‘பகடை’ என்றால் பொதுவாகச் சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் தாயத்திலொன்று அல்லது கருவி என்பது எல்லோரும் அறிந்த செய்தி. தமிழகத்தில் வாழுகின்ற பல இனக்குழுக்களில் ‘பகடை' என்னும் இனக்குழு சமூகமும் ஒன்று என்பது பலர் அறியாத செய்தி. ‘தமிழக அரசின் பட்டியலினப் பிரிவில் உள்ள இவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளைப் பேசி வருகின்றனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகுதியாக வாழும் இவர்கள் அருந்ததியர்களில் ஒரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர்’. (ச. முருகானந்தம்: 1989, பக்: 130). இவர்கள் ஒன்பது கம்பளத்தாருள் ஒரு பிரிவினராகவும் அறியப்படுகின்றனர். இச்சமூகத்தினர் தோல் தொடர்பான தொழில்களைச் செய்து வருகின்றனர். காடுகளைத் திருத்தி, காட்டு விலங்குகளை வீழ்த்தி நிலத்தை வாழிடமாகவும், விவசாய நிலமாகவும் மாற்றியவர்கள் பகடைகள். இவர்கள் சிறந்த போர் மறவர்களும் ஆவர்.

 ‘சிந்துவெளி நாகரீக காலத்தில் தமிழ் நிலப்பரப்பில் முதன்முதலாக வாழ்ந்தவர்கள் பகடைகள் ஆவர். இவர்கள் தாசர்கள் அல்லது தாசர் குலத்தைச் சார்ந்தவர்கள். ஆரியர் வருகையின் பொது முதன்முதலில் அவர்களை எதிர்த்தவர்கள் தாசர்கள் ஆவர். அந்தத் தாசர் வழி வந்தவர்களே பகடைகள் ஆவர். இவர்கள் யாகங்களை மதிக்காதவர்கள். பகடைகளைத் தஸ்யூக்கள்’ என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தமிழ் விக்சனரி குறிப்பிடுகிறது. ‘பகடை' என்பதற்குப் போர் வீரன் (Warriors), போரற்றக் காலத்தில் செருமான் தொழிலை மேற்கொண்ட ஒருசாரார் (Warriors as well as cobblers) என விளக்கமளிக்கிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி (பக். 602). தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு வாழும் பகடையர்களைத் தெலுங்கர்கள், வந்தேறிகள் என்று வசைபாடும் சூழலில் ‘பகடை' என்பது ஒரு தமிழ்ப் பெயர் என்று கூறுகிறது தமிழ் அகரமுதலி. பகடை என்பதன் வேர்ச் சொல்லான பகடு என்ற சொல்லுக்கு, பெருமை, பரப்பு, வலிமை, எருது, எருமைக்கடா, ஏர், ஆண் யானை, தெப்பம் , ஓடம், சந்து எனப் பல பொருள்கள் உள்ளதாகவும் அகரமுதலி தெரிவிக்கிறது. (ம. மதிவண்ணன், 2023 : 116)

சங்க இலக்கியத்தில் பகடு - பகடை :

 தமிழ்நாட்டு இலக்கிய மற்றும் பேச்சு வழக்கில் ‘பகடு', ‘பகடை' ஆகிய சொற்களின் பயன்பாடு காலத்தால் மிகவும் முந்தையது என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது. ‘பகடை' என்பதன் வேர்ச் சொல்லான ‘பகடு' என்பது தமிழரின் வீரம் சார்ந்த பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 ‘மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற          

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து' (திருக்குறள்: 624)

என்ற திருக்குறளில் ‘பகடு' என்பது ‘தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும்பாரத்தை இழுக்கும் எருது' என்கிற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

விலங்கினங்களில் ‘மாடு' என்பதன் ஆண் இனமான ‘காளை’ யைக் குறிக்க ‘பகடு' என்ற சொல் சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டுள்ளது.

‘சீருடைப் பல்பகடு ஒலிப்பப் பூட்டி' (பதிற்றுப்பத்து. 58: 16)

 ‘ஆற்றல் மிக்க சிறந்த பல காளைகளை அவற்றின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் பூட்டி உழுதல்' என்ற பொருள் தருகிறது இந்தப் பாடல் வரி. அதாவது, ‘காளையைப் போன்ற வீரம் உடையவன் என்பதைக் குறிப்பதாகப் ‘பகடை' என்ற சொல் இங்கே கையாளப்பட்டுள்ளது.

 ‘கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்’ (புறநானூறு. 88: 4)       

 ‘அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்' (புறநானூறு. 96: 1)

ஆகிய புறநானூற்று அடிகளில் ‘பகட்டு மார்பின்' என்ற சொற்கள் முறையே அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் பொகுட்டெழினி ஆகியோரின் இன அடையாளக் கூறுகளை அறிவிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. ‘ஒளிரும் நுட்பமான தொழில் அமைந்த அணி பூண்ட அழகிய மார்பை உடையவன்’ என்று அதியமான் நெடுமான் அஞ்சியையும், ‘மலர்ந்த மலரையுடைய தும்பை மாலையைச் சூடிய அழகான வன்மை வாய்ந்த மார்பையுடையவன்' என்று அதியமான் பொகுட்டெழினியையும் குறிப்பிடும் இடங்களில் ‘பகடு' என்னும் சொல் முறையே, ‘அழகு', ‘வலிமை' என்கிற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

 ‘உழுத நோன்பகடு அழிதின் றாங்கு’ (புறநானூறு. 125 : 7)

 ‘உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்கு' (புறநானூறு. 366 : 13)

 ‘நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தி’ (புறநானூறு. 383 : 4)

 ‘வினைப்பகடு ஏற்ற மேழிக் கினைத்தொடர்' (புறநானூறு. 388: 11)

 ‘பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்' (புறநானூறு. 390 : 22)

 ‘பகடுதரு பெருவலாம் வாழ்த்திப் பெற்ற' (புறநானூறு. 391 : 4)

ஆகிய புறநானூற்று அடிகளில் ‘பகடு' என்பது முறையே, ‘உழுத மாடு / எருது', ‘ உழவைச் செய்து முடித்த எருது'. ‘எருதுகளை வாழ்த்தி', ‘உழவு விளைவிற்குரிய எருது', ‘எருதுகளைக் கொண்டு உழுதுவித்த செந்நெல்', ‘ எருதுகளின் உழைப்பால் பெற்ற பெரும் பொருள்' என்று வலிமை மிக்க எருதைக் குறிக்கும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே பகடைகள் என்பவர்கள் எருது அல்லது காளைகளுக்கு நிகரான வலிமை, வீரம் மற்றும் உழைப்புக்கு உரியவர்கள் என்பது பெறப்படுகிறது.

