முன்னுரை
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் நாகரீகம், பண்பாடு, அரசியல், பழக்க வழக்கங்களை விளக்கும் வரலாற்றுக் களஞ்சியமாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. இலக்கியங்களும் வாழ்வியல்களும் மனிதனுடைய வாழ்க்கை முறையின் நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. கலித்தொகையின் அகத்துறைப் பாடல்களைப் பாட கலிப்பாவும் பரிப்பாவும் ஏற்ற வடிவங்கள் என்று தொல்காப்பியர் கூற்றுப்படி மொழியப்படுகின்றது. இதன் சிறப்பு கருதியே “கற்றறிந்தார் ஏத்தும் கலி” என்றும் “கல்விவலார் கண்ட கலி” என்றும் புகழப்படுகின்றது. ஆதிகால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். இவ்வுணவின் உற்பத்திக் குறைவைப் போக்க அல்லது அதன் தேவையினை அதிகரிக்க, தானே உற்பத்தி செய்யும் முறைகளையும் மேற்கொண்டான். இதன் தொடக்கமே தொழில்களின் ஆரம்ப நிலைகளாவும் ஆணிவேராகவும் ஊடுருவியது. வாழ்வியல் என்பது வாழ்வை வாழும் முறையறிந்து உரிய வகையில் வாழ்தலைக் குறிக்கும். இதனை ‘வாழும் கலை’ எனச் சுருக்கமாகக் கூறலாம். வகையறிந்து வாழும் வாழ்;க்கைக்கு உதவும் அறம்சார் வாழ்க்கைக் கூறுகளை வாழ்வியல் நெறிகள் எனக்கொள்ளலாம். மனிதர்களின் கடமைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் தொகுப்புகளைத் நாம் வாழ்வியல் நெறிகள் என்று கூறுகிறோம். மனிதனுடைய வாழ்வியல் கூறுகளில் அடங்கியுள்ள சங்ககால மக்களின் தொழில்களைக் கலித்தொiயின் பாக்கள் வாயிலாகப் படம்பிடித்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொழில் வரையறை
உழைப்பு என்பது பெயர்ச் சொல்லாக ஒரு செயல் அல்லது தொழிலைக் குறிக்கும். உழைத்தல் என்பது வினைச் சொல்லாகத் தொழில் செய்தலைக் குறிக்கும். உழைப்பவர் இனம் என்பது பொதுவாகத் தொழிலாளர்களைக் குறிக்கும்.
பொருளியல் பேரறிஞராகிய மார்சல் உழைப்பிற்குப் பின்வரும் இலக்கணம் கூறுகிறார். “உழைப்பு என்பது மூளையையோ உடலையோ முழுவதுமாகவோ பகுதியாகவோ வருத்தி ஏதோ ஒன்றைப் படைப்பதற்காகச் செய்கின்ற செயலைக் குறிக்கும். ஆனால் அந்தச் செயலிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை உழைப்பு உள்ளடக்காது இவ்விலக்கணத்தின்படி உழைப்பு எல்லா வகையான தொழில் திறமைகளையும் உள்ளடக்கும்” என்றே கூறுகிறார்.
வேட்டையாடல்
வேட்டையாடல் பற்றி பாலைக்கலியில், வெள்ளைக் கொம்பை உடைய யானையை அலைத்து ஓட்டும் கானவர், கொல்லையிலிருந்து துரத்த எறியும் கவண் கற்கள் பூக்களை உதிர்க்கும் எனவும், வேட்டை நாய், ஒரு மானைப் பிடிக்க, அம்மான் அதற்கு அஞ்சாமல், வேடர்க்குப் பயன்பட்டது எனவும் கூறுகின்றது. சங்க காலத்தில் வேட்டைத் தொழில் சிறப்பாக நடந்தது. வேட்டைக்குச் செல்வோர் அதற்குத் தேவையான கருவிகளுடன் சென்று காட்டில் எல்லாத் திசைகளிலும் அலைந்து வேட்டையாடுவதற்குரிய விலங்குகள் உள்ள இடத்தை அறிந்து தாக்கினர், அவர்கள் வெள்ளை யானை, மான் போன்றவற்றை வேட்டையாடியதனையே,
“இலங்கொளி மருப்பிற் கைம்மா உளம்புநர்
புலம்கடி கவணையிற் பூஞ்சினை யூதிர்க்கும்
……………………………………………..
