பேராசிரியர் வீ.அரசு சிறப்புப் பேட்டி

கண.குறிஞ்சி - உங்களது இளமைப் பருவம் / கல்வி/ குடும்பம் பற்றிக் குறிப்பிடவும்.

வீ.அரசு - தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் என்னும் சிற்றூரில் சிறு விவசாயி குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறைப் பட்டதாரி நான். தந்தை அடிப்படையான கல்வியறிவு பெற்றவர். பொதுநல ஈடுபாடு உடையவர். எனது கல்விப் பட்டங்களை தஞ்சையின் அருகிலுள்ள பூண்டி குப்பம் கல்லூரியில் முடித்தேன். ஆய்வுப் பட்டங்களை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் முடித்தேன். 1985 முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி 2014இல் பணி நிறைவு பெற்றேன். எனது வாழ்க்கை இணையர் அ.மங்கையும் நானும் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டோம். அவர் மொழி பெயர்ப்பாளராகவும் நாடக இயக்குனராகவும் செயல்பட்டு வரும் ஆங்கிலப் பேராசிரியர். பாலினச் சமத்துவத்திற்கான அரசியல் போராட்டத்தில் அவர் பல்வேறு நிலைகளிலும் செயல்பட்டு வருகிறார். மகள் பொன்னி பால் புதுமையர் (queer) கருத்து நிலை சார்ந்துசெயல்படுபவர். இலங்கை மட்டக்களப்பில் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் பணியாற்றி வருகிறார். அவர்களுக்கான ஆளுமைப் பயிற்சி அளித்து வருகிறார். அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு, பெங்களூரில் சட்டப் பயில்வு மற்றும் டொரோண்டோ (கனடா) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மகன் சிபி இதழியல் துறையில் செயல்பட்டு வருகிறார். சுற்றுச் சூழல் இதழியல் ஈடுபாடு கொண்டவர். அசாமியப் பழங்குடியினப் பெண்ணைத் தனது வாழ்க்கைத் துணையாகக் கொண்டுள்ளார். அசோசியேட் பிரஸ் நிறுவனத்தில் தற்போது வேலை செய்கிறார். எங்கள் குடும்பம் சாதி மறுத்த வாழ்வு முறையைக் கொண்டுள்ள குடும்பமாகும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய பொழுது நீங்கள் மேற்கொண்ட தனித்துவமான பணிகள் குறித்துத் தெரிவிக்கவும்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 29 ஆண்டுகளில் முழுமையாக மாணவர்களோடு சேர்ந்து நான் வாழ்ந்தேன் என்றே சொல்ல முடியும். ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு இடமளிப்பது, குறிப்பாக முனைவர் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பளிப்பது போன்ற பணிகளைத் திட்டமாகவே கொண்டிருந்தேன். அந்த வகையில் 49 முனைவர் பட்ட மாணவர்களில் சுமார் 40 பேர் மேற்குறித்தப் பின்புலத்தைச் சார்ந்தவர்கள்.

புதிய பாடத்திட்டத்தைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களோடு இணைந்து உருவாக்கினேன். அந்தப் பாடத்திட்டம் வெறுமனே தமிழ் மொழி இலக்கியப் படிப்பாக இல்லாமல், தமிழ்ச் சமூக மற்றும் பண்பாட்டு வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தினேன். இதுவரை தமிழ்ப் படிப்பில் இடம்பெறாத ஊடகங்கள் குறித்த விரிவான படிப்பு, பயிற்சி, நடைமுறை என்ற அளவில் மாணவர்களைக் கட்டமைத்தோம். இதனால், தமிழ் இலக்கியத்துறை மாணவர்கள் வெளி உலகில் தனித்த அடையாளத்தோடு செயல்படுவதாகப் பலரும் இன்று கூறுவதைக் கேட்கிறேன்.

மேலும் ‘மேடை’ என்ற அமைப்பின் மூலம் மாணவர்களிடம் உள்ள தனித் திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த முடிந்தது. இதில் பல மாணாக்கியர் நல்ல கவிஞர்களாக உருப்பெற்றுள்ளனர். துணிவாகப் பொது மேடைகளில் பேசும் பயிற்சியும் அவர்களுக்குக் கிடைத்தது. ஆண்டுதோறும் இந்திய அளவிலான சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்தோம். அது மாணக்கியரிடம் ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது. சென்னையைச் சுற்றியுள்ள வரலாற்று இடங்கள் அனைத்தையும் பார்வையிடும் வாய்ப்பை உருவாக்கினோம். கல்வெட்டு, நாட்டார் வழகாற்றியல், வெகுசன ஊடகம், மொழியியல், சுவடியியல்,ஒப்பிலக்கியம் ஆகிய துறைகள் சார்ந்து பட்டயப்படிப்புகளையும் அது தொடர்பான ஆய்வேட்டு உருவாக்கங்களையும் நடைமுறைப்படுத்தினோம். கருத்தரங்குகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், புத்தொளிப் பயிற்சிகள் எனப் பல நடைமுறைகளை மேற்கொண்டோம். இதுகுறித்துப் பெரிய புத்தகமே எழுத முடியும். எம் மாணவர் அ.மோகனா அவர்கள் அப்படியொரு புத்தகம் (தமிழியல் ஆய்வுவெளி -வீ.அரசு: ஆசிரியம்­ஆய்வு) எழுதியுள்ளார். அடுத்த ஆண்டு எனது எழுபது அகவை நிறைவையொட்டி நான் பல்கலைக்கழகத்தில் செய்த பல்வேறு பணிகள் குறித்து எம் மாணவர்கள் பதினைந்து தலைப்புகளில் விரிவான பேட்டி என்னிடம் எடுத்துள்ளனர். அது நூல் வடிவம் பெறும்போது எனது பல்கலைக்கழகத் தனித்துவமான பணிகளை அறிந்துகொள்ள முடியும்.

தமிழ் ஊடக வரலாறு /தமிழ்ச் சமூக வரலாறு / தமிழ் ஆராய்ச்சி வரலாறு குறித்து விரிவாக எழுத வேண்டும் என்ற விருப்பத்தோடு இருப்பவர் நீங்கள். அதற்கான உங்களது திட்டங்கள் யாவை?

நான் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது இந்தப் பொருண்மைகளில்தான் விரிவாக மாணவர்களிடம் பேசினேன், நிறைய கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அவைகளைத் தொகுத்து வைத்திருக்கிறேன், நூல் வடிவம் பெறவில்லை. இந்த ஒவ்வொரு துறை குறித்தும் விரிவாக என்னால் பேச முடியும். ஆனால், அவற்றை நூல் வடிவாக்கும் முயற்சியில் நான் ஈடுபட வேண்டும். எஞ்சிய காலத்தில் செய்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உங்களது நூல் தொகுப்புப் பணிகள் குறித்து விரிவாகத் தெரிவிக்கவும்.

நவீன கணிப்பொறி வளர்ச்சியால் தமிழில் பெரிய பெரிய தொகுதிகளாக நூல்களை வெளியிடும் மரபு உருப்பெற்றுள்ளது. தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் நூற்றாண்டு நிறைவின்போது அவரது ஆக்கங்கள் அனைத்தையும் இரு தொகுதிகளாக (சுமார் 3000 பக்கங்கள்) உருவாக்கினேன். 1970கள் தொடங்கி இடதுசாரி மரபு தொடர்பான சிறு வெளியீடுகள், புத்தகங்கள் ஆகியவற்றைப் பழைய புத்தகக் கடைகள் தொடங்கி பல்வேறு இடங்களிலும் திரட்டும் பணியை நான் மேற்கொண்டிருந்தேன். அவ்வகையில் சிறு சிறு வெளியீடாக வந்திருந்த ஜீவாவின் எழுத்துக்களைத் தொகுப்பது எனக்கு எளிதாயிற்று. அந்த அடிப்படையில்தான் ஜீவா நூற்றாண்டைக் கொண்டாட அவரது ஆக்கங்களைத் தொகுத்தேன்.

