கலக்கல் பலவும் புரிந்திடுவார்
கன்னித் தமிழென்று பேசிடுவார்
கற்புடன் வைத்திட தவறிடுவார்
தனித்தமி ழென்று வாதிடுவார்
தன்னந்தனியே விட்டுச் சென்றிடுவார்
அன்னைத் தமிழென்று பறைந்திடுவார்
துதித்து தொழுதிட மறந்திடுவார்
முத்தமி ழென்று அளந்திடுவார்
மொத்தமாக பற்றை துறந்திடுவார்
பொற்றமிழ் என்று புகழ்ந்திடுவார்
மாற்றுமொழிதனில் உரை நிகழ்த்திடுவார்
நற்றமிழ் என்று நவின்றிடுவார்
நாவில் மற்றதை பழக்கிடுவார்
செந்தமிழ் என்று செப்பிடுவார்
சீர்பதங் குலைக்க செய்திடுவார்
பைந்தமிழ் என்று பாடிடுவார்
தமிழுரை கேட்பின் ஓடிடுவார்
வண்டமிழ் என்று வரைந்திடுவார்
வரவேற்க உள்ளந் தளர்ந்திடுவார்
- அருள்