விடுதலைக்குப்பின் இலங்கை அரசு எதிர்கொண்ட கடும் நெருக்கடிகள் அதன் ஒரு விளைவாக தோன்றிய வேலையின்மைப் பிரச்னை ஆகியவற்றிற்கான அமைப்பு ரீதியான காரணத்தை மூடிமறைத்து சிங்கள மக்களின் வாய்ப்புகள் பறிபோவதற்கு உண்மையான காரணம் அங்கு வாழும் ஒப்புநோக்குமிடத்து முன்னேறியதாக தோற்றமளித்த தமிழ் இனத்தைச் சேர்ந்த மக்களே என்ற நாசகரமான எண்ணத்தை சிங்கள மக்களிடையே சிங்கள ஆட்சியாளர்கள் பெரிதாக்கி பரவச் செய்ததே என்பதை கடந்த இதழில் பார்த்தோம்.
பிரிவினையை ஆழப்படுத்திய தரப்படுத்துதல் திட்டம்
அதனை அடிப்படையாகக் கொண்டு உயர்கல்வி பெறுவதிலும் அதைக் கொண்டு வேலைச் சந்தையில் போட்டியிடுவதிலும் தமிழர் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிட்டனர். அதாவது சிங்களர்களும் தமிழர் அளவிற்கு முன்னேறுவதற்கு சலுகைகள் வழங்குகிறோம் என்ற அடிப்படையில் தரப்படுத்துதல் என்ற பாரபட்சமான திட்டத்தைக் கொண்டுவந்தனர்.
1972ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த தரக்கட்டுப்பாடு திட்டத்தின்படி மருத்துவக் கல்வியில் சேர விரும்பும் ஒரு மாணவர் அவர் தமிழராக இருந்தால் 400க்கு 250 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் சிங்களராக இருந்தால் 229 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதும். தகுதி அடிப்படையில் 30 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்படும். 55 சதவீத இடங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கட் தொகை அடிப்படையில் சிங்கள தமிழ் மக்களிடையே ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 15 சதவீத இடங்கள் கல்வி ரீதியில் பின் தங்கிய மாவட்டங்களுக்கு என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. இந்த அடிப்படையில் தமிழ் மாணவர்கள் மிகக் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால் கூட அவர்கள் இலங்கையில் உள்ள கல்லூரிகளில் இடம் பிடிக்க முடியாது என்ற நிலை தோன்றியது.
நாட்டை இரண்டாக்கிய ஒற்றை ஆட்சி மொழி திட்டம்
மேலும் நாம் ஏற்கனவே பார்த்த சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற கொள்கை அரசியல் சட்டப்பிரிவு 33ன் கீழ் 1956ம் ஆண்டு இலங்கை ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் தமிழ் மக்களின் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து 1958ம் ஆண்டு தமிழ் மொழி (விசேச சட்டம்)கொண்டுவரப்பட்டது. அதன்படி தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழும் ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது. அது சிங்களமே இலங்கையின் ஆட்சி மொழி என்பதைப் பாதிக்காத வகையில் அமல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் 1972ம் ஆண்டில் சிங்களம் ஆட்சி மொழியாக தமிழ் மொழி பெயர்ப்பு வசதியுடன் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1978ம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் தவிர்த்து பிற அனைத்துப் பகுதிகளுக்கும் சிங்களமே ஆட்சி மொழி என்றும், ஆங்கிலம் இணைப்பு மொழி என்றும் அறிவிக்கப்பட்து. ஒட்டு மொத்தத்தில் மொழியை மையமாக வைத்து சிங்கள, தமிழ் மக்களிடையே வேற்றுமையைப் பேணும் போக்கு ஆட்சியாளர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த இரண்டு நடவடிக்கைகளும் தமிழ் மக்களை நடைமுறை ரீதியாகவும் உணர்வுமட்டத்திலும் பெரிதும் பாதித்தன. வறண்ட பகுதியில் வாழ்ந்து கொண்டு கல்வியறிவின் மூலமாக மட்டுமே தங்களை நிலைநாட்ட முடியும் என்ற நிலையிலிருந்த தமிழ் மக்களுக்கு கல்வி உரிமையையே பறிப்பது என்ற அரசின் நடவடிக்கை கடும் அதிர்ச்சியை தந்தது. மேலும் ஆட்சி மொழிக் கொள்கை உணர்வு ரீதியில் தமிழ் மக்களை மிகப் பெரிதாக பாதித்தது.
கல்விக்காக நாடுவிட்டு நாடு செல்லும் துயரம்
இந்த நிலையில் இலங்கை தமிழ் மக்களில் வசதியுடையவர்கள் தங்களது பிள்ளைகளை கல்விக்காக இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பினர். தரமான கல்விபெற வேண்டி ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாடு செல்வது என்பது இயல்பாகவே எல்லா நாடுகளிலும் காணப்படக் கூடிய ஒரு நடைமுறை, ஆனால் தங்கள் நாட்டிலேயே தரமான கல்வி பெறுவதற்கு ஏற்ற நிறுவனங்கள் இருந்தும்கூட அதே வகை கலை மற்றும் விஞ்ஞான கல்வியைப் பயில்வதற்காக தனது நாட்டைவிட்டு அண்டைநாட்டுக்கு சென்றாக வேண்டும் என்ற அரசு ஏற்படுத்திய நிர்ப்பந்த நிலை அந்த மாணவர் மற்றும் அவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை இயல்பாகவே ஏற்படுத்தியது. அவர்களைத் தவிர பொருளாதார வசதியின்மை காரணமாக படிப்பதற்காக தகுதி இருந்தும் தங்களை ஒத்த சிங்கள மாணவர்களைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாது கல்வியை இழந்து நிற்கும் மாணவர்களின் மனநிலை இன்னும் எவ்வளவு கொதிப்படைந்ததாக இருக்கும். இச்சூழ்நிலைகளே தமிழ் மக்களிடையேயும் இன உணர்வினைப் பெருமளவு தூண்டியிருந்தது.
தமிழர் விடுதலை முன்னணி
இந்த மோசமான வளர்ச்சிப் போக்குகள் தமிழர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக இருந்தன. அந்த அமைப்புகள் அவற்றிற்கு இருந்த பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டே இப்பிரச்னையை எடுக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு தனிநாடு கோரிக்கையை எழுப்புவதில் பெரும் சிக்கல் இருந்தது. நாடு முழுவதும் விரவிக்கிடந்த தமிழர்களின் நலன் தனிநாடு கோரிக்கையை எடுத்த எடுப்பில் முன்வைப்பதன் மூலம் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலை அவர்களின் கரங்களைப் பெருமளவு கட்டிப் போட்டது.
அது மட்டுமல்ல தமிழர்களில் வளர்ச்சியடைந்த பகுதியினர் தங்களது தொழில் வாய்ப்புகளுக்கு தமிழர் பகுதிகளோடு இலங்கை போன்ற ஒரு பெரிய சந்தையைக் கொண்ட நாடு இருப்பது அவசியம் என்றும் கருதினர். எனவே தமிழர் விடுதலை முன்னணி கோட்பாடு ரீதியான தேசிய சுயநிர்ணய உரிமை கேள்வியை முன்வைக்காமல் பல சமயங்களில் தங்களுக்கு சலுகை அளிக்க முன்வரும் சிங்கள ஆளும் வர்க்க கட்சிகளுடன் நேரடி அல்லது இலைமறை காய்மறை உறவு வைத்துக் கொள்வதன் மூலமே இப்பிரச்னைகளுக்கான தீர்வினைப் பெற விரும்பின. அந்த அடிப்படையில் ஒரு வரம்பிற்குட்பட்ட சமூக இயக்கத்தை அதுவும் நாடாளுமன்ற அரசியலில் பயன்படும் விதத்திலேயே அவர்கள் கையில் எடுத்தனர்.
அத்தகைய இயக்கங்களுக்கு செவிமடுத்து ஒருபுறம் அரசியலுக்காக இனவேற்றுமையை வளர்த்தாலும் மறுபுறம் அத்தகைய நடவடிக்கை முழு சமூக அமைதியையே பாதிக்கும் அளவிற்கு சென்றுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தமிழ் அமைப்புகளின் கோரிக்கைகள் சிலவற்றை பரிசீலிக்கும் நிலையிலிருந்த சில சிங்கள ஆட்சியாளர்களுக்கு பல எதிர்ப்புகள் சிங்கள தீவிரவாத அமைப்புகளால் உருவாக்கப்பட்டன.
சிங்கள வெறிவாத புத்தபிக்குகள்
சிங்கள தீவிரவாத அமைப்புகள் என்று கூறும்போது அதில் மிக முக்கியமானது இலங்கை புத்தபிக்குகளின் அமைப்பாகும். இலங்கை புத்த மதத்தில் பெரும் பகுதியினர் புத்த மதத்தின் 'மகாயன' பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் 'ஹினாயன' பிரிவை சேர்ந்தவர்கள். அந்த அடிப்படையில் அவர்கள் சமூக அக்கறை இல்லாதவர்கள்; குறுகிய தன்னலவாத மனநிலை கொண்டவர்கள் .அவர்களைப் பொறுத்தவரை மதரீதியாக தங்களிடம் இருந்து வேறுபட்ட ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகையும் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. உபதேசிக்கும் போது தங்களது மதக்கோட்பாடு 'அஹிம்சை' என்று அவர்கள் கூறிக் கொண்டாலும் அதன்படி பூச்சி புழுக்களுக்குக்கூட தீங்கு செய்யாதவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டாலும் நடைமுறையில் மனித கொலைகள் கூடச் செய்பவர்களாகவே அவர்கள் இருந்தனர்.
பல தமிழர் விரோத வன்முறை சம்பவங்களில் அவர்கள் முன்னணியில் இருந்தனர். இலங்கையின் ஜனாதிபதிகளிலேயே மிக உயர்ந்தவராக மதிக்கப்படும் திரு.பண்டாரநாயகா புத்தபிக்கு ஒருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்து அதன் காரணகர்த்தாவாக இருந்தவர் என்ற அடிப்படையில் புத்த மதத்தின் வேறொரு முக்கியமான புத்தத் துறவி ஆயுள்தண்டனை அனுபவித்து வந்தார்.
இது தவிர கொழும்பில் நடைபெற்ற ஒரு தமிழர் மாநாட்டை சீர்குலைக்கும் விதத்தில் மாநாடு நடந்த அரங்கை சுற்றிலும் இளம் புத்தபிக்குகள் பலர் நின்று கொண்டு கல்வீச்சில் ஈடுபட்டு அந்த மாநாட்டையே நடைபெறவியலாமல் செய்த - எந்த மதத்தின் அடிப்படை உணர்விற்கும் ஒத்துவராத செயல் அங்கு புத்தத் துறவிகளால் அரங்கேற்றப்பட்டது.
உலக அளவில் முதலாளித்துவம் மிகவும் பிற்போக்கானதாக ஆகிவிட்ட நிலையில் தோன்றி வளர்ந்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் முதலாளித்துவ-ஜனநாயகம் அரைவேக்காட்டுத் தன்மை கொண்டதாகவே இருந்தது. மதத்தை அரசியலில் இருந்து பிரிப்பது என்ற ஜனநாயகத்தின் மிக அடிப்படையான கோட்பாடு இந்நாடுகளில் அமுலாகவில்லை.
