மனித பண்பாட்டின் வளர்ச்சியானது விலங்குகளை அவன் வடிவமைத்த கருவியால் வேட்டையாடி நெருப்பில் சுட்டு உணவை உண்ட காலகட்டத்தில் இருந்து தொடங்கலாம். அதோடு வட்ட வடிவில் சுழலும் ஓர் கருவியை உருவாக்கி அதன் மூலம் நகரும் ஓர் போக்குவரத்து மூலத்தை கண்டறிந்தான்.

பறவைகள் போல ஏன் நாமும் பறக்க முடியவில்லை என்ற சிந்தனை தோன்றியிருந்தாலும், நமக்கு ஆதாரமாக இருப்பது பண்டைய கிரேக்க எகிப்திய பண்பாட்டின் சிற்பங்கள், ஓவியங்களே. மனிதனுக்கு இறக்கை இருப்பது போலவும் பறப்பது போலவும் பல சிற்பங்கள் ஓவியங்கள் நம்மிடம் இன்று உள்ளன.spacex satellite 700கிரேக்க எகிப்திய பண்பாட்டில் இயற்கையாக கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி மனித வளர்ச்சியை மேம்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் சிந்தனை தோற்றம் அதோடு நின்றுவிடவில்லை. கிரேக்க வானியல் அறிஞர்கள் பலர் வானில் நிகழும் மாற்றங்களை பதிவு செய்ய தொடங்கினார்கள்.

கிரேக்க தத்துவ ஞானி ஃபிளாட்டோ பூகோளம் தட்டை வடிவில் இல்லை அது வட்ட வடிவில் உள்ளது எனவும் அது சுழன்று கொண்டிருக்கிறது அவர் சொன்னபோது கத்தோலிக்க மதத் தலைவர்கள் அவரை கொலை செய்யவும் வகை தோண்டினார்கள்‌.

17 -ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் பெசோ நகரில் பிறந்த வானியல், இயற்பியல் அறிஞர் கலிலியோ விண்வெளியை பல கோணங்களில் ஆய்வு செய்தார். அவர் உருவாக்கிய தொலைநோக்கியில் கோள்களை கண்டறிந்து வரைந்து காட்டினார். அண்டவெளியில் பூகோளம் நடுவில் இல்லை, சூரியனை தான் பூகோளம் சுற்றி வருகிறது என்று ஆணித்தரமாக கருத்துக்களை வைத்தார். அவரது கருத்துக்களை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னாளில் கத்தோலிக்க திருச்சபை மன்னிப்பு கோரியது என்பது தனிக்கதை. பின் அறிவியல் வானியல் ஆய்வுகளின் தந்தை என்று கலிலியோ அறியப்பட்டார்.

புதிய அறிவியல் வளர்ச்சியின் காலம் 18 -ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதன் விளைவாக அந்நூற்றாண்ணிடின் இறுதியில் தொழிற்புரட்சி ஏற்பட காரணமாக அமைந்தது. 19 -ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடக்ககால வளர்ச்சி தொழிற்புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. சில ஐரோப்பிய நாடுகளில் பொறியியல் அறிஞர்கள் வானூர்தி இயந்திரம் படைப்பில் கவனம் செலுத்தினார்கள்.

1900 ஆண்டின் தொடக்கத்தில் ரைட் சகோதரர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய இயந்திர வடிவமைப்பு பறக்கும் திறனை பெற்றது, பின்னாளில் அதுவே முதல் பறக்கும் வானூர்தி என்று வரலாற்றில் எழுதப்பட்டது.

அவர்களின் சிந்தனையில் உருவான இயந்திர வடிவமைப்பு வானூர்தி படைப்பிற்கு உந்துதலை கொடுத்தது. இறக்கைகள் கொண்ட தேவதூதர்கள் பற்றிய புனைவுகளை படித்த காலகட்டத்தில் மனிதனை பறக்க வைக்க 1903 -ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் முதல் வானூர்தியை வானத்தில் பறக்க விட்டார்கள். அது மனித சிந்தனையில் உருவான அறிவியலின் அபார வெற்றி.