சென்னையில் வாழ்ந்த மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த தோழர் ருக்மணி அம்மாள் ஜனசக்தி நாளிதழ்களை சேகரித்து வைத்திருந்தார். அதில் 1943 தொடக்கம் 1948 வரை 4 தொகுதிகள் கிடைத்தன. தஞ்சாவூரில் பேராசிரியர் பா. மதிவாணன் அவரது தொகுப்பில் ஜனசக்தி தொடக்க ஆண்டு 1937இன் தொகுதி கிடைத்தது. இவற்றையும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இருந்த நூலகத்தில் கிடைத்த ஜனசக்தி இதழையும் கணிப்பொறி வழியாகப் படியெடுத்து அதில் தலையங்கங்களை மட்டும் தொகுத்தோம். ஜீவாவுடையதும் தொகுத்தோம். ஜீவாவின் ஆக்கங்களை ஜீவா முழுத்திரட்டில் இணைத்தேன். ஜனசக்தி தலையங்கங்கள் தனியாக இரண்டு தொகுதிகளாகத் தொகுத்தோம். கிடைத்த ஜனசக்தி இதழ்களின் காலவரிசை சார்ந்து தொகுப்பைச் செய்தோம். இடையில் பல ஆண்டுகள் ஜனசக்தி இதழ்கள் கிடைக்கவில்லை. அதைப்போல ஜீவாவின் ஆக்கங்களும் முழுமையாகக் கிடைத்தது என்று சொல்ல முடியாது.

1937 ஜனசக்தி தொடங்கியது முதல் 1963 ஜீவா மறையும் வரை உள்ள ஜனசக்தி இதழ்களை முதன்மையாகக் கொண்டு இரண்டு பெரும் தொகுதிகளைத் தொகுத்தோம். அதனை என்.சி.பி.எச். நிறுவனம் வெளியிட்டது. மொத்தம் நான்கு தொகுதிகள், சுமார் 7500 பக்கங்கள். அத்தொகுதிகள் தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாறு குறித்து அறிவதற்கு அரிய ஆவணமாக அமைந்திருப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் மாணவர்கள் என்னிடம் கூறினர். நான் தொகுத்த ஜீவாவின் ஆக்கங்களை இப்பொழுது தனித்த சிறு சிறு தொகுதிகளாகப் பலர் வெளியிட்டு வருவதை அறிய முடிகிறது. நான் தொகுத்துக் கொடுத்த அந்த வேலையை அவர்கள் குறிப்பிடுவதும் கூட இல்லை. ஜீவா குறித்த ஒரு நல்ல ஆவணத்தைச் செய்த திருப்தி எனக்கு உண்டு. அத்தொகுதிகளை மீண்டும் இப்பொழுது விடுபடல்களையெல்லாம் தேடி முழுமைப் படுத்த வேண்டும். அது இயலும்.

சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் நூலகத்தில் பணியாற்றிய நூலகர் சுந்தரராஜன் என்பவர் என்மீது அன்பு கொண்டவர். ஒருமுறை நான் நூலகத்திற்குச் சென்றபோது பழைய இதழ் தொகுப்பு ஒன்றை என்னிடம் காண்பித்தார் . அத்தொகுப்பு இளமுருகு பொற்செல்வி என்ற திராவிட முன்னேற்ற கழக அன்பர் ஒருவரது நூலகத்திலிருந்து அன்பளிப்பாக கொடுக்கப்பட்டிருந்தது. அதில் பாவேந்தர் பாரதிதாசனுடைய கையெழுத்து இருந்தது. அந்த இதழின் பெயர் தத்துவவிவேசினி. சென்னை இலௌகீக சங்கம் என்ற நாத்திக இயக்கம் 1878-1888 ஆம் ஆண்டுகளில் நடத்திய இதழ். அதனோடு இணந்து அவர்கள் ஆங்கிலத்தில் நடத்திய The Thinker என்ற தொகுப்பும் இருந்தது. இவ்விதழ்ச் செய்திகளை எனது ஆய்வு மாணவர் இருவர் வழிப் பொருண்மை வாரியாகத் தொகுத்தேன். பின்னர் அய்யா ஆனைமுத்து அவர்களிடம் இவ்விதழ்த் தொகுப்புகள் இருப்பதாக அறிந்து, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் இளவழகன் உதவியோடு அவற்றைப் பெற்றேன். அனைத்தையும் சேர்த்துத் தமிழில் நான்கு தொகுதிகளாகவும் ஆங்கிலத்தில் இரண்டு தொகுதிகளாகவும் தொகுத்து ஆறு தொகுதிகளாக அச்சிட்டோம். இது தமிழகத்தின் அறியப்படாத வரலாறுகளில் ஒன்று. பின்னர் சென்னை இலௌகீக சங்கம் தொடர்பாக இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் விரிவான பல்வேறு தகவல்களையும் மூன்றுமுறை தொகுத்தேன். இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு சென்னை இலௌகீக சங்கம் என்று ஒரு பெரும் நூலை உருவாக்குவதற்கான தரவுகளைக் கோப்புகளாக வைத்திருக்கிறேன். அவை என்றைக்கு நூல் வடிவம் பெறும் என்பதை நான் அறியேன். விரைவில் செய்து விடுவேன். இப்பொருள் பற்றி விரிவாகப் பல தளங்களில் பேசியுள்ளேன். குறு நூல்களும் பல வெளிவந்துள்ளன.

தத்துவவிவேசினி இதழில் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் என்பவர் பல்வேறு கடிதங்களை எழுதியிருப்பதைப் பார்த்தேன். இவர் குறித்துச் சிறு தொகுப்பு ஒன்றை அய்யா ஆனைமுத்து அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். இவர் எழுதிய ‘இந்துமத ஆசார ஆபாச தரிசினி’ என்ற நூல் 1878 இல் வெளிவந்தது. இந்து மதம் பற்றிய விரிவான விமர்சன நூல். பாடல் வடிவில் அமைந்தது. இவரது அனைத்து ஆக்கங்களையும் தொகுத்து அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு என்ற நூலையும் பதிப்பித்துள்ளேன்.

வ.உ.சி அவர்கள் வெளியிட்ட சிறு சிறு நூல்கள் பழைய புத்தகக் கடைகளிலும், வ.ரா. வீட்டிலும் எனக்குக் கிடைத்தன. தோழர் பொ.வேல்சாமி அவர்களோடு தொடர்பு கொண்டபோது அவரிடம் இருந்த வ.உ.சி சிறு நூல்கள் சிலவற்றை எனக்கு அனுப்பி வைத்தார். மொத்தம் 13 நூல்கள் கிடைத்தன. இவற்றையெல்லாம் தொகுத்து வ.உ.சி நூல் திரட்டு எனும் பெயரில் 2001 இல் பதிப்பித்தேன். அவரது திருக்குறள் பணி, தொல்காப்பியப் பணி, சைவ சமயம் தொடர்பான பணி, சொந்த வாழ்க்கை வரலாறு, மொழியாக்கங்கள் எனப் பல பரிமாணங்களில் அவை அமைந்தன. விடுதலைப் போராட்ட வீரர் என அறியப்பட்டிருந்த அவரின், தமிழ்ப் பணிகளைத் தமிழ்ச் சமூகம் அறிந்ததாகக் கூற முடியவில்லை. அவ்வகையில் எனது பதிப்புப் பணி அவருடைய இன்னொரு முகத்தைத் தமிழ்ச் சமூகத்திற்கு வெளிப்படுத்தியது. கால ஒழுங்கில் அவரது சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமைந்தது. இப்போது அந்தத் தொகுதியைச் சில புதிய இணைப்புகளோடு, வ.உ.சி பன்னூல் திரட்டு என்னும் பெயரில் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. வ.உ .சி.க்கு செய்த நன்றிக்கடனாக இதனைக் கருதுகிறேன்.

மேற்குறித்த வகையில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள் மயிலை சீனி வெங்கடசாமியின் ஆக்கங்கள், பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையின் ஆக்கங்கள், புதுமைப்பித்தனின் இதழ் வழிச் சிறுகதைகள் ஆகிய பல பணிகளையும் நான் செய்துள்ளேன். இவை பற்றி விரிக்கின் பெருகும். இப்பொழுது வ.ரா.விற்கு (வ.ராமசாமி) 1930-1951 காலங்களில் பலர் எழுதிய கடிதங்களை சாகித்திய அகாடமிக்காக பதிப்பித்துக் கொண்டிருக்கிறேன்.