அரசர் வரலாற்றில் பகடையர்கள்

          தமிழ்நாட்டைப் பல பேரரசர் மற்றும் சிற்றரரசர் குலங்கள் ஆண்டிருக்கின்றனர். இவர்களில் சக்கிலியர் குடியைச் சேர்ந்த அரசர்கள் ‘பகடை' என்ற பெயருடன் அறியப்படுகின்றனர். பல்லவப் பகடையினமகளே சக்திவிடங்கனின் பட்டத்தரசியாய் சாமவ்வை என்கிற காடவன் பெருந்தேவி என்ற பெயருடன் ஆண்டிருக்கிறாள் எனத் திருப்பதிக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. ராஜராஜ சோழனின் பட்டத்தரசி இந்த சக்திவிடங்கனின் தமக்கையே ஆவாள். எனில், பல்லவப் பகடை என்பவர் சுந்தரச் சோழனின் வயதுடையவர் எனலாம். சுந்தரச் சோழனின் ஆட்சிக்காலம் கி.பி. 957 முதல் கி.பி. 970 வரை ஆகும். கி.பி.பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நமக்குப் பகடை என்ற பெயர் குறித்துச் சான்று கிடைக்கிறது. அது பிற்சோழர் ஆட்சியின் தொடக்ககாலம். பல்லவ அரசனுக்குக் கீழ் சிற்றரசனாகப் பகடை என்போர் இருப்பார்கள் என்றால், அவர்கள் அதற்கு முந்தைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில்தான் வெல்லப்பட்டுச் சிற்றரசர்களாக ஆகியிருக்க வேண்டும். பகடை என்ற பெயர் பல்லவர் காலத்திலேயே இருந்திருக்கிறது. சக்திவிடங்கன் எனப்பட்ட பல்லவ அரசனின் மாமன் பெயர் பல்லவப் பகடை என்பதாகும். சுந்தரச் சோழன் காலத்தைச் சேர்ந்த பார்த்திபேந்திர வர்மனின் ஆட்சிக் காலத்தில் செய்யாறு அருகில் பிரமதேசம் என்ற ஊரில் சின்னமய்யப்பகடை என்பவன் செல்வாக்குடன் விளங்கியுள்ளான். (ம. மதிவண்ணன், 2023 : 115 - 116)

அரசு ஆவணங்களில் பகடையர்கள்

ஏறத்தாள நூறு வருடங்களுக்கு முன்பு, 1920-களில் ‘சக்கிலியர்’ என்ற பெயர் சமுதாயத்தில் இழிவாகக் கருதப்பட்டு வந்தது. அந்த இழிவை மாற்ற சக்கிலியர் சமுதாய முன்னோடி ராவ் சாகிப் எல். சி. குருசாமி அவர்கள் அப்போதைய அரசாங்கத்திடம் முன்மொழிந்தார். 1922 - ஆம் ஆண்டு தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போது ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் சில சாதிகளின் பெயர்களை மாற்றி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்போது தோல் தொழிலில் ஈடுபட்டுவந்த செம்மான், சக்கிலி, பகடை, மாதாரி, மாதிகா என்று அழைக்கப்பட்டு வந்தவர்களை ஒரே பெயராக ‘அருந்ததியர்’ என்று பெயர் மாற்றம் செய்து அரசு அறிவித்தது. (Law (General), Department G.O. Ms.No.817, Dated : 25.03.1922). இப்பெயர் அரசு ஆவணத்திலும் (Gezettee) பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, மாதிகா, பகடை, தோட்டி, ஆதி ஆந்திரா ஆகிய சாதிகளை ஒருங்கிணைத்து ‘அருந்ததியர்’ என்று மாற்றியமைத்துத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. (G.O.Ms.No.55. Personal and Administrative Reforms (S), 8th April, 2010). இருப்பினும், பழைய சாதிப் பெயர்கள் வழக்கிலிருந்து மறையாமலேயே அரசு ஆவணங்களிலும் நடைமுறையிலும் இன்றும் இருந்து வருகின்றன.

தமிழ் நாட்டில் வாழும் மேற்குறித்த ஏழு சாதிப் பிரிவுகளை உள்ளடக்கிய அருந்ததியர்களை அவர்கள் வாழும் இடம், பேசும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் தெலுங்கு பேசும் அருந்ததியர், கன்னடம் பேசும் அருந்ததியர், தமிழ் பேசும் அருந்ததியர் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவர்கள் தெலுங்கு , கன்னட மொழிகளை எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அல்லர். மாறாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

வாய்மொழி வரலாற்றில் பகடைகள்

எழுதப்பட்ட வரலாறுதான் சரியானது, நம்பகமானது என்ற மதிப்பீட்டை வாய்மொழி வரலாறு மறுதலிக்கிறது. அடித்தள மக்கள் நம்பும் வாய்மொழி வரலாறு எழுதப்பட்ட வரலாற்றைவிட நம்பகமானது (2001:33) என்கிறார் மாற்கு. வரலாறு எழுதுவதற்குக் கல்வெட்டு, தொல்லியல் ஆதாரங்கள், அயலார் பயணக் குறிப்பு மற்றும் ஆவணங்கள் ஆடிப்படை ஆதாரங்களாக அமைகின்றன. வாய்மொழி வழக்காறு என்னும் நாட்டார் வழக்காற்றியல் செய்திகள் மூலம் அவை வழங்கும் சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்ற மானிடவியல் கோட்பாட்டை முன்வைத்தவர் நா. வானமாமலை. வாய்மொழி வழக்காறுகள் அந்தந்த காலத்துச் சமுதாய மக்களை, அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கக்கூடிய சமூகத்தின் கண்ணாடிகளாக விளங்குகின்றன. பகடைகள் குறித்த சில வாய்மொழி வரலாற்றுச் செய்திகளும் காணக்கிடைக்கின்றன.

  • ‘வாழ்க்கை என்ற சூதாட்டத்தில் ஆதிக்கச் சாதியினர் ஆட்டுவிக்கும் ஆட்டத்திற்கு ஏற்றபடி ஆடுவதுதான் பகடைகளின் வேலை. சுயமாக இவர்கள் செயல்பட முடியாது. அதனால்தான் இவர்களுக்கு இப்பெயர் வந்தது’ என்று அருந்ததியர்களின் வாய்மொழி வரலாறு கூறுகிறது.
  • பகடை என்ற சொல்லுக்குப் ‘புத்திக் கூர்மையாக ஏமாற்று’ என்றும் பொருள் கொள்ளலாம். பகடைக்காயைப் பயன்படுத்தி விளயாடுபவர்கள் புத்திக்கூர்மையாக ஏமாற்றுகிறார்கள் என்று இதற்கு அர்த்தம் கொள்ளலாம். இதற்கு முற்றிலும் மாறாகப் பகடைக்காய்கள் புத்திக் கூர்மையாகச் செயல்பட்டு ஏமாற்றுகின்றன என்றும் பொருள் கொள்ளலாம்.
  • அருந்ததியர்களான பகடைகள், புத்திக்கூர்மையுடன் செயல்பட்டார்கள் என்பதற்கு ஒண்டிவீரன், முத்தான் பகடை, போட்டிப் பகடை, கந்தன் பகடை போன்றவர்களின் வரலாறு ஒரு எடுத்துக்காட்டு. அதனால்தான் இவர்களுக்குப் பகடைகள் என்ற பெயர் வந்தது' (2001 : 14) என்று அருந்ததியர்களின் வாய்மொழி வரலாறு வழி அறியமுடிக்கிறது.
  • ‘பகடை என்னும் பெயர் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவுக்கு வெளியே பங்களாதேஷ், பாகிஸ்தான் பிரதேசங்களிலும் பயன்பாட்டில் உள்ள ஒரு பெயராகும். ‘பகடை’ அல்லது ‘பகரி’ என்பது விஷேச நாட்களில் ஆண்கள் தலையில் அணியும் தலைப்பாகையைக் குறிப்பதாகும். அது அவர்களின் சமூகத்தில் பெரும் மதிப்பிற்குரியதாகக் கருதப்படுகிறது.

