சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேசன் என்ற அமைப்பின் சார்பில் பங்கேற்று பேசிய மகா விஷ்ணு என்ற பேச்சாளர் அறிவியலுக்குப் புறம்பான படுபிற்போக்கான கருத்துகளைப் பேசியுள்ளார். “மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம் என்றும், போன சென்மத்தில் பாவம் செய்தவர்கள் தாம் இந்த சென்மத்தில் மாற்றுத் திறனாளிகளாகவும், ஏழைகளாகவும் பிறக்கிறார்கள், கை, கால், கண்பார்வையற்றவர்களாக பிறப்பதற்குப் பாவங்கள் தாம் காரணம் என்றும், இதுபோன்று பல்வேறுவகையான மூடநம்பிக்கைகளை மாணவர்களிடையில் பேசினார்.

அப்போது அந்தப் பள்ளியில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி தமிழாசிரியர் சங்கர் அவரது கருத்துக்கு மறுப்பு தெரிவித்துப் பள்ளியில் முற்பிறவி, பாவம், சென்மம் போன்ற கருத்துகளை பேசக்கூடாது எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். மேடையில் இருந்த மகாவிஷ்ணு அந்த ஆசிரியரை எல்லோர் முன்னிலையிலும் மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவுபடுத்தினார், ஆன்மீகம் குறித்துப் பள்ளிக்கூடத்தில் பேசாமல் வேறு எங்கே பேசுவது என மிரட்டவும் செய்தார். அதன் பிறகு தலைமை ஆசிரியரின் தலையீட்டின் பேரில் அவரது பேச்சு நிறுத்தி வைக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் இந்த நிகழ்வு வெளிவந்த பிறகு கடும் எதிர்ப்பை சந்தித்ததன் விளைவாகத் தமிழ்நாடு அரசு தலையிட்டு மூட நம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறை கைது செய்துள்ளது.

இது போன்ற நிகழ்வுகள் தனியார் பள்ளிகளில் எவ்விதத் தடையும் இன்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளிலும் தன்னம்பிக்கை, எதிர்காலம், தேர்வை எதிர்கொள்ளுதல்... இப்படியான தலைப்பிட்டு ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழாக்களை அரசுப் பள்ளிகளில் கொண்டாட வேண்டுமென்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாகக் கூட செய்திகள் வந்தன. கடும் எதிர்ப்புக்குப் பிறகு அந்தச் சுற்றறிக்கை பின்வாங்கப்பட்டது

அண்மையில், கோவையில் உள்ள ஒரு அரசுப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது; கடும் எதிர்ப்புக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது. இப்படித் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்காங்கே வெளிஉலகத்துக்குப் பெரியளவில் தெரியாமல் அதிகாரிகள் ஆதரவுடன் ‘சாகா’க்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கராத்தே, சிலம்பம், யோகா போன்ற கலைகளைப் பயிற்றுவிப்பதாக மூளைச் சலவை செய்து மாணவர்களை வரவழைத்து ஆர்.எஸ்.எஸ். சாகா வகுப்பை நடத்துகிறார்கள்.

அரசுப் பள்ளிகளில் மே மாதம் நடக்கும் மாணவர் சேர்க்கை தற்போது சரஸ்வதி பூசையை முன்னிட்டும் நடத்தப்படுகிறது. சரஸ்வதி பூசை அன்று ஆசிரியர்களின் கால்களை மாணவர்களை வைத்து கழுவ வைக்கும் கேவலம் அரங்கேறி வருகிறது. இது அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என நாம் பிரித்து பார்க்க கூடாது. எந்தப் பள்ளியாக இருந்தாலும் மூடநம்பிக்கை

நிகழ்வுகள் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். பள்ளிகளின் மூலமாகத்தான் தன் இந்துத்துவப் பணிகளை சங்பரிவார் கும்பல் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சமூக வலைதளங்களில் மேற்கண்ட பள்ளிச் சொற்பொழிவு நிகழ்வு பரவலாகாமல் இருந்திருந்தால் பள்ளிக்கல்வித்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கும். ஏனென்றால் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டே இந்து அறநிலையத் துறையும் கல்வி துறையும் இந்துத்துவத்திற்கு சேவகம் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

தேவை மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம்:

மூடநம்பிக்கை சார்ந்து முற்பிறவி, பாவம், புண்ணியம் போன்ற காரணங்களைக் காட்டி அது தொடர்பான குற்றங்களைக் கையாளும் தனிப்பட்டச் சட்டம் எதுவும் இந்தியாவில் இல்லை. அதை இந்திய அரசு விரும்பவும் இல்லை. இந்தியா என்கிற கட்டமைப்பே, இந்துத்துவக் கட்டமைப்பாகத் தான் இருக்கின்றது. இந்துத்துவக் கட்டமைப்பு இந்து மதத்திற்குச் சேவகம் செய்வது தான்.

இந்து மதம் என்பது பார்ப்பனியம், மூடநம்பிக்கை உள்ளிட்ட படு பிற்போக்கான கருத்தியலின் சாரம்தான். எனவேதான் இந்திய அரசு இந்து மதத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் எந்தச் சட்டங்களையும் அனுமதிப்பதில்லை. எனவே, தமிழக அரசு தனது எல்லைக்குட்பட்ட தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனே நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படியான சட்டத்தை கர்நாடக அரசு ஏற்கனவே கொண்டு வந்துவிட்டது.