…………………………………………….
கொலைவெங் கொள்கையொரு நாயகப் படுப்ப
வலைவர்க் கமர்ந்த மடமான் போல்” (கலித். 23: 1–17)
வேட்டைக்குச் செல்வோர் தனித்துச் செல்லாது, பலர் சேர்ந்து வேட்டை நாயுடன் செல்வது வழக்கம். அவ்வாறு சென்று வேட்டையாடும் பொழுது அவர்கள் பிரிந்து செல்லவும் நேர்தல் உண்டு. அவர்கள் பிரிந்து சென்று வேட்டையாடிய பின்னர், மீண்டும் எல்லோரும் ஒன்று சேரவும், வேட்டை நாயை அழைப்பதற்கும் ஊது கொம்பினை ஊதுதல் வழக்கம்.
எருவிடுதல்
விளை நிலங்களில் நல்ல உரமிட்டால் நல்ல விளைவைப் பெறலாம் என்பதை உழவர்கள் அறிந்திருந்தனர். எருவாகப் பயன்படுத்தப்பட்டவை கால்நடைகளின் சாணமும், உலர்ந்து விழுந்த இலைதழைகளும் ஆகும். கால்நடையின் சாணத்தைத் தாதெரு என்றனர். இதனையே,
“காஞ்சித்தா துக்கன்ன தாதெரு மன்றத்து” (கலித். 108: 60)
இப்பாடலில் காஞ்சிப்பூவின் தாது உதிர்ந்தாற் போன்ற தாதாகிய எருவையுடைய மன்றம் என்ற செய்தியை கூறுகிறது. எருவைக் கொட்டி வைப்பதற்கு என்றே விடப்பட்ட மன்றங்களில் அவற்றைச் சேர்த்து வைப்பர்.
மோர், வெண்ணெய் விற்றல்
ஆநிரையால் பெற்ற பாலை மோராக மாற்றி விற்கும் தொழிலில் மகளிர் ஈடுபட்டனர் என்ற செய்தியை,
“அளைமாறிப் பெயர் தருவாய்” (கலித். 108: 26)
என்ற பாடலடிகள் மூலம் பெண்கள் அருகிலுள்ள சிற்றூரில் மோர் விற்றுத் திரும்பியதைத் தெரிய முடிகிறது. மோர் விற்றதோடு அல்லாமல் முல்லை நிலத்துப் பெண்கள் மோரிலிருந்து வெண்ணெய் எடுத்து அதனையும் விற்றனர் என்பதை,
“வெண்ணெய்க்கும் அன்னளெனக் கொண்டயாய் ஒண்ணுதால்” (கலித். 110: 6)
என்றும்,
“வெண்ணெ யுரைக விரித்த கதுப்போடே” (கலித். 115: 7)
என்ற பாடலடிகள் மூலம் முல்லைநில பெண்களின் தொழில் நுணுக்கங்களையும் அறிவு மேன்மைகளையும் அறியலாம்.
