இந்திய சட்டசபைத் தேர்தல் நடந்து விட்டன.
இந்த மாகாணத்தின் பொது தொகுதியில் பத்து ஸ்தானங்களில் ஐந்து ஸ்தானங்கள் பார்ப்பனர்கள் கைப்பற்றி விட்டார்கள்.
அதாவது தோழர்கள்
1. S. சத்தியமூர்த்தி அய்யர்
2. K.நாகேஸ்வரராவ் பந்துலு
3. டாக்டர் ராஜன் அய்யங்கார்
4. V.V.கிரி பந்துலு
5. T.N. அநந்தசயனம் அய்யங்கார்ஆகிய 5 பேர் போக பாக்கி ஸ்தானங்களில் தோழர் N.G. ரங்கா அவர்கள் பார்ப்பனரா அல்லாதவரா என்பது நமக்குத் தகவலில்லை. மற்ற நான்கு ஸ்தானங்களில் ஒன்று கிருஸ்தவர் ஆனாலும் அந்த கிருஸ்தவர் சுவற்று மேல் பூனையாய் இருந்தாலும் அவரையும் தோழர் ரங்கா அவர்களையும் பார்ப்பனரல்லாதார் கூட்டத்திலேயே சேர்த்துக் கொண்டு கணக்குப் பார்த்தாலும் கூட 100க்கு 3 பேர்களாய் உள்ள வகுப்பினர்கள் 100க்கு 50 ஸ்தானங்கள் கைப்பற்றி விட்டார்கள். ஆனால் அவர்கள் வாயில் பேசும்போது மாத்திரம், தாங்கள் வகுப்புவாதிகள் அல்லவென்றும் தகுதியானவர்கள் கிடைத்தால் எல்லா ஸ்தானங்களையும் பார்ப்பனரல்லாதார்களுக்கே கொடுத்து விடுகிறோம் என்றும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் காந்தியார் உள்பட எல்லாப் பார்ப்பனர்களும் பேசுகின்றார்கள்.
அப்படியாவது தகுதி உள்ள பார்ப்பனரல்லாதார்களுக்கு பகுதியோ அல்லது மூன்றில் ஒரு பங்கோ, நான்கில் ஒரு பங்கோ ஆவது கொடுக்கிறார்களா என்று பார்த்தால், பார்ப்பனர்கள் கண்களுக்கு தோழர்கள் முத்துரங்க முதலியார், அவனாசிலிங்கம் செட்டியார், குமாரசாமி ராஜா ஆகியவர்கள்தான் தகுதி உள்ளவர்கள் என்று தோன்றுவதாய் சொல்லுகின்றார்கள்.
தகுதி என்பதற்கு அருத்தம் என்ன என்றால் தங்களுக்கு தகுதி உள்ளவர்கள் என்றும் தங்கள் மூலமாய் தங்கள் தாசர்களாய் இல்லாத எவரும் எப்படிப்பட்டவரும் தகுதி இல்லாதவர்கள் என்றுமே ஹிட்லரிசம் பேசுகிறார்கள். இந்த லக்ஷணத்தில் தோழர் அன்சாரி அவர்கள் சென்னை தேர்தலில் வகுப்புவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சி அடைகின்றார்.
தோழர் காந்தியார், சத்தியம் வெற்றி பெற்று விட்டது என்றும் பந்தயம் ஜெயித்து விட்டது என்றும் தந்தி அடிக்கிறார்.
வகுப்புவாதத்திற்கும், சத்தியத்திற்கும் இவ்விரு பெரியார்களின் பாஷ்யம் என்ன என்பதைப் பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை என்றே கருதுகின்றோம். சென்னைப் பார்ப்பனர்கள் தோழர் ராஜகோபாலாச்சாரியார் உள்பட தேர்தல் விஷயத்தில் செய்த பிரசாரத்தைக்கண்ட ஒருவர் அல்லது தெரிந்த ஒருவர் சத்தியம் வெற்றி பெற்று விட்டது என்று சொல்லப்படுவதை ஒப்புக் கொள்ள வேண்டுமானால் அவர் யோக்கியராய் இருந்தால் சத்தியம் என்கின்ற வார்த்தை எந்த பாஷையிலும் எந்த அகராதியிலும் எப்படிப்பட்ட மாறுபெயரிலும் உச்சரிப்பிலும் கூடவே கூடாது என்றுதான் சொல்லுவார்.