மக்களின் பின்தங்கிய மனநிலை காரணமாக மதவாத எண்ணப்போக்குகளும் மதப்பிரச்சாரகர்களின் மேல் குருட்டுத்தனமான அபிமானமும் மரியாதையும் மிகுந்தே இருந்தன. இதனை மையமாகக்கொண்டு மதவாதிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கினை இவ்விருநாட்டு அரசியல் களத்திலும் செலுத்தினர்; இன்னும் செலுத்திக் கொண்டும் உள்ளனர். இலங்கையின் இனப்பிரச்னை இத்தனை கடுமையாக ஆனதற்கு அந்நாட்டின் புத்த மத நிறுவனமும் ஒரு முக்கிய காரணமாகும்.
இனவெறி பாதையில் இடதுசாரி ஜே.வி.பி.
இது தவிர சில சிங்கள இடதுசாரி தீவிரவாத அமைப்புகளும் தமிழ்விரோத மனநிலையை வளர்த்து வந்தன. அவைகளில் மிக முக்கியமான அமைப்பு ரோகன விஜயவீராவின் ஜே.வி.பி என்று அழைக்கப்படும் "ஜனதா விமுக்தி பெருமனா' என்ற அமைப்பாகும். அந்த அமைப்பினர் புத்த பிக்குகளை போல் அல்லாது வேறு காரணங்களுக்காக தமிழ் விரோத மனநிலையை வளர்த்தனர். ஒருபுறம் தமிழர்களின் அவர்களது மக்கள் தொகை விகிதத்திற்கு அதிகமான வளர்ச்சி சிங்கள இளைஞர்களை குழப்பி அவர்களது மனதில் தமிழ் விரோத எண்ணத்தை உருவாக்குவதற்கு ஜே.வி.பி-யால் பயன்படுத்தப்பட்டது.
அது தவிர தனது அண்டைநாடான இந்தியாவின் மேலாதிக்க மனப்பான்மையும் அதன் செல்வாக்கு மண்டலத்திற்கு இலங்கையைக் கொண்டுவர அது மேற்கொள்ளும் முயற்சிகளும் ஜே.வி.பி அமைப்பினால் கடுமையான வெறுப்புடன் பார்க்கப்பட்டன. அதன் காரணமாக அந்த அமைப்பு குறிப்பாக மலையகத் தமிழர்களை இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகள் என்று பார்த்தது.
ரோகன விஜயவீரா மாஸ்கோ பல்கலைகழகத்தின் மாணவராக இருந்த போதிலும் கம்யூனிஸ்ட அரசியலில் ஈடுபாடு உடையராக தன்னைக் காட்டிக் கொண்ட போதிலும் சேகுவாரோவை தனது ஆதர்ச புரட்சியாளராக அறிவித்துக் கொண்டிருந்தாலும் அவருடைய அரசியல் பக்குவமற்ற பார்வையினை மலையகத் தமிழர்கள் குறித்த அவருடைய அணுகுமுறை கேவலமாக வெளிக்காட்டியது. நிலவிய முதலாளித்துவ அரசியலில் குறுக்குவழியில் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக அவர் சிங்கள தேசிய வெறி உணர்வினை தனது அமைப்பின் உணர்ச்சிபூர்வ பிரச்சாரங்களின் மூலமாக அதாவது இங்கு சில இடதுசாரி அமைப்புகள் தமிழ் இன உணர்வினை தூண்டும் விதத்தில் தூண்டினார்.
போராளி அமைப்புகளின் உதயம்
இந்த அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகவும் இலங்கையை அடுத்தடுத்து ஆண்ட கட்சிகள் தமிழர் பிரச்னையை ஓரளவேனும் தீர்க்க எடுத்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இதன் விளைவாக தமிழ் இளைஞர்களின் மனதில் ஒரு கடுமையான வெறுப்பும் விரக்தியும் மேலோங்கி நின்றது. தமிழர் விடுதலை முன்னணி போன்ற நாடாளுமன்றவாத கட்சிகள் கடைபிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்துடனான சமரசப்போக்கு அவர்களுக்கு உடன்பாடானதாக இல்லை. எனவே அவர்களது குட்டி முதலாளித்துவத் தன்மை வாய்ந்த மனக்கொதிப்பினை உரியவிதத்தில் பிரதிபலித்த பல இளைஞர் அமைப்புகள் உருவாயின.
அவற்றில் மிக முக்கியமானது "பிளாட்' என்ற அமைப்பாகும். அந்த அமைப்புகள் தமிழ் உரிமைக்காக ஒருபுறம் போர்க்குணம் மிக்க போராட்டங்களை நடத்தியதோடு அப்பாவி தமிழ் மக்கள் இராணுவத்தால் தாக்கப்படும் போது அதனை எதிர்த்து தாக்கவும் செய்தனர். இந்த போக்குகள் இதை ஒத்த வேறுபல அமைப்புகள் உருவாவதற்கும் வழிவகுத்தன.
இந்தியா-இலங்கை உறவு
வெளிப்படையாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அத்தனை பெரிய பூசல் நிலவுவது போன்ற சூழ்நிலை தெரியாதிருந்த போதிலும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு விரிசல் என்பது இருந்து கொண்டே இருந்தது. அதற்கு பொருளாதார, அரசியல் ரீதியான காரணங்கள் பல இருந்தன. பொருளாதார ரீதியாக இந்திய அரசு இந்திய ஏகபோகங்களின் வசம் குவிந்திருந்த உபரி மூலதனத்திற்கு முதலீட்டுத்தளம் தேடும் வேலையில் ஈடுபட்டிருந்தது. அந்த மூலதனத்தை அது தென்கிழக்கு ஆசியாவில் தன்நாட்டை சுற்றியிருந்த சிறு நாடுகளில் பெருமளவு செய்வதே சுலபமானது என்று அது கருதியது. அப்படிப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருந்தது. எனவே இலங்கையை அது தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்க விரும்பியது.
ஆனால் சிங்கள மக்களின் மனநிலை இந்திய நாடு, அதன் ஒரு தேசிய இனமாக தமிழர்களைக் கொண்டிருந்ததையும் அதே தமிழ் இனத்தை சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான தங்கள் நாட்டின் மக்கட்பகுதி இருந்ததையும், தங்களது கல்வி ரீதியான வளர்ச்சியோடு கோடிக்கணக்கான தங்கள் இன மக்கள் அருகில் இந்திய நாட்டில் இருக்கிறார்கள் என்பதால் பெருமிதத்துடன் இருப்பதையும் ஒருவித எரிச்சலுடன் பார்த்தது. அத்துடன் நாம் ஏற்கனவே பார்த்தது போல் இலங்கையின் ஜே.வி.பி. போன்ற அமைப்புகள் தமிழர்களை இந்தியா தனது ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஒரு சாதனமாக பயன்படுத்துகிறது என்ற எண்ணப்போக்கையும் பரப்பிவிட்டிருந்தன. இதன் விளைவாக இலங்கையின் ஆட்சியாளர்கள் தங்களுக்கு தேவையான பொருளாதார உதவி போன்றவற்றை பெறுவதற்கு இந்தியாவை தவிர்த்த வேறு பிரிட்டன், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளையே நாடினார்கள்.
போராளி குழுக்களுக்கு இந்தியா அளித்த ஆதரவு
இந்த மனநிலையில் இருந்த இலங்கையை தன் வழிக்குக் கொண்டுவர இந்தியா விரும்பியது. இலங்கையில் தோன்றிய இனப்பிரச்னை அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு ஏற்ற கருவியாகப் பயன்பட்டது. இந்திய அரசு, இலங்கைத் தமிழரிடையே தோன்றிய போர்க்குணமிக்க அமைப்புகள் பலவற்றிற்கு பல்வேறு வகையான உதவிகளை தனது இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செய்யத் தொடங்கியது. தமிழ்நாட்டின் பல இடங்களில் அந்த அமைப்புகள் பயிற்சி முகாம்கள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அவற்றிற்கு ஆயுத உதவியும் செய்தது.
இதன் விளைவாக இலங்கை அரசிற்கு தோன்றிய சிக்கல் இன்னும் தீவிரமாகியது. இவ்வாறு இந்திய அரசு இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கு உதவி வழங்கியதும், ஆயுதங்கள் அளித்ததும் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தில் பெருமளவு நடைபெற்றன. இது அத்தனை இரகசியமாக செய்யப்படவில்லை. இந்த நடவடிக்கை சிங்கள தமிழ் இன வேறுபாட்டினை இன்னும் அதிகப்படுத்தி சிங்களர் மத்தியில் தமிழ் வெறுப்புணர்வை மேலும் அதிகப்படுத்தியது.
மாகாண கவுன்சில்கள்
இந்த கட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்களும் சில வகையான தீர்வுகளுக்கு வர உடன்பட்டனர். அதாவது மாவட்ட வாரியான கவுன்சில்கள் அமைத்து அவற்றிற்கு சில அதிகாரங்கள் வழங்க அவை முன்வந்தன. அதன் மூலம் அதிகார பகிர்வு என்பது ஓரளவு தமிழர் வசிக்கும் பகுதிகளிலும் தமிழர்களுக்கும் கிடைக்கும். அது நாம் முழுக்க முழுக்க சிங்களர்களால் ஆளப்படுகிறோம் என்ற தமிழ் மக்கள் கொண்டிருந்த உணர்விலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் என்று எண்ணினர்.
ஆனால் தமிழர் பகுதிக்கு மட்டும் இந்த அதிகாரப்பகிர்வினை கொடுத்தால் அது தமிழ் ஆதரவு போக்கு என்ற உணர்வினை சிங்கள மக்களிடம் ஏற்படுத்திவிடும் என்பதால் நாடு முழுவதிற்கும் அமலாக்கப்பட்டது. மொத்தத்தில் 12 மாவட்ட கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் மூன்று மாவட்ட கவுன்சில்கள் தமிழர் வாழும் பகுதிகளில் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் விசித்திரம் என்னவென்றால் தங்களுக்கு மாவட்ட கவுன்சில்கள் வேண்டும் என்று சிங்கள மக்கள் கோராமலேயே அவர்களுக்கு மாவட்ட கவுன்சில் கிடைத்ததுதான்.
இதுபோன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மனதில் அவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டதாலும் மொழி உணர்வு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என அறிவிக்கப்பட்டதால் பெரிதும் புண்பட்டிருந்ததாலும் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு போதிய மருந்தாய் இல்லை. எனவே போர்க்குணமிக்க இளைஞர் நடவடிக்கைகள் தமிழ் பகுதிகளில் மென்மேலும் அதிகரித்தன. இந்த நடவடிக்கைகளை இராணுவ ரீதியாக எதிர்கொள்வதற்கு அரசிற்கு பெரும் இராணுவ செலவு ஏற்பட்டது. அதனால் பணவீக்கமும் விலைஉயர்வும் இலங்கையின் பொருளாதாரத்தை வாட்டி வதைக்கத் தொடங்கின.
