விருதுநகரில் ராமநாதபுரம் ஜில்லா முதலாவது ஜஸ்டிஸ் மகாநாடு சென்ற மார்ச் மாதம் 30, 31 தேதிகளில் திவான் பகதூர் ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் நடந்த விபரங்கள் மற்ற பக்கங்களில் காணலாம்.

1929ம் வருஷம் நெல்லூரில் ஜஸ்டிஸ் மாகாண மகாநாடு கூடிய பின்பு தஞ்சையில் தலைவர் தேர்தலுக்காக என்று ஒரு மகாநாடு கூட்டப்பட்டு, அதிலும் தலைவர் நியமனம் தவிர வேறு ஒரு காரியமும் நடைபெறாமல் கலைக்கப்பட்ட பிறகு ஜஸ்டிஸ் மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு இப்போதுதான் முதன்முதலாக விருதுநகரில் கூடியது என்று சொல்லலாம்.periyar in wheel chairஅன்றியும் விருதுநகர் மகாநாடானது மற்ற மகாநாடுகளைப் போல் தலைவர் ஸ்தானத்துப் போட்டிச் சண்டை மகாநாடாகக் கூடிக் கலையாமல் தக்கதொரு வேலைத் திட்டத்தை நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டுவர முடிவு செய்து கொண்டு இனிது முடிந்த மகாநாடு என்று சொல்லத்தக்க மாதிரியில் கூடிக் கலைந்திருக்கிறது.

மகாநாட்டுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் விஜயம் செய்து குதூகலத்துடனும், தீவிர கவலையுடனும் கலந்து கொண்டு உற்சாகத்தோடு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது அக்கட்சியின் நல் வாழ்வைக் காட்டுகிறது.

மகாநாட்டில் வரவேற்புத் தலைவர் உபன்யாசமும், தலைவர் உபன்யாசமும் ஒவ்வொருவரும் கூர்ந்து படிக்கத் தகுந்ததும், அதிலிருந்து அநேக விஷயங்கள் தெரிந்து கொண்டு இனி மேலால் எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தெளிவாய் எடுத்துக் காட்டுவதுமாகும்.

ஜஸ்டிஸ் கட்சி என்பது தென்னிந்தியாவில் 100க்கு 97 பேர்களாய் எண்ணிக்கை கொண்ட பார்ப்பனரல்லாத மக்கள் சமுதாயக் கொடுமையின் பயனாய் பார்ப்பனர்களால் வெகுகாலமாய் அமுக்கப்பட்டுக் கிடந்ததையும், அதனால் அடைந்திருந்த பிற்போக்கையும், இழிவையும் நீக்கிக் கொள்வதற் கென்றே தன்னல மறுப்பும் தியாக புத்தியும் கொண்ட பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்டது என்பது உலகறிந்த விஷயமாகும். அதை ஏற்படுத்திய பெரியோர்கள் அவர்களது வாழ்நாள் முழுதும் தங்களுக்கென யாதொரு பயனையும் அடைய ஆசைப்படாமல் வாழ்நாள் முழுதும் கட்சிக்காகவே உழைத்து அவர்களது உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் செய்து விட்டு ஓட்டாண்டிகளாக காலம் சென்றது யாவரும் அறிந்ததும், கட்சியின் எதிரிகளும் ஒப்புக் கொள்ளக் கூடியதுமான உண்மையும் ஆகும்.

ஆகவே ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய நோக்கமும் வேலையும் சமுதாயத் துறையில் மக்களை மனிதத் தன்மை அடையச் செய்து எல்லோருக்கும் சமதர்மமும், சமநீதியையும் வழங்குவதேயாகும் என்பது நாம் சொல்லாமலே விளங்கும்.

"இந்தியா விடுதலை அடைய வேண்டுமானால் இந்திய மக்களுக்குள் சமுதாயத் துறையில் இருந்து வரும் அநீதிகளை முதலில் நீக்கி ஆக வேண்டும்" என்பதாக விவேகானந்தர் முதல், அவருக்கு முன்னால் இருந்தும் பின்னாலும் வெகுகாலமாகவே அனேக பெரியார்களும் தீர்க்க தரிசிகளும் சொல்லிவரும் ஆப்த வாக்கியமாகும்.

