தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
தீங்கு வரக்கண்டு சிரித்திடுவார் - யாங்காணோம்
துன்பச் சுமைதாங்கி ! சீவானந்தம் போன்ற
அன்புச் சுமை தாங்கும் ஆள்.
- பாவேந்தர் பாரதிதாசன்
ஜீவாவின், காந்திய எதிர்ப்பு மற்றும் சுயமரியாதைப் பாதையின் காரணமாக காந்தி ஆசிரமத்திலிருந்து விலகி வந்த ஜீவா, நாச்சியாபுரத்தில் “உண்மை விளக்கம் நிலையம்” என்ற ஓர் ஆசிரமத்தை நிறுவி, அதில் சுதந்திரத்திற்கான போராட்ட இயக்கத்தையும் சுயமரியாதை இயக்கத்தின் தன்மைகளையும் ஒன்றாக இணைத்தார்.
ஆசிரமத்தின் உயரிய நோக்கங்கள் 1)வறுமை, பிணி அகற்றுதல் 2) தீண்டாமை ஒழித்தல் 3) மதுப்பழக்கம் ஒழித்தல் 4) ஆதி திராவிட மக்களுக்கு உழைத்தல் 5) பெண்ணுரிமை பேணல் 6) குருட்டுப் பழக்க வழக்கங்களை ஒழித்தல் என அறிவித்தார்.
நாச்சியார்புரம் உண்மை விளக்க நிலையத்தில் இருந்த போது 07.04.1930 அன்று அந்நிலையத்தின் முதல் வெளியீடாக “சுயமரியாதை சொன்மாலை” எனும் ஆத்திசூடி வடிவிலான கவிதை நூலை வெளியிட்டார். 102 சூடிகளைக் கொண்ட இந்தப் பாடலில்,
அனைத்துயிர் ஒன்றென்று அறிவதுன் கடமை
ஆரியர் சூழ்ச்சியில் ஆழ்ந்து போகாதே
இருடிகள் முனிவர்களென்பவர் புரட்டர்
ஈசற்கீவதாய் காசழியாதே
உன்னுடலுத்தமன் உறையுளென்றே உணர்
ஊரார் உழைப்பில் உடல் வளர்க்காதே
எல்லாரும் ஓர்குலமெனத் தேர்ந்திடு
சுதந்திரம் வேண்டின் சுயமரியாதை கொள்
தீண்டாமை ஒழியத் தீவிரமாய் உழை
பண்டிதர் அறியார் பகுத்தறிவின் திறம்
பெண்ணும் ஆணும் எண்ணில் நிகர்
அறிவியல் வாதம் பெறில் முன்னேற்றம்
தாய்மொழி போற்றாதார் தீவினையாளர்
சோதரப் பேற்றின் ஆதாரம் சமத்துவம்
அன்பே கடவுள் அறிவே மெய்ப்பொருள் என ஆரியர் சூழ்ச்சி, தீண்டாமை, சுதந்திரம், சுயமரியாதை, சமதர்மம் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
உண்மை நிலையம் தொடங்குவதற்கு முன்பாக ஜீவா கடவுள் நம்பிக்கை உள்ளவராகவே இருந்தார். ஜீவாவின் குடும்பம் ஏழை விவசாயக் குடும்பம். கடவுள் பக்தி கூடுதலாகக் கொண்ட குடும்பம். அதனால்தான் அவர்களது குடும்ப தெய்வத்தின் பெயரை மனதில் கொண்டு ஜீவாவிற்கு சொரிமுத்து என்ற பெயரைச் சூட்டினர். ஜீவாவுக்கும் ஆரம்ப காலத்தில் சமய நெறிகளில் பற்று இருந்தது. நாள்தோறும் விடியற்காலை குளித்து கோவிலுக்குச் செல்லும் பழக்கம் இருந்தது.
தன் ஊரிலுள்ள பூதலிங்கேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி வழியில் இருக்கும் விநாயகருக்கு, 10 தோப்புக்கரணங்கள் போட்டுவிட்டு அவர் வீடு திரும்புவது வழக்கம். தேர்த்திருவிழாக் காலங்களிலும், மார்கழி மாதம் 30 நாட்களிலும் பஜனைக் குழுவில் ஒருவராகிப் பாடல்கள் பாடுவது அவர் வழக்கம். தனது சொந்த ஊரில் இருந்த திருப்பணிச் சங்கத்தில் ஈடுபட்டு தெய்வப் பணியும் சமூகப் பணியும் செய்து வந்தார்.