கருப்பு ஜீலை
இந்நிலை ஒட்டு மொத்தமாக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை இலங்கையின் ஆட்சியாளர்கள் மேல் தோற்றுவித்தது. மக்கள் ஏறக்குறைய வெடித்துக் கிளம்பும் கிளர்ச்சி மனநிலையுடன் இருந்தனர். இந்நிலையில்தான் இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கோரமான கருப்பு ஜுலை என அழைக்கப்படும் ஜுலை 23 - 1983 சம்பவங்கள் ஜெயவர்தனா அரசால் திட்டமிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் அவர்களுக்குள் இன பிளவினையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தூண்டிவிடப்பட்டன.
அன்று யாழ்ப்பான நகருக்கு வெளியே ரோந்து சென்று கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் ஜீப் ஒன்றில் குண்டு வெடித்ததில் இரண்டு சிங்கள ராணுவ வீரர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அப்போது அந்த ஜீப்பிற்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ராணுவ வாகனங்களில் வந்த ராணுவ வீரர்கள் வாகனத்திலிருந்து இறங்கி குண்டு வெடித்ததற்கு காரணமானவர்களைத் தேடிய போது எல்.டி.டி.ஈ அமைப்பினருக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதில் 13 சிங்கள , ராணுவ வீரர்களும் ராணுவ அதிகாரிகளும், விடுதலைப் புலிகள் சிலரும் உயிரிழந்தனர்.
இத்தாக்குதல் எல்.டி.டி.ஈ தளபதி கிட்டுவால் நடத்தப்பட்டது. உயிரிழந்த சிங்கள ராணுவ வீரர்களின் உடலைத் தகனம் செய்வதற்காக கொழும்பிற்குக் கொண்டு சென்று அங்கு மக்களின் பார்வைக்கு அவற்றை வைத்து அப்போது ஆட்சியிலிருந்த ஜெயவர்தனே தலைமையிலான யு.என்.பி அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கொலை வெறித்தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. தலைநகர் கொழும்பில் தொடங்கிய இத்தாக்குதல் படிப்படியாக கல்லி, மாதரை, கம்பலா, நாவலப்பிட்டி, புசல்வா, கண்டி, நுவரேலியா, பதுல்லா, அனுராதபுரம் என அனைத்து இடங்களுக்கும் பரவியது. பல தமிழருக்குச் சொந்தமான வீடுகளும், வியாபார நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்களில் பயணம் செய்தவர்கள் வாகனங்களோடு சேர்த்து வைத்துக் கொளுத்தப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக வெளிக்கடைச் சிறையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடைக் காவல் கைதிகளாக இருந்த 53 தமிழர்கள் சிங்களக் கைதிகளால் கொலையுண்டனர். தமிழ் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைகளின் சாவிகளை எளிதில் சிங்களக் கைதிகள் எடுக்கும் வண்ணம் சிறைக்காவலர்கள் வைத்திருந்து தாக்குதலுக்கு உதவினர். நாடுமுழுவதும் நடந்த தாக்குதல் அனைத்தையும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆளும் யு.என்.பி. கட்சியினர் கலவரக்காரர்களோடு கைகோர்த்துச் செயல்பட்டனர். ஒட்டு மொத்தத்தில் இக்கலவரத்தில் 3000 பேர்வரை உயிரிழந்ததாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் கூறின. 18000 வீடுகளுக்கு மேல் சேதமடைந்தன. தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களும் கலவரக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.
ஜீலை 23 அன்று தொடங்கிய கலவரத்தை 29ம் தேதி வரை முழுவீச்சில் நடக்க அனுமதித்துவிட்டு 29ம் தேதியன்று கலவரத்தைக் கட்டுப்படுத்த என்று துப்பாக்கிச் சூடு ஒன்றினை நடத்தி கலவரத்தை அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது. அத்துப்பாக்கிச் சூட்டில் 15 சிங்கள கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். சிங்கள வெறியர்கள் இத்தகைய மிருகத்தணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தாக்குதலுக்கு ஆளாகி ஒளிய இடமின்றி அலைந்த பல தமிழர்களுக்கு சாதாரண சிங்கள மக்கள் பலரும், முஸ்லீம் குடிமக்களும் புகலிடம் தந்து காப்பாற்றினர்.
ஆயிரக்கணக்கில் இக்கலவரத்தில் தமிழ் மக்கள் கொலையுண்டதோடு அவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளும் சூறையாடவும், களவாடவும்பட்டன. பல லட்சகணக்கான மக்கள் அரசு முகாம்களில் தஞ்சமடைந்தனர், லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து குவிந்தனர்.
இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யாமல் வைத்திருந்து அதனை கொழும்பிற்கு கொண்டு சென்று மக்களின் பார்வைக்கு வைத்து அதன்மூலம் தமிழ் எதிர்ப்பு வெறி உணர்வினை எவ்வளவு தூரம் தூண்ட முடியுமோ அவ்வளவு தூரம் தூண்டி இலங்கை வரலாற்றின் களங்கமாய் இன்றும் என்றும் விளங்கப்போகும் இரத்தக்களரியை சிங்கள வெறிவாத அமைப்புகளின் துணையோடு இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனே கிளப்பிவிட்டார்.
இந்தியா, இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு முகாம்கள் அமைக்கவும் இராணுவ பயிற்சி பெறவும் அனுமதி அளித்த வேளைகளில்கூட தமிழ்நாட்டின் சாதாரண மக்கள் இலங்கை தமிழர் பிரச்னை பற்றியோ அங்கு நடந்துவரும் இன ஒடுக்குமுறை அதற்கு எதிரான போராட்டம் ஆகியவை குறித்தோ பெரிதும் அறியாதவர்களாகவே இருந்தனர். ஆனால் 1983ல் இலங்கையில் அரசின் திட்டமிட்ட சதியினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர் மீதான வன்முறை முன்னெப்போதும் கண்டிராத அளவில் ஒரு சகோதரத்துவ உணர்வினை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
தமிழக மக்களின் சகோதரத்துவ எழுச்சி
இலங்கை தமிழருக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழ் அமைப்புகளுக்கு நன்கொடைகள் குவிந்தன. இலங்கை தமிழ் அமைப்புகள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கண்காட்சிகள் நடத்தி இலங்கை தமிழ் மக்களின் அவல நிலையினை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டுவந்தன. மறைந்த திரு. ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்கள் இலங்கை தமிழர் போராட்டத்தினை மார்க்சிய அடிப்படையிலும் விளக்கிக் கூறினர். அயர்லாந்து விடுதலை இயக்கத்தை மார்க்ஸ் ஆதரித்து எழுதியது இலங்கை தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக மேற்கோளாகக் காட்டப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் இலங்கை தமிழர் விடுதலை எழுச்சியின் மிக ஆக்கபூர்வமான தோற்றம் பொலிவுடன் உலகெங்கிலும் தூக்கி நிறுத்தப்பட்டது.
இலங்கை அரசியல் வரலாற்றிலும் இக்காலகட்டம் ஒரு மிக முக்கிய திருப்பு முனையாக இருந்தது. அதாவது அதுவரை பிளாட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற ஆயுதம் தாங்கிய அமைப்புகள் டி.யு.எல்.எப் என்ற ஆயுதமேந்தாத தமிழ் ஆதரவு அரசியல் இயக்கத்தோடு எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை ஆயுதம் தாங்கிய பூசல்களின் மூலமாக வெளிகாட்டாமல் செயல்பட்டுவந்தன. ஆனால் 1983 கலவரங்களுக்கு பின்பு தமிழர் போராட்டத்தின் தலைமை எல்.டி.டி.ஈ அமைப்பின் கரங்களுக்கு பிரதானமாக சென்றுவிட்டது. அதாவது இன்னும் சரியாக கூறுவதானால் இயக்கத்தின் தலைமை எல்.டி.டி.ஈ அமைப்பின் துணிச்சல்மிக்க ஆயுத நடவடிக்கைகளால் தட்டிபறிக்கப்பட்டது.
மக்கள் இயக்க பின்னணி இல்லாமல் உருவான எல்.டி.டி.ஈ.
எந்த ஒரு நாட்டிலும் எந்தவொரு ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியும் அதனால் பயன்பெரும் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ள - பரந்துபட்ட மக்களின் போராட்ட வலிமையினைப் பறைசாற்றவல்ல- இயக்கங்களின் பின்னணியிலேயே நடைபெற்றுள்ளன. ஆனால் இலங்கையை பொறுத்தவரை எல்.டி.டி.ஈ தலைமை இலங்கை தமிழ்மக்களின் போராட்டத்தில் தலைஎடுத்த நாள் முதற்கொண்டு சாதாரண தமிழ் மக்களின் ஒற்றுமையினை சாத்வீக முறையில் இயக்கங்கள் மூலம் பறைசாற்றும் போக்கு படிப்படியாக மட்டுபடுத்தப்பட்டது. நாளடைவில் அது அறவே இல்லாமலும் போய்விட்டது.
இதற்கிடையில் இந்திய அரசின் ஆதரவோடும் இந்திய தமிழ்மக்களின் மாபெரும் தார்மீக ஒத்துழைப்போடும் இலங்கை அரசை எல்.டி.டி.ஈ-யின் இராணுவ நடவடிக்கைகள் ஆட்டம்காணச் செய்தன. எங்கே தனது ஒட்டுமொத்த செல்லுபடித்தன்மையும் நிலைகுலைந்துவிடுமோ என்று எண்ணிய இலங்கை ஆட்சியாளர்களும் அவர்களின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தனேயும் இப்பிரச்னையில் தலையிட்டு இதன் தீர்வுக்கு இராணுவ, பொருளாதார ரீதியாக உதவக்கோரி இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு படைஎடுக்கத் தொடங்கினர். ஆனால் ஜெயவர்தனே எதிர்பார்த்த ஒத்துழைப்பு அந்நாடுகளில் இருந்து அவருக்கு கிட்டவில்லை.
அந்நாடுகள் அவை முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்புகளாக இருப்பதால் அந்தந்த நாடுகளின் ஏகாதிபத்திய முதலாளித்துவ நலன்களை மனதிற்கொண்டே செயல்படுபவைகளாக இருந்தன. அதாவது இலங்கையை போன்ற ஒரு மிகச்சிறு சந்தை வளத்தை கொண்டுள்ள நாட்டுடன் உறவை மேம்படுத்துவதற்காக இந்தியா போன்ற மிகப்பெரும் சந்தைவளம் கொண்ட முதலாளித்துவ ரீதியில் ஒரு பெரும் பொருளாதார சக்தியாக உருவாகி வளர்ந்துவருகிற நாட்டுடன் ஒரு உரசலை ஏற்படுத்திக் கொள்ள அந்நாடுகள் விரும்பவில்லை. எனவே அந்நாடுகள் இலங்கை ஆட்சியாளர்களை இந்தியா பக்கம் இப்பிரச்னைக்கான தீர்வைக்கோரி அணுகுமாறு தள்ளின. இந்தியாமீது மனப்பூர்வமான எந்த உறவையும் கொண்டிருக்க விரும்பாதவராக இருந்த போதிலும் வேறுவழியின்றி இந்தியாவை அணுக வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியான ஜெயவர்த்தனேக்கு இதனால் ஏற்பட்டது.
