ஓர்மைத்தடம்
பேரா. வீ.அரசு
ஆசிரியம் - ஆய்வு - உரையாடல்கள்
தொகுப்பும், பதிப்பும் - அ. மங்கை
பக்கங்கள் - 352
விலை -- ரூ. 500
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்., சென்னை - 600 050.
044 -2625 1968,2625 8410,4860 1884.
பேரா. வீ.அரசு அவர்களின் மணிவிழா நிறைவின் பொழுது, அவரது மாணவர்கள் நிகழ்த்திய ஆய்வுகள் குறித்து மாணவர்களே எழுதிய "ஓர்மை வெளி" எனும் நூல் 2014 -ல் வெளியிடப்பட்டது. இப்பொழுது அதன் தொடர்ச்சியாக அவரது 70-ஆம் அகவை நிறைவில் "ஓர்மைத்தடம்" எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் அரசு அவர்களின் மாணாக்கர்கள் பல்வேறு பொருண்மையில் அவருடன் நடத்திய உரையாடல்கள் இதில் தொகுக்கப் பட்டுள்ளன. பல்கலைக் கழகத்திலும், பல்கலைக் கழகத்திற்கு வெளியேயும் அரசு அவர்கள் கற்றுத் தந்த எண்ணற்ற செய்திகள் இந்த 15 உரையாடல்கள் மூலம் ஆவணமாகப் பதிவாகியுள்ளன.
தமிழ் இலக்கியத் துறையில் பாடத்திட்டம், வகுப்பறை சீர்திருத்தம், தமிழ் ஆய்வு வெளி, அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பயணங்கள் / மின் ஊடகங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம், அச்சுப் பண்பாடு, அரங்க நிகழ்வுகள், புத்தக உருவாக்கம், ஆய்வு மரபு, ஈழத்தின் கல்வி - இலக்கியச் சூழல் என இந்நூலின் பயணம் மிக விரிவானது. தவிரவும் பேராசிரியர் அரசு அவர்களின் வாழ்வும் பணியும் மற்றும் அவரது புகழ் பெற்ற நூலகம் குறித்த சுவையான பகுதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
கல்விப் புலம் , இலக்கியத்தளம், பதிப்புத்துறை சார்ந்து சிந்திப்பவர்கள் கரங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல் இது.
***
“லத்தீன் அமெரிக்காவில் நம்பிக்கைக் கீற்று இருபத்தொன்றாம் நூற்றாண்டு சோசலிசம்” அமரந்த்தா
2023, பக். 208, விலை: ரூ 200,
பன்மை வெளி, சென்னை - 78,
தொடர்புக்கு: 98408 48594 / 94439 18095
“காஸ்த்ரோவின் கூபாவும் லத்தீன் அமெரிக்க மார்க்சியமும்”
அமரந்த்தா, 2023, பக். 260, விலை: ரூ 250,
பன்மை வெளி, சென்னை - 78,
தொடர்புக்கு: 98408 48594 / 94439 18095
இலத்தீன் அமெரிக்க இலக்கியம் அரசியல் குறித்துக் கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழில் பேசியும், எழுதியும், மொழிபெயர்த்தும் வரும் அமரந்த்தா அவர்களின் இரண்டு நூல்கள். கூபா உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்றை பொலிவாரில் துவங்கி ஹொசோ மார்த்தி வழியாக காஸ்ட்ரோ, செகுவேரா, சாவேஸ் வரை எளிமையாக பேசும் 40 கட்டுரைகளைக் கொண்ட இரண்டு தொகுப்பாக வெளிவந்துள்ளது. முதல் நூல் காஸ்த்ரோவின் கூபா குறித்தும், அவர்களது புரட்சிகரச் செயல்பாடுகள், ஆட்சி நிர்வாகத்தில் அவர்களது மக்கள் சார்ந்த பணிகள், மக்களின் நலவாழ்வை முதன்மைப்படுத்தும் விவசாயம், மருத்துவம், கல்வி ஆகியவற்றில் அரசின் அக்கறை ஆகியவற்றைத் திறம்பட விளக்கி உள்ளார். பொதுவாக, சோஷலிச (சமஅறக்) குடியரசுகள் குறித்து இன்றைய முதலாளிய சக்திகள் பரப்பும் எதிர்மறையான கருத்துக்களுக்கான விடையை எப்படி கூப சமஅறக் குடியரசு வெளிப்படுத்துகிறது என்பதை அவரது நேரடி அனுபவங்கள் வழியாக விளக்கியுள்ளார். ஓர் அமெரிக்க ஆய்வாளர் தமிழகம் வந்து தமிழகத்தில் உள்ள இயற்கை விவசாயத்தை ஆய்வு செய்து இந்தியாவில் இயற்கை விவசாயம் பல சாதனைகளைப் புரிய முடியும் என்பதைக் குறிப்பிடுவதோடு, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இயற்கை விவசாயப் பண்ணைகளையும் அறிமுகப்படுத்துகிறார் ஒரு கட்டுரையில். அமெரிக்க வல்லரசு கூபாவை எப்படி அழிக்க முயல்கிறது என்பதையும் அதையும் தாண்டி அது எப்படி ஒரு வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறி உள்ளது என்பதையும், விவரிக்கும் பல கட்டுரைகள் இதில் உள்ளன.