நாயக்கர் கால நரபலியில் பகடையர்கள்

நரபலி குறித்துத் தமிழக வரலாறு, இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியவற்றில் ஏராளமான தகவல்கள் காணக்கிடைக்கின்றன. நாட்டுப்புறக் கதைகளிலும் நரபலி குறித்த கதைகள் நிறையவே உள்ளன. கோவில்களில் உள்ள ஏழு ஆண்டாக்களில் இருக்கும் பணத்தை எடுக்க, புதையலைத் தொண்டி எடுக்க, குளங்கள் வெட்ட, அணைகள் கட்ட, கோட்டை-கொத்தளங்கள் அமைக்க, கோபுரங்கள் எழுப்ப, அரண்மனைகள் உருவாக்க , கட்டுமானங்கள் கட்ட இப்படிப் பல காரியங்களுக்கு பலியிடும் நடைமுறை தமிழ் மண்ணில் நடந்தேறியிருக்ருக்கிறது. இப்போதும் இருக்கிறது. அதுவும் தாய்க்குத் தலைமகன், நிறைமாதக் கர்ப்பிணி, தாழ்ந்த சாதியினர் இவர்களே பலிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பின்னணியில் சோதிடர்களின் வாக்கு வலுவாக இருக்கிறது. மூடநம்பிக்கையின் மீதுள்ள மோகமும் முக்கியக் காரணமாகும். ஆயின் இதிலுள்ள கருத்தியல் மற்றும் அறிவியல் உண்மையும் ஆராயப்பட வேண்டும்..

தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் ‘நரபலி’ என்னும் கொடுமை மிகச்சாதாரணமாக நடந்தேறியிருக்கிறது. ‘நடக்காத கொடுமைகளே இல்லை ’ என்ற நிலை கூட நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நடந்திருக்கிறது. நாயக்க மன்னர்களின் மூட நம்பிக்கையே இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. தெருவில் ஓடிய ஒருவரால் நாயக்க மன்னர் ஒருவர் மீது தூசி பட்டிருக்கிறது. இதைக் குற்றமெனக் கருதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. நாயக்கர் கால மூடநம்பிக்கையின் உச்சச் செயலாக இது கருதப்படுகிறது. விஜயநகரப் பேரரசர் காலத்தில் எகிலியா ராமசாமி நாயக்கர் என்னும் அமைச்சர் காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர் ஆகிய மூன்று கடவுள்களின் நகராத வெண்கலத் தேரை நகர்த்துவதற்காகத் தன் மனைவி ஆவல்சீத்தம்மாள், அவரது தங்கை மற்றும் மகன் ஆகிய மூவரின் தலையை வெட்டி மூன்று தேர்களுக்கு அடியில் வைத்து உடல்களைப் பூதங்களுக்கு எறிந்துவிட்டுத் தேர்களை நான்கு விதிகளிலும் இழுத்துவந்து நிலைநிறுத்தியிருக்கிறார். விஜயநகரப் பேரரசு காலத்தியச் செப்பேடுகள் இதை நிரூபிக்கின்றன. மதுரை நாயக்கர் வரலாறும் இதற்குச் சான்றாகும்.

தமிழ் நாட்டின் ஆதி குடிகளான பகடையர்கள் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென்மாவட்டங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டங்களில் உள்ள எல்லாக் கிராமங்களிலும் பகடை இன மக்கள் இருக்கின்றனர் என்று கூடச் சொல்லலாம். அதுவரை சமூக அந்தஸ்தில் மேல்நிலையில் இருந்த பகடையர்கள் ஆரியரின் இந்தியப் பிரவேசத்திற்குப் பின் இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த தமிழக நாயக்க மன்னர்கள் பகடையர்களை இழிந்த இனத்தினராகக் கருதினார். ‘மூடநம்பிக்கை கொண்ட நாயக்க மன்னர்கள் கோயில்கள் கட்டும்பொழுதும், அணைக்கட்டுக்கள், பாலங்கள் கட்டும்பொழுதும் நரபலி கொடுப்பதுண்டு. அதற்காக இழிந்தவர்களெனக் கருதப்பட்ட பகடைகளைப் பிடித்துச் சிறையிலடைத்துப் பலமுறை பலிகொடுத்தார்கள்' என்று நா. வானமாமலை பதிவு செய்கிறார். ( 2006 : 9-10 ) நாயக்க மன்னர்களால் நரபலிக்காகச் சிறைப்படுத்தப்பட்ட பகடையர்களை மீட்க வலியுறுத்தி ‘நரபலி கொடுப்பதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பகடையின மக்களை உடனே விடுவிக்க வேண்டும்’ என்று கட்டபொம்மனின் முன்னோர்கள் திருமலை நாயக்கரிடம் வாதாடியிருக்கிறார்கள். திருமலை நாயக்கரும் அதற்கு இணங்கித் தான் சிறைவைத்திருந்த பகடை இன மக்களை விடுவித்திருக்கிறார்.

 திருமலை நாயக்கருக்குப்பின் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களும் பகடை இன மக்களை நரபலியிடும் மாபாதகச் செயல்களைச் செய்து வந்தனர். கட்டபொம்மனின் சமகாலத்தில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் மதுரையில் கட்டிவந்த கோபுரத்தில் மோசமான முனி ஒன்று குடியிருப்பதாகவும் அதை விரட்ட நரபலியிட வேண்டும் என்ற சோதிடனின் உத்தரவுப்படி கோபுரத்திற்குப் பலியிடப் பகடையின மக்களைப் பிடித்துச் சிறையிலடைத்திருந்தான். மதுரை நாயக்க மன்னனின் இக்கொடிய செயலை அறிந்த கட்டமொம்மனின் படைத் தளபதிகளான பொட்டிப் பகடையும், முத்தன் பகடையும் அடைபட்டிருந்த பகடைகளை மீட்டெடுக்கக் கட்டபொம்மனிடம் அனுமதி வேண்டினர். கட்டபொம்மன் மன்னனுக்கே உரிய சாணக்யத் தந்திரமாகத் தன் தளபதிகளை நேரடியாக மதுரைக்கு அனுப்பாமல், ‘நரபலியிலிருந்து பகடையின மக்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் மறுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்' (2021 : 1-3) என்றும் மதுரை நாயக்க மன்னருக்குக் கடிதம் எழுதினான். கட்டபொம்மனின் படை பலத்திற்குப் பயந்து தான் சிறை வைத்திருந்த பகடையின மக்கள் விடுவித்தார். சிறை மீட்புச் சம்பவத்திற்கு நன்றிக் கடனாகப் பாஞ்சாலங்குறிச்சிப் பகடையின மக்கள் கட்டபொம்மனுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர்.