வேறுவழியின்றி இந்தியாவை அணுகிய ஜெயவர்த்தனே
இதனைத் தொடர்ந்து இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை அணுகியதன் மூலம் உருவானதே இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஆகும். இதன்படி விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைக்க வேண்டும். கூடுதல் அதிகாரம் கொண்ட மாகாண கவுன்சில்கள் யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் கிழக்கு பகுதியான திரிகோணமலை, பாட்டிகோலா ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஏற்படுத்தப்படும். தமிழ் பிரதேசம் அனைத்திற்குமான மாகாண கவுன்சிலுடன் இணைந்திருப்பதா? இல்லையா? என்பது ஒரு வாக்கெடுப்பின் மூலம் கிழக்குப் பகுதியில் முடிவு செய்யப்படும். சிங்களத்துடன் கூட தமிழும் ஆட்சி மொழியாக நீடிக்கும். ஒரே பிரதேசமாக திகழ்வதா இல்லையா என்பதை மையமாக வைத்து நடைபெறும் பொது வாக்கெடுப்பு இந்தியாவின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் இது போன்றவை இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மிக முக்கிய சரத்துக்களாகும்.
இந்த ஒப்பந்தத்தை டெல்லியில் வைத்து பிரபாகரனை ஏற்றுக்கொள்ளச் செய்த பின்னர் இந்தியா தனது துருப்புக்களை இலங்கைக்கு அனுப்பியது. இந்திய அரசின் பார்வையில் விடுதலைப் புலிகள் வைத்திருந்த ஆயுதங்கள் பலவும் அவர்களால் வழங்கப்பட்டவையே என்ற எண்ணமே இருந்தது. ஆனால் விடுதலைப்புலியினரோ உலக அளவில் தோன்றிவிட்ட பொதுச் சந்தையிலிருந்து பல ஆயுதங்களை வாங்கியிருந்தனர். எனவே இந்திய அமைதிப்படை வசம் அவர்கள் ஒப்படைத்த ஆயுதங்களைக் காட்டிலும் அதிகமான ஆயுதங்கள் விடுதலைப்புலிகளின் கைவசம் இருந்தன.
டெல்லியில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக் கொண்டார் என்று முன்வைக்கப்பட்ட கருத்துக்கு மாறாக யாழ்ப்பாணம் சென்றதும் ஒரு மிகப்பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தனக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை வெளிப்படுத்தி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கு பிரபாகரன் பிள்ளையார்சுழி போட்டார்.
சிங்களர்-தமிழர் இருவராலும் ஆக்கிரமிப்பு படை என்று பார்க்கப்பட்ட இந்திய அமைதிப்படை
இதே சமயத்தில் இப்படிப்பட்ட ஒரு நிர்ப்பந்த நிலையை உருவாக்கி தனது மேலாதிக்கப் போக்கை நிலைநாட்டும் ஒரு ஒப்பந்தத்தை இலங்கையை தன்னுடன் செய்து கொள்ள செய்ததற்கு சிங்கள மக்களிடையே மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளரான பிரேமதாசாவிடமும் கடும் வெறுப்பும் எதிர்ப்பும் ஏற்பட்டன. அச்சமயத்தில் பிரமதாசா இந்திய அமைதிப்படையை எதிர்த்து போரிட விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தார்.
இந்திய அமைதிப்படை தமிழர்-சிங்களர் என்ற பாகுபாடு இன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்கள் அனைவராலும் ஒரு ஆக்கிரமிப்பு படை என்றே பார்க்கப்பட்டது. வழக்கமாக அனைத்து முதலாளித்துவ அரசுகளும் பராமரிக்கும் இராணுவங்கள் எத்தகைய மனநிலையோடு செயல்படுமோ அத்தகைய மனநிலையுடனேயே இந்திய இராணுவமும் இலங்கையில் செயல்பட்டது. ஒருபுறம் அதன் செயல்பாடு குறித்து பல புகார்கள் எழுந்தன.
மறுபுறம் அதற்கு தலைமை ஏற்ற இந்திய இராணுவ தளபதிகள் ஒரு கையையும் காலையும் கட்டிக்கொண்டு சண்டையிடுவது போன்ற ஒரு சண்டையில் தாங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளோம் என்று கூறினர். அதாவது பொது மக்களுக்கு தீங்கெதுவும் இழைக்க கூடாது என்று பொதுவாக இந்திய அமைதிப்படையினருக்கு கொடுக்கப்பட்டிருந்த அறிவுரை குறித்தே அவர் அவ்வாறு கூறினார். இந்த நிலையில் இந்திய அமைதிப் படை அங்கு எதற்காக அனுப்பப்பட்டதோ அந்த நோக்கத்தை அதனால் நிறைவேற்ற முடியவில்லை.
இங்கு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உண்மையிலேயே செயல்பட்ட அமைப்புகளும் அதனை தங்களது தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக ஆதரித்தவர்களும் பல்வேறு பக்குவமற்ற கோரிக்கைகளை இந்த விசயத்தில் முன் வைத்து வந்தனர். அவர்கள் பலரின் கோரிக்கை இந்தியா-இலங்கைப் பிரச்னையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்பதில் தொடங்கி தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக இந்தியா தனது இராணுவத்தையே அனுப்ப வேண்டும் என்பது வரை சென்றது.
ஆனால் இந்தியா மட்டுமல்ல எந்தவொரு முதலாளித்துவ நாடும் அது பிறநாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளை ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை மனதிற்கொண்டே பேணவும் பராமரிக்கவும் செய்யும். அது தன்னாட்டு முதலாளிகளின் பொருட்கள் விற்பனையாவது மற்றும் அதன் மூலதனம் அங்கு முதலீடு செய்யப்படுவது என்ற நோக்கினைக் கொண்டதாகவே அடிப்படையில் இருக்கும். இந்த அடிப்படை புரியாததாலோ அல்லது புரிந்திருந்தும் அரசியல் ஆதாயம் கருதி வெளிப்படுத்தாமலோ தமிழகத்தில் செயல்பட்ட அனைத்து தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகளும் இந்தியாவில் முகாம்கள் அமைத்து செயல்பட தமிழ் ஈழ அமைப்புகளுக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்தபோது அகமகிழ்ந்தன. அடுத்து இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரின.
இந்தியஇலங்கை ஒப்பந்தத்தின்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது சிங்கள இராணுவத்துடன் போரிட்டு தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக அனுப்பப்படவில்லை. மாறாக அது அங்கு செயல்பட்ட தமிழீழ ஆயுதம் தாங்கிய குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்கவே அனுப்பப்பட்டது. இந்த நிலையில் முதலில் சிலகாலம் வாயடைத்துப்போயிருந்த தமிழக மக்களிடம் சிறிது காலம் கழித்து ஐ.பி.கே.எப்ற்கு எதிரான ஒருவகை எதிர்ப்பும் தலைதூக்கத் தொடங்கியது. இந்நிலையில் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அமைதிப்படை தனது நோக்கத்தை நிறைவேற்றாமல் நாடு திரும்ப வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை.
சூழ்நிலை இத்தனை நெருக்கடி சூழ்ந்ததாக ஆன நிலையில் விடுதலைப்புலிகளைத் தவிர தமிழ் ஈழத்திற்கான போராட்டக்களத்தில் யாரும் இல்லை என்றநிலை படிப்படியாக விடுதலைப்புலிகளால் ஏற்படுத்தப்பட்டது. தமிழ் விடுதலை முன்னணியும் இலங்கை ஆட்சியாளர்களை சார்ந்து நின்று அவர்களில் ஒரு பிரிவினர் மாற்றி மற்றொரு பிரிவினரை மாறிமாறி ஆதரித்து சில சலுகைகளை கூடுதலாகப் பெறுவதில் ஆர்வமுள்ளதாக இருந்ததேயன்றி அதனால் சரியான தருணங்களைக்கூட பயன்படுத்த முடியவில்லை.
தருணங்களைத் தவறவிட்ட விடுதலை முன்னணி
இலங்கையின் ஆளும்கட்சி தவிர பிற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு தேர்தலை பகிஷ்கரித்த சமயத்தில் தமிழர் விடுதலை முன்னணி மட்டும் அத் தேர்தலில் பங்கேற்றது. அத்தேர்தலில் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த சிங்கள மக்கள் அங்கு போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களுக்கு ஏகோபித்து வாக்களித்தனர். அது மட்டுமின்றி மாகாண சுயாட்சி பெறும் விதத்தில் சிரிமாவோ பண்டாரநாயகா கொண்டுவந்த வடக்குப் பகுதியையும் கிழக்குப் பகுதியையும் ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு ஆதரவாக அது அணிதிரண்டிருக்கலாம். அதன் மூலம் சாதாரண சிங்கள மக்கள் மற்றும் அதன் ஒரு பெரும் அரசியல் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து தங்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுத்திருக்கலாம். அப்போது அதை செய்ய டி.யு.எல்.எப். தலைவர்கள் தவறிவிட்டார்கள். விடுதலைப் புலிகளின் தலைமை நிலைநாட்டப்பட்டதற்கு பின்பு அதன் பிரமிக்கத்தகுந்த வெற்றிகளால் பரவசம் அடைந்த தமிழ் மக்களும் இந்த தமிழர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளைக் கண்டுகொள்ளவில்லை.
விடுதலைப் புலிகளிடம் தோன்றிய கோளாறுகள்
இந்த நிலையில் அதிகாரம் முழுவதும் தங்களது கரங்களிலேயே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் ஈழத்திற்காக போரிட்ட பல குழுக்களின் தலைவர்களை கொலை செய்து அவர்களின் அமைப்புகளை நிர்மூலமாக்கும் வேலையை விடுதலைப் புலிகள் அமைப்பு செய்யலாயிற்று. இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் முழுவதையும் விடுதலைப்புலிகள் தங்கள் கைவசம் வைத்திருந்தனர். ஆனையிரவைத்தாண்டி இலங்கை இராணுவமும் அதன் நிர்வாகமும் நுழைய முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
போருக்கு ஆகும் செலவுகளை ஈடுகட்ட யாழ்ப்பாணப்பகுதியின் வசதிபடைத்த மக்களிடம் பெரும் தொகைகள் வசூலிக்கப்பட்டன. பொதுவாக மக்கள் இயக்கப்பின்னணி தொடர்ச்சியாக இல்லாது ஆயுதப் போராட்டத்தை மட்டும் நம்பியிருக்கும் அமைப்புகளிடம் தோன்றும் கோளாறுகள் பல விடுதலைப்புலிகளிடம் தோன்ற ஆரம்பித்தன. குருட்டுத்தனமான சிங்கள எதிர்ப்பு வெறியினைப் பரப்பி அதன் மூலம் அனைத்து சாதாரண அப்பாவி சிங்கள மக்களையும் தமிழர்களின் எதிரிகளாகப் பாவிக்கச் செய்வது, அவ்வப்போது தற்கொலைப் படைத் தாக்குதல்களால் அப்பாவி சிங்கள மக்களின் மரணத்திற்கு வழிவகுப்பது, தத்துவார்த்த சகிப்பு தன்மையின்றி போராடும் பிற தமிழ் குழுக்களைக் கையாள்வது, தாங்கள் எதையும் செய்ய முடிந்தவர்கள் என்று காட்டும் விதத்தில் உயர் பதவிகளில் உள்ளோரைக் கொலை செய்வது போன்றவை அவ்வமைப்பில் தோன்றி வளர்ந்த கோளாறான போக்குகளாகும்.