மக்கள் தொண்டுக்கு வந்த பிறகு கடவுள், மதங்கள் எல்லாமே சாதியக் கட்டுமானங்களில் கட்டுண்டு கிடப்பதை உணர்ந்ததால், நாத்திகவாதியாகவும் சுயமரியாதைக்காரராகவும் மாறிவிட்டார்.
"எனக்கு உங்களுடைய அபின் தேவையில்லை. காரணம், அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கத்தாருடைய துன்பங்களையும் துயரங்களையும் நிலை நிறுத்த அல்ல, ஆனால் ஆளும் வர்க்கத்தாருடைய மீத மிச்சங்கூட இல்லாத ஒரு புதிய சமுதாய அமைப்பைப் படைக்கவே நான் விரும்புகிறேன். அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை சுவர்க்கத்திலன்று, இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காவே நான் பணிபுரிகிறேன். எல்லாவிதமான அடக்கல், ஒடுக்கல், அடிமைத்தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத பெளதிகச் சூழ்நிலைகளையும், சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன்.
மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிர்டையான இந்த அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும், எனது நாத்திகவாதமும் மாபெரும் சக்தியையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன. நான் ஒரு நாத்திகன், காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன்" என்று அறிவித்தார் ஜீவா.
1926 இல் சிராவயலில் ஜீவா அவர்கள் தந்தைப் பெரியாரைச் சந்திக்கிறார். அரசியலில் காந்தியையும் சமூக சீர்திருத்த கருத்துக்களில் தந்தை பெரியாரையும் பின் தொடர்ந்து வந்த ஜீவா காந்தியத்தை புறக்கணித்து சுயமரியாதை குழுவை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறார்.
1929 இல் செங்கல்பட்டில் பிப்ரவரி 17, 18 ம் தேதிதிகளில் பெரியாரின் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் ஜீவாவும் கலந்து கொள்கிறார். இதுவே முதாவது சுயமரியாதை மாநாடு. இம்மாநாட்டில், ஜாதி பேதம் பார்க்கக் கூடாது! வர்ணா சிரம கொடுமையான கட்டுப்பாடுகளையும், சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளை ஏற்றுக் கொள்ள கூடாது! மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பை காட்டுவதற்காக சேர்க்கப் படும் பட்டங்களை விட்டு விட வேண்டும்!
என சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக, சமயம்/மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, சுயமரியாதை திருமணத்துக்கு சார்பாக, விதவை மறுமணத்துக்கு ஆதரவாக இங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் தான் ஈ. வே. ராமசாமி நாயக்கர் என்று தன் பெயரில் இருந்த “நாயக்கர்” என்ற சாதிப் பட்டத்தை துறந்து ஈ. வே. ராமசாமி என்று தன் பெயரை மாற்றினார்.
இரண்டாவது சுயமரியாதை மாநாடு 1930ல் ஈரோட்டில் நடந்தது அதே மாநாட்டில் அரங்கில் இளைஞர்கள் மாநாடும், பெண்கள் மாநாடும் தனித்தனியாக நடத்தப்பட்டன. அம் மாநாட்டில் ஜீவா கலந்து கொண்டு, "சாதி, மத விவகாரங்களில் மட்டும் நமது சுயமரியாதையை பாதுகாத்துக் கொண்டால்; போதாது. அரசியல் விவகாரங்களிலும் நாம் நமது சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்." என்று சுயமரியாதை இயக்கத்தையும், தேச விடுதலை இயக்கத்தையும் இணைத்துப் பேசினார்.
1931 மார்ச் மார்ச் 23 அன்று நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய வழக்கில் ராஜகுரு, சுகதேவ் ஆகியோருடன் பகத்சிங்கும் தூக்கிலிடப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக ஜீவா வெகுண்டெழுந்தார். அனல் கக்கும் பேச்சால் அன்றைய இளைஞர்களின் மனதில் புரட்சிக் கனலை மூட்டினார்.