பகடைப் பாளையங்கள்

கி.பி.பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டு கால கட்டங்களில் தென்தமிழகத்தில் அருந்ததிய இன மக்களில் ஒரு பிரிவினராகிய பகடை இனத்தவர் சிலர் பெரும் செல்வந்தர்களாவும், நிலவுடைமையாளர்களாகவும், பாளையத் தலைவர்களாகவும், படைத் தலைவர்களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழர் பாளையங்கள் என்று அறியப்பட்டவற்றுள் நெற்கட்டும் செவ்வயலும் பொதிகை மலையும் அருந்ததியர் பாளையங்களாக இருந்து பின்னர் ஜமீன்களாக மாறியிருக்கின்றன. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் நெற்கட்டும் செவ்வயல், பொதிகைமலை என்னும் பகுதிகளுக்கு முறையே ஒன்டிவீரன் பகடை, நீலகண்டப் பகடை ஆகிய அருந்ததியர்கள் தலைவர்களாக இருந்துள்ளனர். பகடைகளின் மறைக்கப்பட்ட வரலாற்றை எழில் இளங்கோவன் ‘ மாவீரர் ஒண்டிவீரன் பகடை ‘ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புக் கொண்டு விளங்கிய ஆவுடையார்புரம் பாளையம். மதுரை நாயக்கருக்குக் கப்பம் கட்டும் பாளையமாகவும் விளங்கியது. இந்த ‘ஆவுடையார்புரம் விசுவநாத நாயக்கரால் ஏற்படுத்தப்பட்ட எழுபத்தியிரண்டு பாளையப்பட்டுக்களில் ஒன்றாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாளையமாகவும் திகழ்ந்திருக்கிறது’. (இராசையா. ந, 2005 : 59 - 60). திருநெல்வேலிச் சீமையிலிருந்த ஆவுடையார்புரம் ஜமீன், ஒரு காலத்தில் சக்கிலிய அரசர் கட்டுப்பாட்டில் இருந்த செய்தியை T. B. பாண்டியன் தமது ‘The slaves of the soil in southern India’ என்ற நூலில் இவ்வாறு எழுதுகிறார். ‘The writer was once informed by the present Zamindar of Avidayapuram in the district Tinnevelly that his Zamindari was once under a chuckala king’. (1893: 3). பாளையங்கள் ஒழிக்கப்பட்டு ஜமீன்களாக மாறிய போதிருந்த ஆவுடையார்புரம் ஜாமீனை நெற்கட்டும் செவல் ஜமீன் என்றும் கூறுவார்கள். திருநெல்வேலிச் சீமையின் மேற்குப் பகுதிப் பாளையங்கள் அனைத்தையும் கட்டி ஆண்ட ஒண்டிவீரனின் முன்னோர் வரலாறும், புகழ் மிக்க பொதிகை மலைப் பகுதியின் ராஜாவாக இருந்த நீலகண்டப் பகடையின் வரலாறும், சக்கிலியர்கள் அரசர்களாகத் திகழ்ந்த வரலாறும் வரலாற்றுப் பதிவாளர்கள் மற்றும் ஆதிக்க சாதியினரால் திட்டமிட்டே திரித்தும் மறைத்தும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் அருந்ததியர்கள் வசித்த பகுதிகள் பெரும்பாலும் ‘அருந்ததியர் பாளையம்’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. காலப்போக்கில் இந்த நிலை மாறி அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அவர்களுக்கான காலனி வீடுகள் என்று சொல்லப்படுகின்ற தொகுப்பு வீடுகள் அரசு சார்பில் கட்டித் தரப்பட்டன. ஏற்கனவே இருந்த பூர்வீக அருந்ததியர் பகுதிகளும் தொகுப்பு வீடுகளும் கலந்து இந்திரா காலனி , எம்‌. ஜி. ‌ஆர் காலனி, காமராஜ் காலனி, முல்லை நகர் , குறிஞ்சி நகர் என நவீனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளன. சென்னை பூந்தமல்லி, காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலுள்ள படுநெல்லி மற்றும் கோமங்கலம் ஊராட்சி, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கல்யாணக் குப்பம் ஊராட்சி, திருவண்ணாமலை மாவட்டம் அய்யாபட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் இன்னும் அருந்ததியர் பாளையங்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பகடையர்களின் வீர மரபு

          வீரம், புகழ், கல்வி, செல்வம் ஆகிய நான்கும் பண்டைத் தமிழகத்தின் மரபு வளங்களாகும். இந்த நான்கு கூறுகளில் வீரத்தை நிலைநாட்டும் வகையில் தமிழ் நாட்டில் வசிக்கும் பகடை இனத்தினர், தங்கள் ஆண் மக்களுக்கு ‘வீரன்' என்று பெயர் சூட்டுவது நீண்டகால மரபாக உள்ளது. ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் வீரமங்கைகளாகத் திகழ்ந்துள்ளனர். அதற்கு அடிப்படையாக ‘அருந்ததியர்கள் வசிஷ்டரின் வம்சத்தில் வந்த அக்னி புத்திரர்கள்' என்று கருதப்படுகிறது (2019 : 132).

வேலுநாச்சியாரின் வெற்றிக்காகத் தற்கொடைப் போராளியாக மாறிய தலித் பெண் குயிலி சிவகங்கைச் சீமையின் வீரமங்கையாகப் போற்றப்படுகிறாள். மதுரை மக்களைக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாத்த ஒப்பற்ற வீரன் மதுரை வீரன். மதுரையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மதுரை வீரன் குலதெய்வமாக வணங்கப்படுவது தமிழரின் வீர மரபை வெளிப்படுத்துகிறது. அருந்ததிய மக்களின் மரியாதைக்குரிய தலைவராகவும், மதுரைப் பேரரசின் படைத்தளபதியாகவும் மாவீரன் மதுரை வீரன் திகழ்ந்துள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்திலேயே ஆங்கிலேயர், கான்சாகிப் யூசுஃப்கான், தளபதி ஹெரான் ஆகியோரை வாள்முனையில் போர்க்களத்தில் வென்று வீர வாகை சூடிய ஒண்டிவீரன், ஒரு வீரனாக மட்டுமின்றி நெற்கட்டான் செவ்வாயல் பாளையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

 சேர்வாரன் தாழ்ந்த சாதியான சக்கிலியர் இனத்தில் பிறந்தவன். அவனுக்கு வாய்த்த காதலியோ நடுத்தர இனமான வேளாளர் இனத்தைச் சார்ந்தவள். இவர்களுக்குள் ஏற்பட்ட காதல், குறிப்பிட்ட ஒரு காலத்தில் அவர்களை ஊரை விட்டுப் போகத் தூண்டுகிறது. அதன் விளைவாக அவர்கள் யாருமறியாமல் ஊரை விட்டுப் போய்த் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனை அறிந்த வேளாளர் சாதியைச் சார்ந்த அப்பெண்ணின் உடன்பிறந்த ஆண்ணன்மார்கள் அவர்களை விரட்டிப் பிடித்துக் கொன்று விடுகின்றனர். இந்தச் சண்டையில் சேர்வாரன் தன்னைத் தாக்கியவர்கள் அனைவரையும் கொன்று வீர மரணம் அடைகிறார்.