திராவிடக் கருத்தியல் பாதையில் உங்களது பயணம் குறித்துப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் பள்ளி இறுதி வகுப்புப் படிக்கிற காலம் முதலே பெரியார் குறித்த ஈடுபாடு கொண்ட மாணவனாகவே வளர்ந்தேன். எங்கள் பகுதி திராவிட இயக்கக் கருத்து செல்வாக்குள்ள பகுதி. திராவிடக் கட்சிகளே இன்றும் நடைமுறையில் உள்ளது. பட்ட வகுப்பில் சேர்ந்தபொழுது பெரியார் கருத்து மரபுகளோடு இடதுசாரிக் கருத்து மரபில் ஈடுபாடு உடையவனாக செயல்படத் தொடங்கினேன். பட்ட வகுப்பில் மார்க்சியம், பெரியாரியம் ஆகியவற்றின் பரிமாணங்கள் குறித்து எனது வகுப்புத் தோழரும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்த ஒரு தோழரின் மகனுமாகிய அ.இரவிச்சந்திரன் அவர்களுடன் தொடர்ந்து உரையாடல் நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதைபோலவே இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியை சேர்ந்த எனது வகுப்புத் தோழர் சி.அய்யப்பன் அவர்களுடனும் தொடர்ந்து உரையாடல் நிகழ்த்தினேன். இத்தோழர்களின் உறவால் நான் முழுமையாக மார்க்சியத் தத்துவத்தின்பால் ஈடுபாடு உடையவனாக என்னை ஆக்கிக் கொண்டேன். மார்க்சியத் தத்துவ மரபு சார்ந்தே பெரியாரிய சிந்தனைகளை உள்வாங்குவதாக கருதுகிறேன். அந்த மரபே இன்றைக்கும் என்னுள் செயல்படுவதாகக் கருதுகிறேன். அதனால் பெரியாரியத் தோழர்கள் என்னை கம்யூனிஸ்டுக் என்றும், மார்க்சியத் தோழர்கள் என்னைப் பெரியாரிஸ்ட் என்றும் அடையாளப் படுத்துவதை உணர்கிறேன். இதனை நான் எப்படி புரிந்து கொள்வதென்று தெரியவில்லை. இதனால் பெரியாரியத் தோழர்களிடம் ஒரு வகையான மனநிலையையும் மார்க்சியத் தோழர்களிடம் ஒரு வகையான ஏளனப் பார்வையையும் நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால், அண்மைக் காலங்களில் அந்த நிலை பெரிதும் மாறியிருப்பதாகவே கருதுகிறேன்.

திராவிட இயக்கங்கள் தமிழகத்திற்கு ஆற்றிய பணிகளைத் தொகுத்துக் கூற முடியுமா?

1920 தொடங்கித் தமிழ்ச் சமூகத்தில் செயல்படத் தொடங்கிய திராவிட இயக்கம் ஆற்றிய பணிகளை இரண்டு வகைகளில் சொல்ல முடியும். பொருளாதார மாற்றங்கள் பற்றியது ஒரு துறை. பண்பாட்டு மாற்றங்கள் பற்றியது பிறிதொரு துறை. பொருளாதார மாற்றங்களின் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பற்றி விரிவாகப் பல்வேறு புள்ளி விவரங்களைத் தருகிறார்கள். ஆனால், அத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் விரிவாக நமக்கு கிடைக்கவில்லை. அவர்களது ஊதியம் மற்றும் பிற வசதிகள் எவ்வாறு உள்ளன என்பது பற்றிய ஆய்வுகள் செய்ய வேண்டும். உற்பத்தி பெருகலாம் உற்பத்தி செய்பவரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது முக்கியம். அந்த வகையில் தொழிலாளர்கள் மத்தியிலேயே முழுமையான மன நிறைவு இருப்பதாகச் சொல்ல முடியாது.

பண்பாட்டுத் தளத்தில், குறிப்பாகக் கல்வி பெறுபவர்களுடைய எண்ணிக்கை வளர்ந்துள்ளது. படிக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. சமூகத் தளத்தில் வெளிப்படையான சாதிய உரையாடல்கள் முன்பைவிடக் குறைந்துள்ளது. ஆனால், சாதியச் செயல்பாடுகளின் தன்மைகள் மாறியுள்ளன. சாதி ஒழிந்துவிடவில்லை. ஆனால், மறைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. சாதியைப் பெயர்களோடு இணைக்காமல் இருக்கும் நடவடிக்கைகள் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் இருப்பதை அறிகிறோம். சாதி குறித்துப் பெரியார் மேற்கொண்ட பரப்புரைகள் இவ்வகையான மாற்றத்திற்கு அடிப்படையாகச் சொல்லலாம். தமிழ்நாட்டின் பண்பாட்டு முகம் இந்திய அளவில் வேறுபட்டதாகக் கணிக்கப்படுவது திராவிட இயக்கத்தின் சாதனையே.

திராவிடம் X தமிழ்த் தேசியம் என்பதாகப் பொதுவெளியில் தீவிரமான கருத்துக்கள் அலைமோதுகின்றன. இது குறித்த உங்களது பார்வை?

திராவிடம், தமிழ் என்பது ஒருபொருள் குறித்த இரு சொற்களே. திராவிடம் என்பது தனியாக செயல்படுவதுபோல் ஒரு பொய்மை இங்கு கட்டமைக்கப்படுகிறது. தமிழ் என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும். வரலாற்றில் ஒவ்வொரு காலத்திலும் உருவாகும் சொற்கள், கால மாற்றத்தில் வெவ்வேறு பொருள்களாக மாற்றம் பெற்றிருந்தாலும், அதன் அடிப்படையான அணுகுமுறை ஒன்றே. தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் திராவிடம் என்பது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது என்று கட்டமைக்கிறார்கள். இது தமிழகத்தின் வரலாறு குறித்தப் புரிதலற்றப் பார்வையே. தமிழ்த் தேசியம் பேசுபவர்களின் சாதிய அணுகுமுறை, கடவுள் பற்றியப் புரிதல் ஆகியவை திராவிடக் கருத்தியல் பேசுபவர்களில் இருந்து வேறுபடுகிறது. அதனால்தான் தங்களை நியாயப்படுத்திக் கொள்ளத் திராவிடத்தைத் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக நிறுத்துகிறார்கள். ஒரு தேசிய இனம் ஒடுக்கப்படும்போது அதற்கெதிரான போராட்டம் என்பது வேறு. தேசிய இனத்தின் தற்பெருமை பேசி அதனையே வாழ்வு முறையாகக் கொள்வது என்பது வேறு. இத்தன்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகளில் கலை நேர்த்தி இல்லை எனும் விமர்சனம் குறித்த உங்களது கருத்து என்ன?

திராவிட இயக்க எழுத்துக்கள் என்பவை 1940 தொடக்கம் 1960 வரை வளமாக உருப்பெற்றன. இந்தக் காலங்களில் உருவான நவீன எழுத்துத் தன்மை அந்தப் பிரதிகளிலும் உண்டு. அவை நேரடியான சமூக நிகழ்வுகளை எழுத்தில் கொண்டுவந்தவை. அம்முறையைப் பிரச்சாரம் என்று மிகுந்த செல்வாக்கு பெற்ற அன்றைய ஆதிக்கச் சாதியைச் சார்ந்த எழுத்தாளர்கள் பதிவு செய்தனர். அவற்றில் பேசப்படும் செய்திகளுக்கு உடன்பாடற்றவர்களின் குரலே அது. அகிலன், ஜெக சிற்பியன், தீபம் நா.பார்த்தசாரதி போன்றவர்களின் எழுத்து முறைமைகளும் டி.கே.சீனிவாசன், அண்ணா, சிற்றரசு,கலைஞர் போன்றவர்களின் எழுத்து முறைமைகளும் ஒரே மரபில் அமைந்தவையே. ஆனால், அகிலன் போன்ற எழுத்தாளர்களை அங்கீகரித்தவர்கள், திராவிட எழுத்தாளர்களைப் புறக்கணிப்பதற்குக் கண்டுபிடித்த முறையே பிரச்சார இலக்கியம் என்ற பெயரிடல். திராவிட மரபு சார்ந்த எழுத்தாளர்களின் மொழியும் பாடுபொருளும் வேறு வடிவில் இருப்பதால், அதனை அம்மரபு சாராதவர்களின் எழுத்துக்களோடு ஒப்பிடுவது சரியாக இருக்காது. திராவிட எழுத்துக்களின் அழகியலை நாம் தனித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

தனித்தமிழ் இயக்க ஈடுபாடு மற்றும் அதில் தொடர்புடைய ஆளுமைகள் குறித்த உங்களது நினைவுகள்.