இன்று நாம் உலகம் முழுவதும் குறைந்த நேரத்தில் எளிதாக பயணம் மேற்கொள்ள வானூர்தியின் சேவை இன்றியமையாததாக உள்ளது. நாளுக்கு நாள் வானூர்தியின் வடிவமைப்பில் மாற்றங்கள் காண்கிறோம்.

 20 ஆம் நூற்றாண்டை தொழிற்புரட்சியின் 2.0 என்று அழைத்தால் அது மிகையாகாது. மாபெரும் தொழிற்சாலைகள், இருப்பூர்தி சேவைகள், வாகன உற்பத்திகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதே நூற்றாண்டில் தான் விண்வெளி துறையிலும் மனிதர்கள் கால்பதிக்கத் தொடங்கினார்கள்.

விண்வெளித் துறையில் 20 -ஆம் நூற்றாண்டு என்பது விண்வெளியின் தொடக்ககால நிலை என்று தான் சொல்ல வேண்டும்.

முதன் முதலில் விண்வெளி துறையில் கால்பதித்தது சோவியத் ஒன்றியத்தின் அரசு. சோவியத் ஒன்றியம் விண்வெளி ஆய்வுக்கு தனியே துறையை உருவாக்கியது. இதே காலகட்டத்தில் அமெரிக்காவும் விண்வெளி துறைக்கான தனித் துறையை உருவாக்கி பல ஆய்வுகள் மேற்கொள்ள தொடங்கினார்கள்.

அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விண்வெளி துறையில் கோலோச்சிய காலத்தில் அந்நாடுகள் மாறி மாறி வானில் விண்கலம் ஏவி செயற்கை கோள்களை நிறுத்தவும் செய்தார்கள். விண்வெளியில் பிற கோள்களை ஆய்வு செய்த நேரத்தில் இந்தியாவும் தனக்கென்று விண்வெளித் துறையை உருவாக்கியது அதில் போதிய வெற்றியையும் பெற்றது.

1960 -களுக்குப் பிறகு அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் நிலவில் தனக்கென்று ஓர் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினார்கள். விண்வெளியை ஆய்வு செய்ய புவியீர்ப்பு விசை இல்லாத சுற்றுவட்டப் பாதையில் பன்னாட்டு விண்வெளி (International Space Station) நிலையம் அமைத்தார்கள். தொடர்ச்சியாக விண்கலம் மூலம் விண்வெளி அறிஞர்களை அனுப்பி சோதனைகள் செய்தார்கள். ஆய்வுகள் முடிந்ததும் மீண்டும் விண்வெளி அறிஞர்கள் பூகோளம் திரும்பினார்கள். இவ்வாறான விண்வெளி போக்குவரத்து தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது.

விண்வெளி ஆய்வின் அடுத்த கட்டமாக நிலவின் மேற்பரப்பில் மனிதர்களை கால் பதிக்க செய்தது அமெரிக்கா. தனது கொடியை பறக்கவிட்டு புகைப்படங்கள் எடுத்தது.

ஒருபுறம் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் நிலவில் யார் ஆதிக்கத்தை செலுத்துவது என்று போட்டி போடத் தொடங்கினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

நிலவை கவிதை வரிகளால் பிடிக்கும் மற்றோர் போட்டி

நம் கவிஞர்கள் சிந்தனையில் ஓடியது என்றால் அதற்கு நம்மிடம் எடுத்துக்காட்டுகள் உள்ளன.

"அந்த நிலாவத் தான் நான்

கையில பிடிச்சேன்"

என்று தொடங்கிய வரிகள்

"அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி

அங்கே உனக்கொரு வீடு செய்வேன்"

என்று அறிவிலை கவிதையில் கொண்டு வந்தார் கவிப்பேரரசு.

விண்வெளித் துறையின் 2.0;

 இன்று நாம் 21 ஆம் நூற்றாண்டின் கால் நூற்றாண்டு காலத்தை வாழ்ந்து கடந்து வந்திருக்கிறோம். பல துறைகளில் பல்வேறு அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. அது விண்வெளி துறையிலும் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள நாசா வடிவமைத்து செயல்படுத்திய விண்கல வானூர்தியான (Space Shuttle) - Enterprise, Endeavor, Discovery, Challenger, Atlantis, Columbia போன்றவைகள் மாறி மாறி விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை ஏற்றிச் சென்று மீண்டும் திரும்பி வந்திருக்கிறது. முறையே அனைத்து பயணங்களும் வெற்றியுடன் முடிவடையவில்லை.

2003 சனவரி 16 ஆம் நாள் STS-107 என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு பயணத்தில் இந்திய குடும்ப வழி வந்த விண்வெளி அறிஞர் (Astronaut) கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு செல்ல Space Shuttle Columbia -ல் பீறிட்டுக் கொண்டு விண்ணை நோக்கி ஏவப்பட்டது. முறையே STS -107 என்பது நாசாவின் 113 -ஆவது Space Shuttle program ஆகும், அதோடு இதே விண்கல வானூர்தியின் (Space Shuttle Orbiter Flight) 28 ஆவது பயணம் ஆகும்.

 பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 16 நாட்கள் தங்கியிருந்து சோதனைகள் மேற்கொண்டார்கள். திட்டமிட்டபடி பிப்ரவரி முதலாம் நாள் பூமியின் நிலப்பரப்பில் விண்கல வானூர்தி தரையிறங்க பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து பயணம் தொடங்கியது. தரையில் இறங்க வெறும் 16 நிமிடங்கள் மீதி இருந்த நேரத்தில் டெக்சாஸ் - லூசியானா வான் பரப்பில் அது வெடித்துச் சிதறியது.

அந்த நிகழ்வு உலகையே உலுக்கியது. வெடித்துச் சிதறிய பாகங்களை பல மாதங்களாக தேடப்பட்டு அதில் சில சிதைந்த பாகங்கள் மட்டுமே கிடைத்தது.

நாசா இதற்கென தனி விசாரணை ஆணையம் அமைத்து எங்கே தவறு நிகழ்ந்தது என்பதை அறிய முழுவீச்சில் இறங்கியது.

விபத்து நடந்து இரண்டாண்டுகளுக்கு மேலாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் எந்த ஆய்வுகளையும் செய்யவில்லை. சரியாக 29 மாதங்கள் கடந்த பிறகு மீண்டும் மனிதர்களை ஏற்றிச் செல்லும் முடிவினை எடுத்தது நாசா. 2005 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் நாள் STS-114 என்றழைக்கப்பட்ட வரிசையில் Space Shuttle Discovery மூலம் விண்வெளி அறிஞர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு சென்றார்கள். வெற்றிகரமாக மீண்டும் தரையில் வந்து இறங்கினார்கள்.

ஆனால் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கல வானூர்தி (Space Shuttle Orbiter Flight) சேவையை விரைவில் நிறுத்த முடிவு செய்திருந்தது நாசா. அதற்கு சரியான நேரமாக 2011 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.

STS-135 என்று அழைக்கப்பட்ட விண்வெளி பயணத் திட்டத்தில் Space Shuttle Atlantis விண்கல வானூர்தி தனது இறுதி பயணத்தை 2011 சூலை 8 ஆம் நாள் மேற்கொண்டது. முறையே இதிலும் விண்வெளி அறிஞர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு சென்று 12 நாட்கள் ஆய்வுகள் மேற்கொண்டு சூலை 21 ஆம் நாள் நிலப்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதுவே இத்திட்டத்தின் கடைசி விண்கல வானூர்தி என்று அருங்காட்சியகத்தில் அதனை காட்சிப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.

வணிக விண்வெளி போக்குவரத்தை ஊக்குவித்த நாசா 

 மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கல வானூர்தி திட்டத்தை நாசா நிறுத்தி இருந்தாலும் நாசாவின் விண்வெளி அறிஞர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யாவின் Soyuz Capsule உதவியுடன் அங்கு சென்று கொண்டிருந்தார்கள். இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவினாலும் விண்வெளி துறையில் அறிவியல் ஆய்வுகளில் ஒருவருக்கொருவர் உதவினார்கள் என்பது தான் உண்மை.

ஆனால் ரஷ்யா உதவியுடன் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்க விண்வெளி அறிஞர்களை செலுத்துவதில் அமெரிக்காவுக்கு உடன்பாடு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நேரத்தில் தான் நாசா தனியார் வாடகை விண்கல சேவையை அமெரிக்காவில் தொடங்க திட்டம் தீட்டியது.

2010 -ஆம் ஆண்டே தனியார் விண்வெளி விண்கல வானூர்தி திட்டத்தை ஊக்குவிக்க பல மில்லியன் டாலர்களை செலவிட்ட இருக்கிறது . Commercial Crew Program என்ற பெயரில் அந்த திட்டம் அமைக்கப்பட்டது. இதில் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் நிதியுதவி பெற்று பங்கெடுத்தது. அதாவது பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை ஏற்றிச் செல்லவும் எதிர்காலத்தில் மனிதர்களை ஏற்றிச் சென்று மீண்டும் திரும்பி வருதல் என்பதே அத் திட்டத்தின் நோக்கம். இதில் Blue Origin, Boeing, Paragon Space Development Corporation, Sierra Nevada Corporation, and United Launch Alliance இந் நிறுவனங்கள் பங்கெடுத்தன.

திரைப்படங்களில் இரண்டாம் பாதியில் புதிய நாயகன் உருவாகுவது போல அமெரிக்க விண்வெளி துறையில் புதிய நாயகனாக ஈலான் மாஸ்க் பிறந்து வந்தார். சொல்லப்போனால் நாசா அவரது நிறுவனத்தை ஊக்கப்படுத்தியது.

அமெரிக்காவில் தனியார் விண்கலம் ஏவுதல் முறை தொடங்கப்பட்டது. பல நிறுவனங்கள் இதில் பங்கெடுத்து முயற்சிகள் மேற்கொண்டனர்.

 விண்வெளி துறையில் தனிப்பட்ட விருப்பங்கள் கொண்டிருந்த ஈலான் மாஸ்க் 2002ல் தொடங்கிய Space Exploration Technologies Corporation சுருக்கமாக 'SpaceX' நிறுவனம் விண்வெளிக்கு விண்கலம் ஏவுதல் மூலம் செயற்கைக்கோள்களை நிறுத்தும் வேலைகளுக்கு ஆய்வுகள் செய்து கொண்டிருந்தது. அப்போதே செவ்வாய் கோளில் மனிதர்கள் குடியிருப்பு அமைப்பது பற்றி ஈலான் மாஸ்க் பேசியிருக்கிறார்.

ஒரே பாடலில் உச்சகட்ட வெற்றி என்பது போல ஈலான் மாஸ்க் அண்ணாச்சிக்கு எட்டப்படவில்லை. 2008 -ல் SpaceX நிறுவனம் மூடப்படும் நிலைக்கு போனது. அதாவது ஆய்வுகளுக்கு நிதிப் பற்றாகுறை ஏற்பட்டது. பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு கருவிகள் கொண்டு செல்ல விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு அவசியம் என நாசா அப்போது $1.6 பில்லியன் டாலர்களுக்கு Spacex உடன் ஒப்பந்தம் செய்து நிதியுதவி செய்ததும் ஒரு புதிய தொடக்கம். 

2010 ஆம் ஆண்டு சூன் 4 ஆம் நாள் SpaceX உருவாக்கிய Falcon - 9 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சோதனைக்காக ஏவப்பட்ட முதல் விண்கலம் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது.

"We got our falcon 9 rocket to orbit" - Elon Musk. தங்களின் வெற்றியை அந்நாளில் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் ஈலான் மாஸ்க்.

2012 -ல் Falcon 9 விண்கலம் ஏந்திச் சென்ற சோதனை Dragon Capsule வெற்றிகரமாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தொட்டு நிலை நிறுத்தப்பட்டது.

இதே ஆண்டின் இறுதியில் நாசாவின் விண்வெளி கருவிகளை SpaceX விண்கலம் மூலம் அங்கு (Cargo Delivery) கொண்டு சென்றார்கள். 2013 மார்ச் 26 -ல் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து சுமார் 600 கிலோ கிராம் எடையுள்ள பல்வேறு கருவிகளை சுமந்து கலிபோர்னியா அருகே பசுபிக் பெருங்கடலில் (Splashdown) இறங்கியது Dragon Capsule.

இதற்கு பிறகு SpaceX தொழில்நுட்ப காட்டில் மட்டும் தங்க மழை பெய்தது என்று சொன்னால் அது மிகையாகாது. (https://www.spacex.com)

பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு போயிங் நிறுவனமும் விண்வெளி பயணம் மற்றும் சேவைகள் வழங்க துடிப்புடன் செயல்பட்டது. இதற்காக போயிங் நிறுவனத்திற்கு நாசா 2014ல் $2.6 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வுகள் சோதனைகளுக்கு பிறகு 2020 டிசம்பர் மாதத்தில் தான் Boeing's Starliner Capsule விண்ணில் ஏவ சரியான நேரம் கிடைத்தது. டிசம்பர் 20 ஆம் நாள் Starliner Capsule வெற்றிகரமாக United Launch Alliance -ன் விண்கலத்தில் பொருத்தி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ஏனோ அது பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு செல்லவில்லை. இருந்தாலும் அது போயிங் நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட்டது. இரண்டு நாட்களில் கழித்து மீண்டும் Starliner Capsule அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில பாலைவனத்தில் அது தரையிறங்கியது.

இதற்கிடையில் SpaceX நிறுவனத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது 2020 ஆம் ஆண்டு மே மாதம் 30 அன்று அமெரிக்க விண்வெளி அறிஞர்களை Crew Dragon Capsule பொருத்தப்பட்ட Falcon 9 விண்கலம் மூலம் விண்ணுக்கு ஏவப்பட்டது. 19 மணி நேர பயணத்திற்குப் பிறகு இருவரும் வெற்றிகரமாக பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குச் சென்றார்கள். அன்றைய நாள் அமெரிக்கா நாடே பெருமிதம் கொண்டது.

இதே ஆண்டின் இறுதியில் நவம்பர் 15 ஆம் நாளில் மேலும் நான்கு விண்வெளி அறிஞர்களை Crew Dragon Capsule பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது அவர்கள் ஆறு மாத காலம் அங்கு பணியாற்றினார்கள். மீண்டும் அதே Crew 2 Dragon Capsule - வழியே ஜப்பானிய விண்வெளி அறிஞர் உட்பட நான்கு அறிஞர்களை 2021, மே 2 ஆம் நாள் இரவு 8;35 க்கு கிளம்பியது. சுமார் ஏழு மணி நேர பயணத்திற்கு பிறகு அது மெக்சிகோ வளைகுடாவில் உள்ள கடற்பகுதியில் எந்த பாதிப்பும் இல்லாமல் விழுந்தது (Splashdown). (குறிப்பு - Gulf of Mexico is now called Gulf of America)

SpaceX நிறுவனம் ஈலான் மாஸ்க் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. நாசாவின் பிற தேவைகளை அது முழுமை செய்வதாக அமைந்தது.

