வளிமண்டலத்தில் உள்ள காற்று மாசடைந்துவிட்டதால் பூக்களின் மணம் பரவும் தூரம் பாதிக்கப்பட்டிருப்பதாக உயிரி வேதியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். வாசனை மூலக்கூறுகள் காற்றில் எளிதாக பரவக்கூடியவை. ஆனால் மாசடைந்த காற்று வாசனை மூலக்கூறுகளுக்கிடையே அதிக இடைவெளியை ஏற்படுத்திவிடுகின்றன. இதன் விளைவாக மகரந்தச்சேர்க்கை ஏற்படுத்தும் பூச்சியினங்கள் பூக்களின் மிகஅருகில் சென்றால் மட்டுமே வாசனையை உணரமுடிகிறது. இனப்பெருக்கத்திற்கு உதவும் பூச்சியினங்களை ஈர்க்கும் வாசனை தூரம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துபோய்விட்டது.
பத்தடி தூரத்தில் பூக்களின் மணத்தை நுகர்ந்த வண்டினம் இப்போது மூன்றடி தொலைவு சென்றால் மட்டுமே பூக்களின் மணத்தை நுகரமுடியும். பூக்கள் என்றுமே ஐ லவ் யூ சொன்னதில்லை. பூக்களை வைத்துக்கொண்டு மனிதன் தான் ‘ஐ லவ் யூ’ சொல்லி பல்லைக் காட்டுகிறான். அவனுடைய செயல்பாடுகளால் பூக்கள் மணமிழந்து வருகின்றன.
காற்று மாசடைவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தால் வெகுவிரைவில் நாம் ரோஜாக்களின் மணத்தை அறியமுடியாமல் போகலாம் என்கிறார் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் வளிமண்டல இயல் அறிஞர் ஜோஸ் ஃப்யூண்டிஸ் என்பவர். வளிமண்டல மாசுகள் பூக்களின் மணம் பரவும் விதத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய்ந்து வருகிறார் இந்த அறிஞர். கார்கள், தொழிற்சாலைகள் இவையெல்லாம் புகையை காறி உமிழ்கின்றன. தொழிலகங்களும், கார்களும் காறித்துப்பும் புகை காற்றில் கலந்து வாசனை மூலக்கூறுகளின் வில்லனாக மாறிவிடுகின்றன என்பது இவரது கண்டுபிடிப்பு.
நமக்கு பூக்களின் மணம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் பூச்சியினங்களுக்கு...? மனிதர்கள் பூக்களை முகரமுடியாவிட்டால், பூக்களுக்கு ஏதும் இழப்பில்லை. ஆனால் பூச்சியினங்கள் பூக்களின் வாசனையை முகருவதில் இடையூறு ஏற்படுமானால் பூக்களின் குலம் அழிந்துபோகுமல்லவா? பூச்சியினங்கள் பூக்களை கண்டறிய அதிகநேரம் எடுத்துக்கொள்கின்றன. வாசனை மிகுந்த பூக்களை தேடியலைவதில் மிகுந்த நேரத்தை செலவிடும் பூச்சியினங்கள், மிகக் குறைந்த நேரம் மட்டுமே பூந்தேனை உட்கொள்ளுவதற்கு செலவிடும். இதனால் மகரந்தச்சேர்க்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துபோகும். இதற்கு மாற்றுவழி என்ன? தூய்மையான சுற்றுப்புறத்தை பராமரிப்பதுதான் ஒரே வழி என்கிறார் வளிமண்டல இயல் அறிஞர் ஜோஸ் ஃப்யூண்டிஸ்.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/videos/2008/0807-pollution_killing_flowers_fragrance.htm
-தகவல்: மு.குருமூர்த்தி (