தினைப்புனம் காவல் காத்தல்
தலைவியும் தோழியும் தங்கள் கைகளில் கவனையும், வில்லினையும் வைத்துக் கொண்டு களிறுகளை விரட்டியடித்த செய்தியைக் கலித்தொகையின் பாடலடிகள் கூறுகின்றன. விளைந்த தினைக்கதிரைப் பறவைகள் வந்து உண்டு விடாமல் இருக்க தினைப்புனங் காக்கின்ற தொழிலை தலைவியும் தோழியும் செய்தனர். இதனையே,
“ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
களிறென ஆர்ப்பவ ரேனல் காவலரே” (கலித். 52: 13–14)
என்றும்,
“படிகிளி பாயும் பைங்குர லேனல்” (கலித். 50: 9)
என்றடிகள் குறிஞ்சிநில பெண்களின் வீரத்தையும் பறைசாற்றுகின்றது.
கூடை முடைதல்
ஓலைகளைப் பயன்படுத்தி அக்காலத்தில், பலவிதமான கூடைகள் செய்தனர். அவை வட்டி, புட்டில், குடை எனப்பட்டன. ஓலைக் கொண்டு செய்யப்பட்ட இக்கூடைகள் சாதாரணமானவை, விலைக் குறைந்தவை என்றாலும் அவையும் காலத்திறனோடு செய்யப்பட்டன. பனை ஓலை, தென்னை ஓலைகளைக் கொண்டு அன்றாடத் தேவைகளுக்குப் பொருட்களைகச் செய்தனர். ஓலைகளைப் பயன்படத்தி பலவிதமான கூடைகள் செய்தனர். அவை புட்பில் எனப்பட்டது என்பதனை முல்லைக்கலி வழியே,
“போழிற் புனைந்த வரிப்புட்டில்” (கலித். 117: 8)
என்றும்,
“வராஅல் சொரிந்த வட்டி” (ஐங். 48: 2)
என்றும்,
“விதைக்குறு வட்டி” (குறுந். 155: 2)
என்றும்,
“வரிக்கூழை வட்டி தழீஇ” (கலித். 109: 14)
போன்ற அடிகளின் வாயிலாக சங்ககால மக்கள் கூடை முடைதல் தொழிலிருந்த ஆர்வங்களையும் தனித்துவங்களையும் அறிந்துக் கொள்ள முடிகின்றது.
மரப்பொம்மைகள் செய்தல்
சிறு குழந்தைகள் நடை பயில நடைவண்டிகள் செய்து கொடுப்பர் இதனையே,
“கால்வல்தேர் கையி னியக்கி கடைபயிற்றா” (கலித். 81: 8)
என்றும்,
“பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
முக்காற் சிறுதேர்” (பட்டி. 24–25)
குழந்தைகள் விளையாட யானை பொம்மைச் செய்து கொடுத்தனர் என்பதை,
“திகழொளி முத்தங் கரும்பாகத் தைஇப்
பவழம் புனைந்து பருதி சுமப்பக்
கவழ மறியாநின் கைபுனை வேழம்
புரிபுனை பூங்கயிற்றில் பைபய வாங்கி” (கலித். 80: 4–8)
என்ற அடிகள் மூலம் அறியலாம்.
உறி பின்னுதல்
முல்லைநில ஆயர் குலத்தவர் பால், தயில், வெண்ணெய் நிரம்பிய மட்குடங்களை வைப்பதற்குக் கயிற்றினால் வலைபோல் பின்னி அதனை வீட்டுக் கூரையில் கட்டித் தொங்கவிடுவர். இது உறி என்ற பெயரால் வழங்கப்பட்டது. இதனையே,
“இமிழிசை மண்டை உறியொடு தூக்கி” (கலித். 106: 2)
அந்தணர் நீர்க் கரகங்களைக் கொண்டு செல்வதற்கு உறியைப் பயன்படுத்தியுள்ளனர். இதனையே,
“உறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர்” (கலித். 9: 2–4)
என்றடிகள் உறி பின்னுதல் முறைகளை வாழ்வியல் முறைகளோடு சுட்டிக் காட்டுகின்றது.