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டபோது, ‘பகத்சிங்கின் கொள்கைதான் என் கொள்கை’ என்று 1931 மார்ச் 29 அன்று பெரியார் தம் பத்திரிகைகளில் வெளியிட்டார். இதனால் ஜீவாவிற்கும் பெரியாருக்கும் இன்னும் நெருக்கம் ஏற்பட்டது.
1931ஆம் ஆண்டு விருதுநகர் 3ஆவது சுயமரியாதை மாநாடு ஜூன் 8, 9 தேதிகளில் நடந்தது. இம்மாநாட்டில் ஜீவா கலந்து கொண்டு, ‘சமதர்ம தத்துவமும், பொதுவுடைமைக் கொள்கையும் நாட்டில் ஓங்க வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்கிறபடியால் விதி, கடவுள்செயல் என்பன போன்ற எண்ணங்கள் மக்கள் மனதிலிருந்து ஒழிக்கப்பட்ட வேண்டும்?” என்று பேசி "எல்லா மதங்களும் ஒழிய வேண்டும்; மதங்கள் ஒழியாத வரை சகோதரத்துவம் வளராது’ என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அதே ஆண்டில் ஈரோட்டில் காங்கிரஸ் இயக்கம் சார்பாக நவஜவான் மாநாடு ஒன்று நடந்தது. அம்மாநாட்டில் லாகூர் சதி வழக்கில் கைதாகி விடுதலைபெற்ற ஜதீந்திர தாஸ் சகோதரர்கள், கிரண்தாஸ் ஆகியோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் ஜீவானந்தமும் பங்கேற்று அவர்களோடு நெருங்கிப் பழகலானார்.
1932 ஆம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கம் தீவிரமடைந்த போது காரைக்குடியில் ஜீவா தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. சட்ட மறுப்பு இயக்க ஆதரவுக் கூட்டங்களில் ஜீவாவின் சொல்வன்மை மக்களை ஆவேசம் கொள்ள வைத்தது. மிரண்டு போன அரசு 07.01.1932 அன்று ஜீவா காரைக்குடிக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். பிரிட்டிஷ் அரசு மறுதினம் முதல் அவர் எங்கும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டுப் போட்டது. ஜீவா, அதை மீறினார். மறு நாள் கோட்டையூரில், தடையை மீறிப் பேசிய போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சிறைவாசம் ஜீவாவின் அரசியல் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஜீவா சிறையில் வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஸ் சட்டோபாத்யாயா, பதுகேஷ்வர் தத், குந்தர்லால் ஆகியோரைச் சந்தித்தார். இவர்களைச் சந்தித்ததன் மூலம் கம்யூனிசக் கோட்பாட்டின்பால் ஜீவா ஈர்க்கப்பட்டார். இச்சந்திப்பு, ஜீவாவின் பொதுவுடைமைக் கருத்தியலுக்கு அடித்தளமிட்டது.
1931 திசம்பர் 13 அன்று பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சோவியத் நாட்டிற்கும் சென்றார். அங்கு கண்ட காட்சிகள் பெரியார் சிந்தனையில் திருப்பு முனையாக அமைந்தது. 11-01-1932 இல் பெரியார் தமிழகம் திரும்பினார்.
சோவியத் யூனியன் சென்று வந்த பெரியார், ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, மற்றும் லெனின் எழுதிய ‘மதத்தைப் பற்றி’ ஆகிய நூல்களைத் தமிழாக்கம் செய்து குடியரசு இதழில் வெளியிட்டார்.
பொதுவுடைமைக் கோட்பாட்டின்பால் ஈர்க்கப்பட்டிருந்த தந்தை பெரியார் நடத்திய விடுதலை ஏட்டில் பொதுவுடைமைத் தலைவர் சிந்தனை சிற்பி சிங்கார வேலர், ஜீவா ஆகியவர்களின் கட்டுரைகள் வெளியாகிக் கொண்டுடிருந்தன.
பெரியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க மார்க்சியர் சிங்காரவேலர் ஈரோட்டுப் பாதை என்று அந்நாட்களில் மிகவும் புகழப்பட்ட அந்த ஈரோட்டுத் திட்டத்தை தொகுத்து வழங்கினார்.