மக்கள் இயக்கப் பின்னணியினைக் கொண்டவர்கள் வழக்கமாக கையாளும் நடைமுறைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் நடைமுறைகள் பலவகைகளில் முற்றிலும் மாறுபட்டிருப்பதையே அவர்கள் செயல்பாட்டு முறையைப் பார்க்கும் போது நம்மால் அறியமுடிகிறது.
இந்திய மண்ணில் விடுதலைக்காக சமரசமற்றுப் போராடிய தியாகி. பகத்சிங் போன்ற மாமனிதர்கள் எப்போதும் தற்கொலைக்கு எதிராக நின்றார்கள் என்பதையே பார்க்கிறோம். தற்கொலை குறித்த அதற்கு எதிரான பகத்சிங்கின் கருத்து அவர் சுகதேவிற்கு எழுதிய கடிதத்தின் மூலம் வெளிப்படுகிறது அதாவது சுகதேவிற்கு விடுதலையோ அல்லது மரணதண்டனையே கிடைக்காமல் போனால் தற்கொலை செய்யும் அவரது எண்ணத்தை அவர் வெளிப்படுத்திய போது அக்கடிதத்தை பகத்சிங் எழுதினார்.
பகத்சிங் போன்றவர்கள் தங்கள் சாவு தாங்கள் படும் துன்பம் இவை அனைத்துமே மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி அதன்மூலம் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் வலுப்பெற வேண்டுமென்றே விரும்பினார்கள். இதற்கு மாறாக விடுதலைப்புலிகள் அமைப்பினர் சையனைடு உண்டு மடியும்அதாவது அவர்களின் மரணம் ஒரு வகை விரக்தியை மக்களிடையே தோற்றுவிக்கும் நடைமுறையையே இன்று வரை பின்பற்றி வருகின்றனர். அதாவது ஒரு வகையான ஆயுத வழிபாடு தலைதூக்கி சராசரி மக்களிடம் இருந்து சாவு குறித்த கண்ணோட்டம் உள்பட அனைத்து விசயங்களிலும் அமைப்பு அந்நியப்படும் போக்கு இதனால் உருவாகி வளர்ந்துள்ளது.
விடுதலைப் புலிகள் செய்த வரலாற்றுத் தவறு
இந்த பின்னணியில்தான் விடுதலைப் புலிகளின் அரசியல் வரலாற்றிலேயே மிக அப்பட்டமான தவறான இராஜீவ் காந்தியின் கொலை நிகழ்ந்தது. இது எத்தனை தவறானதென்றால் மக்களின் விடுதலையை இலக்காக கொண்டுள்ள எந்தவொரு சரியான அமைப்பும் உயர்ந்த இலக்குகளற்ற தனிநபர்கள் போல் பழிவாங்கும் மனநிலையில் செயல்பட்டு தனக்கு உயிரூட்டமான சாதக தளமாக உள்ள ஒரு பகுதி மக்களின் ஆதரவினை இழக்கும் விதத்தில் செயல்படவேபடாது; அந்த அடிப்படையில் இராஜீவ் காந்தியின் கொலை விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டிராது என்று பலர் நம்பினர். அப்படி நம்பியவர்களை அதிர்நது போகச் செய்யும் விதத்தில் பிரபாகரனிடம் இருந்தே மறைமுகமான ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வந்தது. அது ஒரு துன்பியல் நிகழ்வு என்று அக்கொலையில் தங்களின் பங்கினை மறுக்காத வகையிலான ஒரு பதிலினை அவர் பின்னர் முன்வைத்தார்.
உலக அளவில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தங்கள்
இராஜீவ் காந்தி அவர்கள் தமிழ் மண்ணில் கொல்லப்பட்ட பின்பு அதற்கு முன்பு விடுதலைப்புலிகள் நிகழ்த்திய பல சகோதர இயக்கங்களின் தலைவர்களின் கொலைகளால் வெறுப்பும் சலிப்பும் கொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை ஆதரிப்பதில் இருந்து பெரிதும் தங்களை விலக்கிக் கொண்டுவிட்டனர் என்றே கூறலாம். அதன் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி வசூல் தமிழக மண்ணில் நடைபெற வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
பல வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைத் தொகைகளை வைத்தே ஆயுதங்கள் வாங்கி ஒரு அரசின் நிரந்தர இராணுவத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இராஜீவ் காந்தியின் கொலையை ஒட்டி இந்தியாவில் தடை செய்யப்பட்ட அந்த அமைப்பு உலகின் வேறுபல நாடுகளாலும் அடுத்தடுத்து தடைசெய்யப்பட்டது. இந்த தடைகள் அவர்கள் சுயேட்சையாக செயல்பட்டு நிதி ஆதாரம் திரட்டுவதைப் பெருமளவு பாதித்தது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து அதன் முக்கிய தளபதிகளில் ஒருவரான கருணா விலகி சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கினார். இது இன்னொரு கட்ட பின்னடைவினை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏற்படுத்தியது.
பின்னடைவுகளை ஈடுகட்ட வல்லவை மக்கள் இயக்கங்களே
பின்னடைவுகளே இல்லாத போராட்டம் என்று எதுவும் இருக்கமுடியாது. ஆனால் அந்த பின்னடைவுகளின் போது அதனால் ஏற்படும் மனச்சோர்விற்கு மருந்தாகி அப்பின்னடைவுகளை முன்னேற்றப்படிகளாக மாற்றவல்லவை பரந்துபட்ட மக்களின் ஆதரவும் பின்னடைவுகளின் போது தோன்றும் பலவீனத்தை ஈடுகட்டும் விதத்தில் மக்களிடம் தோன்றும் எழுச்சிகளுமே ஆகும். ஆனால் அப்படிப்பட்ட மக்கள் எழுச்சியை தட்டி எழுப்பவல்ல ஒரு மக்கள் இயக்கப் பாதையை உரிய முக்கியத்துவம் கொடுத்து விடுதலைப் புலிகள் ஒரு போதும் இலங்கை தமிழ் மக்களிடையே வளர்க்கவே இல்லை. அதனால்தான் இன்று இத்தனை இராணுவ ரீதியான பின்னடைவு அவ்வியக்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட யாழ்ப்பாண தமிழ் மக்களிடம் இருந்தோ கிழக்குப் பகுதி தமிழ் மக்களிடம் இருந்தோ ஒரு பெரும் எழுச்சியோ கிளர்ச்சியோ தோன்றவில்லை.
இங்கு ஒரு வாதம் முன் வைக்கப்படலாம் அதாவது யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் இன மக்கள் துப்பாக்கி முனையில் நிர்வகிக்கப்படுகிறார்கள்; எனவே தான் அவர்கள் தங்களின் எழுச்சி முகத்தை காட்டாதிருக்கிறார்கள் என்று கூறலாம். ஆனால் கடந்த முப்பதாண்டு காலமாக ஆயுதம் தாங்கிய இலங்கை இராணுவத்தினுடனான தங்கள் அமைப்பினரின் சண்டையினை பார்த்துப் பார்த்து பழகிப் போன தமிழ் மக்கள் அச்சத்தினால் அவ்வாறு இருக்கிறார்கள் என்று கூறமுடியாது. மேலும் தனது இராணுவ வலிமையினை ஏறக்குறைய முழுமையாக போர்முனையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திருப்பியுள்ள இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை அத்தகையதொரு அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கக்கூடிய அளவிற்கு ஒரு மிகப் பெரும் இராணுவத்தை மக்களின் சிவில் நிர்வாகத்தில் ஈடுபடுத்தி இருக்கவும் வாய்ப்பில்லை.
இந்நிலையில் அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையை விருப்பு வெறுப்பின்றி புரிந்து கொள்வது இலங்கையின் இனப்பிரச்னைக்கு தீர்வுகாண விரும்பும் அனைவரின் மிக முக்கியக் கடமையாகும். அந்த மனநிலையைப் புரிந்து கொள்வதற்கு இதுபோல் புதிதாக அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று முதலாளித்துவப் பாதையை தேர்ந்தெடுத்த பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளில் சிறுபான்மை தேசிய இனங்களின் நடைமுறையை பார்ப்பது பயன்தருவதாக இருக்கும். அதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டைக் கூறலாம்.
இலங்கை-இந்திய தமிழரின் ஒரே மாதிரி நிலைகள்
விடுதலை பெற்ற காலத்திலேயே ஓரளவு மூலதன திரட்சி பெற்றவராக தமிழ் முதலாளிகள் இருந்தனர். மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் லேவாதேவி செய்ததன் மூலம் அவர்களுக்கு கிடைத்த வட்டி மூலதனமும் இந்த மூலதனத் திரட்சியின் ஒரு குறிப்பிடதக்க பங்கினை ஆற்றியது. அம்மூலதனத்தைக் கொண்டு விடுதலைபெற்ற இந்தியாவில் அவர்கள் புதிதாக ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசு உருவாக்கிக் கொடுத்த ஆதார வசதிகளையும் சலுகைகளையும் பயன்படுத்தி வளரத்தொடங்கினர். அவ்வாறு வளர்ந்து கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு ஒரு அச்சம் தவிர்க்க முடியாமல் தோன்றியது. அதாவது தங்களைக் காட்டிலும் பெரும் மூலதனக் குவியலைக் கொண்டிருக்கக்கூடிய வடஇந்தியாவைச் சேர்ந்த மார்வாரி முதலாளிகளின் மூலதனப் படைஎடுப்பினால் தங்களது நலன் பாதிக்கப்படுமோ என்று அஞ்சினார்கள்.
மற்ற தேசிய இனங்களோடு ஒருங்கிணைந்து வெள்ளையரை எதிர்த்த போராட்டத்தில் தமிழ்மக்கள் ஈடுபட்டு வெள்ளை ஏகாதிபத்தியத்தை நாட்டைவிட்டு விரட்டும்வரை இந்த மார்வாடி முதலாளிகளின் படை எடுப்பால் தங்களது நலன் பாதிக்கப்படும் என்ற எண்ணம் அவர்களுக்கு பெரிதாக தோன்றவில்லை.
ஏனெனில் அந்நிய அரசாங்கம் தொழில் ரீதியாக அனைத்து சுதேசி முதலாளிகளின் வளர்ச்சிக்கும் கொடுத்திருந்த வாய்ப்புகளே குறைவு. ஆனால் விடுதலைபெற்ற பின் சுதேசி அரசாங்கம் ஏற்பட்ட சூழ்நிலையில் அந்த அரசாங்கம் பெரும்பான்மை ஹிந்தி மொழி பேசும் பகுதிகளை சேர்ந்த முதலாளிகளுக்கு சாதகமானதாக ஆகிவிடும் என்ற அச்சம் அவர்களிடையே தோன்றியது. அதன் விளைவாகவே 1952வாக்கில் அரசியல் அரங்கில் புதிதாக முளைத்த திராவிடக் கட்சிகளுக்குவிடுதலைப் போராட்டத்தில் அவர்களுக்கு ஒரு இம்மியளவு பங்குகூட இல்லாதிருந்தபோதிலும் தமிழ் முதலாளிகளின் பிரச்சார சாதனங்கள் முக்கியத்துவம் கொடுத்தன. பல்வேறு தியாகங்களை விடுதலைப் போராட்ட காலத்தில் செய்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் அத்தகு பிரச்சார சாதனங்களால் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டன.