எனவே இந்தியாவைப் பொருத்த வரையில் எந்தக் கட்சியானாலும் எந்த ஸ்தாபனமானாலும் அல்லது எந்த ஒரு தனிப்பட்ட மனிதனானாலும் சமுதாயக் கொடுமைகளையும், அநீதிகளையும் நீக்க பாடுபடுவதானது இந்திய மக்கள் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் பாடுபடுவதேயாகும் என்பதை யோக்கியவர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள்.

ஜஸ்டிஸ் கட்சியானது ஏற்பட்டு இன்றைக்கு சுமார் 18 வருடகாலமே ஆகி இருந்தாலும்கூட அது எதற்காக ஏற்பட்டதோ, அத் துறையில் ஒரு அளவுக்கு தக்கதொரு புரட்சியை ஏற்படுத்தி வெற்றி பெற்று வருகிற தென்றே சொல்லலாம். இந்திய மக்கள் பல ஜாதி மத வகுப்புகளை கொண்டவராகி இருப்பதால் சமூக வாழ்வில் ஒவ்வொரு ஜாதிமத வகுப்புக்காரர்களும் ஒவ்வொருவர் ஒவ்வொரு வித வாழ்க்கை நிலையில் இருந்து கொண்டு உயர்வு தாழ்வாய் பேதப்பட்டு, கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பதால் எல்லா ஜாதிமத வகுப்புக்காரர்களும் ஒற்றுமைப்பட சமநிலை அடைய வேண்டுமென்பதும் அரசியலிலும் எல்லா வகுப்பாருக்கும் சமசந்தர்ப்பமும், சம பிரதிநிதித்துவமும் இருக்கவேண்டு மென்பதும் யாவரும் ஒப்புக் கொள்ளக் கூடியதொன்றாம். அன்றியும் இந்தக் கொள்கையை ஒப்புக் கொள்ளாத ஸ்தாபனம் இந்தியாவில் ஏதும் இல்லை என்றும் சொல்லலாம். அரசாங்கத்தாராகட்டும், காங்கிரஸாகட்டும், முஸ்லீம், கிறிஸ்து, பார்சி, சீக்கியர் முதலிய சமூகங்களாகட்டும் எல்லோருங்கூட தங்கள் தங்கள் ஸ்தாபனத்தின் மூலமாகவே இது ஒப்புக் கொண்ட விஷயமும் ஆகும்.

காங்கிரசிலும், அரசாங்க சீர்திருத்தங்களிலும் 10, 15 வருட காலத்திற்கு மேலாகவே காரியத்தில் அனுபவத்தில் இருந்து வரும் காரியமும் ஆகும்.

அன்றியும் ஒவ்வொரு கட்சியும் இந்தக் கொள்கைகளை நடவடிக்கையில் அனுபவிப்பதற்கு அரசாங்கத்தின் உதவியைக் கோரி அவர்களோடு ஒத்துழைத்து சட்ட மூலமாகவும் பெற்றதாகும்.

இப்படி இருக்க ஜஸ்டிஸ் கட்சியானது இக் காரியத்திற்காக பாடுபட்டு ஒரு அளவு பயன் உண்டாக்கியதனாலும் அதற்காக அரசாங்கத்தாரோடு ஒத்துழைத்ததனாலும் மற்றப்படி சட்ட மறுப்பு செய்யாததினாலோ, மந்திரி பதவிகளை ஏற்க மறுக்காததினாலேயோ ஜஸ்டிஸ் கட்சி மோசமான கட்சி என்றோ, பிற்போக்கான கட்சி என்றோ ஆகி விடாது.