"ரயில்வே, வங்கிகள், நீர் வழிப்பாதை சாதனங்களை மக்கள் உடைமையாக்குவது; தரிசு நிலங்கள், காடுகள், ஸ்தாவர சொத்துக்களை மக்கள் உடைமையாக்குவது விவசாயிகளும், தொழிலாளிகளும் வட்டிக்காரர்களுக்கு, கடன்காரர்களுக்கு தரவேண்டிய கடன்களை ரத்து செய்வது; அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்வது; சுதேசி சமஸ்தானங்கள் உள்ளிட்டு இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் நேரடி ஆட்சியில் கொண்டு வருவது; ஏழு மணி நேர வேலைநாள், கூலி உயர்வு "இப்படி புரட்சிகரமான வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டது.
சிங்காரவேலர் எழுதிய இந்தத் திட்டம் குறித்து விவாதிக்க 1932ஆம் ஆண்டு டிசம்பர் 28,29 தேதிகளில் ஈரோடு நகரில் சுயமரியாதை இயக்கத் தொண்டர்களின் கூட்டத்தை பெரியார் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று, சுயமரியாதைத் தொண்டர்களில் தலைசிறந்தவராயிருந்த தோழர் பொன்னம்பலனார் மூலம் ஜீவாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுகுறித்து, "1932ம் போராட்டத்தில் ஜனவரி ஆரம்பத்தில் சிறை சென்று நவம்பர் இறுதியில் வெளிவந்தேன். பகத்சிங்கின் தோழர்களோடும், வங்கப் புரட்சி தலைவர்களோடும், சிறைச்சாலைகளில் விவாதித்தும், மார்க்ஸிய நூற்களைக் கற்றும் உறுதியான கம்யூனிஸ்ட் அபிப்பிராயத்தோடு சிறையிலிருந்து வெளிவந்தேன். இப்படி வெளிவந்த சந்தர்ப்பத்தில்தான் ஈரோட்டு வேலைத்திட்ட கூட்டத்தின் அழைப்பு, ஈ.வெ.ரா.விடமிருந்து கிடைத்தது" என்று ஜீவா எழுதியுள்ளார்.
இந்தத்திட்டத்திற்கு பெரியாரின் நெருங்கிய தோழர்கள், சுய மரியாதை இயக்கம் அரசியல் இயக்கமானால் அது சமூக சீர்திருத்த வேலையை சரிவர செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் சமூக சீர்திருத்தத்தை சீர் செய்யலாம் என்று அதற்கு மறுப்பு கூறப்பட்டது. இரண்டு வேறுபட்ட கருத்துகள் வந்ததால், சுய மரியாதை இயக்கம் எப்போதும்போல் சமூக சீர்திருத்த இயக்கமாக இருந்து வரும் நேரத்திலேயே அதற்குள் சமதர்மக் கட்சி என்ற ஒரு தனி அரசியல் பிரிவை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் முடிவில் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தத் திட்டத்தை விளக்கி பெரியார், சிங்காரவேலர் மற்றும் ஜீவா ஆகியோர் உரையாற்றினர். இந்த மாநாட்டைத் தொடர்ந்து பெரியாரும், ஜீவாவும், கலந்து கொண்டு மாவட்டம் தோறும் ஈரோட்டுப் பாதையை விளக்கி பத்துப் பதினைந்து மாநாடுகள் நடத்தினர்; நூற்றுக்கு மேற்பட்ட சுயமரியாதைச் சமதர்ம இயக்கக் கிளைகள் நிறுவப் பட்டன. முதலாளித்துவ ஒழிப்பு மாநாடு, ஜமீன் ஒழிப்பு மாநாடு, லேவாதேவிக்காரர் வட்டிச் சுரண்டல் ஒழிப்பு மாநாடு என்று பல மாநாடுகள் தமிழகமெங்கும் நடைபெற்றது. இந்த மாநாடுகளில் ஜீவா கலந்து கொண்டு முழங்கினார்.