நிற்க நம் கையே நம் கண்ணைக் குத்த முனைந்திருக்குமானால் பிறகு எந்த அவயவத்தைக் கொண்டு அதைத் தடுப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்திய சட்டசபைத் தேர்தல்கள் என்றாலே நம் மாகாண பார்ப்பனரல்லாதார்களுக்கு மிக அலக்ஷியமான காரியமாகும். ஏனெனில் அதன் மூலம் யாரும் மந்திரியாக முடியாது என்பதுடன், ஜில்லா போர்ட் பிரசிடெண்ட், சேர்மென் முதலிய பதவிகளும் பெற முடியாது. வேறு வித உத்தியோக சிபார்சு முதலிய காரியங்களோ மந்திரிகள் தயவோ அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தயவோ பெறவும் முடியாது. ஆகையால் அதைப்பற்றி யாரும் லக்ஷியம் செய்வதில்லை என்பதோடு இப்படிப்பட்ட "அனாவசியமான" காரியத்துக்கு 10 ஆயிரம் 15 ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்யவும் எவரும் துணிவதில்லை.
இந்தத் தேர்தலில் தோழர் நாகேசுவரராவுக்கு 40 ஆயிர ரூ. செலவும் டாக்டர் ராஜனுக்கு 20 ஆயிரம் ரூ. செலவும் ஆயிருப்பதாக சொல்லுகிறார்கள்.
பார்ப்பனர்களுக்கு பல வழிகளிலும் ஊரார் பணங்கள் தாராளமாய் இருந்திருக்கின்றது. வட நாட்டு செல்வவான்களை ஏமாற்றி தருவித்த பணங்களும், கதர் மதுவிலக்கு தீண்டாமை விலக்கு ஆகியவைகளுக்கு சேகரித்த பணமும் அவற்றிற்காக அமைத்திருந்த ஆட்களும் தாராளமாய் வேலைக்கு உதவி இருக்கின்றன.
அதுவுமல்லாமல் இந்திய சட்டசபைக்கு ஒரு நபர் போனால் அது அவருடைய சொந்த நன்மைக்கு தான் பயன்படுமே தவிர அதனால் மற்றபடி அவரை ஆதரிக்கின்றவர்களுக்கு எவ்வித பயனும் அளிப்பதில்லை என்கின்ற ஒரு எண்ணமும் மக்கள் ஒன்று சேர்ந்து அபேட்சகரை ஆதரிக்கச் செய்யாமல் செய்து விடுகின்றது. ஆகவே பல "சரியான காரணங்கள்" இந்திய சட்டசபைக்கு பார்ப்பனர்களையும், அவர்கள் கண்களுக்குத் தக்க ஆட்கள் என்பவர்களையும் மாத்திரமே வெற்றி பெறச் செய்தது என்றால் இதில் அதிசயமெதுவும் இல்லை.
தோழர் ஷண்முகம் தோல்விக்கு இந்த சமாதானங்கள் போதாது என்று சொல்லப்படுமானாலும் போதுமான சமாதானங்கள் முன்னமேயே சொல்லப்பட்டு விட்டது என்றே கருதுகின்றோம்.
சிங்கார ரசத்தில் "கண்டிதா நாயகி" மற்றொரு பரகிய நாயகியைப் பார்த்து "அதுவும் சொல்லுவாள், இன்னமும் அனேகம் சொல்லுவாள், அவள் மீதிற் குற்றமென்னடி" என்று சொன்ன பாட்டைப் போல் இந்த நிலையில் நம் பார்ப்பனர்களும் ஆச்சாரிகளும் காந்திகளும் சூதுப் பந்தயத்தில் தாங்கள் வெற்றி பெற்று விட்டதைப் பற்றி அவர்கள் அதுவும் சொல்லுவார்கள் இன்னமும் அனேகம் சொல்லுவார்கள் அவர்கள் மீது குற்றமென்னய்யா என்றுதான் கூறியாக வேண்டும்.
(பகுத்தறிவு கட்டுரை 02.12.1934)