இந்தியா பூராவிலும் உள்ள மக்களில் பெரும்பாலோரால் காங்கிரஸ் காரரின் கொள்கைகளும், செய்கைகளும் ஆதரிக்கப்படாமல், சிறப்பாக பகிஷ்காரத்தையும் ஒத்துழையாமையையும் முட்டாள்தனமான காரிய மென்றும், அனுபவத்தில் சாத்தியப்படாத காரியமென்றும் சொல்லப்பட்டு விட்டதோடு 100க்கு 99லு மக்கள் அவற்றிற்கு எதிரிடையாகவும் நடந்திருக்கிறார்களென்பதோடல்லாமல் இதைக் கண்டு காங்கிரஸ்காரர்களே கடைசியாக அறிவு பெற்று இந்த முடிவுக்கே வந்து பகிஷ்காரத்தையும், சட்ட மறுப்பையும் ஒத்துழையாமையையும் கைவிட்டுவிட்டு இவர்களாலேயே பிற்போக்கான காரியமென சொல்லப்பட்ட சட்டசபையையும் மந்திரி சபையையும் கைப்பற்றி எழுந்து நின்று ராஜவிசுவாசப் பிரமாணம் செய்துவிட்டு மற்ற கட்சிக்காரர்களைப் போலவே அரசாங்கக் கோட்டைக்குள் வந்து புகுந்துகொண்டு பாடுபடுகிறார்கள் என்பது பிரத்தியட்சமான காட்சியாகும். இந்நிலையில் ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் கொள்கையைப் பற்றியும் சட்டசபை பிரவேசம் மந்திரி பதவிகளை ஏற்றல் ஆகிய விஷயங் களைப் பற்றியும் இன்று யார்தான் எப்படித்தான் குறை கூற முடியும்.

நிற்க, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தோழர் ராஜகோபாலாச்சாரியார் என்ற பார்ப்பனரும் ஆந்திர நாட்டுக் காங்கிரஸ் தலைவர் தோழர் பிரகாசம் பந்துலு என்ற பார்ப்பனரும் தங்கள் சிஷ்ய குழாங்களோடு தென்னாடு மாத்திரமல்லாமல் இந்தியா முழுவதிலும் சுற்றிச் சுற்றி ஜஸ்டிஸ் கட்சியை குற்றம் சொல்லி குறை கூறி வருவது யாவரும் அறிந்ததாகும். அவர்கள் குற்றம் சொல்வதற்கு முக்கியமாய் எடுத்துக் கூறும் காரணங்கள் இரண்டே யாகும். ஒன்று ஜஸ்டிஸ் கட்சியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை கையாளு கிறார்கள் என்பதும், இரண்டாவதாக ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி பதவியை ஏற்றுக் கொண்டு அரசாங்கத்தாரோடு ஒத்துழைக்கிறார்களென்பதுமாகும்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவமென்பது ஜஸ்டிஸ் கட்சியாரால்தான் ஏற்பட்டது என்று சொல்லுவது அநீதியான காரியமாகும். ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்னதாகவே முஸ்லீம்கள் காங்கிரசில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டு காங்கிரசும் அதற்கு ஒப்புக் கொண்டு தனிப்பிரதி நிதித்துவம் கொடுத்துவிட்ட விஷயம் யாவரும் உணர்ந்ததாகும். அன்றியும் பத்து பதினைந்து வருட காலமாகவே காங்கிரஸ் ஸ்தாபனங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமுறை ஜாதிமத வகுப்பு என்கிற காரணத்திற்காக பிரதிநிதித்துவம் அளித்து வருவது காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்ததே யாகும். மற்றும் 1932ல் இந்தியா பூராவுக்குமே தீண்டப்படாத வகுப்பார் என்பவர்களுக்கு காங்கிரஸ் வகுப்பு பிரதிநிதித்துவம் அளித்து அதை அரசாங்கத்தார் ஒப்புக் கொள்ள வேண்டுமென்று இரு கூட்டத்தாரும் கையொப்பமிட்டு விண்ணப்பம் செய்து கொண்டது, காங்கிரஸ் தலைவர் களுட்பட எவருமறியாததல்ல. ஆகவே வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையைக் கொண்டதினாலேயே ஜஸ்டிஸ் கட்சி பிற்போக்கான கட்சி, தேசத்துரோகமான கட்சி என்று சொல்லப்படுமானால் சொல்லுகிறவர்களின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதையும் எதற்காக அப்படி சொல்லப் படுகிறது என்பதையும் வாசகர்களையே தெரிந்துகொள்ள விட்டுவிடுகிறோம்.

