சில முகங்களுக்கு சில குரல்கள் என்று நம்பி இருப்போம். ஆனால் அந்த முகங்களுக்கு அந்த குரல்கள் சொந்தமில்லை என்று தெரிய வரும்போது ஒரு திகைப்பும் ஒரு ஹையோவும் வருவதை தவிர்க்க முடியாது.
பின்னணி குரல் என்ற கிராஃப்ட் சினிமாவில் இருப்பதை அறிவோம். சிலருக்கு முக வெட்டு நன்றாக இருக்கும். குரல் சரியாக அமைந்திருக்காது. அது கொண்ட சூழலில் டப்பிங்- ல் வேறு ஒருவருடைய குரலை பொருத்தி காட்சியை சமன் செய்ய வேண்டிய தேவை இருக்கும். அது அழகாகவும் மாறும். டப்பிங் என்பது பெரும் கலை. காட்சியில் விட்ட இடத்தை இட்டு நிரப்பும் வித்தை அது. நடிகர்களிடையே நடக்கும் போட்டி டப்பிங்- ல் இன்னும் சுவாரஸ்யம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். டப்பிங்- ல் காட்சியின் வீரியத்தை மாற்றி விடும் கவுண்டமணி வடிவேலு போன்ற பெரும் கலைஞர்களை அறிவோம் தானே.
"வெற்றி விழா" வில் ஜிந்தா குரல் -ஐ மறக்க முடியுமா.
மோகன் அவர்களுக்கு பல படங்களுக்கு சுரேந்தர் தான் குரல். சுரேந்தர் என்ன மோகன் குரலில் பேசுகிறார் என்று நம்பும் அளவுக்கு அது இருந்தது. சில படங்களில் நவரச நாயகனுக்கும் சுரேந்தரின் குரலே.
பல நடிகர்களுக்கு முதல் படத்தில் பெரும்பாலும் வேறு ஒருவரின் குரலே இருந்திருக்கிறது. 'காதலன்' படத்தில் பிரபு தேவாவுக்கு விக்ரம் குரல் கொடுத்திருப்பார். 'ஆசை'யில் அஜித்க்கு வேறு ஒரு குரல் தான். நிழல்கள் ரவி... ராதாரவி குரல்களை வேறு முகங்களில் பார்க்கும் போது... அது கனக்கச்சிதமாக இருந்தாலும்.. கொஞ்ச நேரத்துக்கு அந்த முகங்களில் அவர்கள் வந்து வந்து போவதை தவிர்க்க முடியாது. கேப்டனுக்கு ஆரம்ப படங்களில் வேறு குரலே இருக்கும். ரஜினிக்கும் முதல் படத்தில் வேறு குரல் தானே.
குரல் என்பது அடையாளம். நினைவின் வழியே சேமிக்கப்படும் முகத்துக்கு முகவரியாக குரல் இருப்பதை மறுக்க முடியாது.
ஸ்மிதாவுக்கு குரல் கொடுப்பவர் ஹேமா மாலினி என்பவர். இவர் M.S பாஸ்கரின் சகோதரி என்பது கூடுதல் குரல். அவரும் பின்னணி குரல் ஆர்டிஸ்டாக இருந்தவரே. அதே போல பல நாயகிகளுக்கு நாயகி சரிதாவே குரல் கொடுத்திருக்கிறார். அந்தக் குரலுக்கு மயங்காதோர் யார் இருக்கிறார். அவருக்கு அவரே பேசும் போதும் சரி. மற்றவருக்கு அவர் பேசும் போதும் சரி. அரும்பாகும் மொட்டு அப்படியே துளிர் விட்டுக்கொண்டே இருப்பது போலல்லவா ஒரு புல்லரிப்பு. அதுவும் கொஞ்சி பேசும் நேரத்தில்... கொஞ்ச நஞ்சம் வெட்கமும்... விட்டு ரசிப்போம்.
முரளி குமாரின் பின்னணிக் குரல் எப்போதும் மனதுக்கு நெருக்கமானது. அந்தப் பாத்திரத்தின் மீது நம் கவனம் சட்டென ஒட்டிக் கொள்ளும். சில பரிச்சயமான குரல்கள் வில்லனுக்கு சேர்ந்து விடும் போது... என்னடா இது... என்றிருக்கும். சில மென்மையான குரல்கள் கூட வில்லனுக்கு சேர்ந்து வில்லத்தனத்தை பன்மடங்காக கனப்படுத்தி விடும். "சத்யா"வில் கிட்டியின் குரல்...உதாரணம்.
சில சமயம்... இயக்குநரின் குரல் சின்ன சின்ன பாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். அது ஒரு வகை சுவாரஸ்யமான ஒளிந்து விளையாட்டு போல. R.சுந்தர்ராஜன் ஒரு படத்தில் பிள்ளையாருக்கு குரல் கொடுத்திருப்பார். ரசனையான காட்சி கோர்வை அதெல்லாம்.
தெலுங்கில் கமலுக்கு spb குரல் கொடுத்திருப்பார். கிட்டத்தட்ட பொருந்தி வரும்.
