சித்தாந்தப் பிடிமானத்தில் இம்மியளவும் பிசகாமல் வாழ்ந்த கவிஞர்கள் மூவரைக் கூறுங்கள் என்று கேட்டால் பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி என்று சட்டெனச் சொல்லிவிடலாம். முப்பெரும் கவிஞர் மரபில் தன்னைப் பொருத்திக் கொண்ட மனிதனான தமிழ்ஒளி, மானுட குலத்திற்காகக் கூவிய பொதுவுடைமைக் குயில். 40 வயதில் மரணித்தமையால் பாரதியையும், தன் எழுத்து வல்லமையால் பாரதிதாசனையும் நகலெடுத்திருந்த தமிழ்ஒளி, புதுமைப்பித்தனைப் போல் பல்வேறு வாழ்வியல் நெருக்கடிகளைக் கண்டவர். அவரது நூற்றாண்டு விழாத் தருணத்தில் தமிழ்ச்சமூகம் குறித்த அவரது பார்வை பற்றிய புரிதல் எல்லோருக்கும் அவசியமாகிறது.
இன்னல் வாழ்க்கை
பொதுவான ஊகங்களுக்கு அப்பாற்பட்டது தமிழ்ஒளியின் வாழ்வு. சின்னய்யா - செங்கேணி தம்பதிக்கு மகனாகப் பிறந்த (21.09.1924) அவரது இயற்பெயர் விஜயரங்கம். புதுச்சேரி சாமிப்பிள்ளைத் தோட்டமே அவர் குடும்பத்துக்குப் பூர்வீக வசிப்பிடம். ஆரம்பக்கல்வியை அரசுப் பள்ளியிலும் உயர்நிலைக் கல்வியைக் கல்வே கலாசாலையிலும் பயின்ற தமிழ்ஒளி, புதுவை திராவிடர் கழகத்தில் மன்னர் மன்னனுடன் (பாரதிதாசன் மகன்) உற்ற தோழனாக இணைந்து செயல்பட்டார். சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்ப “முரசு“ எனும் கையெழுத்துப்படி ஏட்டைத் தொடங்கி நடத்தினார். அது பரவலான கவனத்தைப் பெற்றது. பாரதிதாசன் முரசு இதழைப் படித்துவிட்டு வெகுவாகப் பாராட்டினார். இதன் மூலம் பாரதிதாசனுடன் தமிழ்ஒளிக்கு ஆழமான நட்பு ஏற்பட்டது.
தான் இயற்றிய “பாண்டியன்பரிசு“ நாடகத்தின் கையெழுத்திலான படியை நகலெடுக்கும் பொறுப்பைத் தமிழ்ஒளி-யிடம் வழங்கினார் பாரதிதாசன். சரியான வருவாய் இல்லாத தமிழ்ஒளி, பாரதிதாசனிடம் முறையிட அவரைக் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் தமிழ் படிக்க அனுப்பி வைத்தார். முதன்முதலில் கரந்தையில் அவருக்குச் சாதிய ரீதியாக மனஅழுத்தம் உயர்சாதி மாணவர்களால் ஏற்படுத்தப்பட்டது. படிப்பைப் பாதியில் விட்டு விட்டுப் புதுவை வந்த தமிழ்ஒளி மீண்டும் கரந்தையில் காலடி எடுத்து வைக்கவில்லை. தொடர்ந்து திராவிடர் கழகச் செயல்பாடுகளில் தீவிரமாகத் தன்னை இணைத்துக் கொண்டார். திராவிடநாடு, குடிஅரசு முதலான ஏடுகளில் தமிழ்ஒளியின் கவிதைகள் வெளியாகிக் கவனம் பெற்றன. தொடர்ந்து கவிஞனின் காதல், சிற்பியின் கனவு, வீராயி, நிலைபெற்ற சிலை போன்ற படைப்புகளை இயற்றினார். தொடர்ந்து கவிஞர் குயிலன் அவர்களோடு ஏற்பட்ட தொடர்பு அவரை முழுமையான பொதுவுடைமையாளராக மாற்றியது.
