ஒட்டக்கூத்தரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அம்பிகாபதி - அமராவதி காதலுக்கும், புலவர் புகழேந்திக்கும் எதிரியாக சித்தரிக்கப்பட்டவர் அவர். உண்மையில் மிகச் சிறந்த புலவர். தமிழின் முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமான 'குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்' என்னும் நூலை இயற்றியவர். அது மட்டுமல்லாது மூவருலா, ஈட்டி எழுபது, தக்கயாகபரணி போன்ற நூல்களையும் படைத்தவர். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராஜராஜ சோழன் ஆகிய மூன்று சோழப் பேரரசர்களின் அவைப் புலவராக விளங்கியவர்.
ஒட்டக்கூத்தர், தாராசுரம் வீரபத்ரர் கோயிலில் ஒரே இரவில் தக்கயாகபரணியை இயற்றியதாகவும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் அரங்கேற்றியதாகவும் சொல்வார்கள். அவர் இறந்தப் பின் அவருக்கு அமைக்கப்பட்ட சமாதிக் கோயிலான பள்ளிப்படையும் தாராசுரத்தில் தான் உள்ளது - அதே வீரபத்ரர் கோயிலில்.
படம்: வீரபத்ரர் கோயில்
தஞ்சை - குடந்தை சாலையில், குடந்தை நகருக்கு ஒரு கி.மீக்கு முன்னதாகவே, அரிசிலாற்றங்கரையில் அமைந்திருக்கிறது தாராசுரம். 'அழியாத சோழர் பெருங்கோயில்கள்' என போற்றப்படும் மூன்று சோழர் கோயில்களுள் ஒன்றான ஐராவதீஸ்வரர் கோயில் இங்கு தான் உள்ளது. சிற்பப் பெட்டகமான இக்கோயிலுக்குப் பின்பக்கம் இருக்கும் வீரபத்ரர் கோயிலில் தான் ஒட்டக்கூத்தருக்கு பள்ளிப்படை அமைக்கப்பட்டது. நான் ஓராண்டுக்கு முன் அங்கு சென்ற பயணத் தொகுப்பே இது.
படம்: வீரபத்ரர் கோயிலின் ராஜகோபுரமும், ஆக்ரமிப்புகளும்
வீரபத்ரர் கோயிலின் ராஜகோபுரம், கருங்கல் தாங்குதளத்தின் மேல் செங்கல் கோபுரமாக உயர்ந்து நிற்கிறது, செடிக்கொடிகளுக்கு வாழ்விடம் அளித்துக்கொண்டு. கோபுரத்தைக் கடந்து சென்றால், ஒரு சிறிய நந்தி மண்டபமும் வீரபத்ரர் சன்னதியும் இருக்கின்றன. கோயிலை சுற்றியும் இடம் விஸ்தாரமாக இருக்க, அங்கு சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். கோயிலினுள்ளே, பூசாரி ஒரு பையனுக்கு மத்தளம் வாசிக்கக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை எங்கே என்று சுற்றும் முற்றும் தேடினேன். ஆனால் அங்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. வேறு வழியின்றி பூசாரியை விசாரிக்க வேண்டியதாயிற்று. அவரும் பொறுமையாக, என்னை அந்த சிறிய கோயிலின் பின் பக்கம் அழைத்துச் சென்று, ஒரு சிமெண்ட் மேடையைக் காட்டி "இது தான் ஒட்டக்கூத்தர் சமாதி", என்றார். பள்ளிப்படை என்றால், கோயில் அமைப்பும், அதனுள் லிங்கமும் இருக்கும் என எதிர்பார்த்து சென்ற எனக்கு பெரிய ஏமாற்றமாய் போய்விட்டது.
நான் பள்ளிப்படையைப் பற்றி பூசாரியிடம் பல கேள்விகளைக் கேட்க, அவர் கோயில் பொறுப்பாளரான ஜீவா என்பவரின் கைப்பேசி எண்ணைக் கொடுத்து அவரிடம் கேட்க சொல்லிவிட்டார். கைபேசிக்கு அழைத்த அடுத்த ஐந்து நிமிடங்களில் ஜீவா கோயிலில் இருந்தார். நான் கேட்டவைகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் தந்தார்.
எதிர்பார்த்தது போல, பள்ளிப்படை முற்காலத்தில் கோயிலமைப்பையும், அதனுள் லிங்கம் நந்தி சிலைகளைக் கொண்டிருந்தது. இன்னும் சில மண்டபங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை ஆகிய காரணங்களினால் அவை கொஞ்சக்கொஞ்சமாக இடிந்து விழத் தொடங்கியிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு, எஞ்சியுள்ள சிதைந்த பகுதிகள் எந்நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து இருந்தபடியால் அவற்றை முழுவதுமாக இடித்து விட்டனர். இடிப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஜீவா என்னிடம் காட்டினார். அவற்றில் சிலவற்றை என் கேமராவில் பதிந்து கொண்டேன்.
படம்: வீரபத்ரர் கோயில் - சிதைந்த பகுதிகளை இடிக்கும் முன்பு... காவி வேட்டி அணிந்திருப்பவர் ஜீவா.
படம்: வீரபத்ரர் சன்னதிக்குப் பின்புறம் இருந்த ஒட்டக்கூத்தர் பள்ளிப்படை. லிங்கமும், நந்தியும் தெரிகின்றன.
பள்ளிப்படையில் இருந்த லிங்க, நந்தி சிலைகள் இப்போது வீரபத்ரர் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிப்படை இருந்த அதே இடத்தில் ஒட்டக்கூத்தர் நினைவு மண்டபம் அமைக்கப்போவதாக சொன்னார் ஜீவா. அதற்காகவே அந்த சிமெண்ட் மேடை எழுப்பபட்டிருக்கிறது.
படம்: செங்கல் மேடை
கோயில் வளாகத்திலேயே ஒரு பழங்கால செங்கல் மேடை இருக்கிறது. அதுவும் ஒரு பள்ளிப்படையாக இருக்கலாம் என்றார் ஜீவா. மேலும், இரண்டாம் ராஜராஜ சோழன் மற்றும் அரச குடும்பத்தினர் சிலருடைய சமாதிகளும் கூட கோயில் வளாகத்திலேயே இருக்கலாம் என்றும் அவர் நம்புகிறார். கோயில் வளாகம், அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டால் பல வரலாற்று உண்மைகள் வெளிவரக்கூடும்.
- ராஜ சிம்ம பாண்டியன் (simmapandiyan.blogspot.in) (