இரண்டாவது நூலில் இன்றைய சமஅறக் குடியரசுகளின் பல்வேறு சிக்கலுக்கு எப்படி ஒரு நம்பிக்கைக் கீற்றாகக் கூபா விளங்குகிறது என்பதை விவரிக்கிறார். குறிப்பாக வெனிசூலா உள்ளிட்ட பல தென் அமெரிக்க நாடுகள் எப்படி இன்றைய ஆதிக்க வல்லரசு நாடுகளுக்கு ஒரு சவாலாகவும், வளரும் நாடுகளுக்கு நம்பிக்கைக் கீற்றாகவும் உள்ளது என்பதை விளக்குகிறது இந்நூல். பொதுவாக கூபாவின் காஸ்த்ரோ, வெனிசுலாவின் சாவேஸ் ஆகியோரை முன்வைத்து பேசினாலும், பொதுவான தென் அமெரிக்க நாடுகளின் அரசு, அரசியல், அதிகாரப் பரவலாக்கம் மக்கள் வாழ்க்கைத்தர உயர்வு ஆகியவற்றைப் புள்ளிவிபரங்களுடன் விவரிக்கின்றன இந்நூல்கள். குறிப்பாக மருத்துவத்துறையில் உலகில் முதல்தரமான நாடாக கூபா மாறியது எப்படி, மக்கள்நல மருத்துவம், இயற்கை விவ்சாயம் ஆகியவை குறித்து விரிவாக வியப்பூட்டும் பல தகவல்கள் அடங்கியதாக இவ்விரண்டு நூல்கள் அமைந்துள்ளன. இரண்டு நூல்களும் ஒரு குறிப்பிட்ட மையப் பொருளை விளக்கும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.
***
“குருமூர்த்தி: ஆர்.எஸ்.எஸ்ஸின் நிழல் அதிகாரம்”
சுஜாதா சிவஞானம்,
தமிழில் - பேரா. சே. கோச்சடை,
2024, பக். 128, விலை: ரூ. 150,
தமிழ்ப்புலம், மதுரை -18,
தொடர்புக்கு: 77082 80309 / 84281 08721
ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பே இந்திய அரசியல் சட்டத்தை, இந்திய தேசியக் கொடியை ஏற்காத ஒரு வெகுமக்கள் விரோத பாசிச நிழல் அமைப்புதான். அந்த அமைப்பிற்குள் ஒரு நிழல் அதிகாரமாகத் தன்னை எப்படி எஸ். குருமூர்த்தி வளர்த்துக் கொண்டு இன்றைய பாசிச அதிகாரத்தின் உயர்ந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளார் என்பதை விவரிக்கும் ;நூலாக இது விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த பத்திரிகையாளரான சுஜாதா சிவஞானம் 12 ஆண்டுகள் பலரும் எழுத மறுத்த ஒன்றை, ஒரு சவாலாக ஏற்று பல கள ஆய்வுகள், நேரடியான நேர்காணல்கள் என 8 மாதங்கள் (2022 ஜூன் துவங்கி 2023 பிப்ரவரி வரை) கடுமையாக உழைத்து, ஆய்வு செய்து, ஆதாரங்களுடன் கேரவன் ஆங்கில இதழுக்கு எழுதப்பட்ட ஒரு நீண்ட கட்டுரையே தமிழில் பேரா. கோச்சடை அவர்களால் சமூகப் பொறுப்புணர்வுடன் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் அருகில் பாணாம்பட்டு என்ற கிராமத்தின் அக்ரஹாரத்தில் பிறந்து, அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்து, ஒரு கணக்காயராக வாழ்வைத் துவங்கிய எஸ். குருமூர்த்தி அவர்கள் எப்படி தனது சதித்திட்டங்கள் (மகாபாரத கிருஷ்ண-சகுனி ராஜதந்திரங்கள்) வழியாகப் பல்வேறு பணக்கார நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். வலைக்குள் கொண்டு வந்தார் என்பதைச் சிறப்பாக எழுதி உள்ளார் கட்டுரையாளர். நூலைப் படித்து