குயிலன் அவர்களின் தலைமையில் உருவான “முன்னணி“ ஏடு 48 இதழ்கள் வெளிவந்தது. இவ்வேட்டின் துணை ஆசிரியராகத் தமிழ்ஒளியும் எஸ்.ஆர்.எஸ். ராஜனும் செயல்பட்டனர். முன்னணியில் தமிழ்ஒளி எழுதிய மேதின வாழ்த்துப் பாடலும் சீனப்புரட்சி வாழ்த்துக் கவிதையும் குறிப்பிடத்தக்கவை. தொடர்ந்து சோவியத் அதிபர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கும் முயற்சியில் இறங்கி வெற்றியும் பெற்றார். தொடர்ந்து சென்னை வந்த தமிழ்ஒளிக்கு சுப்ரமணியம், சஞ்சீவி போன்றோர் இருப்பிட ஏற்பாடு செய்தனர். சிறிதுகாலம் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகி இருந்த தமிழ்ஒளி பின்னர் அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து இயற்கைச்சூழலில் (செனாய்நகர் வயல்பரப்பு) பல நாட்கள் முயன்று மாதவி காவியத்தை எழுதினார்.
பௌத்தம் தொடர்பான நூல்களைத் தேடித் தேடி படிக்கத் தொடங்கினார், தமிழ்ஒளி. கடும் பொருளாதார நெருக்கடியிலும் ஒன்பது காவியங்கள், பலநூறு தனிக்கதைகள், இரண்டு குறுநாவல்கள், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இருபது ஓரங்க நாடகங்கள், மூன்று மேடை நாடகங்கள், மூன்று இலக்கிய ஆய்வு நூல்கள் என ஒரு படைப்பாளராக உச்சம் தொட்டார். விஜயன், சிவி.ர., தமிழ்ஒளி, பாணன். ஜெயங்கொண்டான் எனப் பல பெயர்களில் எழுதினார். கடுமையான ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்ஒளி பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இல்லறவாழ்வைப் பற்றிச் சற்றும் நினையாத தமிழ்ஒளி சரியாகச் சிகிச்சைக்கும் ஒத்துழைக்கவில்லை. பத்துமாத காலம் நோயுடன் போராடி மனஉழல்வுக்கு ஆளான தமிழ்ஒளி 29.03.1965 அன்று மரணமடைந்தார். ஏழைகளுக்காக, வறுமைக்காக எழுதிய கவிஞன் இறுதிக்காலத்தில் வறுமையாலே மாண்டார்.
தமிழ்ச் சமூகவியலும் தமிழ்ஒளியும்
தமிழ்ச் சமூகத்தின் மீது ஆழமான அக்கறையும் புரிதலும் கொண்டிருந்த படைப்பாளியாக விளங்கினார் தமிழ்ஒளி. நம் பழம் பிரதியான தொல்காப்பியம் குறித்து,
“பண்டைய தமிழ்ச் கமூகத்தைப் படம் பிடித்துக்காட்டும் ஒப்புயர்வற்ற ஓவியச் சாலையாகத் திகழ்வது தொல்காப்பியம். அது மொழிக்கு இலக்கணம் இயம்ப வந்ததேயாகும். அம் மொழிதான் மக்கள் குழுவினரால் பயிலப்படுவததொன்றாம். அம் மக்கட்குழுவினரும் வாழும் நிலத்திற்கேற்ப, வழக்காற்றிற்கேற்ப மொழிபவர் ஆதலாலே மொழியைக் கற்கப்புகும் ஒருவன் அம்மரபு பேசும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் கற்றறிய வேண்டும்“ என்கிறார். (தமிழ்ஒளி கட்டுரைகள்:பக்:15)
தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்தும் அது பண்டைத் தமிழ்ச் சமூகம் மீது கட்டமைத்த வினைகள் குறித்தும் ஆய்வுப்பூர்வமாக விவாதிக்கிறார்.
