மனிதன் இரும்பால் செய்யப்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தி இறைச்சியை வெட்டுவது போல கமோடோ டிராகன் (Komodo Dragon) என்ற ராட்சச பல்லியினத்தின் பற்கள் செயல்படுகின்றன. இவை மற்ற ஊர்வனவற்றை விட சுலபமாக தன் இரையைப் பிடித்து உண்கின்றன. இரையை இரண்டு கைகளாலும் இறுக்கமாகப் பிடித்து கடித்து இழுத்து பெரிய துண்டுகளாக்கி உணவு உண்ண இவற்றின் வாயில் இருக்கும் சுமார் அறுபது பற்கள் உதவுகின்றன. நீண்டு கூர்மையான இந்தப் பற்களின் கூர்மைக்கு அதன் முனையில் காணப்படும் இரும்புப் பூச்சே காரணம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.உலகில் வாழும் மிகப் பெரிய பல்லியினம் இவையே. இவற்றின் நீளம் மூன்று மீட்டர். சராசரி எடை 80 கிலோகிராம். பாதுகாக்கப்பட்ட இந்த உயிரினங்கள் மிக மெதுவாக பரிணாம மாற்றம் அடைகின்றன.
மிகப் பெரிய உடலளவு, நச்சுத் தன்மையுள்ள கடி மற்றும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த உயிரினத்தின் பெயர் கேட்பவர் மனதில் ஒரு ராட்சசனின் கம்பீரத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கண்டுபிடிப்பால் கமோடோ டிராகனின் புகழ் மேலும் உயர்ந்துள்ளது. கூர் முனையுடைய பற்களின் கூர்மையை அதிகரிக்க இந்த இரும்புப் பூச்சு அவற்றிற்குப் பெரிதும் உதவுகிறது. இது போன்ற இரும்புப் பூச்சு ஒரு விலங்கின் பற்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
ஏற்கனவே பல வினோதமான பண்புகளுடன் வாழும் இந்த உயிரினத்தைப் பற்றி ஆய்வுகள் பல நடந்துள்ளன என்றாலும் பற்களில் காணப்படும் இரும்புப் பூச்சு இந்த விலங்கைப் பற்றி அறியப்பட்டதில் பரவசமூட்டும் ஒன்று. கமோடோக்களின் இரை பிடிக்கும் முறை பற்றிய ஆய்வில் இது ஒரு முக்கிய திருப்புமுனை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆரஞ்சு வண்ண நிறமிகளால் இவற்றின் பற்களின் கூர் முனை காணப்படுகிறது. பல்லின் முனைப்பகுதிக்கு வரும்போது எனாமலுடன் இரும்பின் ஒரு அடுக்கும் சேர்ந்து வருகிறது. ஆழமாக ஆராய்ந்தபோது இரும்பு அடர்த்தியாகக் காணப்படுகிறது. பற்களுக்கு கடினத் தன்மையைக் கொடுக்கிறது. இரையைக் கிழித்து வெட்டி துண்டுகளாக்கி உண்ண இது உதவுகிறது. இருபது கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய ஆற்றல் பெற்ற இவை நான்கு மீட்டர் உயரம் வரை தாவக்கூடியவை.
இந்த விலங்குகள் இந்தோனேஷியாவின் பல தீவுகளில் வாழ்கின்றன. எலிகள், சிறிய பறவைகள், முயல்கள், மான்கள், ஆடுகள், நீர் எருமைகள் மற்றும் இறந்த கமோடோ டிராகன்களை உணவாக உண்கின்றன. மனிதர்களும் இவற்றால் கொல்லப்பட்டுள்ளனர். 2007ல் கமோடோ தீவில் ஒரு குழந்தை ஒரு டிராகனால் கொல்லப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழங்களை பொறுக்குபவர் ஒருவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தபோது இரண்டு கமோடாக்களால் கொல்லப்பட்டார்.
டைனசோரின் பல் அமைப்பு
2010ல் மற்றொரு இந்தோனேஷிய தொழிலாளி ஒரு கமோடாவால் தாக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக அதன் தாடையின் அசுரப் பிடியில் இருந்து தன்னை விடுவித்து உயிர் தப்பினார். இந்தப் பற்கள் மாமிசம் உண்ணும் டைனசோர்களின் பல் அமைப்பை ஒத்துள்ளது. இவற்றின் இணை சேரும் செயல்கள் சுற்றுலா வருவோரால் பாதிக்கப்படுகிறது. வருவோர் சத்தமில்லாமல் உணவுகளைக் கொடுப்பது இவற்றின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்குகிறது.
