ஒரு நாள் இரவு 12 மணி. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் கைபேசியில் அழைத்தார். அழைப்பில் பதற்றம் இருந்தது. விசாரித்ததில் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் அவரின் மகன் கல்லூரி விட்டு வந்ததிலிருந்து, கண்கள் இரண்டும் எரிச்சலுடனும் வலியுடனும் அவதிப் படுவதாகத் தெரிவித்தார்."இதை நான் லேசாக எடுத்துக் கொண்டேன். நேரம் ஆக ஆக மிகுந்த வலியால் துடித்துக் கொண்டிருக்கிறான். கண்களிரண்டையும் திறக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. இப்பொழுது கூட்டி வரட்டுமா" என்றார். உடனே அழைத்து வரச் சொன்னேன்.
இருவர் கைத்தாங்கலாக அவர் மகனைப் பிடித்து வந்தனர். பையன் என்னைப் பரிட்சை செய்ய விடவில்லை. கட்டாயமாக கண்களைத் திறந்து பார்த்ததில் கண்களின் சிவப்பைத் தவிர பயப்படும்படி ஒன்றுமில்லை. வேறு நண்பர்களுடன் சேர்ந்து, ஏதும் போதைப் பழக்கமாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. பையனை மேலும் விசாரித்ததில், அன்று காலையில் கல்லூரியில், பயிற்சி வகுப்பில் வெல்டிங் செய்ததாகவும் அதன் பின் தான் கண்களில் எரிச்சல் என்றும் சொன்னான்.
இப்பொழுது விடை கிடைத்தது. அவரின் பாதிப்புக்கு Photophthalmia என்று பெயர். இந்த பாதிப்பு, பாதுகாப்பு கண்ணாடியில்லாமல் Arc Welding செய்பவர்களுக்கு ஏற்படும். சிறிய வேலைதானே என்று அசட்டையாகவோ, கூர்மையாக செய்ய வேண்டுமென்றோ பாதுகாப்பு கண்ணாடியில்லாமல் வெல்டிங் செய்தால் ஏற்படும் பளிச் என்ற அதிகமான வெளிச்சத்தால் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. Arc Welding ல் இருந்து 311 - 290 மில்லி ம்யூ அளவில் வெளியாகும் புற ஊதாக் கதிர் (Ultraviolet rays) வீச்சினால் கருவிழியின் மேல் புற (Corneal epithelium) திசுக்கள் சிறிது சிறிதாக உரிகிறது.
(கண்ணின் கருவிழி என்னும் முன்பகுதி தூய்மையான கண்ணாடி போன்றது, நிறமில்லாதது. இதற்கு நேர் பின்னாலுள்ள Iris என்பதன் நிறமே கருமையாகவோ, பிரௌன் நிறமாகவோ பிரதிபலிக்கிறது) இதன் பாதிப்பு சில மணி நேரத்திற்குப் பிறகுதான் தெரிய வரும்.இதனால் கண்களில் எரிச்சல், கூச்சம், கண்ணீர் வடிதல், இமைகள் வீங்குதல், கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ளுதல் ஆகிய சிரமங்கள் ஏற்படுகின்றன.
Fluorescein 2 % சொட்டு மருந்து ஒரு சொட்டு ஊற்றி, டார்ச் லைட் மற்றும் Slit lamp biomicroscope உதவியுடன் கருவிழியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை உறுதி செய்யலாம்.
இந்த பாதிப்பைக் குணப்படுத்தும் முறை:
முதலில் நோயாளியைத் தைரியப்படுத்த வேண்டும். கண்களின் மூடிய இமைகளில் குளிந்த நீரில் நனைத்து பிழிந்த துணியால் ஒத்தடம் கொடுக்கலாம்.
Zinc sulphate Eye drops என்ற சொட்டு மருந்து 3 - 4 முறை இரண்டு கண்களிலும் போடலாம்.
கண் மருத்துவரின் ஆலோசனைப்படி Tropicamide 1 % Eye drops 1 - 2 முறை மட்டும் ஒரு சொட்டு போடலாம்.
இரண்டு கண்களின் இமைகளையும் மூடி 12 - ௨4 மணி நேரம் கட்டுப் போடவேண்டும்.
கருவிழியில் உரிந்த திசுக்கள் குணமாகி கண்களின் சிவப்பு, வலி, எரிச்சல், வீக்கம் அனைத்தும் அடுத்த நாளில் சரியாகிவிடும்.
மீண்டும் இந்த பாதிப்பு வராமலிருக்க எச்சரிக்கையாக தொழிற் சாலைகளிலும், கல்லூரிப் பயிற்சிப் பட்டறைகளிலும் Arc Welding செய்யும் ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக, புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுக்கக் கூடிய பாதுகாப்புக் கண்ணாடி (Crooke's glass ல் தயாரிக்கப் பட்டது) அணிந்துதான் வேலை செய்ய வேண்டும்.
- வ.க.கன்னியப்பன் (