பிறப்பின் அடிப்படையில் நான் இந்துவா ... இஸ்லாமியனா... கிருத்துவனா... அல்லது பறையனா... வண்ணானா... சக்கிலியனா... வன்னியனா... இல்லை பிராமணனா... என்றெல்லாம் எனக்கு தெரியாது என் பெயருக்கு முன்பு தகப்பனார் பெயரின் முதல் எழுத்து பொறிக்கப்பட்ட அடுத்த நொடி என் பெயருக்கு பின்னால் “பெரியார் பிஞ்சு” என்று எழுதப்பட்டது. எழுதப்பட்டது முதல் இன்று வரை அந்தப் பெயருக்கு ஏற்றார்போல் வளர்க்கப்பட்டு இருக்கிறேன் வளர்ந்தும் வருகிறேன் அதில் என் பெற்றோரே என்மீது மாற்று கருத்து வைக்க முடியாது என்று உறுதியாகச் சொல்ல முடியும்...!
இந்த நிலையில் இன்று ஒரு சில பணிகளைச் செய்து வருகிறேன், பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் உட்பட்டு, அதனை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன்...
அன்புக்குரிய தோழர்களே, நண்பர்களே, பெரியோர்களே, எழுத்தாளர்களே, படைப்பாளர்களே, உறவினர்களே, என்னுடைய பெற்றோர் உள்ளிட்ட அத்துணை சுய சிந்தனையாளர்களுக்கும் என்னுடைய அன்பு வணக்கங்கள் ...
சுமார் 23 மாத கால அளவில் நான் எடுத்து இருக்கும் பயிற்சியும் முயற்சியும் என்பது சாதாரணமான ஒரு செயல் இல்லை என்பதை பலமுறை பல அனுபவங்களின் மூலமாக உணர்ந்து இருக்கிறேன். இதற்கு முன் இதுபோன்ற ஒரு செயலை முயற்சியை யாராவது செய்து இருகிறார்களா! என்பதனை கண்டறிந்து; அந்த முயற்சியை முறியடிக்க வேண்டும் என்றோ நான் இதை கையில் எடுக்கவில்லை... நான் எதைச் சொல்ல வருகிறேன் என்பதனை அறிந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று கருதுகிறேன். நான் 23 மாதங்களாக நடத்தி வரும் கைத்தடி மாத இதழைப் பற்றி தான் பகிர்கிறேன்.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் நாள் துவங்கப்பட்ட இதழ் தான் “கைத்தடி மாத இதழ்”, மிகவும் எளிமையாகவும் குறைந்த அச்சு செலவிலும் அச்சிடப்பட்டு குறைந்தபட்சம் 100 இதழை மட்டும் அறிமுகம் செய்தேன். இன்று தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கர்நாடகம், பாண்டிச்சேரி, கேரளம், மும்பை என்று பல இடங்களுக்கும் “கைத்தடி இதழ்” செல்கிறது என்றால் முதலில் கைத்தடி வாசகர்களுக்கு என்னுடைய நன்றியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் கைத்தடி களப்பணிக் குழு சார்பாக...
ஏப்ரல் 2இல் கருப்பு வெள்ளையில் துவங்கிய இதழ் மே மாதத்தில் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களின் நேர்காணல் உடன் வண்ணத்தில் முதன் முதலில் இடம்பெற பலரின் வியப்புக்கு உள்ளானது, என்பதனை மறுக்கவும் மறைக்கவும் முடியாது... அதனைத் தொடர்ந்து சூன் மாதத்தில் பொறியாளர், மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் பார்வையில் நூலாசிரியர் பார்த்திபன் ப அவர்களின் “மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் பார்வையில் தொகுதி 2” தொடர் இதழ் அறிமுகத்தை மேம்படுத்தியது. தொடர்ச்சியாக சட்டக்கல்லூரி மாணவி மதிவதனி அவர்களின் கட்டுரைகள் வாசகர்களைக் கவர்ந்தது. புதியதாகப் பேராசிரியர் முருகேசன் அவர்களின் தமிழர் விளையாட்டுகள் பகுதி தொடங்கப்பட்டு இன்றுவரை மாதம் ஒரு தமிழர் விளையாட்டுக்கள் பகுதி இடம்பெற்று வருகிறது. ஆகஸ்ட்டில் வழக்குரைஞர் கிருபா முனுசாமி அவர்களின் ஒற்றை வரி உகந்ததா என்ற கட்டுரை GST பற்றிய தெளிவை ஏற்படுத்தியது. அத்தோடு மாதம் ஒரு மருத்துவக் கட்டுரையை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ராஜபார்த்திபன் ரவிச்சந்திரன் மற்றும் யாழினி அவர்கள் தொகுத்து வழங்க இதழ் பல்சுவை அறிவு விருந்தாக வாசகர்களுக்கு விருந்தளித்தது, தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் “தந்தை பெரியார் அய்யா” அவர்களைப் போற்றும் விதமாக தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பிதழாக வெளியீடு செய்தது கைத்தடி மாத இதழ் களப்பணிக் குழு.