நான் கல்லூரியில் முதலாண்டு படிக்கும் காலத்தில் தனித்தமிழ் இயக்க ஈடுபாட்டோடு இருந்தேன். அதன் விளைவாக என் அப்பா வைத்த ராஜு என்ற பெயரை தனித்தமிழ் இயக்க நண்பர்கள் அரசு என்று மாற்றினார்கள். அதையே நிலையான பெயராகச் சட்ட வடிவில் வைத்துக் கொண்டேன். தஞ்சையில் பணியாற்றிய பேராசிரியர் இரா.இளவரசு தமிழியக்கம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டார். அந்த அமைப்பு தனித்தமிழ் இயக்க நடைமுறைகளைக் கொண்டது. அதில் தோழர்கள் செந்தலை கவுதமன், மு.இளமுருகன், சி.அறிவுறுவோன் ஆகியோர் தஞ்சையில் செயல்பட்டனர். அவர்களோடு நானும் இருந்தேன். ஆனால், அவர்களைப்போல் தீவிர செயல்பாட்டாளராக நான் இல்லை. நான் சென்னைக்கு வந்த பின், அய்யா பெருஞ் சித்திரனார் அவர்களைத் திருவல்லிக்கேணியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசியிருக்கிறேன். ‘தென்மொழி’ இதழைத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அவரது வாழ்க்கையின் இறுதிக் காலங்களில் அவர் எதிர்கொண்ட நெருக்கடிகள் சார்ந்து அவர்மீது மிகுந்த மரியாதை உருவானது. அவரது இறுதிச் சடங்கில் முழுமையாகப் பங்கேற்றேன். அவரது கவிதை மரபு என்பது தமிழ்ச் செவ்விலக்கிய மரபிற்கு இணையானது. பெயரைப் போடாமல் அவரது கவிதையை யாரிடமாவது படிக்கச் சொன்னால் அது புறநானூற்று பாடல் என்று சொல்லும் தன்மையை என்னால் உணர முடிந்தது. தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான ஆளுமைகளில் அவர் ஒருவர் என்ற கருத்தும் எனக்கும் உண்டு.

ஈழப்போராட்டத்தில் உங்களது பங்களிப்புப் பற்றிக் கூறுங்கள்.

ஆய்வு மாணவனாக இருந்த காலத்திலேயே சென்னையில் இருந்த பல ஈழப் போராளிகள் அறிமுகமாகியிருந்தனர். நான் தங்கி­யிருந்த இடத்திலேயே ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு குழுக்களின் தலைவர்கள் இருந்தனர். நண்பர் அரணமுறுவல், பேராசிரியர் இளவரசு ஆகியோர் ஈழப் போராளிகளோடு நெருங்கிய தொடர்பில் இருந்தனர். அந்த வகையில் அவர்கள் தொடங்கிய தமிழ் ஈழ நட்புறவுக் கழகம் என்ற அமைப்பில் இருந்தேன். தோழர் அரவிந்தன், தோழர் பத்மநாபா ஆகியவர்களோடு நேரடித் தொடர்பு இருந்தது.

இப்போது லண்டனில் இருக்கும் நாடகக் கலைஞர் தாசீசியஸ் அவர்கள் 1996 வாக்கில் ஈழம், தமிழ்நாடு, புலம்பெயர்ந்த நாடுகள் ஆகியவற்றில் வாழும் நாடகக் கலைஞர்களை ஒருங்கிணைத்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் ஈழத்தின் அவலநிலையை வெளிப்படுத்தும் நாடகங்களை நடத்துவதற்காக ‘நாராய்... நாராய்’ என்ற ஒரு நாடக பயணத்திற்கு திட்டமிட்டார். அதனைத் தமிழகத்தில் நடைமுறைப் படுத்துவதற்காக நானும் மங்கையும் வேறு சில தோழர்களும் பொறுப்பெடுத்துக் கொண்டோம்.

இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவே இருக்காது என்ற ஒரு பிரச்சாரம் வலுப்பட்ட காலத்தில், ஈழ நாடகக் கலைஞர்களை அழைத்துத் தமிழகம், பாண்டிச்சேரி, பெங்களூர் மற்றும் பல்கலைக்கழகங்கள், பல தனிப்பட்ட கல்வி நிறுவனங்கள், தமிழ் அமைப்புகள் ஆகியவற்றின் உதவியோடு சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் ‘நாராய்... நாராய்’ நாடகத்தைக் கொண்டு சென்றோம். ஈழத் தமிழர்களின் அவலங்களை கொண்டிருந்த அந்த நாடகங்களைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கண்ணீர் சிந்தியது எங்களுக்கு உந்துதலைத் தந்தது. காவல்துறை என்னைக் கண்காணித்தது. உளவுத்துறை­யினர் என்னிடம் பலமுறை வந்து பேசினர். இந்தத் தொடர்பில் ஈழத் தமிழர்கள் வாழும் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பல முறை பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. 25 ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களை ஒருங்கிணைத்து சுவிட்சர்லாந்தில் ஒரு கூட்டம் நடத்தினோம். அதன் விளைவாகக் ‘கட்டியம்’ என்ற உலகத் தமிழர் அரங்க இதழ் ஒன்றை கொண்டு வந்தோம். ஏழு இதழ்களைக் கொண்டுவர முடிந்தது. இதழ்களைக் கொண்டு செல்வதில் ஏற்பட்ட சிக்கல் தொடர்பாக அதனைத் தொடர முடியாமல் போய்விட்டது. இன்னும் விரிவாகச் சொல்ல முடியும். வேறு வாய்ப்பில் பேசலாம்.

ஈழத்துத் தமிழறிஞர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்ற ஆளுமைகள் குறித்த உங்களது மதிப்பீடு?

பேராசிரியர் கைலாசபதி அவர்களை ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்தபோது சந்தித்தேன். அவர் பின்பு மறைந்துபோனார். ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களோடு 1987 முதல் மறையும் வரை நெருங்கிய தொடர்பில் இருந்தேன். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைக்கு வருகைதரு பேராசிரியராக அவர் இருந்த காலத்தில், அவரைப் பயன்படுத்தி பல்வேறு கல்விப் பணிகளைச் செய்தேன். பேராசிரியர் சிவத்தம்பி குறித்துச் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். இவ்விரு பேராசிரியர்களும் ஈழத்தில் கல்விப் புலத்தில் மார்க்சியக் கண்ணோட்டத்தோடு செயல்படும் முறையினை வளர்த்தெடுத்தவர்கள். 1950களின் இறுதி முதல் தமிழ்நாட்டில் இருந்த இடசாரி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களோடு, இவர்கள் கொண்ட தொடர்பால் தமிழ்ச் சூழலில் மார்க்சியக் கருத்துநிலை சார்ந்த ஆய்வாளர்கள் பலர் உருவாயினர். பேராசிரியர் கைலாசபதி அவர்களின் ஆய்வு முறையால் எவ்வாறு தாக்கமுற்றேன் என்பதை மார்க்சிய ஆய்வாளார் கோ.கேசவன் விரிவாகப் பதிவு செய்துள்ளார். இவ்விரு பேராசிரியர்களும் தமிழில் மிக வளமான ஆய்வு மரபு உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தவர்கள்.

பேராசிரியர் கைலாசபதி அவர்கள் மாவோயிசக் கருத்து மரபில் செயல்பட்டவர். அதனால், அவர் குறித்த விமர்சனங்கள் உண்டு. மார்க்சியத்தை அதன் பல பரிமாணங்களோடு செயல்படுத்தும் முறையியலை அவர் கையாளவில்லையென்பது அந்த விமர்சனம். பேராசிரியர் சிவத்தம்பியைப் பொறுத்தவரை அவர் அவ்வப்போது உருவாகும் புதிய மார்க்சிய போக்குகளை விரிவாகப் படித்து ஆய்வுகளை நிகழ்த்தியவர். அவரது ஆய்வு கறார் தன்மையற்ற போக்கினைக் கொண்டது என்ற விமர்சனமும் உண்டு. இவ்விரு பேராசிரியர்களின் எழுத்துக்களின் மூலம் தாக்கம் பெற்றவன் நான் என்று சொல்ல முடியும். சிவத்தம்பியை எனது ஆசானாகக் கருதிக்கொள்கிறேன்.

புலம்பெயர் இலக்கியம் பற்றிய உங்களது கண்ணோட்டம்?

1983 கருப்பு சூலை தமிழர் இனவழிப்புக் கலவரத்திற்குப் பின்பு ஈழத்தமிழர்கள் பெருமளவில் உலக நாடுகளில் குடியேறினர். இவர்கள் 1990-கள் தொடங்கி ஏறக்குறைய இரண்டாயிரம் வரை ஏராளமான இதழ்களை நடத்தினர். நிறைய தொகுப்புக்களை வெளியிட்டனர். இவற்றின் வழியாக உருவான கலை இலக்கியச் செயல்பாடுகளைப் புலம்பெயர் இலக்கியம் என்றழைப்பது மரபாயிற்று. இவற்றில், ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் அவலங்கள் பல பரிமாணங்களில் பதிவாயின. அதைப் போல குடிபெயர்ந்த தமிழர்கள் வாழுமிடங்களில் எதிர்கொள்ளும் அவலம் பாடுபொருளாக வடிவம் பெற்றன.

