ஆப்பிரிக்காவில் ஜாம்பியா, டன்ஜானியா ஆகிய நாடுகளின் எல்லையில் ஒரு நதிக்கரையில் நாகரீக கலாச்சாரம் தோன்றுவதற்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய மர அமைப்பின் எச்சங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கூர்மையான கல் ஆயுதங்களைப் பயன்படுத்தி இரண்டு மரக்கட்டைகளை இணைத்து இந்த எளிய அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 500,000 ஆண்டுகளுக்கு முன்பு கலம்பொ (Kalambo) ஆற்றங்கரையில் வாழ்ந்த நம் மூதாதையர்கள் இந்த மர அமைப்பை நடைபாதை அல்லது தளமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மரத்துண்டுகளில் காணப்படும் அடையாளங்கள் அவை வெட்டப்பட்டு, நறுக்கி அகற்றப்பட்ட துண்டுகளைக் கொண்டு இணைத்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த இடத்திற்கு அருகில் வரிசையாக இருந்த கல் ஆயுதங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
புதர் வகை வில்லோ தாவரத்தின் ஒரு துண்டு மற்றொண்றுடன் பொருத்தப்பட்டிருப்பது அதன் அடிப்பகுதியில் உள்ள பெரிய U வடிவ குறியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.“இந்த மர அமைப்பும் கற்களும் முன்னோரின் உயர்தரமான அறிவுத்திறன், தொழில்நுட்பத்திறன், திட்டமிடலை எடுத்துக் காட்டுகிறது. இவ்வமைப்பு முன்னோர் பயன்படுத்திய நடைபாதையின் அல்லது ஒரு அடித்தளத்தின் பாகமாக இருக்கலாம். இந்தth தளம் பொருட்களை சேகரித்து வைக்க, உணவை உலர வைக்க உதவும் விறகைப் பாதுகாத்து வைக்க, மக்கள் கூடி உட்கார்ந்து பேசி பிரச்சனைகளுக்கு முடிவு காண அல்லது மேற்கூரை அமைத்து அதற்கு கீழ் உறங்கப் பயன்படுத்திய இடமாக இருந்திருக்கலாம்” என்று ஆய்வுக்குழுவின் தலைவரும் லிவர்பூல் தொல்லியலாளருமான பேராசிரியர் லாரி பாரம் (Prof Larry Barham) கூறுகிறார்.
இந்த அமைப்பு 476,000 ஆண்டுகள் பழமையானது.
300,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சாப்பியன்ஸ் (Homo sapiens) என்ற இன்றுள்ள மனித இனம் தோன்றியது. இதற்கு முன்பே இந்த மர அமைப்பு கட்டப்பட்டுள்ளதை ஆய்வுகள் மூலம் அபரிஸ்ட்வித் (Aberystwyth) பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஹோமோ சாப்பியன்ஸ்களுக்கு முன்பு தோன்றிய ஹோமோ ஹைடில்பெர்ஜென்சிஸ் (Homo heidelbergensis) என்ற நம் முன்னோர்களால் இந்த அமைப்பு எழுப்பப்பட்டிருக்கலாம்.
2006ல் கலம்பொ நதியில் நடந்த அகழ்வாய்வுகள் இந்த நதியின் பாதை மாறியதால் அப்போது இங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதா என்பதைக் கண்டறியவே 2019ல் ஆய்வாளர்கள் இங்கு வந்தனர். 770 அடி உயரத்தில் இருந்து இங்கு இருக்கும் அருவியின் நீர் 30 அடி சரிவான பாதையில் விழுந்து டேங்கனியகா (Tanganyika) என்ற ஏரி உருவாகிறது. இங்கு 390,000 ஆண்டுகள் பழமையான குழி தோண்ட உதவும் ஒரு குச்சி, பள்ளம் உண்டாக்கப் பயன்படும் பிரிவுகளுடன் கூடிய ஒரு கிளை அமைப்பு, இரண்டு பக்கங்களிலும் வெட்டப்பட்ட நிலையில் ஒரு மரத்துண்டு, மரத்தைப் பிளக்க உதவும் ஆப்பு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இந்த மரப்பரப்பு பளுவான பொருட்களை உருவாக்க தச்சர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் தொழில் மேசையாக (decker bench) இருந்திருக்கலாம்.