அருந்ததிய இனத்தின் ஒரு பிரிவினராகிய பகடை இனத்தைச் சேர்ந்த பலர் இந்திய விடுதலைப் போரில் போர் மறவர்களாகவும், வீரத் திலகங்களாகவும் திகழ்ந்துள்ளனர். வீரமங்கை குயிலி, மதுரைவீரன், ஒண்டிவீரன், சேர்வாரன், சின்னத்தம்பி, முத்துவீரன் ஆகிய அருந்ததிய வீரத் திலகங்களின் வரலாற்றின் வழி அருந்ததியர்களின் வீர மரபை விளங்கிக்கொள்ள முடியும்.

தென்னகப் பாளையப்பட்டுக்கள் வரலாற்றில் பகடைகள்

இந்திய விடுதலைப்போரில் அருந்ததியப் பகடை இன வீரத் தளபதிகள் பங்காற்றியிருக்கின்றனர். பூலித்தேவன், கட்டபொம்மன், தீரன் சின்னமலை, கோபால் நாயக்கர், திருமலை நாயக்கர், வேலு நாச்சியார், ஊமைத்துரை முதலான தென்தமிழகப் பாளையக்காரர்களின் படைகளில் பல்லாயிரக்கணக்கான பகடையின வீரர்கள் பங்கு பெற்றிருந்ததை வாய்மொழி வரலாறு வழி அறியமுடிக்கிறது. ஓடிக்குத்துவான் பகடை, சின்னான் பகடை, பெரியான் பகடை, சங்கரன் பகடை, கட்டையன் பகடை, வாக்கையன் பகடை, மொட்டையன் பகடை, பெரிய முத்தன் பகடை, ஒண்டிவீரன் பகடை, பொல்லான் பகடை, பொம்மையாப் பகடை, காணப்பன் பகடை, கதிர்ப் பகடை, தொர்ரிப் பகடை, குவ்வதாதா பகடை, கோசங்கிப் பகடை, தம்மப் பகடை, நல்லையான் பகடை, மாடசாமிப் பகடை, கொழந்தப் பகடை, மாறன் பகடை, இருளப்பன் பகடை, சித்தன் பகடை, சின்னக்கன்னுப் பகடை, பெந்தன் பகடை, வாள்ப் பகடை, சின்னத்தம்பிப் பகடை, கொண்டிதாதன் பகடை, ஓலன் பகடை, வீரையன் பகடை, பகடை ராஜா, நீலகண்டப் பகடை, சின்னக்குருவன் பகடை, பெரிய குருவன் பகடை முதலான எண்ணிலடங்காப் பகடையினப் போராளிகள் மற்றும் வீரர்கள் இந்திய விடுதலைக்காக உயிர் நீத்துள்ளனர். வீரர்கள் மட்டுமின்றி வீரமுத்தம்மாள் பகடைச்சி, வீராயி, கந்தாயி, மாராயி, குயிலி, பொம்மக்கா, திம்மக்கா, ராக்கு, நாகாயி, ஊர்க்கொளுத்தி பெந்தம்மாள் முதலான பகடையின வீராங்கனைகளும் இந்திய விடுதலை வேள்வியில் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களைக் கொன்று குவித்ததோடு அவர்களின் சொத்துக்கள் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தது பிரிட்டிஷ் அரசு. அடுத்த கட்டமாக அவர்களைப் பழிவாங்கவும் திட்டமிட்டது. தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான விடுதலைப் போராளிகளைக் கைது செய்தது ஆங்கில அரசு. அவர்களை, ‘Banishment Beyond the Seas’ என்ற தண்டனையின் கீழ் விலங்கிட்டு வேல்ஸ் தீவிற்குக் கப்பலில் நாடுகடத்தியது. நாடுகடத்தப்பட்ட விடுதலைப்போர் வீரர்களில் பகடைகளும் இருந்தனர் தமிழக மக்கள் வரலாறு கூறுகிறது. .

 பாஞ்சாலங்குறிச்சிப் பகடைகள்

18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒருங்கிணைந்த திருநெல்வேலியில் இருந்த பாஞ்சாலங்குறிச்சிச் சீமைப் பகடை இன மக்களின் வீர வரலாறு மகத்தான வரலாறாக இருந்துள்ளது. தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களைத் தன் வீரம் மற்றும் விவேகத்தால் எதிர்த்துப் போராடிய கட்டபொம்மனின் படையில் தளபதி, தலைமைத் தளபதி, மெய்க்காப்பாளர், ஒற்றர் எனப் பல மதிப்புமிக்க பதவிகளில் பணியாற்றியவர்கள் பகடைகள். தமிழக வரலாற்றின் விடுதலைப் போரை வீரமுடன் எதிர்கொண்டவர்கள் இந்தப் பாஞ்சாலங்குறிச்சிப் பகடைகள். கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த காலத்தில் (1792-1799) இவரது படையில் பிள்ளைமார், தேவர், தேவேந்திரகுல வெள்ளாளர் முதலான பல இனத்தவர்கள் படை வீரர்களாகவும், படைத்தளபதிகளாகவும் பணியாற்றினார். அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த பகடையர்களும் பணியாற்றியிருக்கிறார்கள்.

 கந்தன் பகடை, பொட்டிப்பகடை, முத்தன் பகடை, தாமன் பகடை, மாடன் பகடை, சின்னவீரன் பகடை, சட்டிப் பகடை, கைக்கார ராமன் பகடை, மாதிச்சித்தன் பகடை, வெள்ளையன் பகடை, பெத்தையன் பகடை, முத்துப் பகடை, சின்னவாகையன் பகடை, கட்டையன் பகடை, மொட்டையன் பகடை, முல்லுப்பட்டி முத்துவீரன் பகடை, மாப்பிள்ளை மாடன் பகடை. வளரி வீரசங்குப் பகடை முதலான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பகடை இன வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தில் இருந்ததாகக் கதைப்பாடல்களும், வரலாற்றுக் குறிப்புகளும் கூறுகின்றன. இவர்களில் கந்தன் பகடை, பொட்டிப்பகடை, முத்தன் பகடை, தாமன் பகடை ஆகிய நால்வரும் கட்டபொம்மனின் வலது கையாகத் திகழ்ந்துள்ளனர். கட்டபொம்மனுடன் நெருக்கமாகவும், அவர் செல்லும் இடமெல்லாம் அவருடன் பயணிக்கும் தகுதியும் பெற்றிருந்தனர். ‘பகடையின வேங்கைகள்' என்ற சிறப்பு அந்தஸ்தும் இவர்களுக்கு உண்டு. தனது ஆளுகைக்கீழ் இருந்த நான்கு முக்கியப் பாளையங்களுக்கு இந்நால்வரையும் தலைவர்களாக நியமித்து அழகு பார்த்தார் கட்டபொம்மன்.