வாழிட இழப்பு மற்றும் சட்டவிரோத வேட்டையாடலால் இவை அழியும் ஆபத்தில் உள்ளன. இப்போது இந்தோனேஷிய வனங்களில் 3,500 கமோடோக்கள் மட்டுமே வாழ்கின்றன.
வேதியியல், இயந்திரவியல் பகுப்பாய்வுகளுடன் பிம்பமாக்கும் நவீன முறைகளைப் பயன்படுத்தி டிராகன்களின் மாதிரிகள், இப்போது வாழும் மற்றும் அழிந்த மானிட்டர் பல்லிகள், முதலைகள், முதலை இனத்தின் வேறு குடும்பத்தைச் சேர்ந்த அலிகேட்டர்கள் (alligators), டைனசோர்கள் போன்ற பல்லி இன ஊர்வன விலங்குகளின் பற்கள் ஆராயப்பட்டது. பிற ஊர்வனவற்றில் இதே போன்ற பல் அமைப்பு காணப்படுகிறது என்றாலும் டிராகன் பற்களில் இரும்புப் பூச்சு வெளிப்படையாகத் தெரியும் வகையில் காணப்படுகிறது.
"ஊர்வனவற்றின் பல் அமைப்பில் இது பரவலாக உள்ள ஒரு சிறப்புப் பண்பு என்றாலும், இந்த உயிரினத்தின் பல் அமைப்பு தனித்துவம் வாய்ந்தது” என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் லண்டன் கிங்ஸ் கல்லூரி பல் உயிரி அறிவியல் துறை பேராசிரியருமான டாக்டர் அரொன் லெஃப்லாங்க் (Dr Aaron LeBlanc) கூறுகிறார். இந்த விலங்கின் வளைந்த, கூர்மையான பல் அமைப்பு டிரனசோரஸ் லெக்ஸ் (Tyrannosaurus rex) என்ற மாமிச உண்ணி டைனசோரின் பல் அமைப்புடன் ஒத்துள்ளது.
இந்த ஆய்வுக்கட்டுரை Nature Ecology & Evolution என்ற இதழில் வெளிவந்துள்ளது. அழிவதற்கு முன்பு வரை டைனசோர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில் இரும்புப் பூச்சுடன் கூடிய பற்களுடன் வாழ்ந்தன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. பல இனங்களைச் சேர்ந்த ஊர்வனவற்றில் இரும்புப் பூச்சுள்ள பல் அமைப்பு காணப்படுகிறது.
என்றாலும் இன்று கிடைத்துள்ள டைனசோர் மாதிரிகளில் இரும்புப் பூச்சு பல் அமைப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. விலங்குண்ணி டைனசோர்களில் பற்களில் இரும்புப் பூச்சு இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். என்றாலும் இந்தப் பூச்சு கமோடோக்களின் நெருங்கிய உறவினர்களான ஊர்வனவற்றின் புதைபடிவ மாதிரிகளில் காணப்படவில்லை என்பதால் இது காலப்போக்கில் மறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
“மனிதர்களின் பல் ஆரோக்கியத்தில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய, மனிதப் பற்களில் எனாமலை மறு உருவாக்கம் செய்ய இது உதவும்” என்று லண்டன் கிங்ஸ் கல்லூரி வாய் ஆரோக்கியப் பிரிவு பேராசிரியரும் ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவருமான Owen Addison கூறுகிறார்.
உயிரினங்களின் உலகில் பயங்கர விலங்கு என்று பெயரெடுத்திருந்தாலும் இவற்றின் விசித்திர பல் அமைப்பு மனிதனின் பல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் எனாமலில் புதிய வகையை உருவாக்க உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேற்கோள்கள்
https://www.theguardian.com/environment/article/2024/jul/24/komodo-dragons-iron-coated-teeth?
&
&
https://www.nature.com/articles/s41559-024-02477-7
- சிதம்பரம் இரவிச்சந்திரன்