சூரிய குடும்பத்தில் பூமியை தவிர மற்ற இடங்களில் உயிர்கள் வாழ உகந்த சூழ்நிலை உள்ளதா என்று விஞ்ஞானிகள் பல காலங்களாக ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் சனியின் நிலவுகளில் ஒன்றான என்சலாடஸில் (Enceladus) நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்ய அங்கு ஆய்வுக்கலன் அனுப்பப்படவுள்ளது.

என்சலாடஸ் என்னும் அதிசய நிலவு

என்சலாடஸ் ஒரு சிறு உலகம். இதன் குறுக்களவு 310 மைல்கள் மட்டுமே. சமீபகாலம் வரை சூரிய குடும்பத்தில் இந்த நிலவு சுவாரசியம் குறைந்த இடமாக கருதப்பட்டது. ஆனால் சூரிய குடும்பத்தில் பூமி தவிர உயிர் வாழத் தகுதி மிக்க இடமாக இந்த நிலவு இப்போது மாறியுள்ளது. சனியைச் சுற்றும் 146 நிலவுகளில் ஒன்றான இங்கு, உயிர்கள் வாழ்வதற்குரிய சூழல் நிலவுவதால் இது விஞ்ஞானிகளை கவர்ந்திழுக்கும் இடமாக மாறியுள்ளது.enceladus 700

Maps of Saturn’s moon Enceladus (Photograph: NASA/JPL-Caltech/Space Science Institute/Cornell University)

பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து இதை ஆராய ரோபாட்டிக் தானியங்கி ஆய்வுக்கலனை அனுப்ப ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏராளமான பொருட்செலவாகும். ஆய்வுக்கலன் பிரம்மாண்ட தொலைவிற்கு பயணம் செய்ய வேன்டும். என்சலாடஸை சுற்றிவர கலனுக்கு பெருமளவு எரிபொருள் சேமிப்பு அவசியம். பனி மூடிய தரைப்பரப்பில் ஆய்வுக்கலனை இறக்க வேண்டும்.

1789ல் வில்லியம் ஹெர்ஷல் (William Herschel) என்ற விஞ்ஞானியால் என்சலாடஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு இருக்கும் வெந்நீர் ஊற்றுகளில் இருந்து எப்போதும் சூடான நீர் விண்வெளியை நோக்கி உமிழப்படுகிறது. இதைவிட விஞ்ஞானிகளை வியக்க வைப்பது தோகை போல அலங்கார அமைப்புடன் ஈத்தேன், புரொப்பேன் போன்ற கரிம வேதிப்பொருட்கள் உமிழப்படுவதே. என்சலாடஸின் வெவ்வேறு பரப்புகளில் பனிப்படலங்களின் அடர்த்தி வெவ்வேறாக உள்ளது. துருவப் பகுதிகளில் அடர்த்தி குறைவாக உள்ளது. பாறைப்பரப்புகளில் துளைகள் உள்ளன. இது உவர்தன்மை உள்ள கடல் நீரை உறிஞ்சுகிறது.

சனிக்கோளின் நிறையால் உருவாகும் வெப்ப அலையின் விளைவாக ஈர்ப்பு விசை உராய்வு ஏற்படுகிறது. கடல் நீர்ப் பரப்பில் வெப்பமான இடங்களில் சூடான நீரும் பாறைப் பொருட்களும் வெளியேற்றப்படுகின்றன. கடல் பரப்பில் உள்ள பனிக்கட்டிகள் உருகி நீண்ட குறுகலான வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இந்த வெடிப்புகளில் இருந்து வெப்ப நீராவி மற்றும் பொருட்கள் ஆவியாக வெளியேறுகின்றன. என்சலாடஸில் உயிர்கள் வாழ நீர்ம நிலை நீர், கரிமப் பொருட்கள் மற்றும் வெப்ப ஆற்றலுக்கான மூலம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன என்று லண்டன் இம்ப்பீரியல் கல்லூரி விண்வெளியியலாளர் “பேராசிரியர் மிஷெல் டோவட்டி (Prof Michele Dougherty) கூறுகிறார். இது இந்நிலவை ஆராய ஆய்வாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

உயிர் வாழ உதவும் அம்சங்கள்

முன்பு அடுத்த கட்ட விண்வெளி ஆய்வுத்திட்டமாக வியாழன் அல்லது சனியின் ஒரு நிலவிற்கு ஆய்வுக்கலனை அனுப்ப ஐரோப்பிய விண்வெளி முகமை திட்டமிட்டது. வியாழனின் பனி மூடிய யூரோப்பா (Europa), ஹைடிரோகார்பன்கள் செறிந்த செவ்வாயின் டைட்டன் (Titan) மற்றும் என்சலாடஸ் நிலவுகளுக்கு கலனை அனுப்ப நிபுணர் குழு பரிந்துரை செய்தது. இவை அனைத்திலும் உயிர்கள் வாழ உதவும் துணை நீர்ப்பரப்பு கடல்கள் உள்ளன. நீர் மற்றும் உயிரினங்கள் வாழ அவசியமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்போது என்சலாடஸை ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.

2040ல் என்சலாடஸில் தரையிறங்குதல் அல்லது நீர் மற்றும் கார்பன் வேதிப்பொருட்களை தெளிக்கும் வெந்நீர் ஊற்றுகள் வழியாகப் பறந்து செல்லும் இலக்குடன் ஆய்வுக்கலனை ஐரோப்பிய விண்வெளி முகமை ஏவவுள்ளது. “பனி படர்ந்த நிலவுகளில் உயிரினங்கள் வாழ்வது (Biosignatures) பற்றிய முக்கிய தகவல்கள் இதன் மூலம் கிடைக்கும்” என்று போர்ச்சுகல் லிஸ்பன் உயர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் (Instituto Superior Técnico) விண்வெளி உயிரியலாளரும் நிபுணர் குழுவின் தலைவருமான டாக்டர் ஜீட்டா மார்ட்டின்ஸ் (Zita Martins) கூறுகிறார்.

என்றாலும் இந்த இலக்குகளை அடைவது சுலபமானது இல்லை. வலிமையான ஈர்ப்பு விசை உள்ள கோள் அல்லது நிலவில் விண்கலனைத் தரையிறக்குவதை விட இது கடினமானது. வலிமையான ஈர்ப்பு விசை இருக்கும் இடங்களில் அந்த விசை விண் கலனின் வேகத்தை குறைத்துவிடும். இதனால் கலனை பாதுகாப்பாக தரையிறக்க முடியும். ஆனால் என்சலாடஸ் சிறியது. பலவீனமான ஈர்ப்பு விசை கொண்டது. இதனால் கலனின் வேகத்தைக் குறைக்க ஏராளமான எரிபொருளை செலவிட வேண்டும்.

இல்லையெனில் கலன் ஆழ் விண்வெளிப்பரப்பிற்கு மிதந்து சென்று விடும். 2004-2017 காலத்தில் கசினி (Cassini) ஆய்வுக்கலன் காந்தமானியுடன் சென்று சனி மற்றும் அதன் நிலவுகளை ஆராய்ந்தது. “ஒரு கட்டத்தில் கசினி என்சலாடஸிற்கு மிக அருகில் பறந்தபோது. சனிக்கோளின் காந்தப்புலம் என்சலாடஸால் கவரப்பட்டது. இந்த சின்னஞ்சிறு நிலவுக்கு வளிமண்டலம் இருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது” என்று காசினி திட்டத்தின் தலைமை ஆய்வாளராக அப்போது செயல்பட்ட மார்ட்டின்ஸ் கூறுகிறார். ஜூலை 2005ல் என்சலாடஸின் பரப்பில் இருந்து கசினி 173 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தபோது அங்கு குறிப்பிடத்தக்க அளவு நீராவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நீருள்ள நிலவு

நிலவின் தென் துருவப்பகுதியில் அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்ததால் ஏற்பட்ட விரிசலால் உருவான நிலவியல் பிழைக்கோடு (Geological fault line) பகுதியில் இருந்து மிகப்பெரிய வெந்நீர் ஊற்றுகள் ஊற்றெடுத்து வந்தன. சூரிய குடும்பத்தில் பூமியை தவிர நீர்ம நிலையில் தண்ணீர் உள்ள ஒரே இடம் என்சலாடஸ் நிலவு மட்டுமே என்பது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகும். ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களின் கடின உழைப்பும், தீவிர முயற்சியும் கலனின் வெற்றிகரமான ஏவுதலை நிர்ணயிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலவை ஆராய கலனை அனுப்பும் முயற்சிகள் துரிதமாக நடைபெறுகிறது.

மற்ற நிலவுகளில் உயிர் வாழ்க்கை

டைட்டன்: டைட்டன் சனியின் நிலவுகளில் ஒன்று. சூரிய குடும்பத்தில் மிகப்பெரியது. இங்கு ஆதி உயிரினங்கள் உயிர் வாழ உதவும் ஏரிகள், ஹைடிரோகார்பன் கடல்கள், ஆற்று வழிகள், மிக நீண்ட தொலைவு செல்லும் குன்றுகள் போன்றவை உள்ளன. இங்கு மிகக்கடும் குளிர் நிலவுகிறது.

செவ்வாய்: பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த செங்கோள் வெதுவெதுப்புடன் நீர் நிறைந்த உலகமாக இருந்தது. உயிர் தோன்ற உகந்த சூழ்நிலை நிலவியது. ஆனால் பின்பு இது தன் காந்தப்புலம், நீர் மற்றும் வளிமண்டலத்தை இழந்தது. அதி தீவிர புற ஊதாக்கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் இங்கு உயிரினங்கள் வாழ இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும் நுண்ணுயிரி இனங்கள் நிலப்பரப்பிற்கு அடியில் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

யூரோப்பா: வியாழனின் நிலவுகளில் முதண்மையான நிலவு இது. பனியால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் காணப்படும் திடப்பொருட்களில் மிக மிருதுவான பரப்பு உடையது. இதன் தரைப்பரப்பின் அடிப்பகுதியில் நீர் நிறைந்த கடல் காணப்படுகிறது. இங்கு பாக்டீரியா போன்ற ஆதிகால நில வாழ் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நாளை ஒரு நாள் மனிதன் சென்று குடியேறும் இடமாக என்சலாடஸ் மாறும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/article/2024/jun/15/is-there-life-on-one-of-saturns-moons-scientists-plan-a-mission-to-find-out?

சிதம்பரம் இரவிச்சந்திரன்