சீவாநந்தத்தின் தமிழ்த்தொண்டு செப்புகின்ற
"நா" ஆனந்தத்தை நணுகுமன்றா - பாவாணர்
நல்லாரைப் பாடியன்றே நல்லின்பத்தைப் பெற்றார்
பொல்லாரைப் பாடுவரோ போய் ? - பாவேந்தர்
ஜீவா சிராவயல் ஆசிரமத்தில் தங்கியிருந்த காலகட்டத்தில் அங்கு வந்த காந்தியடிகள், ஜீவாவைப் பார்த்து, உங்களுடைய வழிகாட்டி யார்? உங்களுடைய மதம் என்ன? என்று கேட்டார். அதற்கு ஜீவா "என் வழிகாட்டி பாரதி. என் மதம் வள்ளுவம் " என்றார். அப்படி பாரதி மீதும் வள்ளுவர் மீதும் தீராப்பற்று கொண்டவர் ஜீவா.
பொதுவுடைமையாளர்கள் அக்காலத்தில் பாரதியின் மீது பற்று கொண்டிருந்தது இயல்பான ஒன்று. ஆனால், வள்ளுவரையும் வள்ளுவத்தையும் பாரதியார் அளவுக்கு கம்யூனிஸ்டுகள் உயர்த்திப் பேசியதில்லை. ஆனால், ஜீவா வள்ளுவரையும் அவர் காட்டிய வழியையும் மேடை தோறும் முழங்கினார்.
ஜீவாவின் சிராவயல் ஆசிரமத்தில் தேவாரம், திருவாசகம், திருக்குறள், சங்க இலக்கியங்கள், பாரதியார் பாடல்கள் ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன. இந்த ஆசிரமத்தில் இருந்த காலத்தில்தான் ஜீவா சங்க இலக்கியம் முதல் பாரதி வரையிலான எல்லா நூல்களையும் வாசித்தார்.
உயிர்களின் மீது நேசம் கொண்டவன் என்ற பொருள்படும்படி தன் பெயரை ஜீவானந்தம் என்று மாற்றிக்கொண்ட ஜீவா மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்ப்பு ஏற்பட்டு, ஜீவானந்தம் என்று வைத்துக் கொண்ட தன் பெயரை உயிரானந்தம் என மாற்றம் செய்து கொண்டார். தன் பெயரை மட்டும் தூய தமிழில் மாற்றாமல் தன் பள்ளியில் இருந்து தன்னோடு பணி செய்த பலரது பெயர்களையும் தமிழ்ப்பெயராக்கினார்.
மொழியபோல் நடப்போர் வழிபற்றிடுக!
தாய்மொழ்போற்முர் இவினையாளர் !
தாய்நாடாளுஞ் சேயாய்த்திகழ்க !
என தான் எழுதிய பகுத்தறிவு சொன்மாலையில் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர் ஜீவா.
சங்க இலக்கிய நூல்களை, பாரதியார் பாடல்களை ஜீவா திரும்பத் திரும்பப் படித்து தன்னுள் ஏற்றிக்கொண்டார். ஜீவாவுக்கு இருந்த தமிழ்ப்பற்று கொஞ்சம் கொஞ்சமாக தனித் தமிழ்ப் பற்றாக மாறியது. தமிழ் மொழி தான் சிறந்த மொழி ; அது வளர வேண்டும்; பிற மொழிக்கலப்பில்லாமல் பேசப்பட வேண்டும்; எழுதப்பட வேண்டும் என்று எண்ணினார் ஜீவா.
ஆசிரமத்தில் ஒரு நாள் நடை பெற்ற கூட்டத்தில் "நாடும் இளைஞரும் " எனும் பொருள்பற்றி ஒரு மணி நேரம் ஜீவா பேசினார். பிறமொழிச்சொல் ஒன்று கூட கலக்காமல் தனித்தமிழில் பேசினார். அந்தக் கூட்டத்திற்கு பிரபல எழுத்தாளரான வ.ராமசாமி வருகை தந்திருந்தார். "இந்த மாதிரி பேச்சை நான் கேட்டதே இல்லை " என்று புகழ்ந்தார் வ. ரா. "இவ்விதம் பேசக்கூடியவர்கள் தமிழ் நாட்டில் வெகு சிலரே" என்று கூறி ஜீவாவைப் பாராட்டினார்.