மந்திரி பதவிகள் எல்லா மாகாணங்களிலும் ஜனப் பிரதிநிதி மக்களால் ஒப்புக் கொண்டு அவரவர்கள் சக்தி அனுசாரம் ஆங்காங்கு சர்க்காரோடு ஒத்துழைத்தும் வேலை செய்யப்பட்டு வந்திருக்கிறது.

ஒரு மாகாணமும் மந்திரி பதவிகள் ஒப்புக் கொள்ளப்படாமலோ, சர்க்காரோடு ஒத்துழையாமலோ காலியாயிருந்து அரசாங்கம் ஸ்தம்பித்து போனதாக எவரும் சொல்ல முடியாது.

அப்படி இருக்க ஜஸ்டிஸ் கட்சியை மாத்திரம் நமது பார்ப்பனர்கள் குற்றம் சொல்வதும், ஜஸ்டிஸ் கட்சியைத் தவிர இந்தியாவிலுள்ள மற்ற எல்லா வகுப்பாருடன் ராஜி பேசிக்கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுவதும் ஜஸ்டிஸ் கட்சியாரைவிட ஆங்கிலேயர்களும், ஆங்கிலேய அரசாங்கமும் ஆயிரம் மடங்கு மேல் என்று சொல்லுவதுமான காரியங்கள் எதற்காக என்பதுவும் என்ன கருத்தை மனதில் வைத்துக் கொண்டு இந்தப் பார்ப்பனர்கள் இப்படி செய்கிறார்கள் என்பதும் தெரிந்து கொள்ள வாசகர்களுக்கே விட்டு விடுகிறோம்.

நிற்க விருதுநகர் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி சிறிது ஆராய்வோம். மகாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருந்தாலும் அவைகளில் தோழர் ஈ.வெ.ராமசாமியால் பிரரேபிக்கப்பட்டு ஏகமனதாய் ஒப்புக் கொள்ளப்பட்ட தீர்மானங்கள்* குறிப்பிடத்தக்கவை களாகும். அவை பெரிதும் சமதர்ம கொள்கையை அடிப்படையாகக் கொண்டே கொண்டு வரப்பட்டதாகும். விவசாயிகளைக் கடன் தொல்லையிலிருந்து நீக்கவும், பூமியை கடன் கொடுத்தவர்கள் பிடுங்கிக் கொள்ளாமல் இருப்பதற்கும், விவசாயிகளுக்கு வேண்டிய கடன் சுலப வட்டியில் அதிகச் செலவு இல்லாமல் கிடைக்கும்படியும், விவகாரங்களால் குடும்பங்கள் கெட்டுப் போகாமல் இருக்கவும், வீண் வழக்குகளை கற்பனை செய்வதற்கு வக்கீல்களுக்கு வசதியில்லாமலிருக்கவும், விவசாயிகளை தரகர்கள், வியாபாரிகள் கொள்ளை கொள்ளாமல் இருக்கவும், தனிப்பட்ட முதலாளிகள் வியாபாரம், தொழில்சாலைகள் மூலம் பெரும் லாபமடைந்து செல்வம் எல்லாம் சிலர் கையிலேயே போய் சேராமல் இருக்கவும், எல்லா ஜனங்களுக்கும் பத்து வருடத்திற்குள் கல்வி ஏற்படவும், மதுபானத்தை ஒழிக்கவும், தீண்டாமை அடியோடு இல்லாமல் செய்யவும், பெண்களுக்கு ஆண்களைப் போலவே பிரதிநிதித்துவமும் உத்தியோகமும் வழங்கவும், மக்களின் வாழ்க்கை நிலையை வுயர்த்தி அதிக வரும்படி அடையச் செய்யவும், அரசாங்க உத்தியோக பெரும் சம்பளங்களைக் குறைத்து இந்திய பொருளாதார நிலைமைக்குத் தகுந்த மாதிரி செய்யவும், நிலவரி விஷயத்தில் பணக்காரர்களுக்கு அதிக வரியும், ஏழைகளுக்குக் குறைந்த வரியும் இருக்கும்படியாகவும் ஜனப் பிரதிநிதித்துவ ஸ்தாபனங்கள் என்பவைகள் நாணயமாகவும், ஒழுங்காகவும் நடைபெறும் படியும், நில அடமான பாங்கு, கூட்டுறவு பாங்கு முதலியவைகள் சர்க்காராலேயே நடத்தப்பட வேண்டு மென்றும், இப்படியாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இவை ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத் திட்டமாக நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இந்த தீர்மானங்களைப் பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள் தாறுமாறாக உளறி கொட்டுவதின் மூலம் தங்களுடைய ஆத்திரத்தைக் காட்டிக் கொள்ளுகின்றன.