பிராந்திய முதலாளிகளின் இயக்கம்
அத்தருணத்திற்கு ஏற்ற விதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது போன்ற முழக்கங்களை முன்வைத்தது. படிப்படியாக அந்த முழக்கங்களை பெரிதாக்கி தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்தனர். அதை அக்கட்சியின் தலைவர்களுக்கே உரித்தான அடுக்குமொழியில் அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று அறிவித்தனர். இவையனைத்தையும் தங்களுக்கு ஆதரவாக பிராந்திய முதலாளிகளின் ஆதரவு பெருகிவருவதை மனதிற்கொண்டே செய்தனர்.
தமிழ் பிராந்திய முதலாளிகளின் பார்வையோ அவர்களின் குறிக்கோளோ மிகவும் திட்டவட்டமாக இருந்தது. அதாவது அப்போது அகில இந்திய அளவில் பெரிதாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவக் குடும்பங்கள் பதினெட்டு இருந்தன என்றால் அதில் 6 பேர் பார்சி இனத்தைச் சேர்ந்த முதலாளிகளாக இருந்தனர், 6 பேர் மார்வாடி வகுப்பை சேர்ந்த முதலாளிகளாக இருந்தனர். எஞ்சியுள்ள அறுவரில் இருவர் தமிழ் முதலாளிகளாக இருந்தனர். இந்த இரு முதலாளிகளுக்கும் இவர்களின் உற்பததி பொருள்களுக்கு இந்தியா முழுவதும் சந்தை இருந்தது.
எனவே தங்களுக்கு ஆதரவாக முழக்கமிடும் சக்திகள் தீவிர, அதிதீவிர முழுக்கங்களை முன்வைத்த போதெல்லாம் அவற்றை எவ்வாறு தங்களது அகில இந்திய முதலாளிகளுடன் பேரம்பேசுவதற்கான வலுவைக் கூட்டிக்கொள்வதற்காக பயன்படுத்தமுடியும் என்று பார்பதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தனர். அவர்களது நிறுவனங்களும் தங்களது வளர்ச்சி குறித்த ஆவல் மற்றும் வேட்கையுடன் இருந்தன. அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் பெருகிவளர்ந்து வந்த பொது மற்றும் தொழில்நுட்ப கல்விகற்றோர் எண்ணிக்கையாகும். தொழில் வளர்ச்சியில் அவர்கள் பெருமுனைப்பு காட்டியதற்கு வேறொரு காரணமும் உண்டு அதாவது இங்கு வடஇந்தியாவில் ஓடுவதைப்போல் வற்றாத ஜீவநதிகள் எவையும் ஓடவில்லை. எனவே குறைந்த கூலிக்குக் தங்கள் ஆலைகளில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பர் என்பதையும் பயன்படுத்த நினைத்தனர்.
இந்த நிலையில் தனிநாடு கோரிக்கை அவர்களுக்கு கூடுதல் வலிமையை அகில இந்திய ஆட்சியாளர்களுடன் பேரத்தில் ஈடுபடுவதற்கு வழங்கினாலும் உண்மையாகவே தனிநாடு என்பது ஏற்பட்டுவிட்டால் தங்களது மூலதனப்பரவல் தளம் சுருங்கிவிடும் என்றும் அவர்கள் எண்ணினர். இந்நிலையில்தான் தனிநாடு கோரும் கட்சிகள் தடைசெயயப்படும் என்று அன்றைய பிரதமர் நேரு அறிவித்தார். அவர் அறிவித்த உடனேயே எந்தவகையான எதிர்ப்பையும் காட்டாமல் தங்களது தனிநாடு கோரிக்கையை தி.மு.க. கைவிட்டது.
தி.மு.க. இவ்வாறு பிராந்திய முதலாளிகளின் ஆதரவையும் பின்பலத்தையும் பெற்று படிப்படியாக வளர்ந்து வந்த போதிலும் அந்த ஆதரவு வெளிப்படையாக தலைகாட்டி உறுதிப்பட்டது இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரின் போதுதான். அது சாதாரண மக்களாலும் மாணவர்களாலும் தமிழ்நாட்டின் மீதான கலாச்சார படைஎடுப்பு என்று கருதப்பட்டது. உண்மையில் ஆங்கிலத்தை இணைப்பு மொழி ஸ்தானத்தில் இருந்து அகற்றி அவ்விடத்தில் இந்தியைக் கொண்டு வருவதற்காகவே மத்திய அரசின் அதுகுறித்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அகற்றப்படவிருந்த ஆங்கிலம் பிரதானப்படுத்தப்படாமல் இந்தி திணிப்பு தமிழ் மொழிக்கு எதிரான ஒன்று என்ற சித்திரமே முன்வைக்கப்பட்டது.
அதன் விளைவாக பிராந்திய முதலாளிகளின் முழு ஆதரவுடன் தி.மு.க. 1967ல் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் பிராந்திய முதலாளிகளின் சுதிக்கு ஏற்ற விதத்தில் தனது தாளத்தை மாற்றி மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று மாறிமாறி வாய்ப்பந்தல் போட்டு தனது நாடாளுமன்ற அரசியலை தி.மு.க. நடத்திக் கொண்டுள்ளது.
அது மட்டுமல்ல தற்போது ஒரு புது பார்முலாவே உருவாக்கப்பட்டு விட்டது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்றால் எந்தக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சியோடு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறதோ அக்கட்சியே வெற்றிபெறும் என்பதே அந்த பார்முலாவாகும். இந்த அடிப்படையிலேயே லல்லு, முலாயம் போன்றவர்களைப் போல் அல்லாமல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸின் உண்மையான ஸ்தாபன வலிமைக்கு பொருத்தமில்லாத விதத்தில் அதிக இடங்களை தி.மு.க. அக்கட்சிக்கு வழங்கியுள்ளது. இது எதை கோடிட்டு காட்டுகிறது என்றால் பிராந்திய முதலாளிகளின் மூலதனப்பரவல் ஏற்படுவதற்கு ஏற்ற சூழலை நிலவச் செய்வதே பிராந்திய முதலாளிகளின் ஆதரவையும் பின்பலத்தையும் பிராந்திய கட்சிகளுக்குப் பெற்றுத்தரும் என்ற சூழலையே விளக்குகிறது.
ஏறக்குறைய இதைஒத்த நிலைதான் இலங்கையிலும் உள்ளது. தமிழர் விடுதலை முன்னணி (டி.யு.எல்.எப்) நாடு முழுவதும் விரவிக் கிடக்கக்கூடிய தமிழ் மக்களின் நலனை மனதிற்கொண்டும் தமிழ் வியாபாரிகள் மற்றும் கல்விகற்ற அலுவலர்கள் அவர்களது வேலைவாய்ப்பை கருத்திற்கொண்டும் இதைஒத்த அதாவது ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட ஒரு சுயாட்சி அமைப்பை ஏற்படுத்துவதே தமிழ் மக்களின் நலனுக்கு குறிப்பாக தமிழ் முதலாளிகளின் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்ற விதத்திலேயே செயல்பட்டது.
ஆனால் சிங்கள ஆட்சியாளர்களின் பல்வேறு அப்பட்டமான தமிழ் விரோத பிளவுவாத நடவடிக்கைகளால் இளைஞர்களும் மாணவர்களும் வெகுண்டெழும் சூழ்நிலை அங்கு உருவானது. அந்நிலையில் ஆயுதம் தாங்கிப்போராடும் நிலைக்கு வந்துவிட்ட குழுக்களின் கைக்கு தமிழ் மக்களின் அரசியல் ஆதரவு சென்றுவிட்டது. டி.யு.எல்.எப் போன்ற அமைப்புகள் உருவான பல்வேறு நல்லதருணங்களை பயன்படுத்தி தமிழ் இனப்பிரச்னைக்கு ஒரு சரியான தீர்வினை காணத்தவறியதும் அதன் பின்னடைவிற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
மேலும் முதலாளித்துவ அரசியலை ஆட்டிப்படைக்கும் பதவி மோகம், பதவிக்காக சந்தர்ப்பவாத நிலைகள் எடுப்பது, பதவிகளைப் பயன்படுத்தி பொருள் ஈட்டுவது போன்ற காரியங்களில் எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளைப் போலவே தமிழர் விடுதலை முன்னணியும் ஈடுபட்டது. அவற்றில் அவ்வமைப்பு ஈடுபட்டதும் அது விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகளிடம் அரசியல் உத்வேகத்தை இழந்து நின்றதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
பெரும்பான்மை இலங்கைத் தமிழரின் விருப்பம்
இன்று 30 ஆண்டுகால கடுமையான போர் அதன் விளைவான உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஆகியவற்றுக்கு பின் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி அதிகாரத்துடன் சேர்ந்து வாழ்ந்தால்கூட பரவாயில்லை என்ற பழைய நிலைக்கு-அதாவது தமிழர் விடுதலை முன்னணி போன்றவை மனதிற்கொண்டிருந்த அந்த பழைய நிலைக்கு- திரும்பியிருக்கின்றனர் என்பது போன்ற ஒரு சித்திரமே நம் கண்முன் எழுந்து நிற்கிறது. இத்தனை பின்னடைவுகள் எல்.டி.டி.ஈக்கு ஏற்பட்டுள்ள நிலையிலும் எல்.டி.டி.ஈ இலங்கை இராணுவத்துடன் நடத்திக் கொண்டுள்ள போருக்கு வலுசேர்த்து உதவும் வண்ணம் யாழ்ப்பாணம் போன்ற பெரும்பான்மை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கிளர்ச்சியும் எழுச்சியும் ஏற்படாதிருப்பதற்கும் அம்மக்களின் இந்த மனநிலைதான் காரணமாக இருக்க முடியும்.
போரும் அரசியலும்
மேலும் இதுபோன்ற அரசியல் முன் முயற்சியை எடுப்பதற்கு இருந்த வெகுஜன அமைப்புகள் பலவற்றை விடுதலைப்புலிகள் முடமாக்கியும் விட்டனர். அத்துடன் தாங்களே அத்தகைய ஒரு அமைப்பை அதாவது மக்கள் இயக்கத்தை நடத்தும் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கவும் தவறிவிட்டனர். அவர்கள் அவ்வாறு உருவாக்காமல் போனதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.
எடுத்த எடுப்பிலேயே ஆயுதம் தாங்கிய அமைப்பாக அரசியல் அரங்குக்குள் நுழைந்த அவர்களுக்கு மக்களிடம் பிரச்னைகளை விளக்கிச் சொல்லும் பொறுமையோ, பக்குவமோ, சகிப்புத்தன்மையோ அதிகம் இல்லை. அதாவது அரசியல் என்பது ஆயுதம் தரிக்காத போர் என்பதையும் போர் என்பது ஆயுதம் தரித்த அரசியலென்பதையும் அவர்கள் மறந்துவிட்டனர். ஒரு சரியான கண்ணோட்டம் ஒரு அமைப்பை வழிநடத்தவில்லை என்றால் எந்த ஒரு கண்ணோட்டமும் அதனை வழிநடத்தாது என்பதல்ல. நிச்சயமாக ஒரு தவறான கண்ணோட்டம் அப்போது அதனை வழிநடத்தவே செய்யும். இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் விடுதலைப் புலிகளை ஒரு தவறான கண்ணோட்டம் வழிநடத்தவே செய்தது.