“மரப்பொருட்கள் நீண்ட காலம் நிலையாக இருக்காது. நதியில் படிந்த மண் நீர்த்தடுப்பாக செயல்பட்டு இவ்வமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனால் இது மக்க போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இந்த அமைப்பு மனிதனால் கட்டி உருவாக்கப்பட்ட சூழலுடன் கூடிய ஒன்று இல்லை. என்றாலும் முன்னோர் மரம் என்ற பொருளை வைத்து இத்தகைய ஒன்றை பயனுள்ளதாக வடிவமைத்துள்ளனர். இவ்வகை கட்டுமானத்திற்கு முன் மாதிரி எதுவுமில்லை. பின்பற்ற என்று இயற்கைவழி கட்டுமானமும் நடைபெறவில்லை. அதனால் இக்கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்பகுதி நிலப்பரப்பில் இது முன்பு வாழ்ந்த மக்கள் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அடையாளம். இங்கு மேலும் பல பழமையான மரப்பொருட்கள் கண்டுபிடிக்கப்படலாம். அதனால் இப்பிரதேசத்தை யுனெஸ்கோவின் பாரம்பரிய இடமாக அறிவிக்க ஜாம்பியா அரசுடன் ஒத்துழைத்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது” என்று பாரம் கூறுகிறார்.
“பரிணாம வரலாற்றில் முன்பு அங்ககப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது பற்றி ஒரு சில விவரங்களே கிடைத்துள்ளன. அதனால் இந்தக் கண்டுபிடிப்பு மிகப் பயனுள்ளது” என்று நியூயார்க் ஸ்டோனி ப்ருக் (Stony Brook) பல்கலைக்கழக கற்கால ஆராய்ச்சி தொல்லியலாளர் டாக்டர் சானியா ஹார்மண்டு (Dr Sonia Harmand) கூறுகிறார்.
“ஒன்றுடன் ஒன்றை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மரத்துண்டுகள் மனிதப் பரிணாமத்தில் புதியதொரு வாசலுக்கான திறவுகோல். 476,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர் தாங்கள் வாழ்ந்த சூழலை மாற்ற ஏராளமான பொருட்களைப் பயன்படுத்தினர்.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு எளிமையானது என்றாலும் இதன் வடிவம் மற்றும் இது உருவாக்கப்பட்டுள்ள விதம் முன்பு வாழ்ந்தவர்கள் எவ்வாறு சூழலை தங்கள் வாழ்விற்கேற்ப வடிவமைத்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதே போன்ற நடத்தையை பல விலங்குகள் பின்பற்றுகின்றன என்றாலும் கலம்பொ நதிக்கரையில் வாழ்ந்தவர்கள் மிகக்குறைவான கல், மரம் மற்றும் நெருப்பையே இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர்.
தொல்லியல் ஆவனங்களில் இத்தகைய நடத்தையை அரிதானது என்று நினைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பண்பு பரவலாக காணப்படுகிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது” என்று ரீடிங் (Reading) பல்கலைக்கழக கற்கால தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் அனிமீக் மில்க்ஸ் (Dr Annemieke Milks) கூறுகிறார்.
கருவிகள், அமைப்புகளை உருவாக்க இன்று நாம் மரத்தை பரவலாகப் பயன்படுத்துகிறோம். என்றாலும் இந்தக் கண்டுபிடிப்பு இத்தகைய எளிய மரப்பொருட்கள் மனிதப் பரிணாமத்தில் எவ்வாறு முக்கிய பங்கு வகித்தன என்பதை எடுத்துக் காட்டுகிறது. கடந்த கால மனித வாழ்வின் கண்ணாடியாகக் கருதப்படும் இது போன்ற தொல்லியல் கண்டுபிடிப்புகள் நமக்கு பல புதிய பாடங்களைக் கற்றுத் தருகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்