சுதேசமித்திரன் பத்திரிகையானது பகட்டான தீர்மானம் என்று தலைப்பு கொடுத்து இருக்கிறது. மற்றொரு பார்ப்பனப் பத்திரிக்கை காங்கிரஸ் தீர்மானங்களில் இருந்து திருடிக் கொண்டதாக எழுதி இருக்கிறது. தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சுயமரியாதைக்காரர்களுக்குப் பயந்து கொண்டு அவர்களது ஆதரவைப் பெறுவதற்காக இத்திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள் என்று பரிகாசமாக எழுதி இருக்கிறார். ஆனால் அவர் இத்திட்டங்கள் அபேத திட்டமென்றும், அதை ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக் கொள்ள வேண்டுமென்பதற்காக ராஜபக்த அபேதவாதத் திட்டமாக ஆக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லி இவ்வளவு பெரிய காரியங்களை அக்கட்சியார் செய்ய முனைந்திருப்பதை பொது ஜனங்கள் தெரிந்து அக்கட்சியை ஆதரித்து விடுவார்கள் என்று பயங்கொண்டு அத்திட்டங்களை பரிகாசமாக்கியும் அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு கெட்ட எண்ணங் கற்பித்தும் ஒரு பெரிய அறிக்கை விட்டிருக்கிறார். அதைப் பற்றி பின்னால் எழுதுவோம்.

ஒன்று மாத்திரம் இப்போது குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

இந்த பதினைந்து வருஷக்காலமாக காங்கிரஸ்காரர்கள் அவர்கள் கூட்டங்களில் தீர்மானித்துக் கொண்ட எந்தத் தீர்மானத்தையும் அவர்கள் அமுலுக்குக் கொண்டு வரவில்லை என்றும், அதன்படி நிலையாய் நிற்கவில்லை என்றும் பணம் வசூலிக்கவும், பார்ப்பனப் பிரசாரம் செய்து பார்ப்பனர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்ய பயன்படுத்தவுமான காரியம் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்பதை புள்ளி விவரங்களோடு எடுத்துக் காட்டுவோம்.

ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரையில் போட்ட தீர்மானப்படி நடந்திருக் கிறார்கள் என்பதையும் புள்ளி விவரங்களோடு சொல்ல முடியும்.

பார்ப்பனர்களுக்கு மக்களை ஏமாற்றிப் பிழைப்பதைத் தவிர வேறு தொழில் "சாஸ்திரத்திலேயே" விதிக்கப்படாததால் அவர்கள் நம்மவர்களை ஏமாற்றிப் பணம் பறித்து நம்மவர்களிலேயே கூலி ஆட்கள் பிடித்து நமக்கு விரோதமாய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

நம்மவர்கள் கண் விழித்து சுயமரியாதை உணர்ச்சி பெறும் வரை இந்த புரட்டும், இழி தன்மையான காரியங்களும் நடந்துதான் வரும். முடிவாக விருதுநகரில் மகாநாட்டைக் கூட்டி ஜனங்களுக்கு உற்சாகமளித்த விருதுநகர் தோழர்கள் ராவ் சாகிப் செந்திக்குமாரர், சேர்மன் வி.வி.ராமசாமி, ஊ.பு.ஆ. சௌந்திரபாண்டியன் வரவேற்புக் கழகத்தார்கள் ஆகியவர்களின் முயற்சியையும், பரோபகாரத்தையும் பாராட்டுவதோடு பார்ப்பனரல்லாதார்கள் சார்பாக நன்றி செலுத்துகிறோம்.

