சேலம் அருகே அருந்ததியர் குடியிருப்பு சூறையாடல்! பெண்கள் மீது தாக்குதல்.! ஜாதி வெறியும், போதை வெறியும், தலைக்கேறிய வன்னிய இளைஞர்கள் அராஜகம் அட்டூழியம்.! ஜாதிவெறி, போதை வெறி இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.!
02.10.2024 காலை 11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சம்பவம் நடந்த பூசநாயக்கனூர் பகுதிக்கு தோழர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் தோழர்கள் மேற்கொண்ட கள ஆய்வு!
சேலம் மாவட்டம் பூசநாயக்கனூர் பெருமாம்பட்டியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் சுயமான வேலைவாய்ப்பு மூலம் சொந்தமாக போட்டோகிராப் தொழில் செய்து வருகிறார். தீபாவளி அன்று செம்மண்திட்டு பகுதியில் வசிக்கும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் அருந்ததியர் பகுதி அருகே பட்டாசு வெடித்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதை அவ்வழியாக வந்த சதீஸ்குமாரின் அண்ணன் மகன் விஜய் என்பவர் எங்கள் குடியிருப்பிற்கு அருகில் அமர்ந்து மது அருந்த வேண்டாம். சற்று தள்ளிப் போங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற வன்னிய இளைஞர்களுக்கும் விஜய்க்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
அங்கிருந்து கிளம்பிய விஜய் வீட்டிற்கு வந்துள்ளார், இதைப் பின் தொடர்ந்து வந்த சில வன்னிய இளைஞர்கள் போதை வெறியோடு, ஜாதி வெறியும் தலைக்கேறி ஜாதி பெயரைச் சொல்லி அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளில் பேசிக் கொண்டே கடுமையாகத் தாக்கி, பார்றா உங்க வீட்டிலேயே வந்து குடிக்கிறோம் என்று சொல்லி சுமார் பத்துக்கும் மேற்பட்ட வன்னிய இளைஞர்கள் சதீஸ்குமாரின் வீட்டின் கதவை உடைத்து மேற்கூரையை அடித்து நொறுக்கி உள்ளே புகுந்து லேப்டாப், கம்யூட்டர் டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்களைச் சூறையாடியதோடு வீட்டினுள் இருந்த பெண்களையும் மற்றும் சதீஸ்குமார், விஜய் ஆகியோரை கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர், இதை படம் எடுத்த அருந்ததியர் பெண்ணையும் தாக்கியுள்ளனர்.
அச்சமயத்தில் அவ்வழி காரில் வந்த கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனத் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் ஜெயக்குமாரின் காரின் கண்ணாடியை உடைத்து அவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவர் கை எலும்பு முறிக்கப்பட்டு, முகத்தில் கொடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவரைப் பாதுகாக்க முயன்ற அவரது உறவினர்கள் வெங்கடாசலம் மற்றும் செல்வராசு ஆகியோரையும் கல்லால் அடித்து காயப்படுத்தினர். காயமடைந்த அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆதிக்க ஜாதி இளைஞர்கள், தலித் மக்களின் வீடுகளை உடைத்து வன்கொடுமையில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகள் காண்போரைப் பதற வைக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறுவர்கள் சிறார் இல்லத்திலும், மற்றவர்கள் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, சேதப்படுத்தப்பட்ட பொருள்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்து உரிய நிவாரணத்தையும் குடியிருப்புக்கு உரிய பாதுகாப்பையும், வழங்கிட வேண்டும் எனத் திராவிடர் விடுதலைக் கழகம் அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறது. மேலும் நீதி வேண்டி மாவட்ட வருவாய் அதிகாரி (DRO) அவர்களைச் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
ஆய்வின்போது களத்தில் நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், இளம்பிள்ளை நகர தலைவர் ரமேஷ், சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திவ்யா, வனவாசி நகர செயலாளர் உமா சங்கர், நங்கவள்ளி சந்திரசேகரன், இளம்பிள்ளை கோபி, மணிமாறன், தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் கவியரசு ஆகியோர் இருந்தனர்.
- பெ.மு. செய்தியாளர்