முடித்தவுடன் அரசியல் சதுரங்கம் எப்படி ஆளும் அதிகார அமைப்புகளால், இத்தகைய சனாதனப் பார்ப்பனியர்களால் கட்டமைக்கப்பட்டு யதார்த்தமாக ஆக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. தன் சாதி நலனுக்காகக் கருமமே கண்ணாக இல்லாமல், காரியமே கண்ணாக உழைத்த குருமூர்த்தி போன்றவர்கள் எதிர்மறை ஆசிரியர்களாக நமக்குக் கற்றுத் தருபவர்களாக உள்ளனர். தமிழின் நேர்மை, அறம் ஆகியவை எப்படி ஆரிய வருண தர்மாவின் காரியவாதத்திற்கு எதிராக உள்ளது என்பதை அறியத் தருகிறது இப்புத்தகம் எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றி, பரந்துபட்ட மக்கள் நலனுக்கு எதிராக தன் சாதி நவனை முன்வைத்து செயல்படுவதே “ஆரிய தருமம்” என்பதை அறிய இந்நூல் ஒரு சான்றாக அமைந்துள்ளது. இதனைச் சரியான தருணத்தில் வெளியிட்ட தமிழ் புலம், பேரா. கோச்சடை மற்றும் ஈடுபட்ட தோழர்களுக்கும் நன்றியும் வாழ்த்தும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.
***
“புதுக் கம்யுனிசம் மற்றும் சில கட்டுரைகள்”
தமிழவன், 2022, பக். 150, விலை: ரூ. 160,
அடையாளம், திருச்சி -10,
தொடர்புக்கு: 04332 273444 / 9444 77 2686
பொதுவுடைமைக் கோட்பாடுகள் குறித்து பல்வேறு உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் அதன் தற்கால உலகளாவிய விவாதங்களையும், இந்திய, தமிழகப் பொறுத்தப்பாடுகளையும் தொகுத்து, தமிழவன் தனது கருத்துரைகளுடன் வெளியிட்டுள்ள தொகுப்பே இந்நூல். இலக்கியம் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் 15 கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவம் குறித்த உரையாடல்களை இதில் தனது பார்வையில் முன்வைக்கிறார். விமர்சனம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் உட்பார்வையாக அரசியல் என்ற சட்டகம் எப்படி அமைகிறது என்பதைச் சொல்வதாக அமைந்துள்ளது. சிமன்-தி போவா, நாம் சாம்ஸ்கி குறித்தும் கவிஞர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஞானக்கூத்தன் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளும் இதில் உள்ளது. சிங்கப்பூர் இலக்கியம் குறித்து விரிவான அறிமுகக் கட்டுரையும் உள்ளது. சார்த்தரின் இலக்கியம் என்றால் என்ன? என்ற கட்டுரையை எடுத்து ஆய்வு செய்கிறது ஒரு கட்டுரை. நவீனக் கவிஞர்களின் கவிதைகளும் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் விமர்சனத்தின் தோல்வி குறித்து விவாதிக்கிறது மற்றொரு கட்டுரை. தமிழ் இலக்கியம் எப்பொழுது நோபல் பரிசு பெறும், தமிழில் மார்க்சியப் பார்வைகளின் இரண்டு போக்குகள் எவை எனப் புதுவகைக் கம்யுனிசப் பார்வையும் தமிழ் இலக்கியமும் வெட்டிச் செல்லும் புள்ளிகளைத் தனக்கே உரிய திறனாய்வு உள்ளாற்றலுடன் இதில் வெளிப்படுத்தி உள்ளார் தமிழவன்.
- புதுமலர் ஆசிரியர் குழு