கந்தன் பகடை

வீரபாண்டியக் கட்டபொம்மனின் மெய்க்காப்பாளர்கள் இருவர். ஒருவர் கந்தன் பகடை, மற்றொருவர் பொட்டிப் பகடை. இவர்கள் இருவரும் மைத்துனர்கள். கந்தன் பகடை உருவத்தில் ஒல்லியான தோற்றம் உடையவன். எதற்கும் அஞ்சாத இயல்புடையவர். முறுக்கேறிய வாட்டசாட்டமான உடலும், திரண்ட தோள்களும், நீண்ட வலுவான கரங்களும், கனல் பறக்கும் கண்களும் உடையவர். கத்தி மற்றும் கம்புச் சண்டை, வாள் வீச்சு ஆகியவற்றில் நல்ல பயிற்சி பெற்றவர். கொரில்லாப் போர்த் தந்திரம் தெரிந்தவர். வெள்ளையர்களுக்கு எதிரான செப்டம்பர், 6- 1799 போரில் கட்டபொம்மன் படைக்குத் தலைமை ஏற்று சண்டையிட்டவர். ‘தன் தாய் நாட்டிற்கு ஏதாவது என்றால் கந்தன் பகடை முதல் ஆளாக வந்து நிற்பான். அதனால்தான் கட்டபொம்மன் கந்தன் பகடையைத் தன் மகனைப்போல நினைத்து வந்தான். சொன்னதைச் செய்து முடிக்கக் கூடிய வீரன் கந்தன் பகடை என்று கட்டபொம்மன் பலமுறை அவனைப் பாராட்டியிருக்கிறான். வாள் ஏந்திவிட்டால் எதிரிகளின் தலைகளை உருட்டாமல் விடமாட்டான் கந்தன் பகடை எனக் கந்தன் பகடையின் வீரத்தைச் சொல்லிச் சொல்லியே தன் படை வீரர்களுக்குத் தைரியம் ஊட்டுவாராம் கட்டமொம்மன். (2021: 12-13). பாஞ்சாலங்குறிச்சிப் போரில் எதிரிகளைக் கொன்று குவித்த மாவீரன். இந்திய விடுதலைப் போரில் வெள்ளையர்களுக்கு எதிராகச் சண்டையிட்டதில் ஆங்கில ராணுவத் தளபதி மாக்காளித்துரையால் சுட்டுக்கொல்லப்பட்டு வீர மரணம் அடைந்தார். தளபதி கந்தன் பகடையின் மரணச் செய்தி அறிந்த மற்ற பகடையின வீரர்கள் கடுங்கோபம் கொண்டு கொதித்தெழுந்து எதிரிகளின் கூடாரங்களுக்குள் நுழைந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தினர். கந்தன் பகடையை இழந்த பாஞ்சாலங்குறிச்சிப் படை போர்க்களத்தில் தனது பகடையின வீரர்கள் பலரையும் இழந்தது.

பொட்டிப் பகடை

பொட்டிப்பகடை (பொட்டி=குள்ளம்) சற்று உயரம் குறைந்து குள்ளமாகக் காணப்படுவான். கட்டபொம்மனின் முக்கிய மெய்க்காவலர்களில் ஒருவரான பொட்டிப்பகடை வெள்ளையர்களுக்கெதிரான கிளர்ச்சிக்காரர்களான ஊமைத்துரை மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகிய இருவருக்கும் பக்கபலமாக இருந்து பணியாற்றியவர். கும்பினிப் படைகளால் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையிலடைக்கப்பட்ட ஊமைத்துரையைச் சிறையிலிருந்து தப்பிக்க உதவி செய்தவர். சிறையில் ஊமைத்துரைக்கும், சிறைக்கு வெளியில் புலிக்குத்தி நாயக்கருக்கும் பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிச் சிறைத் தகர்ப்புக்குத் திட்டம் தீட்டிச் செயல்படுத்தியவர். போர்க்களத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆங்கில ராணுவத் தளபதி அக்கிநெவ் (Agnew- 1765- 1813) என்பவரது குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டு வீர வெற்றி கொண்டாடியவன் பொட்டிப்பகடை. மாறு வேடத்தில் கொரில்லாத் தாக்குதல் நடத்தி ஆங்கிலேயப் படைக்குப் பெருத்த சேதத்தை உண்டாக்கினார். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்க்க முயன்ற கும்பினிப் படைகளுடன் எதிர்த்துப் போரிட்டதில் வீர மரணத்தைத் தழுவினார் பொட்டிப் பகடை. அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி செல்லும் வழியில் உள்ள கல்லுரணி என்ற ஊரில் பொட்டிப்பகடைக்குச் சிலை உள்ளது. தாய் நாட்டைக் காக்க வீரமரணமடைந்த பொட்டிப் பகடையை அப்பகுதியிலுள்ள பகடை இன மக்கள் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

முத்தன் பகடை

முத்தன் பகடை ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி பகுதியிலுள்ள சிங்கிலிபட்டி என்ற ஊரில் பிறந்தவன். வாட்டசாட்டமான உடல்வாகும், சண்டைப் பயிற்சியில் தேர்ச்சியும் பெற்றவன். வீரம், பலகுரல்ப் பயிற்சி, போர்த் தந்திரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினான். வெள்ளையருடன் நிகழ்ந்த போரில் மேஜர் அக்கிநெவ் துரையை போர்க்களத்திலேயே துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியவன். பொட்டிப் பகடையோடு இணைந்து நரபலிக்கு நாள்க் குறிக்கப்பட்டிருந்த பகடை இன மக்களை மீட்டெடுத்த மாமனிதன் முத்தன் பகடை. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் போரில் பொட்டிப் பகடையுடன் சேர்ந்து வீர மரணம் அடைந்தவன்.

மாடன் பகடை

கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தில் போருக்குத் தேவையான பல படைகளில் ‘ஒற்றர் படை' யும் ஒன்று. இப்படைக்குத் தளபதியாக ‘முத்துப் பகடை' என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். முத்துப் பகடைக்கு உதவியாகத் தலைமை ஒற்றனாக கீழமங்கலம் மாடன் பகடை என்பவர் இருந்து வந்தார். இவர் மரங்களின் உச்சியில் இருந்துகொண்டு எதிரிகளை வேவு பார்க்கும் போர்த் தந்திரம் தெரிந்தவர். மங்கலம் பகுதியிலுள்ள உயரமான புன்னை மரங்களின் மேலிருந்து வேவு பார்த்த போது ‘ஆங்கிலேயப் பெரும் படையொன்று காயத்தாரிலிருந்து புறப்பட்டுப் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்திற்கு வருவதையும் அப்படை ஒட்டப்பிடாரத்தில் முகாமிட்டிருப்பதையும்' அறிகிறார் மாடன் பகடை . இந்தத் தகவலைக் கட்டபொம்மனுக்குத் தெரிவிக்க விரைந்த மாடன் பகடையை ஆங்கிலேயப் படை வீரர்கள் ஈட்டியால் குத்தக் குடல் சரிந்து கீழே விழுகிறார். சரிந்த குடலை மீண்டும் வயிற்றுக்குள்ளே தள்ளி அதைத் தனது தலைப்பாகையால் இருக்கக் கட்டிக்கொண்டு பாஞ்சாலங்குறிச்சி நோக்கி ஓடிய மாடன் பகடை பாதி வழியில் மயங்கிக் கால் தடுமாறி தலைகுப்புறக் கீழே விழுந்தார். இதைக் கண்டு ஓடிவந்த அவரது மைத்துனரான குலையநல்லூர் சின்னவீரன் பகடையிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு மாண்டுபோகிறார். மாடன் பகடை மாண்ட செய்தியும், ஆங்கிலேயப் பெரும்படை வருகைச் செய்தியும் சின்னவீரன் பகடை மூலமாகக் கட்டபொம்மனுக்கு எட்டுகிறது. கட்டபொம்மனும் தனது படையைத் திரட்டிப் போருக்குத் தயாராகிறார். மாண்ட மாடன் பகடையின் சிதையில் அவருக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் உடன்கட்டை ஏறி உயிர் துறக்கிறார். இறந்த இருவருக்கும் அவ்விடத்தில் நடுகல் நாட்டப்பட்டது. மாவீரன் மாடன் பகடையை அப்பகுதிச் சுற்று வட்டார மக்கள் ‘மாப்பிள்ளை மாடன்' எனப் பெயரிட்டுத் தங்கள் காவல் தெய்வமாக வணங்கி வழிபடுகின்றனர். (2021 : 8-9)

