மூளைக்குள் புகுந்து தனி மாந்தர்களை உளப்பகுப்பு செய்து மாந்தனாக வாழ விடாமல் அவனை குறைமாந்தனாக மாற்றுகிறது.
‘உயிர்த்திரு… மந்திரம்’ கவிதை இதுவரை வாசகர்கள் சென்றடையாத தளத்திற்குக் கூட்டிச் செல்கிறது. ஊழிக்காலமாய் சமுகத்தில் உறைந்து கிடக்கும் இருள் உறைவை நீர்மநிலையாக மாற்றிய கவிதை இது.
“தானே வெளியேறியதும்
மாத்திரைகள் போட்டு வெளியேற்றியதும்
எல்லாமும் சேர்ந்து
எல்லாம்மா வாசலில்
பூச்சட்டி ஏந்தி ஆடுகின்றன.
காற்று மூச்சுத்திணறலுடன்
சிரமப்படுகிறது.”
இது கழிவிரக்க ஊற்றா? அல்லது உள்ளன்பின் ஒளிச்சிதைவா? அல்லது அருள் தேக்கத்தின் முலைத்துளிகளா? எந்த உந்துதலால் இந்த கவிதை வடிவம் பெற்றிருக்கும்.
“பார்வை பறிபோன நட்சத்திரங்கள்
பால்வீதியில் பிச்சை எடுக்கும் நாளில்
அளவற்றக் காதல்
கடைந்தெடுத்த விசத்துளி
மன்றாடுகிறது
உயிர்த்திரு உயிர்த்திருவென….”
இந்தக் கவிதைக் கருவில் தோய்ந்து கிடக்கும் இரக்கத்தையும் வேதனையும் எத்தனைக் கோடிப் பெண்கள் உள்ளங்களில் கன்றிக் காய்ப்பேறி கனன்ற வேதனையை புதியமாதவி தன் கவியாளுமையால் ஒட்டு மொத்த பெண்களின் பாரத்தை இறக்கி சமுகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறார்.
இந்தத் ஃ கவிதைகள் தொகுப்பில் நிறைய கவிதைகள் சங்கச் சுவையை பிசைந்தளித்த படையல்களாகவே இருக்கின்றன. புதியமாதவியின் கவிதையின் சொல் வீச்சை படித்து இன்புற நாமும் கவிஞர் போல் மாய வடிவெடுத்து சொற்கள் தாண்டி, புடவி தாண்டி போய் நின்று உற்றாய்ந்து நோக்கினால்தான் தெரிகிறது கிடப்பவை வரிகளல்ல வாள்கள். நெளிவபவை மண் புழு அல்ல. தழலாறு என்று.
இத்தொகுப்பில் உள்ள எல்லாக் கவிதைகளுமே சுவைத்து மகிழ வேண்டிய கவிதைகளே. மும்பைத் தமிழிலக்கிய உலகத்திற்கு அற்புதமான படைப்பாக்கத்தை தந்த புதிய மாதவிக்கு வாழ்த்துகள்.
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை , 2024.
- இறை.ச.இராசேந்திரன்