தீபா வெங்கட்டின் குரல் பல நாயகிகளுக்கு பொருந்தி இருந்ததை ரசித்தே இருந்திருக்கிறோம். அதுவும் நயன்தாராவுக்கு அளவெடுத்து தைத்த குரல் அது. எல்லாம் தாண்டி எனக்கு மிகவும் பிடித்த ஒரு பின்னணிக் குரல் இருக்கிறது. அழகு கூடி அழுத்தம் கொண்ட அற்புதம் அதன் வடிவில் இருந்திருக்கிறது. இன்னதென சொல்ல முடியாத அனுபவம் அந்தக் குரல்.
அது கௌதமிக்கு குரலாக இருந்தது. அது சீதாவுக்கு குரலாக இருந்தது. அதே குரல் ரூபிணிக்கும் பொருந்தியது. அந்தக் குரல் வந்தாலே மனதுக்குள் இனம் புரியாத ஓர் ஆசுவாசம் வருவதை உணர்ந்திருக்கிறேன். சின்ன வயது சினிமாக்களில் பெரும்பாலும் நாயகிகளுக்கு அந்தக் குரல் தான். சமீபத்திய படங்களில் நயன்தாராவுக்கு தமன்னாவுக்கு ஹன்சிகாவுக்கு என பல நடிகைகளுக்கு குரலாக இருந்தது... சபிதா அவர்களின் குரல். அது போல... அந்தக் கால கட்டத்தில்... அந்தக் குரல் அமர்க்களம் செய்து கொண்டிருந்தது. அந்த சூப்பர் டூப்பர் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று தேடினால்... துர்கா என்ற டப்பிங் ஆர்டிஸ்ட் எனத் தெரிய வந்தது.
இவர் யார் என்ன என்று பெரிதாக ஒரு விவரமும் தெரியவில்லை. முதலில் பெயர் கூட தெரியவில்லை. பெயர் தெரியாத ஒரு குரலுக்கு எப்படியோ ரசிகனாக இருக்கிறோம் என்று மட்டும் புரிந்தது. பிறகு ஒரு படத்தில் ஊர்வசிக்கு குரல் வேறு யாரோ என்றுணர்ந்து டைட்டில் கார்டில் தேடி... அங்கே "துர்கா" என்ற பெயரைக் கண்டு பிடித்து.. அதன் பிறகு அந்தக் குரல் எந்தப் படத்தில் எல்லாம் வருகிறதோ அந்தப் படத்தின் டைட்டில் கார்டை கவனிக்க... அதில் எல்லாம் தவறாமல் 'துர்கா துர்கா' என்றே... வரவே... அந்தக் குரலுக்கு பெயர் துர்கா தான் என்று முடிவுக்கு வந்தேன். பிறகு விக்கிப்பீடியாவும் அதையே உறுதி செய்தது.
சீதாவின் நிஜ குரல்- ஐ.... கௌதமியின் நிஜ குரலை இப்போது கேட்கும் போதெல்லாம் 'ஐயோ' என்றிருக்கும்...அந்தக் குரலை மிஸ் பண்ணுகிறோமே என்று.
சிறு வயது படங்களில் பார்த்த அந்த முகங்களுக்கு தான் எத்தனை பொருத்தமாக அந்தக் குரல் இருந்திருக்கிறது. இப்படிக்கு.... இப்படிக்கு எதிர்வீட்டு ஜன்னல்... என்று சொல்லி விட்டு ஓடிவிடும் "புதிய பாதை" சீதாவை மறக்கடிக்காமல் செய்தது அந்தக் குரல் தானே. என்னய்யா... யோவ்... என்று சிணுங்கி கொண்டே பேசுவதாகட்டும்.. அழுதுகொண்டே புலம்புவதாகட்டும். கொஞ்சிக் கொண்டே குலாவுவதாகட்டும்.... அப்படி ஒரு போட்டு தாக்குதல் நடக்கும் அந்தக் குரலில். அம்பிகா உதட்டில் அந்தக் குரல் வரும் போது அம்பு தைக்கும் நமக்கு. ராதாவுக்கு வருகையில் ராகம் எழும்புவதை தவிர்க்க முடியாது.
அந்தக் குரலுக்கான சின்ன அறிமுகம் அல்லது... நான் ரசிக்கும் குரலுக்கான ட்ரிபியூட் என்று வைத்துக் கொள்ளலாம். குரல் வழியே செய்த மாயத்துக்கு சொந்தக்காரர் துர்காவுக்கு... இந்த ஒவ்வொரு வரியையும் மாலையாய் சூட்டலாம். கடந்து போன ஒரு கால கட்டத்தையே காதுக்கருகே நிறுத்தி விடும் வல்லமை... மனதை மயக்கும் அந்தக் குரலுக்கு இருக்கிறது.
அடுத்த முறை 80 களின் சினிமாக்களை பார்க்கையில் கவனித்துப் பாருங்கள். துர்காவின் குரல் வழியே தூபம் பெரும் பாத்திரங்களை கண்டடைவீர்கள்.
- கவிஜி