நீலகண்டப் பகடை

பொதிகை மலைப் பகுதியின் ராஜாவாகவும், மாவீரனாகவும் வாழ்ந்தவன் நீலகண்டப் பகடை. பொதிகைமலைப் பகுதியில் வாழ்ந்த அருந்ததிய இன மக்கள் மத்தியில் புகழ்மிக்க தலைவனாகவும், வீரனாகவும் விளங்கினான். ‘பொதிகைமலை நீலகண்டப் பகடை’ என்ற பெயரால் அழைக்கப்பட்டான். நீலகண்டப் பகடையின் வீரம் மற்றும் புகழ் மீது பொறாமை கொண்ட சிங்கம்பட்டி ஜமீன் நல்லதம்பி சூழ்ச்சி செய்து அவனது தலையை வெட்டிக் கொன்றுவிட்டார், நீலகண்டப் பகடையைக் கொன்றுவிட்டு சிங்கம்பட்டி ஜமீனை உருவாக்கியதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளதை மதிவண்ணன் தமது பேட்டியில் சுட்டிக்காட்டியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். (உழைப்பவர் ஆயுதம், ஜனவரி - 2010:19). நீலகண்டனைக் கொன்றுதான் நல்லக்குட்டி என்பவர் சிங்கம்பட்டி ஜமீனை நிறுவினார் என்றும் பொதிகை மாலையில் ‘நீலகண்டன் தலைவெட்டிப் பாறை’, ‘நீலகண்டன் கசம்’ என்னும் இடங்கள் இப்போதும் அங்குள்ளதாகவும் சிங்கம்பட்டியைச் சார்ந்த சுப்பிரமணியக் கவிராயர், நா.வானமாமலையிடம் கூறியுள்ள செய்தியும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. (அருணன், 2006:181-182) மேலும், பாபநாச மலைப் பகுதியை நீலகண்டப் பகடை ஆண்டதாகத் தினகரன் நாளிதழ் வெள்ளிமலர் ‘வட்டாரச் செய்திகள்’ குறிப்பிட்டிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

வாலப்பகடை

முத்துப்பட்டன் கதையில் வரும் வாலப்பகடையும் ஒரு சிறந்த வீரனாகத் திகழ்ந்துள்ளான். தென்காசியிலிருந்து கேரளா செல்லும் வழியில் உள்ள ஒரு சிற்றூரில் ஊர்க்காவல்ப் பணி செய்து வந்த வாலப்பகடை, அப்பகுதி வழிபோக்கர்களை விலங்குகள் மற்றும் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றும் வீரம்மிக்க வேலையையும் செய்து வந்தான். பகடைகள் வீரம் செறிந்தவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்தக்காட்டாகும்.

பகடை ராஜா

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சிறப்பு வாய்ந்த சிற்பங்களையும், சக்தி வாய்ந்த சந்நிதிகளையும் கொண்டதாகும். இக்கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு அடுத்ததாக வீரபத்திரர் சிலை உள்ளது. வீரபத்திரருக்கு வலப்பக்கத்தில் மிடுக்கான தோற்றத்துடன் பகடை ராஜாவின் சிலையும் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. போருக்குப் புறப்படத் துடித்தெழும் தோற்றம், தீயுமிழும் கண்கள், முறுக்கேறிய நரம்புகள், பருத்துத் திரண்ட பெரிய தொழ்கள், இடுப்பில் கட்டாரி, இடக்கையில் ‘வாங்கா' என்னும் போர்க் கருவியுடன் நிற்கும் பகடை ராஜாவின் சிலை காண்பவரைப் பிரமிக்கச் செய்யும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. பகடை ராஜா வீரபத்திரரின் படைத்தளபதியாகத் திகழ்ந்தவர் என்று கருதுவாரும் உளர். வீரம், உண்மை, நாணயம், நம்பிக்கை, மற்றும் நன்றி விசுவாசத்திற்கு இலக்கணமான இவர்களைத் தமிழக மன்னர்கள் பகடைகளைத் தங்கள் படைகளில் சேர்த்து முக்கியப் பொறுப்புக்களைக் கொடுப்பது வழக்கம். வீரம் விளைந்த திருநெல்வேலி மண்ணைக் காத்த வீரபத்திரருக்கும் அவரது தளபதி பகடை ராஜாவுக்கும் நெல்லையப்பர் கோவிலுக்குள் சிலை அமைத்துச் சிறப்பித்திருப்பது வீரத்திற்குக் கிடைத்த ஆகச்சிறந்த அங்கீகாரமாகும். அத்தகு வீரம் செறிந்த பகடை ராஜா மரபில் வந்தவர்கள் ‘பகடைகள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

பகடைகளின் வீர வரலாறு : வரலாற்று மீட்டுருவாக்கம்

 சமூகம் மற்றும் சாதிகள் உருவாக்கத்தில் அவற்றின் வரலாற்று மீட்டுருவாக்கம் முக்கியக் கூறாகத் திகழ்கிறது. திட்டமிட்டு மறைக்கப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட வரலாறுகளை அடையாளம் கண்டு அவற்றின் உண்மைத் தன்மைகளை வெளிக்கொணர்வது மீள் கட்டமைப்பு (Reconstruction) என்பதிற்பாற் படும். வரலாற்றின் வாயை உலைமூடியால் மறைத்துவிட முடியாது என்று கூறுவர். அதனால்தான், ‘வரலாற்றில் மறைக்கப்பட்டவை எவையும் தூக்கி எறியப்பட்ட பழைய செருப்புகளைப் போன்றனவன்று, எறிந்தால் திரும்ப வராமலிருக்க. நிகழுங்காலத்தின் பருண்மைச் சூழல்களின் தேவைக்கும் பண்பிற்குமேற்ப வரலாறுகள் வெளிக்கசிந்து கொண்டே இருக்கும். வெடிப்புற வெளிப்படவும் செய்யும்’ என்று சொன்னார் லூயிஸ் அல்தூசர் (Louis Pierre Althusser) என்னும் பிரெஞ்சு மார்க்சியத் தத்துவவியலாளர். ‘சமூகத்தில் எதெல்லாம் தவறாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதெல்லாம் ஒருபோதும் முற்ற முடிவாக நிர்ணயிக்கப்பட்டதன்று. அதெல்லாம் மீண்டும் மறு நிர்மாணம் செய்யப்பட்டேயாக வேண்டும்’ (Whatever in Society wrongly settled is never settled and it has to be resettled) என்ற அண்ணல் அம்பேத்கரின் நிலைப்பாடும் இங்கே நினைவு கூரத்தக்கது.