ஈழத்தில் உருவான கவிதை மரபு என்பது புறநானூற்று மரபைப் போல போர் சார்ந்த மரபாக இருக்கிறது. இது புலம்பெயர் நாடுகளிலும், ஈழத்திலும் இருந்த கவிஞர்களாலும் உருவாக்கப்பட்ட, போர் சார்ந்த இலக்கியப் பிரதிகள் என்று நாம் வாசிக்க முடிகிறது. தமிழ் இலக்கிய மரபில் பல்வேறு புதிய தன்மைகள் உருப்பெற ஈழப் போர் காரணமாகியது. புதிய நாடகப் பிரதிகளும் உருவாகின. தமிழ் இலக்கியம் சமகாலத் தன்மையோடு இருப்பதை இவ்வகை ஆக்கங்களின் மூலமாகவே நாம் உணர்ந்து கொள்கிறோம். இது தமிழின் தனித் தன்மை என்றும் சொல்ல முடியும். இந்த வகையில் தமிழ்நாட்டில் உருவான இலக்கிய மரபிலிருந்து முற்றிலும் மாறானதாக, ஈழ இலக்கிய உருவாக்கம் செயல்பட்டது என்பதை நாம் பதிவு செய்யலாம். இது இப்போது தொடர்வதாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அந்தப் பின்புலத்தில் ஷோபா சக்தி போன்ற பல முக்கியமான எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உருவான இந்த மரபைப் போர் சார்ந்த இலக்கியம் என்றும் சொல்லலாம்.

ஆய்வியல் நிறைஞர் படிப்பிற்காகச் சிறுகதை எழுத்தாளர் விந்தன் அவர்களைக் குறித்து ஆய்வு மேற்கொண்டீர்கள். விந்தன் அவர்கள் பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் படிப்பை முடித்தேன். அப்போது சென்னையில் இருந்த பேராசிரியர் இரா.இளவரசோடு நெருக்கமான தொடர்பில் இருந்தேன். அவர்தான் விந்தன் பற்றி ஆய்வு மேற்கொள்ள எனக்கு அறிவுறுத்தினார்.

விந்தன் உதிரிப் பாட்டாளி மக்களைத் தமது ஆக்கத்தில் கொண்டுவந்த முதல் தமிழ் எழுத்தாளர் என்று சொல்ல முடியும். மிகவும் சாதாரண உழைக்கும் குடும்பத்தில் பிறந்து கல்கி பத்திரிக்கையில் அச்சுக் கோப்பாளராக வேலைக்குச் சேர்ந்தவர். கல்கி அவர்களின் ஊக்க முயற்சியால் எழுத்தாளராக செயல்பட்டவர். அவர் எழுதியுள்ள சுமார் 100 சிறுகதைகள், ஐந்தாறு நாவல்கள் ஆகியவை தமிழ்ப் புனைவுலகில் அவருக்கான இடத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்ப் புனைவு வரலாறு எழுதிய பேராசிரியர் கா.சிவத்தம்பி மற்றும் சிகரம் செந்தில்நாதன் தவிர்த்து வேறு யாரும் அவரைத் தமிழ்ப் புனைகதை எழுத்தாளராகப் பதிவு செய்யவில்லை.

அவர் கார்க்கி மீது மிகுந்த ஈடுபாடு தனக்கு உண்டு என்று எழுதியிருக்கிறார். ‘மனிதன்’ (1954) என்ற இதழை நடத்தினார். மனிதன் என்ற பெயரை கார்க்கியின் தாக்கத்தால்தான் இதழுக்கு வைத்தேன் என்று அவர் பதிவு செய்துள்ளார். இடதுசாரி இயக்கங்களில் நேரடியாக அவருக்குத் தொடர்பில்லாவிட்டாலும் அவர் ஒர் இடதுசாரிக் கருத்து நிலையாளர்தான். ‘வேலை நிறுத்தம் ஏன்?’ (1949) என்று அவர் எழுதிய சிறு நூல் அன்றைய தொழிலாளர் போராட்டங்கள் பற்றியான அரிய ஆவணம். அவரைக் கம்யூனிஸ்டு என்று தமிழ்ச் சமூகம் அங்கீகரிக்காவிட்டாலும் அவர் ஒரு கம்யூனிஸ்டுதான். இவர் குறித்து விரிவான நூல் ஒன்று எழுதும் ஆசை எனக்கு இருக்கிறது.

புதுமைப்பித்தன்தான் நவீனச் சிறுகதை வரலாற்றைத் தொடங்கி வைத்தவர் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். அதற்கான விளக்கத்தைத் தரவும்.

தமிழில் புனைகதை உருவாக்கம் என்பது காலனிய தாக்கத்தால்தான். ஐரோப்பிய மொழிகளில் உருவான இந்தப் புனைகதை மரபைத் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சி பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. அவ்விதம் தொடங்கியவர்கள் தமிழ் மரபில் உள்ள காவியங்கள், கதைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அதனைச் செய்யத் தொடங்கினார். ஒரு புதிதான கதை மரபு அதில் உருப்பெற்றது என்று சொல்ல முடியாது. அதற்குக் காரணம் புனைகதை உருவாவதற்கான இதழ்களும், வாசிப்பாளர்களும் 1930க்கு முன் உருவானதாகச் சொல்ல இயலாது. அவை நமது பழம் மரபுகளைப் பெரிதும் உள்வாங்கியவையே. நவீனத் தன்மைகள் அவற்றில் இடம்பெறவில்லை. நவீன வாசிப்பு மரபு அதில் இல்லை. ஆனால், 1930 களில் தமிழில் அச்சு ஊடகம், நவீனத் தன்மை பெற்றது. ஒரே நிறுவனமே பல இதழ்களை நடத்தும் சங்கிலித் தொடர் அமைப்பு உருவானது. அதற்கெனப் புதிய வாசகர்கள் உருவானார்கள். இந்தப் பின்புலமே நவீனத்துவக் கதை மரபுக்கான களம். இந்தக் களத்தைச் சரியாகப் பயன்படுத்தியவர் புதுமைப்பித்தனே.

அதனால்தான் புதுமைப்பித்தனிலிருந்து தமிழ்ப் புனைகதை மரபைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன். சமூக மாற்றங்களும் புதிய வடிவ உருவாக்கத்திற்குமான உறவைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

ஆய்வறிஞர் கோ.கேசவன் அவர்களது படைப்புகள் குறித்த உங்கள் பார்வையைப் பதிவு செய்க!

ஈழத்தில் கைலாசபதி, சிவத்தம்பி, நுஃமான் ஆகிய அறிஞர்கள் மார்க்சியப் பின்புலத்தோடு செயல்பட்டதைப் போல, தமிழ்ச் சூழலில் செயல்பட்டவர் கோ.கேசவன். தமிழ்ச் சமூக வரலாற்றின் பல பரிமாணங்களையும் இவர் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். ஒவ்வொரு பொருண்மை குறித்தும் விரிவான விவரணங்களைத் தருவது அவரது ஆய்வு முறை. பேசும் பொருள் குறித்து விரிவாகப் பேசுவதற்குப் பதிலாக அந்தப் பொருளோடு தொடர்புடைய முன் தன்மைகளை விரிவாகப் பதிவு செய்தார், பேசும் பொருளை விரிவாகப் பதிவு செய்யவில்லை என்பது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனமாகும். அவரது அனைத்து ஆக்கங்களையும் அண்மையில் படித்து, சாகித்திய அகாடமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஒரு சிறிய நூலை உருவாக்கினேன். அதன் மூலம் கேசவன் குறித்துச் சொல்லக் கூடிய அந்த விமர்சனங்களை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை அவருடைய ஒரு முறையியலாகவே பார்க்க முடிந்தது. கறாரான மார்க்சியக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவது அவருடைய ஆய்வு முறையின் அடிப்படையாகும். பிற்காலத்தில் உருவான மார்க்சியப் பார்வைகளை அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்ற விமர்சனம் அவர் எழுத்துக்கள் மீது உண்டு. தமிழில் பல துறைகள் சார்ந்தும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆய்வுகளைச் செய்த பெருமை கேசவன் அவர்களைச் சாரும்.

கவிஞர் இன்குலாப் அவர்களோடு நீங்கள் கொண்டிருந்த தோழமை அனுபவங்களைத் தெரிவிக்க இயலுமா?

