தாவர விலங்குகள் (Florra & Foana) போல பூஞ்சைகளுளையும் தனிப்பிரிவாக அங்கீகரிக்க வேண்டும். இந்த இலட்சியத்திற்காக இங்கிலாந்து மற்றும் சிலி நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. நாய்க்குடை, பூஞ்சை உருவாகும் நிலைக்கு முன்புள்ள மோல்டு (Mould), மில்ட்யூ (Mildew) , ஈஸ்ட் மற்றும் லைக்கன்கள் இந்த திட்டத்தினால் பூஞ்சைகள் என்னும் தனிப்பிரிவில் முக்கிய இடம் பெறும் என்று நம்பப்படுகிறது.சூழல் மண்டலத்தின் பொறியியலாளர்கள்
சட்டப்படி இவை கொள்கைகள், பன்னாட்டு உடன்படிக்கைகளில் ஒரு தனிப்பிரிவாக அங்கீகரிக்கப்படும்போது அது இவற்றின் பாதுகாப்பு, இன்று நிலவும் மும்மடங்கு மோசமான காலநிலையை சமாளிக்க உதவும். இதனால் சூழல் நலம் பெறும். மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். மண் தூய்மை, புதைபடிம எரிபொருட்களின் கார்பன் உமிழ்வில் மூன்றில் ஒரு பகுதியை சேமிக்கும் திறன், பிளாஸ்டிக், வேதிப்பொருட்களை பகுப்படையச் செய்வதில் காளான்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
“பெரும்பாலான தாவரங்கள் பூஞ்சைகள் இல்லாமல் நீருக்கு வெளியில் உயிர் வாழ முடியாது. பூமியில் நாம் இப்போது பார்க்கும் உயிர்கள் எப்போதோ அழிந்து போயிருக்கும் என்று பூஞ்சையியலாளர்கள் கூறுகின்றனர். தாவர விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய அங்கீகாரம் பெற 3எஃப் (3F) என்ற முன் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இது தாவர, விலங்குகளின் செழுமை போல பூஞ்சைகளின் செழுமையை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
தாவர விலங்கு செழுமை என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் ஒட்டுமொத்த தாவர விலங்குகளைக் குறிக்கிறது. அறிவியலில் வழங்கப்பட்டு வரும் பல பெயர்கள் போல ஃபங்கி (Fungi) என்ற சொல் இலத்தீன் மொழிச்சொல் இல்லை” என்று சிலியன் பிரிட்டிஷ் பூஞ்சைகள் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் ஜுயூலியானா ஃபெர்சை (Giuliana Furci) கூறுகிறார்.
பூஞ்சைகள் இல்லாமல் இயற்கையை பார்ப்பது இரத்தப் பரிசோதனை செய்யாமல் ஒரு புதிய நோயைக் கண்டறிய முயல்வது போல. வாழ்வின் வான மண்டலத்திற்கு ஒப்பானவை இவை. சூழல் மண்டலங்களை உருவாக்குகின்றன.
உணவு மற்றும் மருந்துகளின் உற்பத்தியிலும் அவற்றை வீணாகாமல் பாதுகாப்பதிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் பூஞ்சைகளையே பயன்படுத்தி வருகிறான்.
ரொட்டி, சோயா பொருட்கள், பாலாடைக்கட்டி, மதுபானங்கள், போன்ற பல பொருட்களின் தயாரிப்பில் இவற்றின் பங்கு தவிர்க்க முடியாதது. “பூஞ்சைகள் நம் வாழ்வின் உருவாக்கத்தில், மன மாற்றத்தில், வருங்கால வடிவமைப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழும் உலகின் மறு உருவாக்கத்தை எழுதும் இவை பெரும்பாலும் கண்ணுக்குப் புலப்படாத சூழல் மண்டலத்தின் பொறியியலாளர்கள்.
நீதிப்பூர்வமான அங்கீகாரம்
காலநிலையை ஒழுங்குபடுத்துவதிலும் நீடித்த நிலையான வளர்ச்சியுடன் கூடிய உயிர்ப் பன்மயத்தன்மை பாதுகாப்பிலும் இவற்றிற்கு முக்கிய பங்கு உண்டு. என்றாலும் பூஞ்சைகளுக்கு உரிய அங்கீகாரத்தை பல அரசுகள் கொடுக்காமல் உள்ளன. இவற்றின் இழப்பு உயிர்ப் பன்மயத்தன்மையின் இழப்பே என்று “சிக்கிய வாழ்வு” என்ற நூலின் ஆசிரியரும் உயிரியலாளருமான மெர்லின் ஷெல்ட்ரேக் (Merlin Sheldrake) கூறுகிறார்.