முதல் சாதி மறுப்புப் போராளியான மதுரை வீரன், முதல் தற்கொடைதாரியான குயிலி, முதல் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன், முத்துப்பட்டன் என்னும் பிராமணராகத் திரிக்கப்பட்ட முத்துப்பகடை, பாபநாசம் பகுதி பாளையக்காரர் நீலகண்டப் பகடை போன்ற ஆதிதமிழர்களான பகடையயர்களின் வரலாறுகள் நாவல், நாடகம் என்னும் நவீன இலக்கிய வடிவிலும், ஆய்வுக் கட்டுரைகள் வடிவிலும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

நிறைவாக...

இந்திய விடுதலைப் போரில் தங்களை இணைத்துக் கொண்ட ஒண்டிவீரன் குயிலி முதலான பகடை இன வீரர்கள் அனைவரது பெயர்களும் தமிழ் நிலத்தோடு தொடர்புடைய பெயர்களாகவே அமைந்துள்ளன. அருந்ததியர்களில் ஒரு பிரிவினரான பகடையர்கள் தமிழ் மண்ணின் மைந்தர்கள் என்பதை இது காட்டுகிறது. இந்திய விடுதலை வேள்வியில் இன்னுயிர் நீத்த இவர்களின் வீர வரலாறு முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. விடுதலைப்போராட்ட வீரர்களின் வரலாறு மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு விரிவாக விவரிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதன் மூலம் பகடைகளின் வீர வரலாறு வெளிச்சத்திற்கு வரும். அப்போது இந்திய விடுதலைப் போரில் பகடைகளின் பங்களிப்பை இந்த நாடறியும்.

துணைபுரிந்த நூல்கள்

தமிழ்:

  1. அருணன், 2010, கொலைக்களங்களின் வாக்குமூலம், மதுரை, வசந்தம் வெளியீட்டகம்.
  2. இளங்கோவன். எழில். அருந்ததியர் வரலாறு - வினாவும் விடையும், மும்பை : தமிழ்நாடு அருந்ததியர் சங்கம்.
  3. ----------------------------. மதுரைவீரன் கொலையும் திருமலை நாயக்கர் மகாலும், கோயம்புத்தூர் : ஆதித்தமிழர் பேரவை.
  4. -----------------------------. 2004. மாவீரர் ஒண்டிவீரன் பகடை, கோயம்புத்தூர் : ஆதித்தமிழர் பேரவை.
  5. காசிநாதன். நடன. 2011. ‘தென்பகுதிப் பாளையக்காரர்கள் வரலாறு ‘, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
  6. குருஹுதாஸப் பிள்ளை. எஸ். 2012. ‘திருநெல்வேலிச் சீமைச் சரித்திரம்’ சென்னை: காவ்யா.
  7. கோபால செட்டியார். 1920. ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம், திருப்பத்தூர் : தென்னிந்திய சாக்கைய பௌத்த சங்கம்.
  8. சிவசுப்பிரமணியன். ஆ. 1988. பண்பாட்டு வேர்களைத் தேடி, சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்.
  9. --------------------------. 2012. ‘சின்னத்தம்பி’, வெள்ளைக்குதிரை, ஜூலை -ஆகஸ்ட் , பக் : 34-35
  10. சேகர். கா.மு. 2016. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - சுருக்கப் பதிப்பு, சென்னை : செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித்திட்ட இயக்கக வெளியீடு , தமிழ்நாடு அரசு.
  11. நாராயணன். 1962. திருமலை நாயக்கரும் மங்கம்மாளும் , திருநெல்வேலி : எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை பப்ளிஷர்ஸ்.
  12. பரந்தாமனார். அ. கி. மதுரை நாயக்கர் வரலாறு , சென்னை : பாரி நிலையம்.
  13. மாற்கு, 2001, அருந்ததியர்: வாழும் வரலாறு, பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்.
  14. ராசையா; ந. இந்திய விடுதலைப் போரில் தாழ்த்தப்பட்டோரின் பங்கு, அயன் கொல்லங் கொண்டான் : ஞானமுருகன் எழுத்தகம்.
  15. வானமாமலை. நா. (ப. ஆ.) 2006. முத்துப்பட்டன் கதை, மதுரை : பதிப்புத் துறை , மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
  16. வேட்டொலி, நாயக்கர் கால நரபலி, மார்ச், 2016
  17. வைகை அனிஷ். ‘அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுகளும்’, தேவதானப்பட்டி : அகமது நிஸ்மா பப்ளிகேசன்ஸ்.
  18. வையாபுரிப்பிள்ளை. எஸ். தமிழ்ப் பேரகராதி, சென்னை : பதிப்புத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
  19. ஜகந்நாதன்.. கி. வா. 1973. வீரர் உலகம், சிதம்பரம் : மணிவாசகர் நூலகம்.
  20. ஸ்ரீதர். தி. ஸ்ரீ. (ப.ஆர்.). திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள், சென்னை : தமிழ் நாடு தொல்லியல் துறை

English

  1. Basil Xavier. S. 2020. Ethnophilophising in India; A Study on Arunthathiyars, New Delhi: Authors Press.
  2. Census of India. 1971. Scheduled Caste if Tamil Nadu (Vol. I), Series 19-Tamil Nadu, Part V B -Ethnographic Notes, Madras : Office of the Director of Census Operations.
  3. Moffat, Michael, An Untouchable Community in South India: Structure and Consensus, Princeton, New Jersey: Princeton University Press.
  4. NirmalaR. (Edr.).1987.The Wandering Voice : Three Ballads from Palm- leaf Manuscripts, Madras : Institute of Asian Studies.
  5. T.B. 1893. The Slaves of the Soil in South India, Madras : The Cosmopolite Press
  6. --------------. 1893. Ancient Heroes of South Indian Peninsula, Madras : The Cosmopolite Press.
  7. 2008.Encyclopaedia of Untouchables : Ancient, Medieval and Modern, Delhi : Kalpaz Publications.
  8. C.S. 1943. History of Gingee and its Rulers, Chithambaram : Annamalai University.
  9. Edger. 1975. Ethnographic Notes in Southern India, Part-II. Delhi: Cosmo Publications.
  10. Vanamamalai, N. 1969. Studies in Tamil Folk Literature, Madras : NCBH.

--------------------. 1981, Interpretation of Tamil Folk Creations, Trivandrum, Dravidian Linguistics Association.

முனைவர் ச.சீனிவாசன் (தமிழக அரசின் சிறந்த நூல் மற்றும் நூலாசிரியர் விருதாளர்) பேராசிரியர் & தலைவர் தமிழ்த்துறை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி (தில்லிப் பல்கலைக்கழகம்) புது தில்லி - 110 021, இந்தியா