புவி வெப்ப உயர்வினால் அண்டார்டிகா நிறம் மாறுகிறது. வெண்பனிக் கண்டம் வேகமாக பசுமை நிறமாகிறது. செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு கடந்த சில பத்தாண்டுகளாக அண்டார்டிகாவின் பசுமைப் போர்வை பல பத்துமடங்கு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது. 1986ல் ஒரு சதுர கிலோமீட்டருக்கும் குறைவான பரப்பில் இருந்த தாவரங்களின் வளர்ச்சி 2021ல் 12 சதுர கிலோமீட்டர் என்ற அளவில் பரவியது. 2016 முதல் பாசி வகை தாவரங்கள் கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன.

வெண்பனிக் கண்டத்தில் தாவரங்கள்

பனிக்கட்டிகளாலும் பாறைகளாலும் ஆக்கப்பட்ட இங்கு தாவரங்கள் வேகமாக வளர்வது உலகளவில் வெப்பம் அதிகரிப்பதையே காட்டுகிறது. தாவரங்களின் பரவல் தூய கண்டத்தில் அந்நிய ஆக்ரமிப்பு தாவரங்கள் காலூன்ற வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.Antarctica

(Photograph: Matt Amesbury)

ஆர்க்டிக் பகுதியிலும் பசுமைப் பரப்பு அதிகரிக்கிறது. 2021ல் ஐஸ்லாந்தில் பெரிய பனிமலையில் பனி பொழிவதற்குப் பதில் முதல்முறையாக சாதனையளவு மழை பெய்தது.

“அண்டார்டிகாவில் இப்போதும் ஒரு சிறு பகுதி தாவரங்களால் மூடப்பட்டுள்ளது. என்றாலும் அண்டார்டிகா பெரும்பாலும் பனிக்கட்டிகள் மற்றும் பாறைகளால் மூடப்பட்டுள்ளது” என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும் எக்ஸிட்டர் (Exeter) பல்கலைக்கழக ஆய்வாளருமான டாக்டர் தாமஸ் ரோலண்ட் (Dr Thomas Roland) கூறுகிறார். ஆனால் இச்சிறிய பசுமைப் பகுதி கூட ஆபத்தான நிலையில் வளர்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட, பரந்து விரிந்த இப்பகுதியை கூட மனிதச் செயல்பாடுகள் பாதிக்கிறது.

இதன் பரப்பு 13.66 மில்லியன் சதுர கிலோமீட்டர். கார்பன் உமிழ்வு தடுத்து நிறுத்தப் படாவிட்டால் வருங்காலத்தில் தொடரும் வெப்ப உயர்வு இந்த தனித்துவம் மிக்க, பலவீனமான இதன் உயிரியல் மற்றும் நில அமைப்பை மாற்றி விடும்.

லாண்ட் சாட் (Landsat) செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு மூலம் நடந்த இந்த ஆய்வு பற்றிய கட்டுரை நேச்சர் புவி அறிவியல் (Nature Geoscience) என்ற இதழில் வெளிவந்துள்ளது.

“இந்த ஆய்வுகள் சுவாரசியமானவை. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள லார்சன் இன் லிட் (Larsen Inlet) பகுதிக்குச் சென்றிருந்தோம். 1986-88 ஆண்டு காலத்தில் இப்பகுதியில் இருந்த லார்சன் பனிப்பாறை (Larsen Ice Shelf) உருகி உண்டான நிலப்பரப்பில் நாங்கள் தரையிறங்கினோம். இப்போது இங்கு ஆல்காக்கள் வளர்ந்து பெருகியுள்ள ஓர் ஆறு ஓடுகிறது! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்பகுதி வளி மண்டல மாற்றங்களால் பாதிக்கப்படாத பகுதியாக இருந்தது.

ஆனால் பனிக்கட்டிகள் உருகியதால் வெறும் நிலமாக மாறிய இது கடந்த சில ஆண்டுகளில் தாவரங்கள் வளரும் பகுதியாக மாறிவிட்டது. இந்த மாற்றங்கள் காலநிலை அவசரநிலையைக் காட்டும் கருவி. இதனால் இப்பகுதியில் உயிருள்ளவை காலூன்றத் தொடங்கியுள்ளன” என்று இங்கிலாந்தின் நார்த்தம்ப்ரியா (Northumbria) பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் ஆண்ட்ரூ ஷப்ஃபர்ட் (Prof Andrew Shepherd) கூறுகிறார்.

இப்பகுதியை சுற்றிய கடலில் இருந்த பனி உருகியதால் 2016ல் இங்கு பாசிகள் பெருகத் தொடங்கின. வெதுவெதுப்பான திறந்த நிலை கடல்கள் ஈரமான சூழலை ஏற்படுத்தி நிலப்பரப்பை அதிகரிக்கிறது. பாசிகள் வெறும் பாறைகளில் வளர்ந்து ஆக்ரமிக்கின்றன. இது மண் என்னும் உயிரூட்டமுள்ள பொருளை உருவாக்குகிறது. இதனால் மற்ற தாவரங்கள் வளர உகந்த சூழல் இங்கு உருவாகிறது.

“இங்கிருக்கும் பெரும்பாலான மணற்பரப்பு சத்துகள் அற்றது. பரவும் தாவர வாழ்க்கை அங்ககப் பொருட்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். கூடுதலான மண் உருவாகும் சூழ்நிலையை இது உண்டாக்கும். இதனால் சூழல் சுற்றுலாப் பயணிகள், விஞ்ஞானிகள் மற்றும் இதர வருகையாளர்களால் இப்பகுதிக்கு எடுத்து வரப்படும் அந்நியமான, ஆக்ரமிப்பு தாவரங்கள் வளரும் வாய்ப்பு அதிகமாகும். 2017ல் பாசிகளின் வளர்ச்சி வேகம் பற்றி ஆராயப்பட்டது. ஆனால் அது பகுதிவாரியாக நடைபெறவில்லை.

2022ல் நடந்த மற்றொரு ஆய்வு இப்பகுதிக்கு சொந்தமான இரண்டு பூக்கும் தாவரங்கள் இதன் வட பகுதியில் அமைந்துள்ள சிக்னி (Signy) தீவில் பரவுவதைக் கண்டறிந்தது. உருகும் பனிப்பரப்புகள் மீது பச்சைப் பாசியும் படர்ந்து வளர்கிறது. இன்றுள்ளது போல அன்று வளி மண்டல கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகமாக இருந்ததால் தென் துருவத்திற்கு அருகில் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மரங்கள் வளர்ந்திருந்தன.

பூமியில் மனிதக் குறுக்கீடுகள் இல்லாத பகுதி என்று பல காலங்களாக கருதப்பட்டு வந்த அண்டார்டிகா வெப்ப உயர்வால் கரைந்து உருகினால் அது நாம் வாழும் இந்த கோளின் அழிவுக்கே காரணமாக அமையும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/world/2024/oct/04/antarctic-plant-cover-growing-at-dramatic-rate-as-climate-heats?

சிதம்பரம் இரவிச்சந்திரன்