கயிறு திரித்தல்
விலங்கு பறவைகளைப் பிடித்தற்கும், கடலில் மீன்களைப் பிடிப்பதற்கும் வலைகளைப்
பின்னுவதற்கான கயிறுகளையும் திரித்தனர். இதனையே,
“இரும்புலி கொண்மார் நிறுத்த வலை” (கலித். 65: 24)
என்றும்,
“வலையுறு மயில்” (கலித். 128: 16)
கடலில் செலுத்தும் படகுகளைப் பிணிப்பதற்கு ஏற்ற உறுதி வாய்ந்த கயிறுகள் திரிக்கப்பட்டன. மேலும்,
“யான்கொல் அனியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி” (குறுந். 7: 3–4)
என்றடிகளிலிருந்து கயிற்றின் மேல் நின்றாடக் கூடிய அளவிற்குத் திண்மையும் உறுதியும் வாய்ந்த கயிறு திரிப்பதில் வல்லவராய் பழந்தமிழர் இருந்திருத்தல் வேண்டும் என்றும் அறியலாம்.
கொல்லர் தொழில்
கொல்லு தொழிற் கருவிகள் தொடர்பான பல செய்திகளைக் கொண்டு அதாவது தெரிந்த பொருட்களாக இக்கருவிகள் புலவர் பெருமக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தெரியாத பொருட்களுக்கு அவை உவமைகளாகக் கூறப்பட்டிருப்பதிலிருந்து கொல்லர் தொழிலின் பரவலான பயன்பாட்டினையும் சிறப்பினையும் அறிந்து கொள்ளலாம்.
கொல்லனுக்கு மிகவும் இனறியமையாதது உலையாகும். கலித்தொகைப் பாடல் ஒன்றில் தலைவனின் காமப் பெருமூச்சு கொல்லனது சூடேறிய உலை - மூக்கிற்கு ஒப்பிடப்பட்டிருப்பதை,
“நறாஅ அவிழ்ந் தன்னமெல் விரற்போது கொண்டு
செறாஅச் செங்கண் புதைய வைத்துப்
பறாஅக் குருகி னுயிர்த்தலு முயிர்த்தனன்” (கலித். 54: 9–11)
என்று மொழியப்படுகிறது. இப்பாடல் தலைவன் நறவம்பூ அல்ர்ந்தாற் போன்ற மெல்லிய விரல்களை உடைய கையைத் தனது அருளையுடைய சிவந்தகண் தெரியாதபடி பிடித்துக் கொண்டு பெரு மூச்செறிந்தது, கொல்லனது கொல்லுலையில் காணப்படும் உலைமூக்கு வெய்த்து உயிர்த்தது போன்று காணப்படுகிறது.
தோற்பைகள் செய்தல்
ஆநிரைகள் மேய்க்கச் செல்லும் போது முல்லைநிலக் கோவலர் கழுவோடு சூட்டுக் கோலையும் தோற்பையில் இட்டுச் சுருக்கிக் கட்டிக்கொண்டு சென்றனர். இதனையே,
“கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்றகண்” (கலித். 106: 1)
என்றடியிலிருந்து தோற்பை செய்து பயன்படுத்தினர் என்ற செய்தியை அறியலாம். கொல்லன் பட்டறையில் பயன்படுத்தப்பட்ட ஊதுலைக் கருவி தோலால் செய்யப்பட்டது. இது மெல்லிய தோலால் செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிடப்படுகின்றன.