அந்த பாசிஸ கண்ணோட்டம் வழிநடத்தியதின் விளைவாகத்தான் அவர்களுடைய திட்டமிடுதல் எல்லாமே தங்களது இராணுவ ரீதியான செயல்பாடுகளுக்கு தேவையானவற்றை செய்வது குறித்ததாகவே ஆகிவிட்டது. அதனால்தான் தாங்கள் அதிகாரத்தில் இருந்த பகுதிகளைவிட்டு இலங்கை இராணுவத்தின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறும் வேளைகளிலும் மக்கள் அனைவரையும் கூடவே அழைத்துச் செல்லும் வரலாற்றில் முன் எப்போதும் கண்டிராத ஒரு நிகழ்வினை அப்பட்டமான செயற்கைத் தன்மையுடன் விடுதலைப்புலிகள் நிகழ்த்துகின்றனர்.
மேலும் உலக அரங்கில் இலங்கைத் தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை நியாயப்படுத்தி பல்வேறு அரசியல் ரீதியான விவாதங்களை மேற்கோள்கள் காட்டி தெளிவாக விளக்கி வந்த ஆண்டன்பாலசிங்கம் போன்றவர்களும்முழுக்க முழுக்க போராளிகளைக் கொண்ட அந்த அமைப்பில் மனிதமுகம் இருக்கிறது என்று காட்டுவதற்கு இப்போது இல்லை.
மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பு பிரதானமாக யாருடைய நலனுக்காக இருக்கிறது என்றால் இலங்கை தமிழ் உடைமை வர்க்கத்தின் நலனுக்காகத்தான். ஆனால் எந்த நாட்டின் எந்த உடமைவர்க்கமும் அதன் நலனுக்கு எந்த அமைப்புகள் எதுவரை பயன்படுமோ அந்த அமைப்புகளை அதுவரை பயன்படுத்தவே விரும்பும். அந்த அடிப்படையில் இலங்கையின் தமிழ் உடமை வர்க்கத்தின் பார்வை தற்போது ஒன்றுபட்ட இலங்கையில் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட ஒரு பிராந்தியம் என்பதாக மாறிவிட்ட சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் விடாப்பிடியாக தமிழ் ஈழம் கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருப்பது தமிழ் உடமை வர்க்கத்திற்கு உடன்பாடு இல்லாததாக ஆகிவிட்டது.
போர் ஏற்படுத்தியுள்ள மாறாத வடுக்கள்
இருப்பினும் இன அடிப்படையில் இத்தனை காலம் நீடித்த இப்போர் ஏராளமான மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைகழக நூலகம் எரிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள், அதனை பெருமையுடன் பாதுகாத்து வந்த தமிழ் மக்கள் மனதில் எத்தனை ஆழமான கீறலை ஏற்படுத்தியிருக்கும் என்பது யாரும் புரிந்துகொள்ள முடியாததல்ல. இந்நிலையில் இந்த இனப்பிரச்னைக்கு உடனடியான தீர்வுகாண வேண்டுமென்றால் இன்றைய நிலையில் அதற்குள்ள ஒரே வழி பொது வாக்கெடுப்பு ஒன்றேயாகும். தமிழர் பகுதிகளில் தனி ஈழம் தேவையா? இல்லையா? என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து ஐ.நா.சபையின் மேற்பார்வையில் அதனை நடத்துவதே ஆகும்.
அதற்கு முன்பு தற்போது நடந்து வரும் அப்பாவி மக்களின் உயிர்க் கொலைகளை தவிர்க்க ஐ.நா.வின் இராணுவம் அங்கு கொண்டுவரப்பட்டு விடுதலை புலிகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் துருப்புகளை அவற்றின் அரண்களுக்குள் செல்லவைத்து இப்பிரச்னை குறித்தபேச்சுவார்த்தையை இலங்கை அரசும் விடுதலை புலிகள் உட்பட பிற தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் நடத்துவதே சரியானதாக இருக்கும்.
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை
கூடுதல் அதிகாரம் வழங்குவது, சுயாட்சி, தனிஈழம் உள்பட அனைத்து விசயங்களும் அதில் விவாதிக்கப்பட்டு தனி ஈழம்தான் தீர்வு என்ற கோரிக்கை மற்ற தீர்வுகளைக் காட்டிலும் பெரிதாக எழுந்தால் அப்போது வாக்கெடுப்புக்குச் செல்லலாம். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரின் பிரிக்க முடியாத உரிமையாகும். அதனை அம் மக்களின் ஏகோபித்த விருப்பை மனதிற்கொண்டே செயல்படுத்த வேண்டும்.
இந்த பிரச்னையை இலங்கை அரசுடன் விவாதிக்க தகுதியும் அதிகாரமும் படைத்த ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பே என்ற கருத்தை இங்கு செயல்படும் விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் பல முன் வைக்கின்றன. அது சரியானது அல்ல, ஏனெனில் அனைத்து மக்களின் விருப்பு வெறுப்பற்ற மனநிலையை ஆயுதம் தாங்கிய ஒரு குழு மிகச் சரியாக பிரதிபலிக்கும் என்று கூற முடியாது.
மேலும் விடுதலை புலிகள் கடந்த காலத்தில் இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு-கிழக்கு பகுதிகளை ஒன்றாக இணைத்து தமிழ் மாகாணம் ஒன்றை அமைத்துவிட்டு அதன் பின்னர் கிழக்குப் பகுதியில் மக்களிடம் அவர்கள் வடக்குப்பகுதி மக்களுடன் ஒருங்கிணைத்து ஒரு மாகாண அமைப்பின் கீழ் இருக்க விரும்புகிறார்களா அல்லது தனி மாகாணமாக செயல்பட விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க வேண்டும் என்று இருந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சரத்தினை கடுமையாக எதிர்த்தனர்.
கிழக்குப் பகுதியில் வாழும் மக்களில் மிகப் பெரும்பாலோர் தமிழ் பேசும் மக்களாக இருந்த போதிலும் அவர்களில் யாழ்ப்பாணத் தமிழர்கள் கிழக்குப் பகுதியின் பூர்வீகத் தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என்ற பிரிவுகள் இருக்கவே செய்கின்றன. அவர்கள் பேசும் மொழி ஒன்றாக இருந்த போதிலும் அது மட்டுமே அவர்களிடம் முழுமையான ஒற்றுமை உணர்வினை ஏற்படுத்த முடியவில்லை.
ஏனெனில் இந்த முதலாளித்துவ காலகட்டத்தில் தேசிய முதலாளிகளின் முழக்கமான தனி நாடு கோரிக்கை என்பது பொருளாதார நலன்களை அடிப்படையாக வைத்தே எழுப்பப்படுகிறது. எனவே வடக்கு கிழக்குப் பகுதி இரண்டும் ஒரு மாகாணமாக அமைந்தால் அதில் யாழ்ப்பாண தமிழர்களின் ஆதிக்கம் மிகுந்துவிடும்; தங்களது நலன்கள் அவ்வளவுதூரம் பராமரிக்கப்படாது என்ற அச்சம் கிழக்குப் பகுதி பூர்வீக தமிழ் மக்களிடமும், தமிழ் மொழி பேசும் இஸ்லாமியரிடமும் பெரிதும் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் அந்த சரத்தினை விடுதலைப் புலிகள் எதிர்த்தனர்.
தனி ஈழம் சர்வரோக நிவாரணியல்ல
இங்குள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மக்களிடம் முன் வைப்பது போல் தனிநாடு அதாவது தமிழீழம் என்பது இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரின் பிரச்னைகளுக்கும் தீர்வாகவல்ல சர்வரோக நிவாரணி அல்ல. தனிஈழம் என்று ஏற்பட்டால் அங்கு தமிழ் உடமை வர்க்கத்தின் ஆட்சியே ஏற்படும். அத்தகைய தமிழ் ஈழ தேசம் அமைப்பதில் தொடங்கியே பல்வேறு வேதனைகள் தலைதூக்கும். ஏனெனில் அவ்வாறு உருவாகும் தனித் தமிழ் தேசத்தில் இலங்கையின் சிங்களர் வசிக்கும் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வரும் ஏராளமான தமிழர்கள் தங்களது உடமைகளை விட்டுவிட்டு வந்து குடியேற முடியாது.
அவர்கள் தங்களது வசிப்பிடங்களில் விட்டுவிட்டு வந்த உடமைகளை ஈடு கட்டும் விதத்தில் தமிழ் ஈழத்தில் வசிக்கும் மக்கள் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளோ வசிப்பிடங்களோ புதிதாக ஏற்படுத்தி தருவது சாத்தியமல்ல. இப்போதும் பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து டெல்லியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் அகதிகளைப் போலவே வாழ்வது இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில் சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிகளில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்களில் மிகப்பெரும்பாலோர் அப்பகுதிகளைவிட்டு பெரும்பாலும் வெளியேற விரும்பமாட்டார்கள்.
அவர்களைத் தவிர 10 லட்சத்துக்கும் மேலான மலையகத் தமிழ் மக்கள் மனப்பூர்வமாக யாழ்ப்பாணத் தமிழர்களோடு ஒரே மொழி பேசுவதால் ஒத்துப் போகக் கூடியவர்கள் அல்ல. யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழர்களும் அவர்களுக்கு அடைக்கலம் தருவர் என்று கூற முடியாது. ஏனெனில் 5 லட்சம் மலையகத் தமிழர்களின் வெளியேற்றத்திற்கு பண்டார நாயகாவுடன் இணைந்து ஒப்புதல் அளித்தது யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழர்களின் பிரதிநிதி செல்வநாயகமே ஆவார்.
இன்று வரை மனப்பூர்வமாக மலையத் தமிழர்களை இங்குள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் கூறுவது போல் தங்களது தொப்புள்கொடி உறவுகள் என்று யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழ்மக்கள் பார்ப்பதில்லை. யாழ்ப்பாணத்தில் உழைக்கும் வர்க்கத் தமிழர்களிடமும் வர்க்க உணர்வு மட்டம் குறைவாக இருந்ததால் அது ஏற்படவில்லை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய யாழ்ப்பாண உடமைவர்க்க தமிழ்மக்கள் மலையகத் தமிழர்களை கூலிக்கு வேலை செய்ய வந்த மக்களாகவே அதாவது சிங்கள உடமை வர்க்கத்தினர் பார்க்கும் விதத்திலேயே இப்போதும் பார்க்கின்றனர்.
இந்நிலையில் தமிழர்களுக்கு என்று தனிநாடு ஒன்று ஏற்பட்ட பின்னரும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ நேரும் தமிழர்கள் மனவியல் ரீதியான ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையுடனேயே அப்பகுதிகளில் வாழ நேரும். இன்று பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் பிரிவினைக்குப் பின்னும் அந்நாடுகளிலேயே தங்கியுள்ள இந்து மக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அவ்வாறே சிங்களப் பகுதிகளில் வாழ வேண்டியிருக்கும் தமிழ் மக்களும் நடத்தப்படுவர். வங்கதேசத்தில் வசிக்கும் இந்துமக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை தஸ்லிமா நஸ்ஸ்ரீனின் லஜ்ஜா என்ற நவீனத்தை படித்தாலே தெரியவரும். அதைப்போலவே பிரிவினைக்குபின் நமது நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களும் வகுப்புவாத சக்திகளால் அவர்களின் மனம்புண்படும் விதத்தில் விமர்சிக்கப்படுவதையும் நடத்தப்படுவதையும் வகுப்பு மோதல்களுக்கு ஆட்படுத்தப்படுவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
மேலும் எவ்வெப்போது சிங்கள ஆளும் வர்க்கம் நெருக்கடிக்கு ஆட்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் இலங்கையில் சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது ஒரு கட்சி மாறி மற்றொரு கட்சி வெறுப்பையும் அவமரியாதை பேச்சுகளையும் உமிழவே செய்யும் அது சந்திக்கும் நெருக்கடிகளிலிருந்து பெரும்பான்மை சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பி விட அதனைச் செய்யும்.