தோழர் இன்குலாப் ஒர் அரிய மனிதர். அவரோடு இருக்கும் ஒவ்வொரு கணத்திலும் தோழமையை உணர முடியும். இன்குலாப் எழுதிய ஏறக்குறைய அனைத்து நாடகங்களையும் நெறியாள்கை செய்து மங்கை நிகழ்த்தினார். அந்தக் காலங்களில் இன்குலாப்போடு இணைந்து பல்வேறு கருத்துக்களையும் உரையாடக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மார்க்சியத் தத்துவ மரபு சார்ந்து, அன்பால் மனிதர்களை வென்றெடுப்பது என்பது அவருடைய அணுகுமுறையாக இருந்தது. அவருடைய அந்த அணுகுமுறையால் அவரை விமர்சனம் செய்ததையும் நான் அறிவேன். அவரது கவிதைகளைப் பற்றி அறிந்துள்ள தமிழ்ச் சமூகம், அவருடைய நாடகங்களைப் பற்றி அறிந்துள்ளதாகக் கூற முடியாது. சிறந்த நாடகப் பிரதிகளை அவர் உருவாக்கியுள்ளார். அவை பெரும்பகுதி நிகழ்த்தப்பட்டது அவருக்குக் கிடைத்த அங்கீகாரம்.

சங்க இலக்கியம் குறித்த வெங்கட் சாமிநாதனின் கண்ணோட்டம் பற்றி உங்களது மதிப்பீடு என்ன?

நவீன விமர்சகர்கள் என்று சொல்லப்படுகிற வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் சமஸ்கிருதத்தில் உள்ள இலக்கியங்கள், நாடகப் பிரதிகள், நாட்டிய சாஸ்திரம் போன்ற கோட்பாட்டு நூல்கள் ஆகியவற்றை விதந்து பேசியதைப் போல, சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகியவைப் பற்றிப் பேசியதாக அறிய முடியவில்லை. தமிழ் தொல் மரபு, செவ்விலக்கிய மரபு, செவ்விலக்கண மரபு ஆகியவற்றைப் பகடி செய்து பேசுவதாகவே அவர் மொழி அமையும். அவருக்குள் தமிழ் பற்றியோ, தமிழர்கள் பற்றியோ நல்ல அபிப்பிராயம் இருந்ததாகச் சொல்ல முடியாது. தமிழ் படித்தவர்களைக் கேளிக்கையாகவும் கிண்டலாகவும் பதிவு செய்யும் மனநிலை உடையவராகவே வெங்கட் சாமிநாதன் இருந்தார். இவருக்குள் இருந்த இந்த மனநிலை என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

பெரும் எழுத்தாளராக முன்னிறுத்தப்படும் ஜெயமோகன் பற்றிய உங்களது மதிப்பீடு?

மனித சமூக வளர்ச்சியில் இயற்கை நிகழ்வுகளை, மனிதர்கள் புரிந்துகொள்வதில் பல பரிமாணங்கள் உண்டு. ஒவ்வொரு காலத்திலும் இயற்கையைக் கண்டறிந்து, புதிய புதிய புரிதலுக்கு மனிதன் ஆளாகிறான். அதில் சாதாரண மக்கள் இயற்கை நிகழ்வுகளை வியப்பு, பயம் ஆகிய உணர்வுகள் சார்ந்தே புரிந்துகொள்கின்றனர். அதனால் ஒரு வகையான புனிதத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். அது சார்ந்து நம்பிக்கைகளையும், நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் சடங்குகளையும் செய்யத் தொடங்குகிறார்கள். அவை வழிபாடுகளாக, மானுடவியல் துறை சார்ந்து பதிவு செய்யப்படுகிறது. இதனை அடிப்படையாகக்கொண்டே மதம், அதற்குத் தேவையான கடவுள் ஆகியவற்றை முடியரசுகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நிறுவனமாக்குகிறார்கள். அவை ஆதிக்க சாதி மற்றும் ஆதிக்க அரசுகள் ஆகியவற்றுக்குத் துணைபோகும் வடிவங்களாக சமூகத்தில் கட்டமைக்கப்படுகிறது. இதில் மனித அன்பை முதன்மையாகக் கொண்ட அவைதீக மரபும், மனிதனைக் கவனத்தில் கொள்ளாது கடவுள் என்ற ஒரு பொருளைக் கட்டமைக்கும் வைதீக மரபும் மதங்களுக்குள் உருப்பெறுகிறது.

வைதீக மரபு என்பது மக்களை ஏமாற்றுவது, முட்டாள்களாக்குவது. அவர்களிடம் இருக்கக் கூடிய புரிதலின்மையை அடிப்படைச் சரக்காகக் கொண்டு செயல்படுவது. இது சமூகத்தின் அரசுருவாக்கம், நிறுவன உருவாக்கம், ஆதிக்க சாதி மரபு மற்றும் அதிகார மரபு ஆகியவற்றின் வடிவம். நண்பர் ஜெயமோகன் இந்த மதங்களையே, இவை சார்ந்த அதிகாரத் தன்மைகளையே கொண்டாடுகிறார். இதனால் கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் செல்லப் பிள்ளையாகவும் அவர்கள் உருவாக்கும் சினிமாக்களின் மூலமாக இலட்சக் கணக்கான அளவில் பணம் சம்பாதிப்பவராகவும் வாழும் ஒரு குட்டி முதலாளிய மனநிலையாளர். இந்தச் சமூகத்தில் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் குறித்த எந்தப் புரிதலும் அற்றவர். மத நிறுவனத்தின் ஒர் அங்கம் அவர். அதனால்தான் கார்ப்பரேட்டு முதலாளிகளைக் கொண்டாடுபவராகவும், சாதாரண மனிதர்களை, குறிப்பாக, பெண்களை இழிவுபடுத்திப் பேசுபவராகவும் வாழ்கிறார். அவரது நிலைப்பாட்டில் சரியாகவே செயல்படுகிறார். அவரை ஆதிக்க சாதி மற்றும் அதிகார மரபு கொண்டாடும். விரைவில் ஞானபீடப் பரிசு அவருக்கு வழங்கப்படும்.

விடுதலைப் போராளி வ.உ.சி அவர்களைப் பற்றிய உங்களது கண்ணோட்டத்தைப் பதிவிடுக.

வ.உ.சி தூத்துக்குடியில் இருந்தபொழுது அந்த ஊரில் இருந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அமைப்பை உருவாக்கிய பெருமகன். அவரது கோரல் மில் தொழிலாளர் போராட்டம் ஆசியப் பகுதியிலேயே நடந்த முதல் தொழிற்சங்கப் போராட்டம் என்பதை பலரும் பதிவு செய்துள்ளார்கள். விவசா­யிகளுக்காக அவர் உருவாக்கிய கூட்டுறவு சங்கம் முக்கியமானது. வழக்கறிஞராக பணியாற்றியபோதே இவ்வகையான அரசியல் செயல்பாடுகளில் அவர் இருந்தார். தொழிலாளர் போராட்டத்தின் எழுச்சியைக் கண்டு பயந்த வெள்ளையர்கள் அவரைச் சிறைப்படுத்தினர். சிறையில் அவர் நிறைய வாசிப்பையும், மொழியாக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். தொல்காப்பியமும், திருக்குறளும் அவருக்கு ஈடுபாடான நூல்கள். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் சிறையில் மொழிபெயர்த்த, உரையெழுதிய நூல்களை அச்சுக்குக் கொண்டு வந்தார். அந்தக் காலங்களில் பொருளாதார ரீதியாக மிகுந்த துன்பத்திற்குள்ளானார். காங்கிரஸ் இயக்கத்தில் உருவான பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாத முரண்பாடுகளில் வ.உ.சி.க்கு முக்கிய இடமுண்டு. இந்தப் பின்புலத்தில் அவர் பெரியாரோடு நெருக்கமான உறவு கொண்டிருந்தார். வ.உ.சி.யின் இந்தப் பரிமாணங்களை தமிழ்ச் சமூகம் முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லமுடியாது. இப்போது அதுகுறித்த உரையாடல்கள் தமிழ்ச் சூழலில் உருபெற்றுள்ளது. அவரை, அவர் பிறந்த சாதிக்காரர்கள் சாதியை அடையாளப்படுத்தி கொண்டாடுவது தமிழ்ச் சூழலின் அவலம்.

தொல்லியல் துறையில் ஆர்வம் மிக்க நீங்கள் ஐராவதம் மகாதேவன், புலவர் செ.இராசு போன்ற ஆய்வாளர்கள் குறித்த உங்களது பார்வையைப் பதிவிடுக.

அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களிடம் நேரடியான தொடர்பு எனக்கு இருந்தது. அவரது ‘சிந்து சமவெளிக் குறியீடுகள்’ குறித்த ஆய்வு முக்கியமானது. தொல் தமிழ் எழுத்து மரபை ‘பிராமி’ என்று பெயரிட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கள ஆய்வு செய்து, நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை வெளியிட்டுள்ளார். தொண்ணூறுக்கும் மேற்பட்டவை பிராமிக் கல்வெட்டுகளாகும், எஞ்சியவை வட்டெழுத்து கல்வெட்டுகளாகும். ஐராவதம் அவர்களின் தொல் பழம் கல்வெட்டுகள் குறித்தான ஆய்வு, தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய பங்களிப்புச் செய்துள்ளது. தமிழ்த் தொல்லியல் எழுத்து வரலாறு (Paleography) என்னும் துறைக்கு அவர் செய்த பங்களிப்பு மிக முக்கியமானது. அந்தக் கல்வெட்டுகளை வாசித்து, அதில் இருக்கக் கூடிய பாலி, பிராகிருதம் ஆகிய மொழிச்சொற்கள் சமண மதத்தோடு எவ்வகையில் தொடர்புடையதாக இருக்கிறது என்பதைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் வரலாற்றுக்கு முந்தையகாலத் தமிழ்ச் சூழலில் அவைதீகச் சமயச் செயல்பாடுகள் குறித்த குறிப்புகளைப் பெற முடிகிறது. சங்க இலக்கியப் பிரதிகளில் காணப்படும் பல பெயர்ச்சொற்கள் இவர் கண்டுபிடித்த பிராமி எழுத்துக்களில் இருப்பதை வெளிக்கொண்டு வந்தார். இதன் மூலம் சங்க இலக்கியப் பிரதிகளின் வரலாற்று முக்கியத்துவம் கூடியது. அவர் கண்டுபிடித்த தொண்ணூறுக்கும் மேற்பட்ட பிராமி எழுத்து கல்வெட்டுக்கள் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்தவை. மிக அதிகமாக மண் பாண்டங்களில் பொறிக்கப்பட்டவையாகவும் உள்ளன. அவை அமைந்திருக்கும் இடக்கிடக்கையை (topography) அடிப்படையாக வைத்து, வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழ்ச் சமூகத்தின் சாதாரண மக்கள் எவ்வகை எழுத்தறிவுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து எழுதியுள்ளார். இதில் உலகின் பழம் நாகரிகங்களில் காணப்படும் எழுத்தறிவு மரபோடு ஒப்பிடும்போது தமிழ்ச் சூழல் மிகவும் வளர்ச்சி பெற்றதாக உள்ளது என்பது அவரது முடிவாகும்.

சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரைகளை ஆய்வு செய்து அவற்றில் உள்ள குறியீடுகளுக்கும் சங்க இலக்கியம் மற்றும் பிராமிக் கல்வெட்டுகள் ஆகியவற்றில் உள்ள செய்திகளுக்கும் உள்ள தொடர்பை சுமார் 20 ஆய்வுக் கட்டுரைகள் வழி அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஐராவதம் அவர்களின் பிராமி எழுத்துக் குறித்தக் காலக் கணிப்பு மற்றும் அசோகன் பிராமியோடு தமிழ்நாட்டில் கிடைத்த பிராமி எழுத்துக்களை ஒப்பிட்டுப் பேசியமை ஆகியவை இன்றைய புதிய கண்டுபிடிப்புகளால், அவரது ஆய்வு மறு பரிசீலனைக்கு உட்பட்டு விட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலம் 250 தொடங்கி வரலாற்றுக்கு பிந்தைய காலம் 100 என்ற அவருடைய கணிப்பு இன்று வரலாற்றுக்கு முந்தைய காலம் 700 தொடங்கி பிந்தைய காலம் 100 என்று அண்மைக்காலத் தொல் ஆய்வுகள் மூலம் உறுதியாக்கப்பட்டுள்ளது.

புலவர் செ. ராசு அவர்கள் மண் சார்ந்த மரபுகளைக் குறிப்பாக இனக்குழு மரபு சார்ந்து, மக்களிடம் உள்ள பல்வேறு செய்திகளைக் கல்வெட்டு மற்றும் ஓலைச் சுவடிகளில் எவ்விதம் கண்டறிய முடிகிறது என்ற ஆய்வில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டவர். கல்வெட்டுகள், சுவடிகள் ஆகியவற்றில் காணப்படும் செய்திகள் ஒரு வட்டார வரலாற்றை உருவாக்குவதற்கு எவ்வகையில் ஆதாரங்களாக அமைகின்றன என்பதைத் திறம்பட ஆய்வு செய்தவர் செ. இராசு அவர்கள். இவரது ஆய்வுகள் மூலம் கொங்கு நாட்டுப் பகுதியின் பல்வேறு வட்டார வரலாறுகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

இருபத்தியோரம் நூற்றாண்டிலும் திருக்குறள் பொருத்தப்பாடு மிக்கதாக உள்ளதா?

திருக்குறள் தமிழ் மரபில் உருவாகிய, வேறு எதனுடனும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாத அரிய பிரதியாகும். அவைதீகச் சமய மரபுகள் உருவான காலங்களில் அம்மதங்கள் அறம் போதிப்பதை அடிப்படையாக கொண்டிருந்தன. அவ்வகையில் அவைதீக மரபை வலிமையாகப் பதிவு செய்தது திருக்குறள். இன்றைய சமூக வளர்ச்சி என்பது சமய மரபுகளைப் புறந்தள்ளி ஒரு புதிய சார்பற்ற மரபை (secular) முன்னெடுக்கும் சமூகமாக உருவாகி வருகிறது. மனித சமூகத்தின் இக்கருத்து மரபிற்கு, திருக்குறள் வலுவான சான்றுகளைத் தரும் பிரதியாக உள்ளது. இச் சமூகத்தின் மேல் வளர்ச்சிகளில் திருக்குறள் மேலும் மேலும் வாசிக்கக் கூடியப் பண்புகளைக் கொண்டிருக்கிறது. அது சமகாலத்தின் சார்பின்மைத் (secularism) தத்துவத்தை முன்னெடுக்கும் பிரதியாகும். இதில் பெண்கள் குறித்த சில பதிவுகள் சநாதன மரபு சார்ந்தவையாகவே இருப்பதைக் காண்கிறோம். அவற்றை விமர்சனத்திற்கு உட்படுத்தும் தேவையும் நமக்குண்டு.

சமஸ்கிருத மேலாதிக்கம் தமிழ்ப் பண்பாட்டிற்குப் பெரும் கேடு விளைவிப்பதாகக் கருதுகிறீர்களா?

சமஸ்கிருத மொழியின் நேரடித் தாக்கம் என்பது தமிழ்ச் சமூகத்தில் வரலாற்றுக் காலம் ஐநூறாம் ஆண்டு முதல் உருவாகிறது. இந்த ஆதிக்கம் முடியரசர்களால் தமிழ்ச் சூழலில் வளர்த்தெடுக்கப்பட்டது. அரசர்களோடு உடன் இருந்த பார்ப்பனர்கள் இதற்குக் காரணம். அந்தக் காலம் தொடங்கி தமிழகப் பக்தி மரபு, கலை இலக்கிய மரபுகள், வாழ்க்கையின் பல்வேறு சடங்குகள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்தும் சமஸ்கிருத மயமான சூழல் உருப்பெற்றது. இது தமிழில் புதிய மணிப்பிரவாள மொழி நடையைக் கட்டமைத்தது, புதிய கர்நாடக இசை மரபை உருவாக்கியது, புதிய பரத நாட்டியத்தை உருவாக்கியது. சங்க இலக்கியம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் இருந்த மரபுகள் மடைமாற்றம் பெற்றன. இந்த வகையில் தமிழ்ப் பண்பாட்டின் சீர்குலைவிற்குச் சமஸ்கிருத மொழி ஆதிக்கம் மூலமாகியது. இதற்கு எதிரான போர் 1920களின் இறுதிக்காலம் தொடங்கி நடைமுறைக்கு வந்தது. தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், இந்தி எதிர்ப்பு இயக்கம் போன்ற பல்வேறு பண்பாட்டு இயக்கங்கள் சமஸ்கிருத மரபிற்கு எதிரான போரை நிகழ்த்தத் தொடங்கின. அதில் சுயமரியாதை இயக்கம் முக்கியப் பங்காற்றியது. இராமாயண எதிர்ப்பு என்பதை அதன் குறியீடாகப் பார்க்கலாம். இப்போது நடைபெறும் சனாதன எதிர்ப்புப் போரும் அதன் தொடர்ச்சிதான்.