அணிகலன் செய்யப்பட்ட முறை
உலோகத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் பற்றியும், இவ்வணிகலன்கள் செய்யக் கையாளப்பட்ட நுட்பங்கள் பற்றியும் கலித்தொகையில் பல்வேறு பாடல்கள் சுட்டுகின்றன. கிண்கிணி என்ற காலணியும், தனித்தனி பகுதிகளாகச் செய்யப்பட்டு பிறகு ஒன்றாகப் பொருத்தப்படும். இப்பகுதிகளை இணைக்கப் பொடியூதிப் பற்றவைக்கும் போது பயன்படுத்தப்படும். இவ்வாறு பொடியூதிப் பற்றவைக்கப்பட்ட இடங்கள் நிறத்தில் மாறுபடும். இது அணிகலன்களின் முழு அழகைக் குறைவுபடுத்தும். பற்ற வைத்த இடங்கள் தெரியாமல் ஓர் அணிகலன் முழுதும், ஒரே நிறமுடையதாய் அமைய அவ்வணிகலனைப் பொற்கொல்லர் ஊதுலையில் சிறிது நேரமிட்டு பின்னர் வெளியிலிருந்து உடனே அதன்மேல் நீர் ஊற்றுவர். அப்படிச் செய்வதன் மூலம் அந்த அணிகலனில் பற்றவைத்த இடங்கள் தெரியாமல் ஒரே நிறமுடையதாய் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும், என்பதை,
“காலவை, சுடுபொன் வளைஇய ஈரமை சுற்றொடு
பொடியழல் புறந்தந்த செய்யுறு கிண்கிணி” (கலித். 85: 1–2)
என்றும்,
“அளிமாறு பொழுதின், இவ்வாயிழை கவினே” (கலித். 25: 28)
என்ற பாடலடி நின்காலில் கிடக்கின்றவை, சுடு பொன்னாலே வளைந்த இரண்டாய் அமைந்த காற்சரியோடே பண்ணுதலைத்தான் உறுகின்ற பொடிமூடு தழலாலே நிறம் உண்டாக்கப்பட்ட சதங்கை என்று கூறுவதின் மூலம் அணிகலன்கள் செய்யப்பட்ட முறையை அறிந்துகொள்ள முடிகிறது.
தச்சுத் தொழில்
சங்ககால மக்கள் கட்டில்களையும் பொம்மைகளையும் வேழத்தையும் செய்து வணிகம் செய்து வந்துள்ளனர் என்பதை,
“படைஅமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ
இணைபட நிவந்த நீலமென் சேக்கையுள்” (கலித். 72: 1)
என்றும்,
“கடியரணம் பாயாநின் கைபுனை வேழம்” (கலித். 86: 7)
என்றும்,
“புரிபுனை பூங்காற்றில் பையல வாங்கி” (கலித். 80: 7)
என்ற பாடலடிகளின் மூலம் அறியலாம்.
மருத்துவத் தொழில்
மக்கட்கு நேரும் பிணியறிந்து, மருந்து கொடுக்கும் தொழிலில் ஈடுபடும் மருத்துவர் குறித்துக் கலித்தொகை பல இடங்களில் எடுத்துரைக்கின்றன. நெய்தல் கலியில் தலைவி கூற்றாக வரும் ஒரு பாடல் தலைவனது செயலுக்கு மருத்துவரை ஒப்பிட்டுக் கூறுகின்றது.
“அன்னர் காதல ராகஅவர் நமக்கு
இன்னுயிர் போத்தரு மருத்துவ ராயின்” (கலித். 137: 24–25)
என்னும் வரிகள் கூறுகின்றன. உடலில் நோய் ஏற்படும் போது மருந்தை உண்டால் அம்மருந்தின் மூலம் மனிதனின் உடலிலுள்ள மரு என்று அழைப்படும் நோயானது தீறும்.