இத்தனை கொடுமையாக இராதெனினும் தமிழர் வாழும் கிழக்குப் பகுதியில் தமிழருடன் இணைந்து வசிக்கும் சிங்கள மக்களுக்கும் எங்கு செல்வது எவ்வாறு ஒன்றி வாழ்வது என்பது குறித்த பிரச்னைகள் நிச்சயம் இருக்கவே செய்யும். இவற்றைஎல்லாம் கருத்தில் கொள்ளாது தமிழ் ஈழம் தமிழ் மக்களுக்கு ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தித் தந்துவிடும் என்ற ஒரு கற்பனைச் சித்திரத்தை இங்குள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் முன் வைக்கின்றன.
தனி தேசம் உடைமை வர்க்கங்களின் கோரிக்கையே
தேசிய வாதமும் தனிநாடு கோரிக்கையும் இப்போதும் எப்போதும் அந்தந்த தேசிய இனங்களை சேர்ந்த உடமை வர்க்கங்களின் முழக்கங்களே. ஏனெனில் உடமை வர்க்கங்கள் ஏதாவது ஒரு அடிப்படையில் பிறர் உழைப்பில் வாழும் ஒட்டுண்ணித்தனமான வாழ்க்கையையே வாழக்கூடியவை, எனவே அவற்றிற்கு அந்த ஒட்டுண்ணித்தன வாழ்க்கை மூலம் அடையும் சலுகைகள் மற்றொரு தேசிய இனத்தை சேர்ந்த அதே வகையான வாழ்க்கை நடத்தும் உடமை வர்க்கங்களால் அவை வலுவாக பெரும்பான்மையாக இருக்கின்றன என்ற காரணத்தால் பறிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே தனிநாடு முழுக்கம் முன்வைக்கப்படுகிறது.
அதனால்தான் ஒரு அளவிற்கு மேல் நியாயம் மற்றும் பகுத்தறிவுபூர்வ ஆய்வுகளை முன்வைத்தால் அதற்குப் பதிலாக வெறிவாதத்தை உமிழ்பவையாக அத் தேசிய வெறிவாத அமைப்புகள் ஆகிவிடுகின்றன. தமிழ் உணர்வு அற்றவர்கள் என்ற அவதூறுக்கும் சிங்கள உணர்வு இல்லாதவர்கள் என்ற அவதூறுக்கும் அத்தகைய பொதுவான சரியான ஆய்வுகளின் அடிப்படையிலான கருத்துக்களை வைப்பவர்கள் தமிழ் மற்றும் சிங்கள தேசியவாதிகளால் தூற்றப்படுகிறார்கள்.
உண்மையான தீர்வு உழைக்கும் வர்க்க ஆட்சி அமைவதிலேயே உள்ளது
எனவே தமிழ் மக்களிலும் சரி சிங்கள மக்களிலும் சரி அவர்களில் மிகப்பெரும்பான்மையாக இருப்பவர்கள் உழைக்கும் மக்களே ஆவர். அவர்கள் தங்கள் உழைப்பால் வாழ்பவர்கள்; ஒட்டுண்ணித்தனத்தால் வாழ்பவர்கள் அல்ல. எனவே சிங்கள உழைக்கும் மக்கள் மற்றும் தமிழ் உழைக்கும் மக்கள் இவ்விரு பெரும்பகுதி மக்களின் அடிப்படையான நலன்களும் ஒன்றுதான். அதாவது அவர்களை கூலியடிமைத்தனத்தில் வைத்திருக்கும் சிங்கள, தமிழ் உடமை வர்க்கங்களை தூக்கிஎறிய வேண்டும் சமூகத்தின் அனைத்துச் செல்வங்களையும் உருவாக்கும் உழைக்கும் வர்க்க ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்பதுதான். இந்த அடிப்படையில் உழைக்கும் வர்க்க ஆட்சியை இலங்கை முழுவதும் கொண்டுவர பாடுபடுவதே இனப்பிரச்னை உட்பட இலங்கை மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
சோவியத் படிப்பினை
இதையே சோவியத் நாட்டின் படிப்பினைகள் நமக்கு உணர்த்துகின்றன. சோசலிசம் இருந்தவரை தனிநாடு கோரிக்கை என்பது அங்கு எழவில்லை. எத்தருணத்தில் சோசலிசம் அங்கு வீழ்ந்ததோ அப்போது அதில் ஒருங்கிணைந்திருந்த அனைத்து தேசிய இனங்களும் பாதுகாப்பற்ற நிலையில் தாங்கள் இருப்பதாக உணரத்தொடங்கி தனிநாடுகள் கோரத்தொடங்கிவிட்டன. மாபெரும் தலைவர் ஸ்டாலினின் மறைவிற்குப்பின் முதலாளித்துவ சிந்தனைப்போக்குகள் ஊட்டி வளர்க்கப்பட்டதால் பின்னாளில் சோவியத்யூனியன் தகர்ந்த பின்பு தனிநாடு கோரிக்கையை முன்வைக்கும் முதலாளித்துவ சிந்தனைப் போக்கின் கரு அவர்கள் மனதில் உருவாக்கப்பட்டது. அதுவே அக்கோரிக்கை பெரிதாக எழுந்து ஒன்றாய் இருந்த சோவியத் நாடு பல தேசங்களாக பிளவுபடக் காரணமாக இருந்தது.
ஆரம்பத்தில் சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வலியுறுத்திப் போராடிய கம்யூனிஸ்ட் அமைப்புகளும் தலைவர்களும் இருக்கவே செய்தனர். நாளடைவில் நாடாளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கியவையாக அக்கட்சிகள் ஆகிவிட்டதால் படிப்படியாக இனவாதத்தையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் கலிசடைகளாக அவையும் உருமாறிவிட்டன. எனவேதான் தமிழ் மக்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்ட போதும் அவை வாய்மூடி மெளனம் சாதித்தன. வர்க்கப் பார்வையை கைவிட்டுவிட்டு இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஜாதிய வாதத்தை கையிலெடுத்து குறுக்கு வழியில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய முனைவதுபோல் இலங்கையில் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்பட்ட கட்சிகளில் சிலவும் மிதமிஞ்சிய சிங்கள வெறிவாதத்தை கையிலெடுக்கவும் செய்தன.
எனவே இலங்கையின் இனப்பிரச்னைக்கு உண்மையான தீர்வு உழைக்கும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக உருவாகும் வர்க்க பேதமற்ற சமுதாயம் அமைவதில்தான் உள்ளது. அத்தகைய வர்க்கப் போராட்டங்களே சிங்கள, தமிழ் உடமைவர்க்கங்களின் உண்மையான முக விலாசத்தை அம்பலப்படுத்தக் கூடியவை.
தவறான, திரித்துரைக்கப்படும் வரலாற்று நிகழ்வுகள்
இதை முன்வைப்பதை விட்டுவிட்டு இங்குள்ள அதிதீவிர இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படும் சில கட்சிகள் தமிழ்ஈழம் அவைதில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆன தீர்வு இருப்பது போலவும், சிங்கள மக்கள் அனைவரும் தமிழ் இனத்தின் எதிரிகள் போலவும் தமிழ்வெறி வாதத்தைத் தூண்டிவருகின்றன. உண்மையிலேயே இலங்கையில் எவ்வாறு இடதுசாரி முழக்கங்களை முன்வைத்துக் கொண்டு ஜே.வி.பி அமைப்பினர் சிங்கள வெறிவாதத்தை கையிலெடுத்து தமிழர்களுக்கு எதிராக குறிப்பாக மலைத்தோட்ட தமிழர்களுக்கு எதிராக தங்களது பிரச்சாரத்தில் விசத்தை கக்கினரோ அதைப்போல இங்கு இந்த இடதுசாரி அமைப்புகள் இலங்கையில் நிலவும் யதார்த்த நிலையைப் பாராது சாதாரண சிங்கள மக்கள் மீதும் விரோதத்தினையும் குரோதத்தினையும் உருவாக்கும் வெறுப்பு பிரச்சாரத்தை நடத்துகின்றனர்.
தங்களது வாதங்களை நிரூபிப்பதற்காக இந்திய வரலாற்று நிகழ்வுகளையே தங்களது நோக்கிற்குத் தகுந்தாற்போல முன்னுக்குபின் முரணாக திரித்தும் கூறுகின்றனர்.
அவர்களது ஈழ விடுதலை நமது கடமை என்ன? என்ற நூலில் லாலா லஜபதி ராயை தடியடியில் கொலைசெய்து மேலும் பல அடக்குமுறை சம்பவங்களில் ஈடுபட்ட ஆங்கில அரசுக்கு எதிராக அமைதியான முறையில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூடி போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்தினான் ஜெனரல் டயர் என்று கூறியுள்ளனர். உண்மையில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ல் ஆகும்.
லாலா லஜபதிராய் சைமன் கமிசன் பகிஸ்கரிப்பு இயக்கத்தின்போது வெள்ளை போலிஸாரால் குண்டாந்தடித் தாக்குதலுக்கு ஆட்பட்டது 1928ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதியாகும். அதன் விளைவாக அவர் மரணம் அடைந்தது 1928ம் ஆண்டு நவம்பர் 17ம் நாளாகும். அதாவது 9 ஆண்டுகளுக்குபின்பு நடந்த ஒரு சம்பவத்திற்காக அதாவது 1928ல் நடந்த லாலாலஜபதிராயின் தடியடிக்காகவும் அதன் விளைவாக அவர் கொலையுண்டதற்காகவும் 1919ம் ஆண்டு ஜாலியன்வாலாபாக்கில் மக்கள் கூடி போராடினார்கள் என்று கூறியுள்ளனர்.
இவ்வாறு வரலாற்று நிகழ்வுகளை முன்னுக்குபின் முரணாக திரித்துக் கூறியும், சாதாரண சிங்கள மக்கள் மீதும் வெறுப்பையும் விரோதத்தை ஊட்டியும் செயல்படும் இவர்களின் போக்கு உண்மையில் இவர்கள் இந்திய மண்ணின் ஜே.வி.பி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவே தோற்றம் காட்டுகிறார்கள் என்பதையே புலப்படுத்துகிறது. மேலே நாம் முன்வைத்துள்ள ஆய்வின் அடிப்படையில் இலங்கைத்தமிழர் பிரச்னைக்கான தீர்வு அந்நாட்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விருப்பினை அடிப்படையாகக் கொண்டதாக மட்டுமே இருக்கமுடியும்.
சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பு முறை இருக்கும் வரை இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு இல்லை என்பதும் மனதிற் கொள்ளப்படவேண்டும்.
வாசகர் கருத்துக்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|