செப்டம்பர் சிறப்பிதழ் என்பதால் எழுத்தாளர் ஓவியா அவர்களால் எழுதப்பட்ட “புத்துலகின் தீர்க்கதரிசி”... என்ற கட்டுரையை வெளியீடு செய்து வாசகர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்துக்களை விதைத்தது அத்தோடுகூடவே எழுத்தாளர் ஷாலின் அவர்களின் எழுச்சி மிகுந்த உணர்ச்சி கட்டுரைகள் மாதம் மாதம் இடம்பெற்றது... அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் திட்டமிட்டப்படி எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்களின் நடப்புகள் நமக்குச் சொல்வதென்ன? என்ற நேர்காணல் பல தெளிவுகளையும் கேள்விகளையும் உருவாக்கியது அதனோடு மாணவர் போராட்டம் மாணவர் பார்வையில் ச.அஜிதன் எழுதிய கட்டுரை மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, தொடர்ந்து சாதியின் பெயரால் மக்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பதனை விளக்கும் விதமாக சிவா சடையன் அவர்களின் ‘எச்சில் தொட்டி’ நாவல் இடம்பெற்று வந்தது வந்துகொண்டு இருக்கிறது... எதிர்பாராத விதமாக நவம்பர் மாதத்தில் பத்திரிகையாளர் ப.திருமாவேலன் அவர்களின் சாணக்கியன் சொல்படிதான் ஆட்சி நடக்கிறது கட்டுரை அமைந்தது அந்த நேர்காணல் தொடர்ந்து நிலவி வந்த பல சந்தேகங்களுக்கு விடையாக அமைந்தது. அத்தோடு நடப்பில் என்ன நடக்கிறது என்பதை உணர்த்தும் விதத்தில் கா. தமிழரசன் அவர்களின் ஆதங்க கட்டுரைகள் மக்களை வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படியாக வந்துகொண்டு இருக்க டிசம்பர் மாதம் இடஒதுக்கீட்டு நாயகர் மானமிகு கி.வீரமணி அய்யா அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் பலரும் அறிந்திடாத கட்டுரைத் தொகுப்பை வெறுப்புக்கு அஞ்சாத பெருநெருப்பு என்று பதிய வாசகர்களை வியப்பில் ஆழ்த்தியது மீண்டும் ஒரு சிறப்பிதழைக் கொடுக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆம், சனவரி மாதத்தில் பொங்கல் சிறப்பிதழ் தமிழன் பிரசன்னா, மருத்துவர் இரா.செந்தில், முனைவர் மு.ராசேந்திரன், A.டில்லி பாபு , சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் ஆகியோரின் கேள்விகள் ஒருமுகம் பதில்கள் பலமுகம் நேர்காணல் பலருக்குத் தெளிவை ஏற்படுத்தியது. அத்தோடு கூடவே திராவிடராசன் கட்டுரைகள், பழ.வெங்கடாசலம் அவர்களின் ‘மந்திரமா? தந்திரமா?’ விளக்கங்கள் கூடுதலாக மக்களைக் கவர்ந்தது என்று சொல்லலாம். தொடர்ந்து பெண்ணுரிமையைப் போற்றும் விதத்தில் TSS மணி அவர்களின் ‘பெண் என்றால் மானுடம்’ கட்டுரை பெண்மையைப் போற்றும் விதத்தில் அமைந்து வருகிறது... பிப்ரவரியில் திமு கழகத்தின் மாணவரணிப் பொறுப்பாளர் இள.புகழேந்தி அவர்களின் நேர்காணல் உடன் பல சிறப்பு கட்டுரைகளைத் தாங்கி 11வது இதழும் வெளிவந்தது அதனைத் தொடர்ந்து இன்றும் அதன் தன்மை குறையாமல் இன்றும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் ...