தமிழ்க்கவிஞர்கள் குறித்த அவரது பார்வை மாறுபட்டது. கவிஞன் ஒரு குடிகாரன் எனும் தன் கட்டுரையில், “நமது புலவர்கள் பலர் கவிதையைப் புகலிடமாகக் கொள்ளும் (Escapism) போதை வழியில்தான் சென்றுவிட்டனர். இத்தகைய கஞ்சாக் கவிதைகளைச் சிருஷ்டிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல“ (தமிழ்ஒளி கட்டுரைகள் பக் 104) என்று வலியுறுத்துகிறார்.
அழகுணர்வுக்காகவும் வார்த்தை அலங்காரங்களுக்காகவும் எழுதப்படும் கவிதைகள் மீது காத்திரமான விமர்சனத்தை முன் வைக்கும் தமிழ்ஒளி ரசனைக்கு எதிரானவரல்லர், மாறாக “கலை மக்களுக்காக“ எனும் மார்க்சியச் சித்தாந்தமுள்ளவர். இதனைத் தாம் எழுதிய வீராயி காவியத்தின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“தமிழ்நாடு இன்றைக்கு எதிர்பார்ப்பது வாழ்க்கையை வளப்படுத்தும் கலையைத்தான். கலை கலைக்காகவே என்று சொல்லும் கற்பனைச் சித்தாந்தை அல்ல. சிறுபிள்ளைகளிடம் பலூன்களை ஊதவிட்டு வேடிக்கை காட்டுவதைப் போல வெறும் உவமைப் பிதற்றலும் கனவுலக மாயாவாதக் கதைகளும் இன்றைய தமிழ்நாட்டை சாவுப்படுக்கையில் வீழ்த்தும் கொடிய தொத்து நோய்களைப் போன்றவை. நம் கண்ணெதிரே நம் உடன்பிறந்தவன் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான். அவன் குடும்பம் வறுமைப்படுகுழியில் வீழ்ந்து சிதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப்போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் “ சுரீர்! சுரீர்!!” என்ற அடிக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்“ (வீராயி முன்னுரை பக் 2)
மேற்கண்ட அவரது எழுத்தில் வழியும் தமிழ்ப் பெருங்குடி மீதான மானுடக் காதலை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். கவிஞன் எனும் தலைப்பிலான கவிதை ஒன்றில்..
“ஊரை எழுப்பிடவே - துயர் ஒன்றை நொறுக்கிடவே தாரை முழக்கிடுவேன்- தமிழச் சாதி விழித்திடவே!
என்று உணர்வு மேலிடக் கூறுகிறார். தமிழர் உரிமைப் பொங்கல் எனும் கவிதை ஒன்றில்
“காடு கரம்புகள் கொத்தித் திருத்திக் கழனிக ளாக்கியவர் - அவர் வீடு சிறப்புறப் பொங்குக பொங்கல் விளைந்திட நல்லுரிமை?”
என்று பாடுகிறார். தமிழரின் அடையாளங்களைப் பதிவு செய்வதில் அவர் எங்கும் தவறியதில்லை. தமிழில் சமசுகிருதச் சொற்கள் கலந்துள்ளமை பற்றிய தம் கட்டுரை ஒன்றில்.