* தோழர் ஈ.வெ. ராமசாமி தீர்மானங்கள்

1. விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து விடுவிக்கவும், அவர்கள் மேலால் கடன்காரராகி கஷ்டப்படாமல் இருக்கவும் வேண்டிய காரியங்களை கடனுக்காக கடன்காரர்கள் பூமியை கைப்பற்ற முடியாமல் செய்வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதை எல்லாம் செய்ய வேண்டும்.

2. அனியாய வட்டி லேவாதேவிக்காரர்களால் விவசாயிகள் அழிந்து போகாமல் இருக்கும்படி கூட்டுறவு நாணைய ஸ்தாபனங்களையும், நில அடமான பாங்குகளையும் தாராளமாக பெருக்கவேண்டும். நில அடமான பாங்கை மாகாணம் பூராவும் நல்ல அமைப்பில் ஏற்படுத்தி அதை ராஜாங்கத்தாரே நடத்த வேண்டும்.

3. சொத்து உரிமை சம்பந்தமாக விவகாரங்களைக் குறைப்பதற்காக சொத்து பாத்தியங்களைக் குறிப்பிடத்தகுந்த தெளிவான ஆதாரங்களை சர்க்காரார் வைத்திருக்க வேண்டும். அன்றியும் நிமித்த மாத்திரமாகவும் மலரணையாகவும் எழுதி வைக்கப்பட்டது என்று எதிர் வழக்கு வாதாடும் (Benami) முறையை இல்லாமல் செய்ய வேண்டியதோடு அப்படிப்பட்ட வாதங்களை கோர்ட்டுகளில் ஒப்புக் கொள்ளாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்துவிட வேண்டும்.

4. விவசாயக்காரர்கள் விளைவின் பயனை அனுபவிக்காமல் தடுக்கும் தரகர் மத்திய வியாபாரிகள் ஆகியவர்களை விலக்குதல் செய்து விளைபொருள் சாமான்களை வாங்குபவர்களுடன் நேரில் கலந்து கொள்ளத்தக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி நல்ல விலையை விவசாயிகளே பெறும்படியாக செய்ய வேண்டும்.

5. பொது ஜனங்களுடைய உபயோகத்துக்காக இருந்து வரும் ரயில்வே, தந்தி தபால், தண்ணீர் சப்ளை, எலக்ட்ரிசிட்டி முதலியவைகளை சர்க்கார் எப்படி நிர்வகித்து வருகிறார்களோ, அந்த முறையே இனியும் மற்ற காரியங்களுக்கும் உபயோகப்படுத்தி எப்போதும் சர்க்காராலேயே நடந்து வரும்படிச் செய்ய வேண்டும்.

6. இன்ஷûரன்ஸ் விஷயத்தில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு சர்க்கார் செய்து கொடுத்திருக்கும் சவுகரியத்தை அதாவது போஸ்ட் ஆபீசைப் போல் மற்ற ஜனங்களும் அடையும்படியாகச் செய்ய வேண்டும்.

7. தேசப் பொது மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும், அதற்கேற்ற வரும்படி கிடைக்கும்படி வரும்படி விகிதத்தை நிர்ணயிக்கவும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

8. 10 வருஷ காலத்துக்குள் சகல மக்களுக்கும் ஆரம்பப் படிப்பு ஏற்படும்படி செய்து விட வேண்டும்.

9. மதுபானம் ஒழியும்படியாக கூடிய முயற்சிகளையும், சட்டங்களையும் செய்துவிட வேண்டும்.

10. மனித சமூகத்தில் இருந்து வரும் தீண்டாமையையும், பிறவிக் காரணமாக உள்ள வித்தியாசக் கொடுமைகளையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும்.

11. பெண்களுக்கு அரசியலில் ஆண்களைப் போல் எல்லா உத்தியோகங் களையும் அடைய சுதந்திரமும் கவுரவ ஸ்தாபனங்களில் சரி பிரதிநிதித் துவமும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

12. அரசியல் உத்தியோகங்கள் இந்த மாகாணத்தில் உள்ள எல்லா வகுப்பார் களுக்கும் அவரவர்கள் ஜனத்துகை பெருக்கத்துக்குத் தக்கபடியும் அரசியல் லக்ஷியத்துக்குத் தக்கபடியும் கிடைக்கும்படியாக செய்ய வேண்டும்.