என் வலிகளை முதல் முறையாக இதழில் பதிகிறேன், தொடர்ந்து 23வது இதழை இன்று நீங்கள் வாசிக்கும் இந்த நேரத்தில்...
கடந்து வந்த 23 மாத கால இதழ் பணியில் நான் பெற்ற துன்பங்களுக்கும் பயிற்சிக்கும் எல்லை இல்லை என்றே சொல்லலாம் “என்ன செய்வது விரும்பி தானே” ஏற்றுகொண்டாய் என்ற ஆறுதல்கள் பலரிடம் இருந்து கிடைக்கும் சரி என்று கடந்து செல்ல வேண்டிய சூழல், பலரின் பார்வையில் நான் வசதியாக இருப்பதாக அறிந்து வருகிறேன். பார்வையில்லை; பார்வைக்காவது வசதியாகப் படுவோம்! உண்மையில் அறிவழகன் என்ற உணர்வு பலமுறை சாப்பிடுவதைக் கூட குறைத்து சிலமுறை சாப்பிடும் சிலமுறை சாப்பிடுவதையே விட்டுவிட்டு கடந்து செல்லும் என்ன செய்வது விரும்பி ஏற்றுகொண்டது ஆகிற்றே!
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய உடல் உழைப்பை எவ்வளவு நாளும் கொடுக்கத் தயார். காரணம் எனக்கான கடமை இந்த சமூகத்தின் மீது உள்ளது. ஒருவேளை இன்று எனது பெற்றோர் நினைக்கலாம், நாம் ஏதோ மகன் பகுத்தறிவை கற்று வளமாக வாழ்வான் என்று. ஆனால் இன்று பகுத்தறிவுக்காக இவ்வளவு துன்பத்தை நம்மை மீறி செய்கிறானே, தவறு செய்து விட்டோமோ என்று. “ஒருவேளை நினைக்க நேரிட்டால் அதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்கள் எனக்குப் பின்னால் 2005ஆம் ஆண்டு நமது ஊரில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையில் கல்வெட்டில் அறிவழகன் - பெரியார் பிஞ்சு என்று பதிவு செய்தீர்களே அதைக் காப்பாற்றி வருகிறேன் என்று மார்தட்டி கொள்ளுங்கள்”...
தோழர்களே, கைத்தடி வாசகர்களே... ஒரு இதழ் வரும் போதும் எங்கள் உயிர் எங்கள் கையில் இல்லை என்றே சொல்லலாம். காரணம் இதழ் பணி முடிந்துவிடும் அச்சுக்கு பணம் இருக்காது. அச்சு பணி முடிந்துவிடும், தபால் அனுப்புவதற்கு பணம் இருக்காது. தபால் பணி முடிந்துவிடும், பணி ஆட்களுக்கு கொடுக்க பணம் இருக்காது. ஒருவழியாக அனைவரின் பணத்தை செலுத்திய பிறகு எங்கள் கண்களிலும் ஒன்றும் இருக்காது, எங்கள் வயிற்றிலும் ஒன்றும் இருக்காது. தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டி வரும். மைல்கள் கடந்து நேரங்கள் கடந்து நள்ளிரவில் அறைக்குச் செல்ல நேரிடும். தண்ணீர் மட்டும் அருந்தி உறங்க நேரிடும். உறக்கமும் வராது. அடுத்த மாத இதழ் பற்றிய கவலை பற்றிக்கொள்ள அடுத்த மாத இதழ் பணி அப்போது இருந்தே துவங்கும் ...
இப்படியாகப் பயணிக்கக் கூடிய நேரத்தில் தான் பகுத்தறிவு பல்சுவை இதழ்கள் பல வந்து கொண்டு இருக்கிறதே, இப்படி ஒரு இதழ் தேவைதானா என்று! என்ன செய்வது பதில் சொல்ல நேரம் இருப்பது இல்லை. அம்மா சாப்டியா என்று ஆசையாக கேட்டாளே அதற்கே பதில் சொல்ல நேரமில்லாத நிலையில் இதற்கு பதில் சொல்ல வேண்டுமா என்று கடந்து செல்ல நேரிடுகிறது. அப்படி கடந்தாலும் இன்று அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளதாக கருதுகிறேன்.