தமிழகக் கல்விப் புலம் என்பது வணிகமயமாகி விட்டதா? இந்த விரும்பத்தகாத சூழலிலிருந்து மீள உங்களது பரிந்துரைகளைக் குறிப்பிடவும்.

1990களில் தாரளமயம் மற்றும் தனியார்மயம் என்பது சமூகத்தின் பல்வேறு தரப்புக்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டது. இதன் விளைவாகக் கல்வியில் தனியார்மயத்தின் ஆதிக்கம் கூடியுள்ளது. இதன் விளைவுகள் ஈராயிரம் ஆண்டுகள் தொடங்கி அரசு சார்ந்த கல்வி நிறுவங்கள் ஒரு மடங்கு என்றால் தனியார் கல்வி நிறுவனங்கள் நான்கு மடங்காக உருப்பெற்றுள்ளது. இது பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் எனப் பல வடிவங்களிலும் உருவாகியுள்ளது. இங்கு பயிலும் மாணவர்களிடம் பெரும் தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் கொடுக்கப்படுகிறது. இவ்வகையில் குறைந்த செலவில் பெரும் கொள்ளையடிக்கும் வணிகமாக உருப்பெற்று விட்டன. இதனைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. மாறாக, அரசு நிறுவனங்களும் வணிக நோக்கில் செயல்படக் கூடிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்கான புரிதல் அண்மையில் உருப்பெற்று வருகிறது. வலிமையான போராட்டத்தின் மூலமே இதனை எதிர்கொள்ள முடியும்.

பொதுவுடைமைக்கு இனி எதிர்காலமில்லை எனும் பரப்புரை குறித்து உங்களது எதிர் வினை

இது ஒரு வழக்கமான, எவ்வித அடிப்படையுமற்ற மார்க்சியத் தத்துவத்தின் மீது ஒவ்வாமை உள்ளவர்களின் கூக்குரல். மார்க்சியம் இப்படியெல்லாம் மறைந்து போகிற ஒரு மதம் போன்ற கருத்தியல் இல்லை. அது சமூகத்தின் ஒவ்வொரு கால மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும் அதற்கேற்றவாறு செயல்படவும் கற்பிக்கும் மிக நுண்ணிய தத்துவ அறிவியல். அதைப் புரியாதவர்கள் இவ்வகையான பரப்புரையில் ஈடுபடுவது இயல்பு. மார்க்சியக் கருத்து நிலை கொண்டவர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேறுவதை இவர்கள் மார்க்சியம் அழிந்து போனதாகக் கருதும் அறியாமை உடையவர்களாக இருக்கிறார்கள்.

உங்கள் நூலகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

சிறு வயது முதல் புத்தகங்கள் மீது ஈடுபாடு கொண்டே வளர்ந்தேன். பள்ளியில் படிக்கும்போதே அருகில் உள்ள சிறு நகரமான தஞ்சாவூருக்குச் சென்று தீப்பெட்டித் திருக்குறள் போன்று நிறைய வாங்கியிருக்கிறேன். கல்லூரி வந்தபொழுது இடதுசாரி மனநிலைமைக்கு ஆட்பட்ட இளைஞனாக இருந்ததால், நியூ செஞ்சுரி புத்தகக் கடைகளில் கிடைக்கும் சிவப்புப் புத்தகங்கள் மீது தீராத ஆர்வம் ஏற்பட்டது. அவை விலை மிகவும் குறைவு. அவற்றை வாங்கி சேகரித்துப் படிக்கும் பழக்கம் 1970 களில் எனக்குள் வந்து சேர்ந்தது. அந்தக் காலம் தொடங்கி தமிழில் வெளிவரும் மாற்று மரபான சிறு பத்திரிக்கைகளைத் தேடி, படிக்கும், சேகரிக்கும் பழக்கம் உருவானது. 1978 இன் இறுதியில் இருந்து சென்னையில் வசிக்கும் வாய்ப்பு பெற்றதானால், இங்கிருக்கும் அனைத்து பதிப்பகங்கள், பழைய புத்தகக் கடைகள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக பார்க்கும் பழக்கமும் ஒட்டிக்கொண்டது. 1985 முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியனாகச் சேர்ந்ததால் பொருளாதார ரீதியாகவும் புத்தகம் வாங்குவதற்கு சிக்கல் இல்லாமலும் இருந்தது. இப்படித்தான் எனது புத்தகச் சேகரிப்பு மற்றும் வாசிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. 1980 தொடக்கம் 2004 வரை இவைகளைப் பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. பலமுறை புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகின. நல்லவேளையாக 2004ஆம் ஆண்டு பல்கலைக்கழக நிதி உதவியின் மூலம் ஒரு தனித்த வீடு உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதனால் புத்தகங்களுக்கான ஓர் இடம் கிடைத்தது. நான் வாங்கும் சிறு பத்திரிக்கைகளை அவ்வபோது கட்டடம் செய்து வைப்பதற்கு திருவல்லிக்கேணியில் கோவிந்தன் என்ற ஒரு பெரியவர் உதவினார். பின்னர் என் மாணவர் பஞ்சாட்சரம்

உதவினார். இப்படித்தான் 1970 முதல் இன்றையக் காலம் வரை சுமார் இரண்டாயிரம் சிறு பத்திரிக்கைகளின் தொகுப்பு என் நூலகத்தில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 1977 முதல் சென்னையில் நடைபெறத் தொடங்கிய புத்தகக் கண்காட்சியில் முதல் இரண்டு ஆண்டுகள் தவிர பிற அனைத்துக் கண்காட்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றவன் நான். அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வரும் புதிது புதிதான நூல்களை தெரிவுத் செய்து வாங்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்குக் கிடைத்த ஊதியம் அதற்கு உதவி செய்தது. பழைய புத்தகக் கடைகளில் கிடைத்த மிக அரிய நூல்கள், பெரும்பாலான முதல் பதிப்புகள் என் சேகரிப்பில் உள்ளன. இப்படி உருவான சுமார் இருபதாயிரம் நூல்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட மையொற்றுப் படி நூல்கள் ஆகியவை நூலகத்தில் இடப்பெறத் துவங்கியது. 2014 இல் நான் பணி நிறைவு பெற்றபோது சுமார் முப்பது இலட்சம் ரூபாய் எனக்குக் கிடைத்தது. எனது குழந்தைகளின் படிப்புச் செலவிற்கான வங்கிக் கடன்களில் பாதித் தொகை தீர்ந்தது. எஞ்சியுள்ள தொகையில் எங்கள் வீட்டில் உள்ள நால்வரும் நூலகத்தை உருவாக்குவது என்று முடிவு செய்தோம்.

திறந்த வெளியாக இருந்த வீட்டின் இரண்டாவது தளத்தை நவீனக் கட்டிடக் கலைஞர் மகேஷ் அவர்கள் உதவியோடு ஐரோப்பியப் பாணியிலான நூலகத்தை உருவாக்கினோம். மகேஷ் மிக நுண்ணிய அழகியல் மிக்க கட்டக் கலைஞர். நூலகத்திற்கான ஒரு கட்டட வரைவை உருவாக்கி அதை அமைத்துத் தந்தார். இதனால் தொடர்ச்சியாக வாசிப்பதற்கான மனநிலைமை எனக்குக் கிடைக்கிறது. மங்கையும் இந்த நூலகத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார். அரங்கம் தொடர்பான நூல்கள் (theatre) நூலகத்தில் உள்ளன. தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் காலவரிசையிலான பதிப்புகளும் எங்கள் நூலகத்தில் இருக்கிறது. தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளின் அனைத்து நூல்களும் இடம்பெற்றிருக்கின்றன என்று சொல்ல முடியும். தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான ஆங்கில நூல்கள், தொல்காப்பியத்துறை சார்ந்த நூல்கள், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் சார்ந்த மூல நூல்கள், இலங்கையில் வெளியிடப்படும் நூல்கள், அகராதிகள் எனப் பல நிலை சார்ந்த நூல்கள் உள்ளன. இவ்வகையில் சுமார் இருபத்தியைந்தாயிரம் பிரதிகளோடு இந்த நூலகம் இருக்கிறது. நானும், மங்கையும் எனது மாணவர்களும் இதனை மிக அதிகமாக நுகர்பவர்களாக இருக்கிறோம். வரும் காலத்தில் இதன் நுகர்வோர் பரப்பை விரிவுபடுத்தும் வேலையை எனது மகள் பொன்னி அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

***

நேர்காணல்: கண.குறிஞ்சி