ஆனால், அதே நேரம் தனித்தமிழில் பேசுவது மேடைக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும், எளிய மக்களிடம் பழகுவதற்கு தனித்தமிழ் நடை தடையாக இருக்கும் என்பதையும் வ.ரா ஜீவாவிடம் வலியுறுத்தியுள்ளார். தனித்தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக அப்போது தனது மொழிநடையை ஜீவா மாற்றிக் கொள்ளவில்லை.
"ஜீவாவின் பேச்சை காங்கிரஸ் மேடைகளிலும் கேட்டிருக்கிறேன்; சுயமரியாதை மேடைகளிலும் கேட்டிருக்கிறேன். இவரது தனி ராச்சியமான பொது உடைமை அரங்குகளிலும் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும், தரம் குன்றாத பேச்சுகள் அவை. இடிக்குரலில் போலி வாதங்களை அநாவசியமாக சிதறடிப்பார். கேட்போரை ஒரே உலுக்காக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உலுக்கிக் குலுக்கி விடுவார்.... ஜீவா தமிழ் சூறாவளிக் காற்று. கொதித்து கொந்தளித்து எரிமலை கக்கும் நெருப்புக்குழம்பு " என்கிறார் அவர் காலத்திய எழுத்தாளர் பி.ஸ்ரீநிவாச்சாரி
ஜீவா சுயமரியாதை இயக்கத்திலிருந்து கம்யூனிஸ்டாக மாறிய பின்பும் கூட அவரது மேடைப்பேச்சு தமிழ் மயமாகத்தான் இருக்கும். தமிழ் இலக்கிய மேற்கோள்களுடன் தான் தனது அனல் பறக்கும் பேச்சைத் தொடங்குவார். இதை வைத்துச் சிலர் மார்க்சியத் தத்துவப் பயிற்சியும், படிப்பும் அதன் மேல் பிடிப்பும் இல்லை என்று ஜீவாவின் மீது திறனாய்வாக தோழர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதும் உண்டு. இது ஜீவாவின் காதுகளுக்கும் சென்றது.
அதற்கு ஜீவா சொன்ன பதில், "அதாவது மார்க்ஸ் தமிழ் நாட்டில் பிறந்திருந்தால், அவர் தமிழ் மக்களுக்கு தமிழில் தானே பேசியிருப்பார். மக்களிடம் பேசுகிற போது, மக்களுக்குப் புரிய வேண்டும் என்று பேசுவாரா? அல்லது தனது புலமையைக் காட்ட சொற்சிலம்பம் ஆடுவாரா? நான் கிரகித்துக் கொண்டதை, மக்களுக்கும் புரிகிறார் போலச் சொல்ல வேண்டுமே ஒழிய நான் எவ்வளவு படித்தவன் தெரியுமா? என்று காட்டுவதற்காகப் பேசக்கூடாது என தன்னைக் கேலி பேசிய தோழர்களைச் சாடாமல் தோழர்கள் மேடையில் எப்படி பேச வேண்டும் என்று விளக்கியுள்ளார். (ஜீவாவும் - நானும் நூலில் தா.பா.)
தனித் தமிழின் மீது கொண்ட பற்றால், தனித் தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக இருந்த மறைமலையடிகள் மீது ஜீவா மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான காலமும் வாய்த்தது. 1927-ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்ட ஜீவா, அந்நிகழ்வு முடிந்த பிறகு, மறைமலையடிகளைப் பார்ப்பதற்காக அவர் தங்கியிருந்த பல்லாவரம் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.
மறைமலையடிகள் வீட்டை அடைந்து அடிகளாரின் வீட்டுக் கதவைத்தட்டிய போது "யாரது போஸ்ட்மேனா? என்று மறைமலையடிகள் வீட்டுக்குள்ளிருந்து ஜீவாவை நோக்கி கேள்வி கேட்டுள்ளார். தனித்தமிழில் கேள்வி எழுப்பாமல் ஆங்கிலத்தில் கேட்டது ஜீவாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், மறைமலை அடிகளுடன் தனித் தமிழ் குறித்து கலந்துரையாடிய போது மறைமலையடிகளிடம் பார்ப்பன எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது, அதை, ஜீவாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் பார்ப்பன எதிர்ப்பின் மீதும் நீதிக்கட்சியின் மீதும் எப்போதும் ஜீவாவுக்கு உடன்பாடு இருந்தது இல்லை.