இன்று RSS போன்ற பல ஒன்றுக்கும் உதவாத அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டில் 50க்கும் மேற்பட்ட குழுக்களை, பிரிவுகளை வைத்துகொண்டு நாட்டை சின்னாபின்னமாகி வருகின்ற இந்த நேரத்தில் இது போன்ற பல இதழ்கள் தேவைப்படுகிறது. இந்த இதழ்கள் மட்டும் அல்லாமல் இன்னும் பல பகுத்தறிவு இதழ்கள் தொடர்ந்து வர வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாக வைக்கிறேன். ஆனால், அது அவ்வளவு சாதாரணமான காரியமும் இல்லை என்பதை உணர்ந்தே என் கருத்தை முன்வைக்கிறேன்!
பொதுவாக பல தோழர்கள், நண்பர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் இவ்வாறே அமைகிறது. அதாவது பல இதழ்கள் வருவதால் அத்துணை இதழ்களையும் வாங்கிப் படிக்க நேரமில்லை ஆகையால் வேண்டாம் தோழர் என்கிறார்கள். உங்களால் இதழை வாங்க முடியும் என்றால் வாங்கி மற்றவர்களுக்குக் கொடுங்கள்! மற்றவர் பகுத்தறிவாதியாக மாறட்டும் உங்களால்... நான் கைத்தடி இதழுக்காக மட்டும் பதியவில்லை. முற்போக்கான இதழ்கள் மட்டுமே சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோலாய் அமையும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை... எனக்கு வந்தால் ரத்தம், மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல் இல்லை. முற்போக்கு இதழ் நடத்தும் அனைவருக்கும் இந்த நிலை என்பதனை யாரும் மறுக்க முடியாது ...
கைத்தடி இதழை பொறுத்த வரை சில தோழர்களின் நன்கொடை மற்றும் விளம்பரத்தால் தொடர்ந்து நடந்து வருகிறது. தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசையும், சந்தாதாரர் ஆக இணைத்து ஓராண்டு இரண்டாண்டு நிறைவு பெறும் இந்தச் சூழலிலும் பலரின் பங்களிப்பு இன்னமும் எங்களை வந்து அடையவில்லை என்பதனை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்... குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பலரின் சந்தா தொகை கிடைக்காமலும் அவர்களுக்கு இதழ் தொடர்ந்து அனுப்பப்பட்டுத்தான் வருகிறது என்பதனை மிகுந்த மன வருத்தத்துடன் கண்ணீருடன் பதிவு செய்யவே விரும்புகிறேன்.
சந்தாதாரர் பலரும் சந்தா தொகையை கொடுக்கவில்லை. அதைக் கடந்தும் இப்படிப்பட்ட சூழலில் செயல்படும்போது எங்கள் மனம் புண்படுகிறது, வருந்துகிறது. பலர் செய்த களப்பணியில் இது பெரிய பணி இல்லை என்றாலும்கூட உங்களோடு சேர்ந்து தொடர்ந்து இந்த சமூகத்தோடு பயணிக்கவே விரும்புகிறேன்...
அறிவழகன் என்ற தனி மனிதனுக்காக உங்கள் மத்தியில் கையேந்தி நிற்கவில்லை. நான் கொண்ட முயற்சிக்காக நான் கொண்ட அக்கறைக்காக கையேந்தி நிற்கிறேன்; வாய்ப்பு உள்ளவர்கள் சந்தா தொகையை செலுத்தி உதவ கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிதி உதவி செய்யலாம். ஒரு ரூபாய் ஆனாலும் உதவி உதவியே !
என் பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால் என்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்து கொள்கிறேன் !
நன்றி!
உதவ நினைப்பவர்கள் உதவலாம்:
விபரங்களுக்கு அழையுங்கள்: 73733330, 8667342047
வங்கிக் கணக்கு விபரங்கள்:
NAME : KAITHADI A/C NO : 20160200001582
IFSC CODE : FDRL0002016 PH. NO: 7373333078
A/C TYPE : CURRENT ACCOUNT
FEDERAL BANK, DHARMAPURI
மின்னஞ்சல்: