வைரஸ்கள் வேகமாகப் பரவும் இயல்புடையவை. தீவிர உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துபவை. அதனால் வாந்திக்குக் காரணமாக இருக்கும் நோரா வைரஸுக்கு (bug norovirus) எதிரான உலகின் முதல் தடுப்பூசியின் மூலம் மனித ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பயன்களை ஏற்படுத்தும் நம்பிக்கையுடன் மருத்துவர்கள் இதற்கான பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.

வாந்தி என்ற உடல் நலக் கோளாறு

இந்த வைரஸ் மருத்துவமனைகள், பராமரிப்பு இடங்கள், பள்ளிகள் மற்றும் நர்சரிகள் போன்ற மனிதர்கள் அதிக நெருக்கத்துடன் பழகும் இடங்களில் நோய்வாய்ப்படும் தன்மை, வயிற்றுப் போக்கை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இரண்டு மூன்று நாட்களுக்குள் உடல் நலத்தை மீண்டும் பெறுகின்றனர் என்றாலும் மிக இளம் வயதினர், முதியோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த வைரஸ் தீவிரமாகப் பாதிக்கிறது.

“உலகில் இன்றுள்ள நிலையில் இந்த வைரஸைத் தடுக்க உதவும் தடுப்பூசி எதுவும் இல்லை. மிக மோசமாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நரம்பு வழியாக திரவங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த வைரஸால் ஏற்படும் சுமை மிகப் பெரியது. உலகளவில் இதனால் ஆண்டுதோறும் 685 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 2,000 பேர் மரணமடைகின்றனர். இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

தேசிய மருத்துவ சேவைகள் அமைப்புக்கு (NHS) இதனால் மட்டும் ஆண்டுதோறும் 100 மில்லியன் பவுண்டு செலவாகிறது. வருமான இழப்பைக் கணக்கிட்டால் இந்த தொகை 300 மில்லியன் பவுண்டு என்ற அளவில் இருக்கும்” என்று பொது மருத்துவரும், இங்கிலாந்தில் இத்திட்டத்திற்கான தேசிய தலைமை ஆய்வாளருமான டாக்டர் பேட்ரிக் மூர் (Dr Patrick Moore) கூறுகிறார்.

நோவா 301 (Nova 301) என்று அழைக்கப்படும் இந்த மூன்றாம் நிலை க்ளினிக்கல் பரிசோதனைகள் இரண்டாண்டுகள் நடைபெறும். ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறுபது வயதுக்கும் மேற்பட்ட 27,000 பேர் இந்த ஆய்வுகளில் பங்கேற்கின்றனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் தேசிய மருத்துவ சேவையமைப்பின் 27,000 முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு இடங்களில் இந்த பரிசோதனைகள் நடைபெறும்.

2,500 பங்கேற்பாளர்கள் அக்டோபர் 2024ல் இப்பரிசோதனைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தடுப்பூசியைத் தயாரிக்கும் மாடன (Moderna) மருந்துப் பொருள் நிறுவனத்தின் இங்கிலாந்து பிரிவின் பத்தாண்டு கால முக்கியத்துவம் வாய்ந்த பங்காளித்துவத் திட்டத்தின் கீழ், தேசிய ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு ஆய்வுக் கழகம் (NIHR)), ஆரோக்கியம் மற்றும் சமூக நலத் துறை (DHSC), இங்கிலாந்து ஆரோக்கிய பாதுகாப்பு முகமை (UKHSA) ஆகியவை ஒருங்கிணைந்து இந்த ஆய்வுகளை மேற்கொள்கின்றன.

எம் ஆர் என் ஏ தொழில்நுட்பம்

பரிசோதனைகளின்போது பங்கேற்பாளர்களில் பாதி பேருக்கு தடுப்பூசியும், மீதி பேருக்கு மருந்தற்ற குளிகையாக உப்பு நீரும் கொடுக்கப்படும். இந்த வைரஸ் தூதுவர் ஆர் என் ஏ (mRNA) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இதே அணுகுமுறையைப் பயன்படுத்தியே மாடன, பைஸர்/பயோஎன்டெக் (Pfizer BioNTech) நிறுவனங்கள் கோவிட் தடுப்பூசியைத் தயாரித்தன.

இத்தடுப்பூசிகள் ஒற்றை நிலைப்படுத்தப்பட்ட எம் ஆர் என் ஏ மூலக்கூற்றை மனித உடலுக்குள் செலுத்துவதன் மூலம் வேலை செய்கிறது. இந்த எம் ஆர் என் ஏக்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தி செல்களுக்குள் புரதங்களை உற்பத்தி செய்ய உதவும் வழிகாட்டு குறிப்புகளை சுமந்து செல்கின்றன. வைரஸுடன் தொடர்புடைய இந்தப் புரதங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுகின்றன. இதனால் வருங்காலத்தில் இந்த வைரஸ்கள் வாந்தியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.

இந்த தடுப்பூசியில் நோரா வைரஸ்களின் மூன்று வகைகள் உற்பத்தியாவதைத் தடுக்க உதவும் புரத காப்பு குறிப்புகளை எம் ஆர் என் ஏக்கள் எடுத்துச் செல்கின்றன. இதனால் தீங்கற்ற வைரஸ் போன்ற பொருட்கள் தோன்றுகின்றன. இவை நோய் எதிர்ப்பொருட்களின் உற்பத்தியைத் தூண்டுகின்றன. முந்தைய ஆய்வுகள் இந்த தடுப்பூசி மனிதர்களில் வலுவான நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தியது என்று கூறின. வைரஸுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசியின் திறனை பரிசோதிக்கும் வகையில் இந்த ஆய்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

“எவ்வளவு காலத்திற்கு இந்த தடுப்பூசியின் மூலம் வாந்தியில் இருந்து மனிதருக்கு பாதுகாப்பு கிடைக்கிறது என்பதும் 65 அல்லது அதற்கும் கூடுதலாக தடுப்பூசியின் திறன் இருந்தால் அது க்ளினிக்கல் ரீதியாக வெற்றிகரமானது என்பது பொருள்” என்று மாடன நிறுவனத்தின்டாக்டர் டோரன் ஃபிங்க் (Dr Doran Fink) கூறுகிறார். இத்திட்டம் வெற்றி பெற்றால் 2026ல் மாடன நிறுவனம் தடுப்பூசியை சந்தைப்படுத்துவதற்கான அனுமதியை உரிய ஒழுங்குமுறை அமைப்பிடம் சமர்ப்பிக்கும்.

ஓராண்டு காலம் மேற்பரிசோதனைகள் நடைபெறும். இளம் வயதினர், சிறிய குழந்தைகளிடமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். “திட்டத்தின் வெற்றி பராமரிப்பு இல்லங்கள் இயல்பாக செயல்பட உதவும். இதனால் மக்கள் அவர்களுடைய அன்பிற்குரியவர்களைச் சந்திக்க வாய்ப்பு அதிகமாகும். தனி நபர்களுக்கு பயன்படும் விதத்தில் தடுப்பூசி தயாரிக்கப்படும்போது ஆய்வுகளின் வேகம் அதிகரிக்கும்” என்று சவுத்தாம்ட்டன் (Southampton) பல்கலைக்கழக ஆய்வாளரும் நிஹா தடுப்பூசி திட்டத்தின் (NIHR Vaccination Innovation Pathway co) முன்னணி ஆய்வாளருமான பேராசிரியர் சோல் ஃப்போஸ்ட் (Prof Saul Faust) கூறுகிறார்.

இந்த கண்டுபிடிப்பு வாந்தி என்ற மிகப்பெரும் உடல் நலக் கோளாறில் இருந்து மனித குலத்தை காக்கும் என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்: https://www.theguardian.com/society/2024/oct/23/doctors-trial-worlds-first-vaccine-against-vomiting-bug-norovirus?

சிதம்பரம் இரவிச்சந்திரன்