மனித குலத்திற்கு விரோதமான தீய பழக்கவழக்கங்களைத் தடை செய்யும் நோக்கில் கர்நாடகா தடுப்பு மற்றும் ஒழிப்பு சட்டம் எனப்படும் மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்டத்தை 2017 இல் கர்நாடக அரசு கொண்டு வந்துவிட்டது . இந்த சட்டம் மத சடங்குகளுடன் இணைக்கப்பட்ட "மனிதாபிமானமற்ற" நடைமுறைகளை முழுமையாக எதிர்க்கிறது. பெரியார் மண் எனச் சொல்லிக் கொள்ளும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு சட்டம் இல்லாதது அவலத்திற்குரியது. எனவே தமிழக அரசு உடனே மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

சட்டத்தைக் கொண்டு வருவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அறிவியல் கண்ணோட்டத்தை மாணவர்கள் நடுவில் விதைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடையேயும் பகுத்தறிவுக் கருத்துகளை விதைக்க வேண்டும்.

 நமது அரசியல் சாசனத்தின் 51 -ஏ(எச்) பிரிவு -''இந்திய குடிமக்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்த்து, கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பது, சீர்திருத்தம், மனிதநேயம் பரப்புதல் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறுகிறது அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு மாற்றாக அறிவியல் கண்ணோட்டத்தில் பகுத்தறிவு பரப்புரைகள் மேற்கொள்ள வேண்டும். சான்றாக மந்திரமா தந்திரமா என்பது போன்ற நிகழ்ச்சிகள் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்:

சமூகத்தில் நிகழும் மூடநம்பிக்கைகளின் மூலக் காரணங்களை கல்வி முறையின் மூலம் மட்டுமே விளக்கப்படுத்த முடியும். அறிவியல் கண்ணோட்டத்தை மற்றும் விமர்சன சிந்தனையை மாணவர்களிடம் ஊக்குவித்து வளர்த்தெடுக்க வேண்டும். அந்தக் கல்வித்துறையை இந்திய அரசு தன் கையில் வைத்துக் கொண்டு கல்வியை காவிமயமாகவும் கார்பரேட் மயமாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் போது, கல்வியை இந்தியப் பட்டியலில், மாநிலப் பட்டியலில் அல்லது பொதுப் பட்டியலில் இவற்றில் எதில் சேர்ப்பது என்பது நீண்ட தருக்கத்திற்குப் பிறகு இறுதியில் கல்வி மாநிலப் பட்டியலில் இருப்பதுதான் சரியானது என்று முடிவு செய்து, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்த்தனர்.

இந்தியாவில் 1975 -ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை அமலில் இருந்த அவசர காலக்கட்டத்தில் கல்வி பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் 57 வது பிரிவில் 42வது சட்ட திருத்தம் மூலமாகக் கல்வியானது மாநிலப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுப் பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்பு வரை கல்வி மீதான அனைத்து முடிவுகளும் எடுக்க மாநிலங்களுக்கு உரிமை இருந்தது. குறிப்பாகப் பாடத்திட்டம், பாடத் தொகுப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பாக எந்த முடிவுகளையும் மாநிலங்களே எடுத்து வந்தது. தற்போது எல்லா வகையிலும் கல்வித்துறையில் ஒன்றிய அரசின் தலையீடு உள்ளது.

இந்தியா என்பது பல மாநிலங்கள் அடங்கிய தேசம். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்ற தத்துவம் என்ற அடிப்படையில் நாடு முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை என்பதும் பொருத்தமற்றது. கல்வி கடைக்கோடி வரை சென்றடைவதை மாநில அரசுகள் மட்டுமே உறுதி செய்ய முடியும். மொழி, பண்பாட்டில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட இந்த நாட்டில் ஒரே மாதிரியான கல்வி என்பது பிற்போக்குத்தனமானது.

கல்விக்கு ஆகும் செலவில் 85 விழுக்காடு அந்தந்த மாநில அரசுகளே செலவழித்துக் கொண்டிருக்கின்றன. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்துத்துவ கல்வியைத் திணிப்பதற்கு மோடி அரசு முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த வேலையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவதற்கான முயற்சியைத் தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், 'மாநிலத்திற்கெனப் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. அதற்கென அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையைக் கடந்த மாதம் மாநில அரசிடம் அளித்துள்ளது.

அதில், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டிலுக்குக் கொண்டுவரத் தேவையான முயற்சிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. மேலும், பள்ளிக் கல்வியில் தமிழே முதல் மொழியாக இருப்பது அவசியமானது. ஆரம்பக் கல்வியில் இருந்து பல்கலைக் கழக மட்டம்வரை தமிழே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக் கழகத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்துவதோடு, தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்படும் கல்லூரியை மேம்படுத்த வேண்டும்.

சாதியை ஒழிப்பதை சமூக இலக்காகக் கொண்டு, சமத்துவத்தை நோக்கி நகரச் செய்வதாகப் பாடத்திட்டம் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வழங்கி உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இந்தக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கல்வியை இன்னும் பொதுப் பட்டியலில் நீட்டிக்கச் செய்வது கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை தமிழக அரசு உள்வாங்கிக் கொண்டு கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருவதற்குத் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிடில் கல்வி இந்துத்துவமயமாவதையும், கார்ப்பரேட்மயமாவதையும் தடுக்க முடியாது.

- க.இரா.தமிழரசன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்