மற்றொரு புறம் Boeing நிறுவனத்தின் Starliner Capsule பல சோதனைகளுக்கு பிறகு இந்திய வழி வந்த விண்வெளி அறிஞர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு அமெரிக்கா விண்வெளி அறிஞர் Butch Wilmore இருவரையும் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள முழு அளவில் தேர்ந்திருந்தது. சொல்லப் போனால் SpaceX என்ற ஒற்றை நிறுவனத்தை மட்டும் நம்பி இருக்கத் தேவையில்லை, இன்னொரு நிறுவனமும் வேண்டும் என்பதற்காக தான் இரு அறிஞர்களையும் மேலே அனுப்ப திட்டம் தீட்டியது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2024 சூன் 5 ஆம் நாள் இருவரும் விண்ணை நோக்கி சென்றனர். இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தது. அவர்கள் இருவரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் வந்தடைந்தனர். சில நாட்கள் கழித்து மீண்டும் அதே Starliner Capsule வழியே பூமிக்கு திருப்புவது தான் அவர்கள் திட்டம். ஆனால் Starliner Capsule ல் ஏற்பட்ட ஹீலியம் கசிவால் அவர்கள் திரும்புவது தாமதம் ஏற்பட்டது.

பல மாதங்கள் ஆகியும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனினும் நாசா Starliner Capsule ஐ ஆளில்லாமல் பூமிக்கு திரும்ப கட்டளை பிறப்பித்தது. செப்டம்பர் 6ஆம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து ஆளில்லாமல் பூமிக்கு திரும்பியது Starliner.

அவர்கள் இருவரையும் மீண்டும் கொண்டு வர SpaceX நிறுவனத்தின் Dragon Capsule செலுத்தப்படும் என்றது நாசா. 2025 பிப்ரவரி மாதத்தில் அவர்கள் பயணம் மேற்கொள்வார்கள்.

2024ல் SpaceX நிறுவனம் மேலும் ஓர் புதிய அறிவியல் உச்சத்தை எட்டியது. இதுவரையில் விண்ணில் ஏவப்படும் விண்கலத்தின் சில பகுதிகள் (Super Heavy Booster) எல்லாம் ஒரு கட்டத்தில் எரிந்து ஒரு கட்டத்தில் சிதறி விழுந்து விடும். அதன் பாகங்கள் மறுபடியும் பயன்படுத்த முடியாது. இதனை முறியடித்து காட்டியது SpaceX.

2024 அக்டோபர் 13 ஆம் நாள் சோதனை வடிவில் Starship Vehicle விண்ணில் ஏவப்பட்டு அது மீண்டும் தான் ஏவிய இடத்திற்கு திரும்பியது. இந்த முயற்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

21 ஆம் நூற்றாண்டின் கால் நூற்றாண்டு வரை விண்வெளி துறையில் நிகழ்ந்த ஓர் புதிய முயற்சி நீண்டு கொண்டே போகிறது.

பூமியில் வாழும் மனிதர்களுக்கும் பிற கோள்களில் ஒருவேளை உயிர் வாழு வழி இருந்தால் அல்லது அங்கு மனிதர்கள் வாழ்ந்து வந்திருந்தால் அவர்களுக்கும் நமக்கும் இடையே இணைப்பு ஏற்படுத்துவது கவிதைகள் மட்டுமே. ஆம் கடந்த ஆண்டு நாசா விண்ணில் ஏவிய SpaceX Falcon விண்கலம் ஒன்று ஜூபிடர் கோளின் யுரோப்பா என்ற நிலவுக்கு பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலவில் முழுவதும் பனி சூழ்ந்து இருக்கிறது. அதில் அமெரிக்க கவிஞர் (அமெரிக்க மெக்சிகர்) Ada Limon எழுதிய "In Praise Of Mystery" கவிதைகளை மடித்து உள்ளே வைத்திருக்கிறார்கள்.

Source: (https://www.npr.org/2024/10/13/nx-s1-5151788/spacex-starship-booster-caught-first-launch)

Space.com

21 நூற்றாண்டின் விண்வெளித் தொடர் தொடரும்.

- பாண்டி