“கிராமங்களில் செல்லச் செல்ல தமிழ் விழுக்காடு மிகுதிப்படும். பட்டணங்களிற் செல்லச் செல்ல சமஸ்கிருதம் விழுக்காடு மிகுதிப்படும்“ (தமிழும் சமஸ்கிருதமும் கட்டுரை பக் 4) என்ற மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார். இதன்மூலம் மொழியை அதன் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் தன்மையில் கிராமங்களே முன்நிற்கின்றன எனும் தமிழ்ஒளியின் ஆய்வியல் உண்மையை அறியலாம். தமிழர்கள் ஒற்றுமையுடன் விளங்கினால் மட்டும்தான் பேராபத்திலிருந்து தப்பிக்கமுடியும் என்ற கருத்தைத் தனது வடுகு எனும் மொழியாய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
“ஒரு தேசிய இனத்தின் எப்பகுதியேனும் - சிறிதோ, பெரிதோ-ஒருமித்த உளப்பண்பு (Psychological Make-up) கொண்டிராவிடில் நாளடைவில் சிதறுண்டு விடும். தென்னகம் முழுவதுமான பெருநிலப்பரப்பில் வாழ்ந்த தமிழ் இனம் ஒருமித்த உளப்பண்பை இழந்த நிலையில் சிதறுண்டு இன்று வேங்கடத்திற்கு இப்பால் குறுகிக் கிடக்கிறது“ (வடுகு கட்டுரை பக் 3) இதன்மூலம் ஒரு தேசிய இனமாகத் தமிழினம் தடுமாறும் சிக்கலை உள்வாங்கியுள்ள தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். நிலப்பிரபுக்களைப் பார்த்து கேள்வி கேட்கும் விதமாகத் தாம் எழுதிய கவிதை ஒன்றில், ஆறுசுவையோடு - கறி அத்தனையும் படைத்து நூறு விருந்தோடு - தொந்தி நொந்திட உண்பதெல்லாம் சேறு சகதியோடு - வயல் திட்டின் பனையடியில் சோறல்ல, கூழ்குடிக்கும் - ஏழை சொட்டிய வேர்வையன்றோ!”
என்று உணர்வு பொங்கப் பாடுகிறார். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட “கலை மக்களுக்காக“ எனும் சிந்தனையியலுக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாக இக்கவிதையைச் சுட்ட முடியும். தஜகிஸ்தான்
கவிஞரான ரசூல் கம்சதோவ்,
“கவிதை என்பது பயணிகளுக்கு வழிகாட்டும் பட்டியல் அல்ல.
மனிதனை அறிவதாகும். பூவுலகின் நிலவியல் நூல் அல்ல.
மண்ணில் பிறக்கும் மனிதனின் தணியாத ஆர்வமுள்ள இதயத்தின்
மன இயலைக் கூறுவதாகும்“ என்று தன் கவிதை தொகுப்புக்கான
முன்னுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.
தமிழ்ச் சமூகக் காவியம் வீராயி
ஒடுக்கப்பட்ட (பறையர்) இனமக்களின் காவியமாக வீராயியைப் படைத்தார் தமிழ்ஒளி. ஒரு பெருவெள்ளத்தில் சிக்கி மீண்ட சிறுமி வீராயி, பறையர் சமூகப் பெண்ணாவார். அவளை வீரண்ணன் எனும் சிறுவனின் குடும்பம் மீட்டு வளர்க்கிறது. வீரண்ணனும் வீராயியும் சகோதரத் தன்மையுடன் வளர்க்கப்படுகிறார்கள் . இருவரும் ஜமீன்தார் பண்ணையில் தினக்கூலிகளாக வேலை செய்கிறார்கள். பருவப் பெண்ணான வீராயியை ஜமீன்தார் பாலுறவுக்கு உள்ளாக்கி நாசப்படுத்துகிறார். தன் தங்கைக்கு நேர்ந்ததை அறிந்த வீரண்ணன் ஜமீன்தாரைக் கோடாரியால் வெட்டிக் கொன்று தூக்குத் தண்டனை பெறுகிறார். வீராயியும் அவள் தாத்தா மாரிக்கிழவரும் ஒரு கங்காணி மூலம் ஆப்ரிக்க நாட்டிற்கு அடிமைகளாகப் போகிறார்கள். அங்கு ஆனந்தன் என்பவனைக் காதலித்து மணம்புரிய முயலும்போது அவள் பறைச்சமூகத்தைச் சேர்ந்தவளாகையால் காதலர் இருவரும் எரித்துக்கொல்லப் படுகின்றனர். தமிழ்ச் சமூகத்தில் இன்றும் நிலவும் ஆணவக்கொலை குறித்த காவியத்தை 85 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ஒளி பதியவைத்துள்ளார். “காதெல்லாம் கிழியும் வணம் பறையடித்து விட்டான் கவுண்டருக்கும் பறைச்சிக்கும் கலியாணம் என்று! எக்காளிப்புக் கொள்ளுதடா பறையோசை எங்கும் உதிர்கின்ற சாதிவெறி மதவெறிகள் எல்லாம் சுக்காகப் போயிற்று பறையோசை ஓடிச் சுதந்திரத்தைச் சொல்லியுமே முழக்குதடா ஊரில்!”