உடலுக்கு நோய் ஏற்படாதபடி தடுக்கும் அனைத்துப் பொருள்களும் மருந்தாகக் கருதப்படுகிறது. முதலில் மருந்தானது நோயைத் தடுத்து உயிரைக் காக்கும் தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை பாலைக்கலி வழியே,
“இன்னுயிர் செய்யு மருந்தாகி” (கலித். 32: 15)
என்று குறிப்படுகிறது. மருந்தானது, நோயின் மூலம் உடலில் ஏற்படும் துன்பத்தையும், உள்ளத்தில் ஏற்படும் வேதனைகளையும் போக்கும் படியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை,
“அருந்துய ராரஞர் தீர்க்கு
மருந்தாகிச் செல்கம்” (கலித். 44:20–21)
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. மருந்தானது உடலில் உண்டாகும் நோயை உடனுக்குடன் தீர்த்து நோயால் பிடிக்கப்பட்ட மனிதனை நலம் பெறச் செய்ய வேண்டும். மருந்தானது, சரியாக உடலில் செயல்பட்டு, பின் விளைவுகளை ஏற்படுத்தாமல் நோயை மட்டும் விரைவாகத் தீர்க்கும் மருந்தாக இருக்க வேண்டும் என்பதை,
“நோய்நாம் தணிக்கு மருந்து” (கலித். 81: 18)
என்றும்,
“இடும்பை தணிக்கு மருந்து” (கலித். 140: 15)
என்றும் குறிப்பிடுகிறது. மருந்தானது நோயை நீக்கக் கூடியதாக இருந்து, அந்நோயினால் ஏற்படும் சாவைத் தடுக்கும் ஆற்றல் உடையதாக இருக்க வேண்டும் என்பதாகும்.
நோயால் பாதிக்கபட்டவர்கள் அந்நோயிலிருந்து விடுபடுவதற்காக உண்ணும் மருந்தின் செயல், நோயால் பாதிக்கப்பட்ட மனிதனின் உடல் நிலைக்கும், உடலின் எதிர்ப்புச் சக்திக்கும் ஏற்பவே மருந்தானது செயல்படும் தன்மையுடையது. மனிதனின் உடல் இரசம், இரத்தம், மாமிசம், கொழுப்பு, எழும்பு, மூளை, சுக்கிலம், சுரோணிதம் ஆகியவை காணப்படுகின்றன. இவைகளை ஏழு வகையான தாதுக்கள் என்பர். மனிதன் உண்ட உணவிலிருந்து இந்த தாதுக்கள் உண்டாகின்றன. உடலிலுள்ள ஏழு தாதுக்களும் பலமுடையதாக இருந்தால் தான் நோயை எதிர்க்கும் சக்தி உடலில் ஏற்படும். இக்கருத்தையே,
“திருந்திய யாக்கையுள் மருத்துவ னூட்டிய
மருந்து போல் மருந்தாகி” (கலித். 17: 19–20)
என்று குறிப்பிடுகிறது. தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவைப் பிறருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும், அவ்வாறு மருத்துவத் தொழிலைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்காமல் மறைப்பது கொடுமையான பாவம் எனக்கருதி பணியாற்றி உள்ளான் என்பதை,
“வருந்திய செல்லல் தீரத் திறனறி யொருவன்
மருந்தறை கோடலின் கொடிதே” (கலித். 129: 23–24)
என்ற பாடலடிகள் குறிப்பிடுகின்றது.
முடிவுரை
ஆய்வுக் கட்டுரையில் கண்டறியப்பட்டுள்ள வாழ்வியல் நெறிகள் வாழையடி வாழையாக இலக்கியங்களில் விதைக்கப்பட்டு வீரியமடைந்து சங்ககால மக்களுக்கும் இக்கால மக்களுக்கும் ஏற்புடையதாகவே அமைந்துள்ளது. சங்க காலத்தில் மக்கள் பல்வேறு தொழில்கள் செய்து வந்துள்ளனர். அத்தொழில்களின் அக்கால மக்கள் காட்டிய ஆர்வமும் செயல் திறனும் சிறப்புடையன என்பதை சங்ககால வாழ்வியல் கூறுகளும் பாக்களின் வழியே எடுத்தியம்புகின்றது.
- சோ. அனிதா,
உதவிப் பேராசிரியர்,
சுயநிதிப் பிரிவு, தமிழ்த்துறை,
ஜி.டி.என். கலைக்கல்லூரி, (தன்னாட்சி)
திண்டுக்கல் மாவட்டம் – 624 005