கீற்றில் தேட...

“பெயல் மணக்கும் பொழுது'” ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகள். தொகுப்பு அ.மங்கை, வெளியீடு மாற்று. 1.இந்தியன் வங்கி காலனி, வள்ளலார் தெரு, பத்மநாபா நகர், சூளைமேடு, சென்னை-600 094, பக்கங்கள் 280, விலை ரூ.130

படித்தவர் மனதை உலுக்கும் கவிதைகளை தேடிச் சேகரித்துத் தந்த மங்கைக்கு மனம் நிறையப் பாராட்டுகள். பெண் கவிஞர்கள் என்பதால் ‘கழிவிரக்கம்' மிக்க கவிதைகளே நிரம்ப அடைத்தி க்கும் என்கிற ‘வழமையான’ நினைப்பில் இந்நூலைப் புரட்டினால் ஏமாற்றமே மிஞ்சும். கண்ணீரும் ரத்தமும் ஓடும் தேசத்தில், துப்பாக்கியும், பூட்ஸ் கால்களும் அன்றாட அனுபவமாகிப் போன தேசத்தில், நம்பிக்கையும் ஏமாற்றமும் தொடர்கிற தேசத்தில் முகிழ்த்த கவிதைகளில் அவை எல்லாம் வீரியத்தோடு பதிவாகியிருக்கிறது.

“மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து பழக்கப்பட்டிருந்தும் குழந்தை விரலை அறுத்துக் கொண்டு அலறிவருகையில் நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன் இப்போது தான் முதல் தடவையாக காண்பது போன்று” என அனார் தரும் இரத்தக்குறிப்புகள் நெற்றிப்பொட்டில் ஓங்கி அறைகிறது.

மனதில் இரும்பும் மூளையில் துவக்கும் கொண்ட மனிதர்களை படம் பிடிக்கும் ஒளவை, “காற்றுக்கும் காதிருக்கும் கதறியழமுடியாது'' என சுட்டிக்காட்டுவதும், “பற்றி எரிக ஆயுத கலாச்சாரம்'' என சபிப்பதும்' அழுத்தமான அரசியல் விமர்சனமாகும்.

“வாழ்ந்ததை உணர்த்திய மரணம்”' என சங்கரியின் வாக்கு மூலம் படிப்பவரையே குற்றவாளிக் கூண்டிலேற்றும். “மரணங்கள் மலிந்த பூமியில்” “மீளாதபொழுதுகள்” “போராடும் எதுவும் நிலைக்கும்” என உணர்த்துகின்றனவே ஒவ்வொரு கவிதையும்.

“மனிதத்துவத்தை தொலைத்த தகப்பன்களின் மகன்களிடையே எனக்காக ஒரேயொரு காதலனைக் காண முடியவில்லை'' என்கிற நஜிபாவின் தேடல் யதார்த்தமானது.

“எனக்குப் புரியவில்லை அந்நியன் ஆத்திரத்தில் அடக்கு முறையின் வடிவில் நடந்து கொண் டான். ஆனால் இவனோ... காமனாய்.. கயவனாய்.. இவனை என்ன செய்யலாம்?'' ரங்காவின் கேள்வியில் சினத் தீ, மட்டுமல்ல நியாயத்தீயும் தகிக்கிறது.

“காசுகொடுத்து ஆம்பிளை வாங்கி அதற்கு பணிவிடை செய்யும் அவலங்கள்''- என வசந்திராஜா கீறும் நிஜம் ஒவ்வொருவரையும் உறுத்தும் நாளே பெண்விடுதலை நாள்.

“தனது பாதையே தெரியாமல் தவிக்கின்ற குயிலைவிட தலைகீழாய் நின்று கெட்டியாய்த் தனது இருப்பை நிலை நாட்டும் அந்த அரைக்குருட்டு வெளவால்கள் அற்புதமானவை'' என வாசுகி குணரத்தினம் வரைந்து காட்டும் சித்திரம் அனுபவத்தெறிப்பு அல்லவா?

கவிதைகள் மட்டுமல்ல முன்னுரை, பின்னுரைகள் அனைத்தும் மனசோடு உறவாடும். அறிவோடு தர்க்கம் செய்யும். கவிதை வெறும் வாசிப்பிற்கும் மட்டுமா? அதற்கும் மேல் உள் வாங்குவதற்கும் ஒன்றிவிடுவதற்கும் என் பதை உணர்த்தும் தொகுப்பு இது.