பூஞ்சைகளின் அங்கீகாரத்திலும் பாதுகாப்பிலும் சிலி முன்னணியில் உள்ள ஒரு நாடு. பூஞ்சைகளை அரசு அமைப்புகள், நிறுவனங்களின் சூழல் தாக்க மதிப்பீட்டு திட்டங்களில் உட்படுத்த வேண்டும் என்ற தேசிய சட்டம் அங்கு அமலில் உள்ளது. இத்தகைய ஆய்வுகளில் பூஞ்சைகளின் நிலைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தால் அதை பட்டியலிட்டு சரி செய்ய வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது.
“பூஞ்சைகள் காலநிலை, இயற்கை, மாசுபடுதல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை ஒன்று சேர்த்து நம்மை காண வைக்கிறது. பூமியின் ஒட்டுமொத்த வாழ்வின் இயக்கத்தைப் புரிந்து கொள்ள இவை நமக்கு உதவுகின்றன. அதனால் இவை தேசிய சட்டங்களிலும் கொள்கைகள் வகுக்கப்படும்போதும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று சிலியின் சூழல் அமைச்சர் மைஸா ரோஹாஸ் (Maisa Rojas) கூறுகிறார்.
“பூஞ்சைகளை தாவர விலங்குகள் போல உரிய மரியாதை கொடுத்து அங்கீகரிப்பது நீதிப்பூர்வமானது” என்று மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்து 3எஃப் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வரும் நியூயார்க் பல்கலைக்கழக பூமியின் உரிமைகளுக்கான செயல்பாட்டு க்ளினிகின் கொலம்பிய சட்ட நிபுணர் சேஸாரோட்ரீகஸ்-கெரவீட்டோ (César Rodríguez-Garavito) கூறுகிறார். பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் (IUCN மற்றும் க்யூ (Kew) ராயல் தாவரவியல் பூங்கா ஆகியவை இவ்வியக்கத்தை ஆதரிக்கின்றன.
“பொதுமக்களின் உரிய கவனத்தை இவ்வுயிரினங்களின் பாதுகாப்பு பெறவில்லை. அதனால் இவற்றின் பாதுகாப்புக்கு எங்கும் நிதி ஒதுக்கப்படுவதில்லை. இது வரை வெறும் 0.4% பூஞ்சைகள் மட்டுமே பலவீனமானவை என்று மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் உணவுப் பாதுகாப்பு, மருத்துவம், சூழல் மண்டலங்களின் நிர்வாகம் மற்றும் பலவற்றில் இவற்றின் பங்கு முக்கியமானது. அறிவியல் தெளிவாக உள்ளது, ஆனால் சமூக அங்கீகாரம் மட்டுமே தேவை.
ஆண்டுக்கு இரண்டாயிரம் புதிய இனங்கள்
உலகின் மிகப் பெரிய பூஞ்சை மாதிரிகளின் சேகரம் இலண்டன் க்யூ பூங்காவில் உள்ளது. இங்கு உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து சேகரித்து உலர வைக்கப்பட்ட 1.5 மில்லியன் மாதிரிகள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நஞ்சு பாதிப்புகள், கிடைக்கும் மருத்துவப் பயன்கள் பற்றி அறிய இவற்றின் டி என் ஏ வரிசைப்படுத்துதல் (DNA sequencing) நடைபெறுகிறது. இவற்றின் பகுப்பாய்வில் இருந்து தாவரங்களை விட, விலங்குகளுக்கு இவை நெருக்கமானவை என்பதும், உயிரினங்களில் ஒரு தனி சாம்ராஜ்யம் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூழல் பாதுகாப்பு கலந்துரையாடல்களில் பூஞ்சைகள் சேர்க்கப்பட வேண்டும். விஞ்ஞானிகள் இது வரை வெறும் 10 சதவிகிதத்துக்கும் குறைவான பூஞ்சைகளைப் பற்றி மட்டுமே விவரித்துள்ளனர். மேற்பரப்பை மட்டும் ஆராய்வது போலவே இது. பூஞ்சைகளே அறிவியலின் அடுத்த முக்கிய பிரிவாக வளரப் போகின்றன. அவை பற்பல மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. ஆனால் இவை பற்றி மிகக் குறைவாகவே ஆராயப்பட்டுள்ளது.