1934 இல் நெல்லையில் நடைபெற்ற தமிழன்பர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஜீவா "மதத்தையும் மூடப்பழக்க வழக்கங்களையும் புகுத்தாமல் தமிழ் இலக்கியங்களை வளர்க்க வேண்டும் " என்று பேசி தமிழ் இலங்கியங்களில் உள்ள தேவையை வலியுறுத்தியதோடு அதிலுள்ள மூடத்தனத்தையும் சாடியுள்ளார்.
இடதுசாரி இயக்கக் கொள்கையில் உந்தப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றி, கட்சி தடை செய்யப்பட்ட போது, ஜீவா தலைமறைவு வாழ்க்கை நோக்கி சென்று விடுகிறார். தன்னுடைய தலைமறைவு வாழ்வின் போது மக்களுடன் பழகிய போது அவர்களுடன் தனித் தமிழில் உரையாடியதை அந்நியமாக உணர்ந்தார் ஜீவா. அதனால், மக்கள் மொழியில், எளிய மொழியில் அவர்களுக்குப் புரியும் வகையில் பேச வேண்டும் என்பதை உணர்ந்த ஜீவா தனித்தமிழைக் கைவிட்டார்.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மக்களின் கட்சியாக வேண்டும் அதற்காக என்ன செய்யலாம் என எல்லோரும் யோசிங்கள் என்று கூறியிருக்கிறார்.
ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து வெளியேறிய பிறகு, " தமிழ் ராஜ்யம் பெற்றுள்ள நாம் தமிழே எல்லாத் துறைகளிலும் அரச வீற்றிருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பே. வேறு எந்தப் பிரச்னையில் நம்மிடையே யே கருத்து வேற்றுமை இருந்தாலும் இந்தப் பிரச்சனையில் கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை. சட்ட சபையில் தமிழ் மொழி ஆட்சி செலுத்த வேண்டும், சர்க்கார் காரியாலயங்களில் அவை ராஜ்ய சர்க்கார் காரியாலயமாயினும் சரி, மாவட்ட, வட்ட ஸ்தல அரசாங்க அலுவலகங்களாயினும் சரி, எங்கும் தமிழே ஆட்சி செலுத்த வேண்டும். கல்லூரிகளில் தமிழ்! விஞ்ஞானத்தில் தமிழ்! தொழில் நுட்பத்தில் தமிழ்! உயர்நீதி மன்றம் முதல் சகல நீதிமன்றங்களிலும் தமிழ்! இவ்வாறு தமிழகமெங்கும். தமிழ் மொழி தனியரசு ஓச்ச வேண்டும் " என தமிழ் மொழியே எல்லா நிலைகளிலும் முதல் இடம் பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தை விஞ்ஞான மொழி, அறிவியல் மொழி என்று திராவிட இயக்கங்கள் முன்மொழிந்த போது, "கடந்த ஐம்பதாண்டுகளாக மாதவய்யாக்களும், பண்டித மயில் வாகனய்யாக்களும், பாரதியார்களும், அப்புசாமிகளும், சீனிவாசன்களும், பற்பல பேராசிரியர்களும், தமிழ்ப்பற்றுமிக்க இளைஞர்களும், தமிழில் விஞ்ஞானம் பேசி வருகிறார்கள். கலைச்சொல்லகராதிகளும், கலைக்களஞ்சியத் தொகுதிகளும், கலைக்கதிர் போன்ற பத்திரிகைகளும் தமிழ் விஞ்ஞான அறிவுத்துறையில் முன்னேறி வருகிறது என்பதைத் தெளிவுபடுத்தி வருகின்றன. ஆங்கிலத்துக்குப் பதில், பள்ளிக்கூடப் பாடங்களில் புகுந்த தமிழ், பள்ளி இறுதிப் படிப்பைத் தாண்டி, கல்லூரிகளில் நுழையத் தகுதி பெற்று வந்துவிட்டது. இந்த உண்மைகளையெல்லாம், விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் இன்றும் என்றும் ஆங்கிலத்திலேயே வேண்டும் என்கின்ற "நல்லறிவாளர்கள்" அறியமாட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது"
"அணுவைத் துளைத்து எழுகடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்."