13. பூமி வரி விதிக்கும் முறையானது எல்லா மக்களுக்கும் சமமான வரிப் பளுவாய் இருக்கும்படியாகவும், அவசியமான இடங்களில் விலக்கு செய்யும்படியானதாகவும் மாற்றி அமைக்க வேண்டும். (அதாவது ஏழைக் குடியானவர்களுக்கு கொஞ்ச விகிதமும் இருக்க வேண்டும்.)

14. முனிசிபாலிட்டிகளுக்கும், கூட்டுறவு ஸ்தாபனங்களுக்கும், ஜனங் களுக்கும் இன்னும் அதிகமான காரியங்கள் செய்யும்படியான சுதந்திரங்கள் கொடுத்து அவைகளை சர்க்கார் அதிகாரிகளின் மேல் பார்வையில் நடைபெறச் செய்ய வேண்டும்.

15. தற்கால நிர்வாக முறையானது மக்களுக்கு மிகவும் பாரமாக இருப்பதால் நியாயமான செலவில் திறமையான நிர்வாகத்தை அமைக்க முயல வேண்டியதோடு சம்பளங்களை இந்தியர் சராசரி வாழ்க்கையையும் இந்திய பொருளாதார நிலைமையையும் கவனித்து ஏற்படுத்த வேண்டும்.

16. இந்தக் காரியங்கள் நடைபெறும் பொருட்டு அவசியமான இடத்தில் சட்டம் செய்வதோடு இக் கொள்கைகளை பொது ஜனங்களுக்கு விளங்கும்படி பிரசாரம் செய்ய வேண்டும்.

17. ஜில்லா போர்டார்களும், முனிசிபாலிட்டியாராலும் நியமிக்கப்படும் எல்லா உத்தியோகங்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முறைப்படியே நியமிக்க வேண்டுமென்ற சட்டசபை தீர்மானத்தை இம்மகாநாடு ஆதரிக்கிறது.

18. இது சம்பந்தமாக மந்திரியாரால் ஏற்பாடு செய்து வெளியிட்டிருக்கிற விதிகளை உறுதியாக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொள்ளுகிறது.

19. மற்றும் நீதி இலாக்காவிலும், குறிப்பாக ஐகோட்டாரால் நியமிக்கப் படும் உத்தியோகங்களிலும், நீதி ஸ்தலங்கள் மூலம் ஏற்படுத்தும் உத்தியோகங்களிலும் கோர்ட்டாவ்வாட்ஸ் (அரசாங்கத்தாரால் நிர்வாகம் செய்யப்படும் சமஸ்தானங்களிலும்) கவர்ன்மெண்டார் ஏற்கனவே ஒப்புக் கொண்டு இருக்கிற வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை அநுட்டிக்க வேண்டுமென்று தெரிவித்துக் கொள்கிறது.

20. இந்த மாகாணத்தில் இருந்து வரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை இந்தியா கவர்ன்மெண்டும் செக்ரட்டரி of ஸ்டேட் (சீமையில் இருக்கும் இந்திய செக்ரட்டரியின் ஆபீசும்) ஏற்றுக் கொண்டு அந்த முறையையே எல்லா இந்திய உத்தியோகங்களிலும் நியமிக்கப்படும் விஷயங்களிலும் அமுலுக்குக் கொண்டுவர வேண்டு மென்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாக அரசாங்கத்தார், புது சீர்திருத்தத்தில் ஏற்பாடு செய்து இருக்கும் புதிய விதிகளில் இந்த முறையையும் சேர்த்து திருத்த வேண்டுமென்றும் இந்த மாகாணத்திற்கு நியமிக்கப்படும் எல்லா இந்திய உத்தியோக விஷயங்களில் வகுப்புவாரி கொள்கையை முக்கியமாய் கவனிக்க வேண்டுமென்று அபிப்பிராயப்படுகிறது.

இவை தோழர் ஈ.வெ. ராமசாமியால் பிரரேபிக்கப்பட்டு தோழர்கள் பொன்னம்பலம், சி.டி. நாயகம் ஆகியவர்களால் ஆதரிக்கப்பட்டது.

(குடி அரசு தலையங்கம் 07.04.1935)