நெல்லூர் ஜில்லாவைச் சேர்ந்த தோழர்கள் பனகா கனகம்மா, வென்னலகண்டி ராகவய்யா இருவரும் ஆந்திர மாகாண காங்கிரஸ் கமிட்டியிலிருந்து விலகிவிட்டார்கள். தோழர் ராகவய்யா உள்ளூர் ஜில்லாக் காங்கிரஸ் கமிட்டியிலிருந்தும் விலகி விட்டார்.

வெ.முரு. லெக்ஷ்மய்யா ஜில்லா காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி பதவியில் இருந்து விலகினார். எம். கோபால் ராவ் நகர காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி பதவியிலிருந்து விலகினார்.periyar and maniyammai 670தோழர்கள் ராகவய்யா, லெட்சுமய்யா, கோபால்ராவ் ஆகியவர்கள் தங்களுடைய ராஜினாமாக் கடிதத்தில் காங்கிரசானது பணக்காரர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பாடுபடுகிறது என்றும், தொழிலாளர்களின் முன்னேற்றத்தைக் கவனிக்காமல் அலட்சியம் செய்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைப் போன்ற காரணத்தாலேயே வடநாட்டி லிருந்தும் பலர் காங்கிரசிலிருந்து விலகியிருக்கிறார்கள் என்பதையும் ஞாபகப்படுத்துகிறோம். இதிலிருந்து காங்கிரசின் உண்மையான போக்கு இன்னதென்று நன்றாகப் பொது ஜனங்களுக்கு விளங்குமென்று நம்புகிறோம். காங்கிரஸ் ஒன்றே ஏழை மக்களுடைய நன்மைக்கும், தொழிலாளிகளின் உரிமைகளுக்கும் பாடுபடுகிறது என்று சொல்வது பெரும் புரட்டென்று தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே காங்கிரஸ் ஏழை மக்களுடைய பிரதிநிதி அல்லவென்பதை வெளிப்படுத்துவதற்காக, காங்கிரசிற்குள்ளேயே சமதர்மக் கட்சி என்று ஏற்பட்டிருப்பதும் காங்கிரசின் வண்டவாளத்தை வெளிப்படுத்துவதாகும். புதுச் சீர்திருத்தம் அமுலுக்கு வருவதற்கு முன்னேயே, காங்கிரசின் கட்டுப்பாடு எப்படி குலைந்து சிதறுகின்றதென்பதைக் கவனித்துக் கொள்ளும்படி பொதுஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

(குடி அரசு செய்தி விளக்கம் 03.02.1935)

***

மூன்று பிரபல பிராமணர்கள் முடிவு

பார்ப்பனர்களுக்கு நெருக்கடியான காலத்தில் உதவி புரிந்து வந்த தோழர் எல்.ஏ. கோவிந்தராகவ ஐயர், தோழர் எம்.கே. ஆச்சாரியார், டாக்டர் மல்லைய்யா ஆகிய மூன்று பார்ப்பன பிரபலஸ்தர்கள் இந்த வாரத்தில் மரணமடைந்து விட்டார்கள்.

தோழர் கோவிந்தராகவய்யர் பிரபல வக்கீலாய் இருந்தவர். தோழர் எம்.கே.ஆச்சாரியார் இன்னாட்டுப் பார்ப்பனர்களின் உள்ளத்தைப் பளிங்குபோல் வெளிக்காட்டி வந்தவர். தோழர் மல்லய்யா அவர்கள் பார்ப்பனக் கட்சிக்கு உழைத்தவர். ஆகவே இவர்களது முடிவு வருந்தத்தக்கதாகும்.

(குடி அரசு இரங்கற் செய்தி 03.02.1935)

***

"பகுத்தறிவு" திருத்தம்

சென்ற வாரக் (27135) குடி அரசு இதழில் பகுத்தறிவு மாதப் பதிப்புக்குத் தோழர் சாமி சிதம்பரனார் பிரதான ஆசிரியராக இருப்பார் என்று எழுதி இருக்கிறது. அவர் உடம்பு அசவுகரியமாய் இருப்பதால் சவுகரியம் ஏற்படும் வரையில், தற்பொழுது பிரதான ஆசிரியராக ஈ.வெ. ராமசாமி இருந்து வருவார் என்பதையும், முடிந்த வரையிலும் கட்டுரைகள் மாத்திரம் எழுதி வருவார் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு அறிவிப்பு 03.02.1935)

***

"பகுத்தறிவு"க்கு 2000 ரூபாய் ஜாமீன்

வாரப் பத்திரிகையாக நடத்தி வந்ததும் இனி மாதப் பத்திரிகையாகவும், காலணா தினப் பதிப்புப் பத்திரிகையாகவும் நடத்த உத்தேசித்து சகல ஏற்பாடுகளும் செய்து வந்ததுமான "பகுத்தறிவு" பத்திரிகைக்கும் உண்மை விளக்கம் பிரசுக்கும் அரசாங்கத்தார் 29135ல் 2000 ரூஜாமீன் கேட்டிருக்கிறார்கள். ஜாமின் கட்டி þ பத்திரிகைகளை நடத்துவதற்கு யோசனைகள் நடந்து வருகின்றன.

(குடி அரசு பெட்டிச் செய்தி 03.02.1935)