வருங்கால பெரும் தொற்றுகளுக்கு இவையே தீர்வாக அமையக்கூடும். அலெக்சாண்டர் ப்ளெமிங் பெனிசிலியத்தில் இருந்து மில்லியன் கணக்கானோரின் உயிரைக் காத்த பென்சிலின் என்ற முக்கிய நோய் எதிர்ப்புப் பொருளை கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ரொட்டியை உண்கிறான்.
இழைத் தன்மையுடைய காளான்களே கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இதயநோய் ஆபத்தைக் குறைக்க உதவும் ஸ்டேட்டின் (statin) என்ற மருந்துப் பொருளின் அடிப்படை என்று ராயல் தாவரவியல் பூங்காவின் அறிவியல் பிரிவு இயக்குனர் அலெக்சாண்டர் ஆண்டனெல்லி (Alexandre Antonelli) கூறுகிறார்.
உயிரின உலகில் பூஞ்சைகள் ஒரு தனிப்பிரிவாக அங்கீகரிக்கப்படும்போது தாவர விலங்குகள் மற்றும் பூஞ்சைகள் என்று உயிரினங்களின் வகைப்பாடு மாறும். உயிர் வாழும் இயற்கை இனங்களின் பாதுகாப்புக்கான பன்னாட்டு யூனியன் (International Union for the Conservation of Nature Species Survival Commission (IUCN SSC), பன்னாட்டு வனம் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் (IUCN Re:wild) ஆகிய அமைப்புகள் ஆகஸ்ட் 2021ல் பூஞ்சைகளை உயிரினங்களின் தனி வகையாக அங்கீகரித்தன.
பூஞ்சைகள் மேலோட்டமாக பார்க்கப்படுகின்றன. இதனால் இவை சூழல் பாதுகாப்புக் கோட்பாடுகளில் இருந்து புறக்கணிக்கப்படுகின்றன. அதனால் சூழல் சட்டங்களால் இவை பாதுகாக்கப்படுவதில்லை.
அங்ககப் பொருட்களை சிதைப்பதிலும் வன மறு உருவாக்கத்திலும் பூஞ்சைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரங்களின் வாழ்வு, பாலூட்டிகளின் செரிமானம், கார்பன் சேமிப்பு, உலக சத்துகள் சுழற்சியை நிலைநிறுத்த, பாக்டீரியா எதிர் மருந்துகள் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன.
ரொட்டி, மது பானங்கள், சாக்லெட் போன்றவற்றை பூஞ்சைகள் இன்றி தயார் செய்ய முடியாது. சூழலில் நொதிகளை உற்பத்தி செய்து இவை உடலுக்கு வெளியில் செரிமானம் அடையச் செய்கின்றன. அங்ககப் பொருட்களை செல்களுக்குள் மீண்டும் உறிஞ்சுகின்றன. 2.5 முதல் 3.8 மில்லியன் பூஞ்சைகளில் வெறும் 8% மட்டுமே இது வரை விஞ்ஞானிகளால் அறிவியல்பூர்வமாக அறியப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 2,000 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அங்கீகாரம் வேண்டி நிற்கும் அற்புத உயிரினங்கள்
அதிகமான பூஞ்சைக் கொல்லிகளின் பயன்பாடு, அளவுக்கு மீறிய அறுவடை, நைட்ரஜன் வளப்படுத்துதல் போன்றவை இவற்றில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பூமியின் வட கோடி முனையில் உள்ள உலகின் மிகப் பெரிய தரைப்பகுதி காடுகளில் (Boreal forests) தாவரங்களுடன் சேர்ந்து வாழும் கூட்டுயிரி வாழ்க்கையில் (symbiotic) பூஞ்சைகள் பெருமளவு கார்பனை உறிஞ்சுகின்றன.
சிதைப்பவை என்பதால் இவை மண்ணில் உள்ள மாசுக்களை தூய்மைப்படுத்துகின்றன. விலங்கு உணவுகளுக்குப் பதில் இந்த உயிரினங்கள் மாற்று உணவுகளைத் தரவல்லவை என்று பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் கூறுகிறது.
கோடை வெய்யிலில் ஒரு கோப்பை மோரை அருந்த நினைக்கும்போதும், உங்களுக்கு விருப்பமான சாக்லேட்டை சுவைக்கும்போதும் பூஞ்சைகள் என்ற இந்த அற்புத உயிரினங்களுக்கு நன்றி சொல்லுங்கள்!
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2024/oct/16/fungi-status-boost-conservation-cop16-uk-chile-biodiversity-plan
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்