அருளிய வள்ளுவப் பெருந்தகை தமிழன்னையின் மணிவயிறுபெற்ற பிள்ளை என்ற உண்மையை எனது நண்பர் நெடுஞ்செழியன் அறியாததல்ல என்று திராவிட இயக்கங்கள் கொண்டிருந்த ஆங்கில மயக்கத்தை கடும் திறனாய்வுக்கு உட்படுத்தினார்.
சங்க காலத்திலிருந்து பாரதி காலம் வரையும், பிறமொழி கண்ட சிறந்த கருத்துக்களை தமிழில் வடித்தெடுக்க முடியாது என்று தமிழ் என்றுமே நொண்டியடித்ததில்லை என்று கூறும் ஜீவா, "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்.' என்று பாரதி நமக்கு ஆணையிட்டுள்ளதாகக் கூறுகிறார்.
"வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளம்மொழி வாழியவே வானமளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி வாழியவே எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே."
என்ற பாரதியின் பாடலைச் சுட்டிக்காட்டி இந்தப் பிரபஞ்சம் கண்ட எந்த உண்மையையும் தமிழனால் சொல்ல முடியும் என்கிறார்.
எந்த மொழியில் வெளியிடும் கருத்தையும் தமிழில் வெளியிட முடியும் என்ற உறுதி இந்த நூற்றாண்டைய, வளரும் ஜனநாயகத் தமிழனின் உறுதி என்று முழங்குகிறார்.
"திராவிடன்?” என்ற சொல் தமிழ் சொல்லுமல்ல; பழைய இலக்கியம் எதிலும் அது காணப்படவுமில்லை. ஆகவே தொல்காப்பியம், புற நானூறு போன்ற சங்க நூல்கள்; திருக்குறள் போன்ற - பழந்தமிழ் இலக்கியங்களில் பயிலப்படும், சிறந்த பழக்க வழக்கங்கள், அருமகத்தான சாதனைகள், உயர்ந்த ஒழுக்கங்கள் ஆகியவற்றை திராவிடப் பண்பாடு என்றும், திராவிடர் நாகரிகம் என்றும் கூறுவது ஆதாரமற்ற கருத்துகள் என்று திராவிடத்தை ஒதுக்கி தமிழை முதன்மைப்படுத்துகிறார்.
“திராவிடர் “ என்ற சொல், ழகரம் வராத சமஸ்கிருதப் பண்டிதர்கள் தமிழை அழைத்த சொல். பின்னர், மேல் நாட்டிலிருந்து இங்கு வந்த சரித்திரம், மக்கள் வரலாறு, மொழி நூல் முதலிய கலைகளில் பல அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியில் வருணவழி இனங்களைக் குறிக்கும்போதும், தென்னிந்திய மொழிகளின் புராதன மூலக் குழுவைக் குறிப்பிடும்போதும், திராவிட இனம்?' அல்லது திராவிட குழு'” என்ற சொற்றொடர்களை உபயோகித்திருக்கிறார்கள். ஆகவே வடசொல் பண்டிதர்களையோ, ஸ்மித், கால்டுவெல் போன்ற சரித்திர ஆய்வாளர்களையோ, மொழி நூல் ஆசிரியர்களையோ ஆதாரம் காட்டி, தமிழனை திராவிடனாக்குவது அழகுமல்ல, அவசியமல்ல என்று தமிழின் திரிந்த வடிவமே திராவிடம் என்று சொல்லாராய்ச்சியை மேற்கோள் காட்டுகிறார்.
தமிழ் வழங்சிய நிலத்தைத் “தமிழகம்” என்றே நமது முன்னோர்கள், அன்புசொட்ட வாய் நிறையச் சொல்லியுள்ளார்கள் என்று கூறி தமிழுக்கும் தமிழருக்கும் மெய்யான பற்றாளராக விளங்கினார்.
(தொடரும்)
- க. இரா. தமிழரசன்