என்று முழங்குகிறார். தமிழர் இசைக்கருவியான பறை கொண்டு சாதீய எதிர்ப்பைத் தனது உக்கிரமான வரிகள்மூலம் காட்டுகிறார், தமிழ்ஒளி. தான் வாழும் வரை போராடியே மரித்த ஒரு கவிஞனாக,-ஆளுமையாக-, மனிதனாக நம்முன் நிற்கிறார். மேதினம் பற்றிப் பாடிய முதல்கவிஞன் தமிழ்ஒளியே. அவர் குறித்த தனது மதீப்பிட்டைத் தோழர். ஆர் நல்லக்கண்ணு,
“பாரதியையும் பாரதிதாசனையும் போல் தமிழ்ஒளியும் கவிதையை வாழ்வாகக் கொண்டவர். வாழ்க்கையையும் கவிதையாகக் கொண்டவர். தனக்கென வேறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாதவர். கவிஞனாகவே வாழ்ந்து முடித்தவர்“. (தமிழ்ஒளி குறுநூல் பதிப்புரை) என்று மதிப்பிடுகிறார்.
தமிழ்ஒளியின் இறுதிக் காலத்தில் அவரோடு பயணித்தவர் அறிஞர் சஞ்சீவி.
“இத்தனை படைப்புகளுக்காகவும் தமிழ்ஒளி ஈட்டிய பொருட்செல்வம் போதுமானதாக இருந்ததா எனில் இல்லை என்பதே உண்மை. போதுமான அளவுக்குப் பொருள் ஈட்டாமலே வாழ்நாள் முழுவதும் விரக்தியுடன் வாழ்ந்தே மறைந்தவர் தமிழ்ஒளி“ (இந்திய இலக்கியச் சிற்பிகள் தமிழ் ஒளி பக் 41) என்கிறார், சஞ்சீவி அவர்கள்
மேற்கண்ட சஞ்சீவி அவர்களின் கருத்து அவர் தமிழ்ஒளியோடு பயணித்த அனுபவத்திலிருந்து உருவானது. எனவேதான் நாம் கட்டுரையின் தொடக்கத்தில் தமிழ்ஒளியைப் புதுமைப்பித்தனோடு ஒப்பிட்டோம்.
தான் வாழ்ந்த காலத்திலும் மறைந்த பின்பும் சரியாகக் கவனிக்கப்படாத மனிதனாகத் தமிழ்ஒளி இருந்திருக்கிறார். ஆனாலும் சமூகத்துக்காக மரித்தவர்கள் அச்சமூகத்தாலேயே வெளிக்கொணரப் படுவார்கள் என்ற வரலாற்று உண்மை தமிழ்ஒளிக்கும் பொருந்தும். ஏனெனில் அவர் தமிழ்ச் சமூகத்தில் பிறந்த மனிதன் மட்டுமல்ல. தமிழ்ச் சமூகத்துக்காவே வாழ்ந்த மனிதன். மரணித்த மனிதன்.
பயன்பட்டவை
1. இந்திய இலக்கியச் சிற்பிகள் தமிழ்ஒளி - செ.து. சஞ்சீவி மு.ப 2004 சாகித்ய அகாடமி வெளியீடு புது டெல்லி - 1
2. தமிழர் சமுதாயம் - மு.ப. 2006 கவிஞர் தமிழ் ஒளி - புகழ் புத்தகாலயம் வெளியீடு, சென்னை 30
3. தமிழ்ஒளி கவிதைகள் - புகழ் புத்தகாலயம் வெளியீடு, சென்னை-30
4. தமிழ்ஒளி கட்டுரைகள் மு.ப. 2009 பாரதி புத்தகாலயம் -சென்னை -18
5. கவிஞர் தமிழ்ஒளி காவியங்கள் - கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு, மார்ச் -2010. சென்னை -01
- சதீஷ்குமார்