ஜீவாவுக்கு சிங்காரவேலருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் விஞ்ஞான சோசலிசம், கம்யூனிசம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் புரிந்து கொள்ள வாயப்பு ஏற்பட்டதுடன், கம்யூனிச நூல்களைக் கூடுதலாகப் படிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது.
தந்தை பெரியார், தோழா.சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் பங்கு பெற்ற நாத்திகர்கள் மாநாடு 1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை எழும்பூர் ஒயிட்ஸ் மெமோரியில் மண்டபத்தில் நடைபெற்றது.
புரட்சி ஏட்டில் நாத்திகப் பிரச்சாரம், முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, கம்யூனிச ஆதரவுக் கட்டுரைகள் வெளிவந்ததால் 1934 ஆம் ஆண்டு சனவரியில் அக்கட்டுரைகள் ஆட்சேபகரமானது என்று கூறி அரசு நடவடிக்கை எடுத்தது. புரட்சி ஏடு நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக பகுத்தறிவு ஏடு தொடங்கப்பட்டது. ஜீவா, பகுத்தறிவில் இதழிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.
‘ஆண்டான் அடிமையெனும் அவச்சொல் அங்கில்லை
ஆண்பெண் பேதம் பாராட்டும் அழிகிறுக் கங்கில்லை
வேண்டும் சுயேச்சைப் பேச்சில் விதிவிலக்கில்லை
மீறும் சட்டதிட்டங்கள் கூறுவோர் இல்லை’
என்று எழுதினார்.
பகத்சிங் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற நூலினை ஜீவானந்தம் தமிழாக்கம் செய்தார் இந்நூலை பெரியார் தனது குடியரசு பதிப்பகத்தில் வெளியிட்டார். பிரிட்டீஷ் அரசாங்கம் புத்தகத்திற்கு தடை விதித்ததோடு, ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், ஜீவாவையும் 1934ல் கைது செய்தது. தமிழக வரலாற்றில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக முதன்முதலாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இதுதான் என்று கூறப்படுகிறது. ஜீவாவின் கை கால்களை கட்டி விலங்கிட்டு, திருச்சி முழுவதும் வீதி வீதியாக இழுத்துச் சென்று சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியில் வந்த ஜீவா சுயமரியாதை சமதர்மக் கட்சியின் செயலாளரானார்.
"இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்” என்று “குடி அரசு” இதழில் வெளியான தலையங்கத்திற்காக 1933 டிசம்பர் 30 அன்று பெரியார் கைது செய்யப்பட்டார். ஒன்பது மாதக் கால சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் பெரியார் விடுதலையாகும்வரை எந்த கூட்டமும் நடத்துவதில்லை என்று செயற்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் ஜீவா கடுமையாகப் பணியாற்றினார். மே தின கொண்டாட்டத்தை நடத்துமாறு அறிக்கை விட்டார். தமிழ் மாகாண சமதர்ம மாநாடு இக்காலத்தில் நடத்தப்பட்டது.
'சமதர்மத் திட்டத்தை’ பெரியார் கையில் எடுத்த நிலையில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி சுயமரியாதை இயக்கத்தின் மீது கடும் ஒடுக்குமுறைகளைத் தொடங்கி விட்டது. அதனால் சமதர்மத் திட்டத்தைப் பெரியார் கைவிட்டார்.
"நான் இரஷ்யாவிற்குப் போவதற்கு முன்பே, பொது உடைமைத் தத்துவத்தைச் சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். இரஷ்யாவில் இருந்து வந்தவுடனும், அதை இன்னும் தீவிரமாகப் பிரசாரம் செய்ததும் உண்மைதான். ஆனால், சர்க்கார் பொது உடைமைக் கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து, நமது சுயமரியாதை இயக்கத்தையும் அடக்கி ஒடுக்கி, ஒழித்து விட வேண்டுமென்று கருதியிருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகு, எனக்குப் புத்திசாலித்தனமாகச் சில காரியம் செய்ய வேண்டியதாக ஏற்பட்டு விட்டது" என்று கூறி சமதர்மத் திட்டத்தை ஒத்தி வைத்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அறிவித்த பெரியார் நீதிக்கட்சியோடு சில திட்டங்களை முன்வைத்து அதனோடு இணைந்து கொண்டார். அதனால் ஜீவா பெரியாரோடு முரண்பட்டார்.
