ambedkar periyar 301இந்துக்களின் வேதம் கடவுளால் சொல்லப்பட்டது என்றால் கிருஸ்தவர்கள் வேதம், முகம்மதியர்கள் வேதம் முதலிய வேதங்கள் யாரால் சொல்லப்பட்டன?

பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியவர்களைத்தான் கடவுள் பிரம்மாவின் தலை, தோள், இடுப்பு ஆகியவைகளில் இருந்து உற்பத்தி செய்தார் என்றால், கிருஸ்தவர், மகம்மதியர், ஜப்பானியர், (பௌத்தர்) நீக்கிரோவர் முதலாகியவர்களை யார் எதில் எதில் இருந்து உண்டாக்கினார்கள்?

ஏசு கிருஸ்து, மகம்மது, சங்கரர், ராமனுஜர் முதலியவர்களை ஜனங்கள் நன்மைக்காக கடவுள் உலகத்துக்கு அனுப்பினார் என்றால், இவர்களை மறுக்கும் ராமசாமி, ராகவன், சிங்காரவேலு, சிதம்பரனார், ஜீவாநந்தம் முதலியவர்களை எதற்காக யார் அனுப்பினார்கள்?

பூமியை ஆதிசேஷன் தாங்குகிறான் என்றால் ஆதிசேஷனை யார் தாங்குகிறார்கள்?

சுப்பரமணியக் கடவுளுக்கு ஆறு தலைகள் என்றால் அவன் படுத்துத் தூங்கும்போது தன் தலைகளை எந்தப் பக்கம் எப்படி வைத்து தூங்குவான்?

மகாவிஷ்ணுவினுடைய வாகனமாகிய கருட பக்ஷியைக் கண்ட மாத்திரத்தில் கும்பிட்டு வணக்கம் செலுத்தும் மக்கள் மகா கணபதி வாகனமாகிய பெருக்கானைக் (பெருச்சாளி) கண்டால் ஏன் உடனே தடியெடுத்துக் கொண்டு அடித்துக் கொல்லுவதற்காக ஓடுகிறார்கள்?

அவதார புருஷர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், நபிமார்கள், ஆண்டவனால் அனுப்பப்பட்டார்கள் என்றால் அயோக்கியர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், விசுவாசத் துரோகிகள் முதலியவர்கள் யாரால் அனுப்பப் பட்டவர்கள்?

உலகமும் உலகத்திலுள்ள ஒவ்வொரு தனிப்பொருளும் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்கிறார்கள். மதவாதிகள் இதை ஒப்புக் கொள்ளாதவர்களை நாஸ்திகர்கள் என்கிறார்கள். அப்படியே வைத்துக் கொள்ளுவோம்! கடவுளால் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது?

மனுதர்ம சாஸ்திரத்தில் மனுதேவர் சொல்லியிருக்கின்றபடியா?

கிருஸ்துநாதர் பைபிளில் சொல்லி இருக்கின்றபடியா?

முகம்மதுநபி கொரானில் சொல்லி இருக்கின்றபடியா?

எந்த முறைப்படி?

(பகுத்தறிவு (மா.இ.) வினா விடை ஜுன் 1935)