1935 இல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் இரண்டு அணிகள் உருவாயின. நீதிக்கட்சியை ஆதரித்த பெரியாருக்கு ஜீவா எதிர்ப்புத் தெரிவித்தார். ‘பெரியார் சுயமரியாதைக்காரர் அல்லர், சோசலிசத்திற்காகப் போராடுபவர் அல்லர், ஜமீன்தாரர்களின் விரோதியல்லர், சொல்லும் செயலும் சுயமரியாதை இயக்கத்திற்குப் பலன் தராது.’ என்று கூறினார்.
மேலும், “கடவுளானாலும் காந்தியானாலும் சொல்வது பகுத்தறிவுக்குப் பொருந்தாவிட்டால், தள்ளிவிட வேண்டுமென்கிறோம். அப்படியானால், ஈ.வெ.ரா சொல்வது பகுத்தறிவுக்குப் பொருந்தாவிட்டால் வாலிபர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? ஈ.வெ.ரா.வின் தலைமையை உதறிவிட்டு புரட்சிப் பாதையில் முன்னேற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்து, சுயமரியாதை இயக்கத்திலிருந்து ஜீவா முற்றிலும் வெளியேறினார்.
பெரியாரின் சாதி ஒழிப்பு அரசியல் குறித்து "காங்கிரசிலிருந்து வெளியேறிய ஈவேரா ‘காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ‘ என்றும், அப்பால் ‘பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் ‘பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் ‘ என்றும், அப்பால் ‘வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும் ‘ என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் ‘இந்து மதம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் ‘மதங்களே ஒழிய வேண்டும்' என்றும் போகப் போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார்" என்று கடுமையாக விமர்சனம் வைத்தார்.
பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் எதிர்ப்பை ஜீவா ஏற்றுக் கொள்ளவில்லை. "காவிரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் – இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்குநேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள், தங்கள் வழக்கப்படி குளித்து பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்; அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓட ஓடத் துரத்தினார்கள். ஈவெராவைப் பின்பற்றுகிற திகவினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது" என மேடைகளில் பேசினார்.
அதே நேரம், ஜீவா தனிப்பட்ட முறையில் பெரியார் மீது வைத்திருந்த மரியாதையும் அதேபோல் ஜீவாவின் மீது பெரியார் வைத்திருந்த பேரன்பும் கடைசி வரை குறையாமல் இருந்தது. சுயமரியாதை இயக்கத்தில் இருந்து ஜீவா வெளியேறிய பிறகும் “இன்றைய தினம் பெரியார் அவர்களுடைய பெரிய சமூகச் சேவையெல்லாம் கண்டபிறகு தமிழ்நாட்டின் தலைவர் பெரியார் என்று மனப்பூர்வமாக மட்டுமல்ல, அறிவுப்பூர்வமாக சரித்திரத்தின் நடைமுறையிலே. கண்ட உண்மையின் பூர்வமாக பெரியார் அவர்களுக்கு ஈடு இணையாக யாரும் இல்லை" என்று பெரம்பூர் செம்பியம் பொதுக்கூட்டத்தில் 23.11.1951 அன்று பேசியுள்ளார்.
பெரியார் சமூகத்தில் மக்களிடையே நிலவி வந்த பிற்போக்குக் கருத்தியலான சாதி, மத, கடவுள் நம்பிக்கைகளைச் சாடினார். மாறாக ஜீவா, மத கடவுள் நம்பிக்கைகள் மக்களிடம் நிலவுவதற்கான சமூக பொருளாதார காரணிகளை ஆய்வுக்குட்படுத்தத் தொடங்கினார். சமூக உற்பத்தி முறையே மக்களின் துன்ப துயர வாழ்வுக்கு அடிப்படை என்ற கருத்தியலுக்கு வந்திருந்தார்.
"மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிரிடையான இந்த அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும் எனது நாத்திகவாதமும் எனக்கு மாபெரும் சக்தியையும் உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன” என தன்னை பொருள் முதல்வாதியாக அறிவித்துக் கொண்டார்.
(தொடரும்)
- க.இரா.தமிழரசன்